‘ப
க்கத்துல இருக்கிற கடைக்குக்கூட, அவன் சைக்கிள்லதான் போறான்’ என்று பல வீடுகளில் அம்மாக்கள் குறைபட்டுக்கொள்வதைக் கேட்டிருப்போம். அந்த அம்மாக்கள், டொமினிக் ஃபிராங்க்ஸ் கதையைக் கேட்டால், அவர்களின் ‘ரியாக்ஷன்’ எப்படி இருக்கும் என்பதை யோசித்துப் பார்க்கவே மனம் ‘கலகல’க்கிறது!
பின்னே, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளைப் பார்ப்பதற்காக பெங்களூருவிலிருந்து டெல்லிக்கு சைக்கிளிலேயே வந்துபோவது என்றால் சும்மாவா?
‘என்னது, பெங்களூர் டூ டெல்லி சைக்கிள்லயா?’ என்று கேள்வி கேட்டு ஆச்சரியப்படுவதற்கே நமக்கு மூச்சு வாங்குகிறது இல்லையா? ஆனால், டொமினிக்குக்கு அது பெரிய விஷயமாகத் தெரியவில்லை. ஏனென்றால், அவருக்கு முன்பே அப்படிப்பட்ட ஒரு சாதனையை, அவரது பி.டி. மாஸ்டர் நிகழ்த்தியிருக்கிறார். அவரிடமிருந்து பெற்ற ‘இன்ஸ்பிரேஷன்’தான், 22 நாட்கள் தொடர்ந்து பெடல் போடுவதற்கான சக்தியை டொமினிக்குக்கு வழங்கியிருக்கிறது.
ஸ்போர்ட்ஸ்மேன் எம்.பி.பி.எஸ்.
பெங்களூருவில் டொமினிக் ஃபிராங்க்ஸ் மருத்துவம் படித்துவிட்டு, வைத்தியம் பார்க்க விருப்பமில்லாமல் வெறுமனே ஊர் சுற்றிக் கொண்டிருந்தார். பள்ளிக் காலத்திலிருந்தே அவருக்கு விளையாட்டுகள் மீது பேரார்வம். அதனால், நாட்டின் முன்னணி ஸ்போர்ட்ஸ் சேனலில் சிறிது காலம் செய்தியாளராகப் பணியாற்றினார்.
2010-ம் ஆண்டு, அவருக்கு சைக்கிளில் நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்று வர விருப்பம் ஏற்பட்டது. ‘சரி… போறதுதான் போறோம். ஏன், இலக்கே இல்லாமல் அலைய வேண்டும்?’ என்று யோசித்தவர், அந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளைப் பார்ப்பதற்காக பெங்களூருவிலிருந்து டெல்லிக்கு சைக்கிளிலேயே பயணிக்கலாம் என்று முடிவெடுத்தார்.
அதற்குத் தேவையான சில ‘டிப்ஸ்’களைக் கேட்பதற்காகத் தான் படித்த பள்ளியின் பி.டி.மாஸ்டர் ஷிவபிரகாஷிடம் செல்லும்போதுதான் தெரிகிறது, அவரே ஒரு முறை இப்படி சைக்கிளில் ‘கிராஸ் கண்ட்ரி’ சென்றவர் என்பது. 1982-ம் ஆண்டு டெல்லியில் ‘ஆசியன் கேம்ஸ்’ போட்டிகள் நடைபெற்றபோது, அதைப் பார்ப்பதற்காக பெங்களூருவிலிருந்து டெல்லிவரை அந்த பி.டி.மாஸ்டர் சைக்கிளில் சென்றிருக்கிறார். அந்த அனுபவங்களைத் தன்னுடைய டைரியில் எழுதி வைத்திருந்தார். டொமினிக் அவரிடம் வந்தபோது, அந்த டைரியை அவரிடம் கொடுத்தார்.
பயணம் காட்டிய இந்தியா
அந்த பி.டி.மாஸ்டருக்குத் தன் அனுபவங்களைப் புத்தகமாக்கும் வாய்ப்புக் கிடைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், டொமினிக்குக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. ‘பெங்களூரு டூ டெல்லி பை சைக்கிள்’ அனுபவங்களை ‘நவ்டாங்கி டயரீஸ்’ என்ற தலைப்பில் புத்தகமாக்கியிருக்கிறார் டொமினிக். ரூபா பதிப்பக வெளியீடாக சமீபத்தில் வெளியாகியிருக்கிறது.
‘பயணம் அல்ல, அந்தப் பயணத்தில் சந்திக்கும் மனிதர்கள், அனுபவங்கள் ஆகியவைதான் ஒரு பயண நூலை மிகவும் சுவாரசியமாக்குகின்றன’ என்பார்கள். அதற்கு இந்தப் புத்தகம் விதிவிலக்கல்ல. பெங்களூருவிலிருந்து புறப்பட்டவர், முதலில் ஹைதராபாத்தில் பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலைச் சந்திக்க விரும்புகிறார். ஆனால், அந்தக் கனவு நிறைவேறாமல் போகிறது. இருந்தும் மனம் தளராமல் சைக்கிள் மிதித்தவருக்கு, வழி நெடுக, அதிகம் பிரபலமாகாத, ஆனால் சத்தமே இல்லாமல் பல சாதனைகளைப் படைத்து வரும் மனிதர்களின் அறிமுகம் கிடைக்கிறது.
பழங்குடிகளின் மேம்பாட்டுக்காகப் பணியாற்றும் தன்னார்வலர், பள்ளித் தேர்வில் தன் மகன் வெற்றிபெறாவிட்டால் அவனை நக்ஸலைட்டாக மாற்றிவிடத் துடிக்கும் தந்தை, லாரிகள் தங்கிச் செல்லும் ‘தாபா’க்கள், பிரபல இந்தி நடிகர் சன்னி தியோலின் பெயரால் கட்டப்பட்ட கோயில் எனப் பல்வேறு மனிதர்களையும் இடங்களையும் பார்க்கும் வாய்ப்பு, டொமினிக்குக்கு இந்தப் பயணத்தின் மூலம் கிடைக்கிறது. அவற்றின் வழியாக, சமகால இந்தியாவின் நிலை எப்படி இருக்கிறது என்பதையும், தன் புத்தகத்தில் ஆங்காங்கே பிரதிபலித்திருக்கிறார் டொமினிக்.
ஆவணப்படமான பயணம்
இவர் இவ்வாறு சைக்கிளில் பயணம் போகிறார் என்பது தெரிந்தவுடன், இவரது நண்பர்கள் சிலர் காரில் பின்தொடர்ந்து, இவரது பயணத்தை ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். அது, 2017-ல் ‘இட்ஸ் நாட் அபவுட் தி சைக்கிள்’ எனும் தலைப்பில் ஆவணப்படமாக வெளியானது. இது கடந்த ஆண்டு டொரொண்டோவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் சிறந்த சாகசத் திரைப்படத்துக்கான விருதையும் வென்றது. புத்தகத்தில், அவரது நண்பர்கள் அடிக்கும் லூட்டியைக் கிண்டலும் காமெடியுமாகப் பதிவு செய்திருக்கிறார் டொமினிக்.
இத்தனைக்கும் இப்படியொரு பயணம் செல்வதற்கு, டொமினிக்குக்கு விலை உயர்ந்த ‘ஃபேன்ஸி சைக்கிள்’கள் எல்லாம் தேவைப்படவில்லை. நம் ஊர்களில் பால்காரர்கள் பயன்படுத்தும் சாதாரண சைக்கிள்தான். ‘தேசி’ சைக்கிளில்தான் இந்த அசாத்தியமான பயணத்தை டொமினிக் மேற்கொண்டார்.
‘இந்த சைக்கிளை வெச்சுக்கிட்டு, டெல்லி வரைக்கும் போறியா.? ரொம்ப ஓவர்தான்’ என்று இவரது நண்பர்கள் கமெண்ட் அடிக்க, தன் சைக்கிளுக்கு ‘நவ்டாங்கி’ என்று பெயர் சூட்டுகிறார் டொமினிக். அப்படியென்றால், இந்தியில் ‘ஓவர் ஆக்டிங் செய்தல்’ என்று அர்த்தம். இந்தியில் அந்தச் சொல், பெண்பாலாகப் பயன்படுத்தப்படுகிறது. பெங்களூருவிலிருந்து டெல்லிவரை தனக்குக் கை கொடுத்த, ‘நவ்டாங்கி’, கடைசியில் என்ன ஆனாள் என்று டொமினிக் சொல்வதுதான், பயணத்தின் மிகப்பெரிய ‘பிரேக்!’
தற்போது, வேறு எந்தப் பயணத்தையும் திட்டமிடாமல், ஜல்லிக்கட்டு பின்னணியில் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு குறித்து ஆவணப்படம் எடுத்து வருகிறார் டொமினிக்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago