க
ணினியில் அட்டகாசமாக ஒரு பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. இசைக்கேற்பத் தலையசைத்தபடி நண்பர்களுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தார் மார்க்.
சில நிமிடங்களில் அந்தப் பாடல் முடிந்தது. ஆனால், அடுத்த பாடல் தொடங்கவில்லை.
‘என்னாச்சு?’ என்று திரும்பிப் பார்த்தார் மார்க். அவர் தேர்ந்தெடுத்திருந்த பட்டியலில் எல்லாப் பாடல்களும் ஒலிபரப்பாகிவிட்டன. ஆகவே, கணினி மவுனமாகி விட்டது. இனிமேல் அவரே இன்னொரு பாடலைத் தேர்ந்தெடுத்து ஒலிக்கவிட்டால்தான் உண்டு.
‘இது சுத்த முட்டாள்தனம்’ என்று யோசித்தார் மார்க், ‘இத்தனை வருஷமா இந்த கம்ப்யூட்டர்லதானே நான் பாடல்களைக் கேட்டுகிட்டிருக்கேன்; எனக்கு என்னென்ன பாடல்கள் பிடிக்கும்ன்னு இந்த கம்ப்யூட்டருக்குத் தெரியாதா? ஒரு பாடல் முடிஞ்சதும் அடுத்த பாடலை அதுவே தேர்ந்தெடுத்து ஒலிக்கவிட வேண்டாமா?’
இப்படிச் சாதாரணப் பொதுமக்கள் நினைத்தால், அது வெறும் நினைப்பாக நின்றுவிடும். மார்க் ஒரு மென்பொருள் நிபுணர். ஆகவே, தன்னுடைய நினைப்பை உண்மையாக்கும் ஒரு மென்பொருளை அவரே எழுதத்தொடங்கினார். ஆடம் என்ற நண்பரும் இதில் இணைந்துகொண்டார். சில நாட்களில், ‘Synapse’ என்ற மென்பொருள் உருவாகிவிட்டது.
‘Synapse’ என்ன செய்யும்? இந்த மென்பொருளைப் பயன்படுத்துகிறவர்களுடைய இசை விருப்பங்களை அது கவனித்துப் புரிந்துகொள்ளும். அவர்கள் எந்தெந்த பாடல்களை விரும்பிக்கேட்கிறார்கள், எப்போதெல்லாம் கேட்கிறார்கள் என்று தெரிந்துகொண்டு, அதற்கேற்ப அதுவே பாடல்களைத் தேர்வுசெய்யும்.
இன்றைக்கு ‘ஆர்ட்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸ்’ எனப்படும் செயற்கை அறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இப்படி ஏராளமான இசை மென்பொருள்கள் வந்துவிட்டன. அவற்றோடு ஒப்பிடும்போது ‘Synapse’ தொழில்நுட்பம் சாதாரணமானதுதான். ஆனால் அன்றைக்கு அது மிகப்பெரிய விஷயம். இதுபோல் ஒருவருடைய இசை ரசனையைப் புரிந்துகொண்டு தானே அடுத்தடுத்த பாடல்களைத் தீர்மானிக்கக்கூடிய மென்பொருள்கள் அப்போது இல்லை.
இன்னொரு சிறப்பு, மார்க்கும் ஆடமும் ‘Synapse’ மென்பொருளை முற்றிலும் இலவசமாக வெளியிட்டிருந்தார்கள். யார் வேண்டுமானாலும் இதனை இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆகவே, ‘Synapse’ மக்களால் கொண்டாப்பட்டது. புகழ்பெற்ற இணையதளங்கள் பாராட்டின. அன்றைக்கு இசை சார்ந்த மென்பொருள்களை எழுதிவந்த பெரிய நிறுவனங்களெல்லாம் இதனைக் கவனித்தன. ‘யார் இந்தப் புதுப் பையன்கள்?’ என்று விசாரிக்கத்தொடங்கின.
மார்க்கும் ஆடமும் அப்போது பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார்கள். சும்மா ஓய்வுநேரத்தில் எழுதிய மென்பொருள்தான் இது. அது அவர்களுடைய திறமையை வெளிச்சம்போட்டுக் காட்டிவிட்டது. ‘Synapse’ தொழில்நுட்பத்தைப் பார்த்து அசந்துபோன மைக்ரோசாஃப்ட், வின்ஆம்ப், ‘AOL’ போன்ற பெரிய நிறுவனத்தினர் மார்க், ஆடமைத் தொடர்புகொண்டார்கள், ‘உங்க சாஃப்ட்வேர் எங்களுக்கு வேணும். ஒரு மில்லியன் டாலர்வரைக்கும் தரத் தயாரா இருக்கோம்.’ என்றார்கள்.
என்னது, ஒரு மில்லியன் டாலரா? இலவசமாகக் கிடைக்கும் மென்பொருளை யாராவது அவ்வளவு விலை கொடுத்து வாங்குவார்களா? அங்கேதான் சூட்சுமம். அவர்கள் வாங்குவது மென்பொருளை இல்லை, அதை எழுதிய மூளைகளை!
‘Synapse’க்காக அந்நிறுவனங்கள் தருவதாகச் சொன்ன ஒரு மில்லியன் டாலர், ஓர் அடையாளத்தொகைதான். அந்த முதலீட்டால் அவர்களுக்கு நேரடியாக எந்த வருவாயும் இல்லாமலிருக்கலாம். ஆனால், அதன்மூலம் மார்க், ஆடம் இருவரையும் தங்களுடைய நிறுவனத்துக்குள் வளைத்துப்போட்டுவிடலாம். அவர்களுடைய திறமையை வைத்துப் பெரிய அளவில் சம்பாதித்துவிடலாம் என்று அவர்கள் நினைத்திருந்தார்கள்.
இன்னொருபக்கம், மார்க், ஆடம் இருவரும் பெரும் குழப்பத்தில் இருந்தார்கள், ‘ஒரு மில்லியன் டாலரா?’ என்று திகைத்தார்கள், இதனால் தங்களுடைய படிப்பு பாதிக்கப்படுமோ என்றும் தயங்கினார்கள்.
இதை அந்நிறுவனங்கள் தவறாகப் புரிந்துகொண்டன. ‘ஒருவேளை தொகை குறைவா இருக்கோ?’ என்று யோசித்த ஒரு நிறுவனம், ‘ரெண்டு மில்லியன் டாலர் தர்றோம், என்ன சொல்றீங்க?’ என்று ஆசை காட்டியது.
நண்பர்கள் யோசித்தார்கள். ‘இத்தனைப் பெரிய தொகையைச் சம்பாதிக்கவேண்டுமென்றால், நாம் வாழ்நாள் முழுக்க வேலை செய்யவேண்டியிருக்கும், ஒப்புக்கொண்டுவிடலாமா?’
‘ஒருவேளை, நாம் இதற்கு ஒப்புக்கொண்டுவிட்டால், அந்தப் பெரிய நிறுவனம் என்ன செய்யும்? இரண்டு மில்லியனை நமக்கு அனுப்பிவிட்டு, ‘Synapse’ஐத் தூக்கிக் குப்பையில் போட்டுவிடும் அல்லது அதற்கு ஒரு பெரிய விலை வைத்து விற்கப்பார்க்கும்.
‘ஆயிரக்கணக்கானோர் ‘Synapse’ஐச் செலவில்லாமல் பயன்படுத்தி மகிழ்கிறார்கள்; அதை நிறுத்துவதற்கு நாமே காரணமாக இருக்கலாமா?’
எவ்வளவுதான் சிந்தித்தபோதும், அவர்களுக்கு இது சரியாகத் தோன்றவில்லை. ‘நாங்கள் ‘Synapse’ஐ விற்க விரும்பவில்லை’ என்று சொல்லிவிட்டார்கள். ‘Synapse’ என்றைக்கும் இலவசமாகக் கிடைக்கும்; அதில் நாங்கள் இன்னும் பல அம்சங்களைச் சேர்த்து மேம்படுத்தப் போகிறோம்.’
உயர்ந்த எண்ணம்தான். ஆனால் அதனால் அவர்களுக்கு இரண்டு மில்லியன் டாலர் இழப்பு! மார்க், ஆடம் இதைப்பற்றிக் கவலைப்படவில்லை. பள்ளிப்படிப்பை முடித்தார்கள், கல்லூரியில் சேர்ந்தார்கள், அவ்வப்போது ‘Synapse’ஐயும் மேம்படுத்தினார்கள்.
சில நாட்களுக்குப்பிறகு, அவர்களுக்கு இதில் ஆர்வம் குறைந்தது, ‘பேசாமல் இதை அந்த நிறுவனங்களிடம் விற்றுவிட்டால் என்ன?’ என்று யோசித்தார்கள். ஆனால், முன்பு இவர்களைச் சுற்றிவந்து பேரம் பேசிய அந்நிறுவனங்கள் இப்போது ‘Synapse’ஐக் கண்டுகொள்ளவில்லை. அவர்களுக்கு வேறு மென்பொருளோ இன்னும் திறமையான மென்பொருளாளர்களோ கிடைத்துவிட்டார்கள்போல!
மார்க், ஆடமுக்கு ஏமாற்றம். ‘முன்பே விற்றிருக்கலாம்; ஒரு நல்ல வாய்ப்பை இழந்துவிட்டோம்’ என்று வருந்தினார்கள். நல்லவேளையாக, அவர்கள் மனம் தளரவில்லை. தொடர்ந்து மென்பொருள் சார்ந்து இயங்கினார்கள்; அதைவிடப் பெரிய வாய்ப்பு விரைவில் வந்தது. ‘Synapse’க்குப் பின் மார்க் ஜக்கர்பெர்க், ஆடம் டி’ஏஞ்செலோ உருவாக்கிய ஃபேஸ்புக் இணையத்தளம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. அவர்கள் இருவரையும் பெரும்பணக்காரர்களாக, புகழ்பெற்றவர்களாக, உலகை மாற்றுகிறவர்களாக ஆக்கியது.
வாய்ப்புகளுக்காக நாம் எப்போதும் கண்ணைத் திறந்துவைத்திருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஒருவேளை, நம் வாழ்க்கையை மாற்றிவிடக்கூடிய ஒரு நல்ல வாய்ப்பைக் கவனிக்காமல் விட்டுவிட்டால், அதேபோல் இன்னொரு வாய்ப்பு வருவதற்காக நெடுங்காலம் காத்திருக்க வேண்டியிருக்கலாம்.
அதேநேரம், இந்தச் சிந்தனையின் ஒரு மோசமான பின்விளைவு: அப்படி ஒரு வாய்ப்பைக் கவனிக்காமல் விட்டவர்கள் அல்லது பயன்படுத்திக்கொள்ளாதவர்கள் நொந்துபோகிறார்கள், தங்களை வருத்திக்கொள்கிறார்கள். இழந்த வாய்ப்பை எண்ணி வருந்துவதால், அடுத்து வரும் புதிய வாய்ப்புகளைப் பார்க்கக்கூட இவர்களால் இயலுவதில்லை.
ஒரு வேளை மார்க், ஆடம் முதல் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டிருந்தால், ஒரு பெரிய நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான ஊழியர்களில் ஓரிருவராக முடங்கிப்போயிருப்பார்களோ? ஃபேஸ்புக் போன்ற ஒரு புரட்சியை முன்னின்று நடத்தும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கவேண்டும் என்பதற்காகதான் அவர்கள் அந்த முதல் வாய்ப்பை இழக்க நேர்ந்ததோ? இப்படிச் சிந்திக்கும்போது, இழந்த வாய்ப்புகளை எண்ணி வருந்தாமல், அடுத்து என்ன என்று சிந்திக்கும் மனோநிலை கிடைக்கும். எல்லாம் நன்மைக்குதான் என்று ஊக்கத்துடன் தொடர்ந்து முன்னேறலாம்!
(இளமை பாயும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: nchokkan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago