வெல்லுவதோ இளமை 10: மெஸ்ஸி எனும் மேஜிக்!

By என்.சொக்கன்

‘ஒ

ரு சின்னப் பையன். பிரமாதமா விளையாடறான். பார்க்கறீங்களா?’

சார்லி நிமிர்ந்து உட்கார்ந்தார், ‘யார் இந்தப் பையன்? அவனைப் பத்திக் கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்க.’

எதிரிலிருந்தவர் சொல்லத் தொடங்கினார். ‘பையனுக்கு 12 வயசுதான் ஆகுது. ஆனா...’

‘கொஞ்சம் பொறுங்க’ என்று குறுக்கிட்டார் சார்லி, ‘12 வயசுன்னா சொன்னீங்க?’

‘ஆமாங்க!’

சார்லிக்குக் கொஞ்சம் வியப்பு, நிறைய சிரிப்பு. ‘இத்தனை சிறிய பையனிடம் பேசி என்னவாகப் போகிறது?’

ஸ்பெயினிலிருக்கும் புகழ்பெற்ற கால்பந்துக் குழுவான ‘பார்சிலோனா’(Futbol Club Barcelona) வுக்காகப் பல ஆண்டுகள் விளையாடியவர் சார்லி என்ற கார்லெஸ் ரெக்சாக். அதன்பிறகு அதே குழுவில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்தார். குறிப்பாக, புதிய திறமையாளர்களை அடையாளம் கண்டு குழுவில் சேர்ப்பது அவருடைய பொறுப்பு.

Lionel Messiright

அதற்காக, சார்லி உலகம் முழுக்கச் செல்வார். உள்ளூர்க் கால்பந்துப் போட்டிகளைப் பார்ப்பார். நன்கு விளையாடும் பையன்களை வடிகட்டுவார். அதில் சிறந்தவர்களுடன் ஒப்பந்தம் செய்து பார்சிலோனா அணிக்குள் கொண்டுவருவார்.

ஆகவே, ‘ஒரு பையன் நல்லா விளையாடறான், பார்க்கறீங்களா?’ என்ற கோரிக்கை சார்லிக்குப் புதிதல்ல. ஆனா, அப்படி அறிமுகப்படுத்தப்படும் பையன்கள் பொதுவாகப் பதினெட்டு அல்லது இருபது வயதில் இருப்பார்கள். என்னதான் சிறந்த திறமைசாலியாக இருந்தாலும், பார்சிலோனா குழுவில் எதிர்பார்க்கப்படும் தரத்தில் கால்பந்து விளையாட வேண்டுமென்றால் அத்தனை நாளாகும்!

அதனால், இந்த 12 வயதுப் பையனைப் பார்ப்பதில் சார்லி பெரிய ஆர்வம் காட்டவில்லை. ஆனால், அதற்காகப் பார்க்காமலே இருந்து விடுவதும் அவருடைய தொழிலுக்கு நேர்மையாகாது. ஒரு வேளை, இந்தப் பையன் சிறு வயதிலேயே மிகப் பிரமாதமான விளையாட்டு வீரனாக இருந்துவிட்டால்..? பையனை இப்போதே வளைத்துப்போட்டால் பல ஆண்டுகளுக்கு லாபமாயிற்றே!

அச்சிறுவனைப் பற்றி சார்லிக்குச் சொன்னவரும் வலுவாகப் பரிந்துரைத்தார். ‘சின்ன வயசுதானேன்னு நினைச்சுடாதீங்க. உண்மையிலேயே அருமையா விளையாடறான். அர்ஜென்டினா முழுக்க அவனைப் பத்திப் பேச்சு இருக்கு, நிச்சயமா உங்க குழுவுக்குப் பொருத்தமா இருப்பான்.’

அப்போது சார்லி அர்ஜென்டினாவில்தான் இருந்தார். ஆகவே, அவன் விளையாடுவதைப் பார்த்தால்தான் என்னவென்று யோசித்தார்.

ஆனால், அவர் மட்டும் பார்த்தால் போதாது. பார்சிலோனா குழுவில் இருக்கும் பயிற்சியாளர்கள், மற்ற அதிகாரிகளெல்லாம் பார்க்க வேண்டும். அதன்பிறகுதான் அவனை அணியில் சேர்த்துக்கொள்வதா, இல்லையா என்று தீர்மானிக்க முடியும்.

இதில் வேறு சில சிக்கல்களும் இருந்தன. அந்தப் பையனுக்கு வளர்ச்சி ஹார்மோன்கள் பிரச்சினை இருக்கிறதாம். அதனால் அவன் சரியாக வளராத சின்னஞ்சிறுவனைப் போல் தோன்றுவானாம். இந்தப் பிரச்சினைக்கான மருத்துவச் சிகிச்சைச் செலவுகளைப் பார்சிலோனா அணிதான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

messi

ஐரோப்பாவுக்கு வெளியிலிருந்து வரும் வீரர்களை பார்சிலோனா அணியில் சேர்த்துக்கொள்வதில் பல நிர்வாகப் பிரச்சினைகளும் இருந்தன. எடுத்துக்காட்டாக, அவனுடைய தந்தை ஸ்பெயினில் ஒரு வேலையில் இருக்க வேண்டும். அப்போதுதான் மகனைக் குழுவில் சேர்க்க முடியும்.

இத்தனை தொல்லைகள் இருந்தாலும், சார்லி அந்த இளைஞனைக் கைவிட்டுவிடவில்லை. அவனுக்கு ஒரு நியாயமான வாய்ப்பைத் தர விரும்பினார். ‘அவன் தன்னோட திறமையை, தகுதியை மட்டும் நிரூபிக்கட்டும். மற்றதை நான் பார்த்துக்கறேன்!’

அதற்காக, அந்தப் பையனை ஸ்பெயினுக்கு அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அங்கே வந்து அவன் சில பயிற்சி ஆட்டங்களில் ஆட வேண்டும். அவற்றில் அவன் எப்படி விளையாடுகிறான் என்பதைப் பார்த்துவிட்டு சார்லி தன்னுடைய தீர்மானத்தைச் சொல்வார்.

விரைவில், அச்சிறுவன் பார்சிலோனாவுக்கு வந்தான். அங்கிருந்த பயிற்சியாளர்கள் வேண்டுமென்றே அவனைப் பெரியவர்களோடு விளையாடச் செய்தார்கள். அதன்மூலம் அவனுடைய திறமையைப் பரிசோதித்தார்கள்.

அவனை முதன்முறை பார்த்தபோதே சார்லிக்குப் பிடித்துவிட்டது. வியப்போடு அவனுடைய ஆட்டத்தைக் கவனித்தார். இந்த வயதில் இப்படியொரு திறமையா! அவரால் நம்பக்கூட முடியவில்லை.

‘கால்பந்து என்பது ஒரு குழு ஆட்டம், எல்லாரும் சேர்ந்து விளையாடி வெல்ல வேண்டிய விளையாட்டு. ஆனால், இந்தச் சிறுவனோ தனி ஆளாக மைதானத்தில் ஆதிக்கம் செலுத்தினான். தன்னைச் சுற்றியிருக்கும் பெரிய வீரர்கள் எல்லாரையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு முன்னேறினான். அத்தனை பேர் மத்தியில் அவனுடைய திறமை மட்டும் தனித்துத் தெரிந்தது’ என்று பின்னர் ஒரு பேட்டியில் அந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் சார்லி.

இத்தனைக்கும், வளர்ச்சி ஹார்மோன் பிரச்சினையால் அச்சிறுவன் பார்ப்பதற்கு மிகச் சிறியவனாக இருந்தான். ஆனால், களத்தில் இறங்கிவிட்டால் அவன் வேறு யாரோ. மற்ற எவரும் அவன் பக்கத்தில் நிற்க முடியவில்லை.

mesright

‘இவனுக்கு வயது முக்கியமில்லை. கால்பந்து இவனுடைய ரத்தத்தில் ஊறியிருக்கிறது. இவன் விளையாடப் பிறந்தவன். அசாதாரணமான திறமையாளன்’ என்று சொல்லிக்கொண்டார் சார்லி. ‘உடனடியாக இவனை நம் குழுவில் சேர்த்துவிட வேண்டும்!’

சார்லி சொல்லிவிட்டார். அப்புறமென்ன? பையனைக் குழுவில் சேர்த்து விளையாட வைக்க வேண்டியதுதானே?

யதார்த்த வாழ்க்கை அத்தனை எளிமையாகவா இருக்கிறது? சார்லி ஒப்புக்கொண்ட பிறகும், அவருடைய அணியின் நிர்வாகிகள் ஒப்பந்தத்தைத் தயாரிக்கவில்லை. அவர்கள் தங்களுடைய வழக்கமான ‘வேக’த்தில் செயல்பட்டுக்கொண்டிருந்தார்கள். இத்தனை திறமையுள்ள ஒரு பையனை விடக் கூடாது என்று சார்லி நினைத்த அதே துடிப்பும் வேகமும் அவர்களுக்கு வரவில்லை.

இதனால், அந்தப் பையனின் தந்தை மிகவும் கோபமாகிவிட்டார். ‘ஒன்று, என் மகனை அணியில் சேர்த்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால், நிராகரித்துவிடுங்கள். இரண்டும் இல்லாமல் இப்படி இழுத்தடித்தால் என்ன அர்த்தம்?’ என்று கேட்டார்.

அவருடைய கோபத்தை சார்லி புரிந்துகொண்டார், ‘ஐயா, இது நிர்வாகப் பிரச்சினை. நாங்கள் உங்கள் மகனை எங்கள் அணியில் நிச்சயம் சேர்த்துக்கொள்வோம், அதில் சந்தேகமில்லை’ என்றார்.

‘இதை வாயில்தானே சொல்கிறீர்கள். ஒப்பந்தம் ஏதும் கையெழுத்திடவில்லையே!’

‘ஒப்பந்தம்தானே?’ என்றார் சார்லி. ‘இதோ, இப்போதே எழுதிவிடலாம்!’

அப்போது அவர்கள் ஓர் உணவகத்தில் அமர்ந்திருந்தார்கள். கைவசம் எந்தக் காகிதமும் இல்லை. ஆகவே, அங்கே கை துடைப்பதற்காக வைத்திருந்த டிஷ்யூ பேப்பரிலேயே எழுதத் தொடங்கினார் சார்லி, ‘பார்சிலோனா குழுவில் உங்கள் மகனைச் சேர்த்துக்கொள்ளச் சம்மதிக்கிறேன்’ என்று எழுதிக் கையெழுத்திட்டார்.

அந்தச் சிறுவன், இன்று உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி. உண்மையான திறமை இருந்தால், எத்தனை தடைகளைத் தாண்டியும் ஒருவரால் மிகப் பெரிய உயரத்துக்கு வர முடியும் என்பதற்கான சான்று அவருடைய வெற்றி. ஹார்மோன் பிரச்சினை அவருடைய எதிர்காலத்தையே சாய்த்துவிடப் பார்த்தது. அதற்கான சிகிச்சைச் செலவுகளை ஏற்றுக்கொள்ளப் பல குழுக்கள் தயங்கின. மெஸ்ஸியின் திறமையோடு ஒப்பிடும்போது இந்தச் செலவு ஒரு பொருட்டே இல்லை என்று சிந்திக்க பார்சிலோனா அணி தேவைப்பட்டது. டிஷ்யூ பேப்பரில் ஒப்பந்தம் எழுதியாவது இந்தப் பையனை என் அணியில் சேர்த்துக்கொள்வேன் என்று தீர்மானிக்க ஒரு சார்லி தேவைப்பட்டார். அவர்கள் மெஸ்ஸி மீது வைத்த நம்பிக்கை, இன்றுவரை அவர் களுக்கும் மெஸ்ஸிக்கும் பயனுள்ள உறவாக வளர்ந்திருக்கிறது.

உங்கள் திறமை மீது முழு நம்பிக்கை வையுங்கள். அதேபோன்ற நம்பிக்கையை வைக்கும் பிறருடைய உதவியைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறுங்கள், தடைகள் சுக்குநூறாகும்!

(இளமை பாயும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: nchokkan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்