காதல் என்னும் சொல்லைக் கேட்டாலே உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை சிலிர்த்துவிடும். அது மனிதர்களின் உற்சாகம். இளமையின் கொண்டாட்டம். புரிந்தவர்களுக்குக் காதல் வெற்றிக்கான பாதை. புரிந்துகொள்ள மறுப்பவர்களுக்கு அது ஒரு போதை. இளைஞர்கள் இன்று ‘வெற்றிக்கான பாதை’யைவிட, ‘போதை’யின் கிக்கை விரும்புகிறார்கள்.
அப்படியானவர்களுக்கு நிலவொளியைப் போல விளங்குபவர்தான் இந்த ‘லவ்குரு’!
சென்னை ‘ரோடியோ சிட்டி’ பண்பலையில் இரவு 9 மணி முதல் 1 மணி வரை உலா வரும் இவரிடம் நீங்கள் கதைக்கலாம். கதை கேட்கலாம். காதல் பிரச்சினைகளைச் சொல்லலாம். காதலைப் புரிந்து கொள்ளத் தேவையான தெளிவையும் பெறலாம்.
‘காதல்ங்கிறது...’ என்று அறிவுரை ஊற்றாமலும், ‘மச்சி... அந்தப் பொண்ணு உன்னைத்தான் பார்க்கிறா மச்சி’ என்று ஏற்றிவிடாமலும், டியர் ஃப்ரண்டாகக் காதலர்களின் பிரச்சினைகளுக்கு அவர்களாகவே தீர்வையும் கண்டுகொள்ளச் செய்பவர்தான் இந்த ‘லவ்குரு’!
யாரிந்த ‘லவ்குரு’?
டைரக்ஷன் கனவோடு திருத்துறைப்பூண்டியிலிருந்து சென்னைக்கு வந்தவர் ராஜவேல். கணிதமும், நிர்வாகவியலும் படித்த இவரது மீடியா பயணம் ‘ஹலோ எஃப்.எம்’மில் தொடங்கியது. 2007 முதல் 2012 வரை திருச்சி ‘ஹலோ எஃப்.எம்’மில் ‘பல்லாங்குழி’ ஆடிய ‘பங்காளி’ ராஜா... தற்போது இரண்டு ஆண்டுகளாக ‘ரேடியோ சிட்டி’ பண்பலை மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை உற்சாகப்படுத்திவருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் இவர் கையிலெடுக்கிற பிரச்சினைகள் எல்லாமே செம லைவ்லி... அவற்றுக்கு அவர் தீர்வுகள் சொல்லும் முறையோ வெரி ஃப்ரெண்ட்லி!
“நான் காதலர்களுக்கான தூதுவனும் அல்ல... காதலுக்கான பி.ஆர்.ஓ.வும் அல்ல. காதலின் வெவ்வேறு பரிமாணங்களைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு சாதாரண அறிவிப்பாளன்!” என்று தன்னடக்கத்துடன் அறிமுகப்படுத்திக்கொள்கிறார் ராஜவேல்.
“தங்களின் வாழ்க்கையைச் சொல்லும் ஒவ்வொருவரும் தங்கள் அளவில் ஒரு தேர்ந்த திரைக்கதை ஆசிரியர்தான்! ஆகவே இந்த நிகழ்ச்சிக்கென்று தனியாக நான் தயாரிப்புகளில் ஈடுபடுவதில்லை” என்று சொல்லும் இவரின் நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கும், தற்கொலை எண்ணங்களுக்கும் தடை விதித்திருக்கிறார்.
அப்படியானவரிடம் ‘இன்றைய இளைஞர்கள் தங்கள் காதலில் சந்திக்கும் மிக முக்கியமான மூன்று பிரச்சினைகள் என்ன?’ என்று கேட்டால் சாஃப்டான ஆனால் ஸ்டிராங்கான பதில் வருகிறது:
“பல காதலர்களிடம் பொசஸிவ்னெஸ், அளவுக்கு மீறித் தொடர்புகொள்வது, போலியாக இருப்பது ஆகிய மூன்று பிரச்சினைகள்தான் காணப்படுகின்றன.”
தொலையும் காதல்
இருபது ஆண்டுகள் பெற்றோர் அரவணைப்பில் இருந்த ஒருவர் இன்னொருவரைக் காதலிக்கிறார் என்பதாலேயே, காதலிப்பவரோ காதலிக்கப்படுபவரோ ஒருவரை ஒருவர் ‘தனக்கே சொந்தம்’ என்று கோபப்பட்டால்... அங்கே காதல் உங்களுக்குச் சொந்தமில்லை!
காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை உங்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் அவ்வப்போது உங்களின் காதலனுக்கோ காதலிக்கோ ‘அப்டேட்’ செய்துகொண்டிருந்தால்... அங்கே காதல் ‘உங்கள் தொடர்பு எல்லைக்கு வெளியே!’
நீங்கள் கோபப்படுபவராக இருந்தால், கோபப்படுபவராகவே இருங்கள். தவறில்லை. ஆனால் காதலிக்கத் தொடங்கும்போது உங்களுக்குக் கோபமே வராது என்று போலியாக நடிக்காதீர்கள். பின்பு ஒரு நாள் நீங்கள் கோபப்பட்டு அது உங்கள் காதலனையோ, காதலையோ பாதித்தால்... அங்கே காதல் ‘பொய்’!
காதல் ஓர் ஊக்கம்
நிச்சயமாய் காதல் ஒரு டானிக். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வெற்றிபெற உங்களுக்குத் தேவை ஆதரவான ஒரு கை... நீங்கள் தடுமாறுகிறபோது உங்களைத் தாங்கிக்கொள்ளத் தேவை ஒரு தோள்...
இவரது நிகழ்ச்சியில் காதலைத் தொலைத்தவர்கள், காதலால் தொலைந்தவர்கள், காதல் கொண்டவர்கள், காதலர்களைக் கொன்றவர்கள் எனப் பலரும் பேசியிருக்கிறார்கள். ‘காதலில் மிகச்சிறந்த பழிவாங்கல்... வாழ்ந்து காட்டுவது!’ என்னும் எழுத்தாளர் சுஜாதாவின் வாசகத்தைத்தான் இவர் அவர்களிடம் சொல்கிறார்.
“காதல் மிகச் சிறந்த ஆசிரியர். காதலிப்பவர்கள் எப்போதும் எதையாவது அதனிடமிருந்து கற்றுக்கொண்டே இருக் கிறார்கள். அதனால்தான் நானே ‘லவ்... குரு...’!” என்று கண்ணில் மின்னும் புன்னகையுடன் கைகொடுக்கிறார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago