ஓர் இளைஞரின் விஸ்வரூபம்!

By எம்.சூரியா

 

ன்னதான் இணையதள வர்த்தகம் பிரம்மாண்டமாக வளர்ச்சி பெற்றிருந்தாலும், சூடாக ஒரு டீ குடிக்க நினைக்கும்போது அதைக் கொண்டுவந்து தர எந்த நிறுவனமாவது உள்ளதா என்ற ஏக்கம் சில நேரம் தோன்றும். இந்த ஏக்கத்தை உணர்ந்தோ என்னவோ, ஜெய்ப்பூரைச் சேர்ந்த ரகுவீர் சிங் சவுத்ரி என்ற இளைஞர், வாட்ஸ்அப் மூலம் ஆர்டர் செய்தால், அதிகபட்சம் 15 நிமிடங்களில் வீட்டு வாசலுக்கே ஆவி பறக்கும் தேநீரைக் கொண்டுவந்து சப்ளை செய்கிறார்.

டெலிவரி பையன்

வீடுகளுக்கும் கடைகளுக்கும் டீ விநியோகிக்கும் தொழிலை ரகுவீர் சிங் தொடங்கியதன் பின்னணி சுவாரசியமானது. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ரகுவீர், பள்ளிப் படிப்பைக்கூட முழுமையாக முடிக்கவில்லை. பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, மாலை வேளையில் வேலைக்குச் சென்றால் வருமானம் கிடைக்கும் என்பதற்காக அமேசான் நிறுவனத்தில் டெலிவரி பிரிவில் வேலைக்குச் சேர்ந்தார். மாதம் ரூ.9,000 அவருக்குச் சம்பளமாகக் கிடைத்தது.

பொதுவாக டெலிவரி பிரிவில் இருப்பவர்கள், நகரின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, பொருட்களை வாடிக்கையாளர்களிடம் சேர்க்க வேண்டும் என்பதால் இரு சக்கர வாகனங்களில்தான் செல்வார்கள். ஆனால், ரகுவீர் சிங்கிடம் பைக் இல்லாததால், சைக்கிளிலேயே ஜெய்ப்பூர் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வாடிக்கையாளர்களிடம் பொருட்களைச் சேர்த்தார். இதற்காகத் தினமும் பல கிலோ மீட்டர் தூரம் செல்வார். களைப்பாக இருக்கும் தருணங்களில், தேநீர் கடைகளைத்தான் தேடுவார். சில இடங்களில் தேநீர் கிடைப்பதே அரிதாகிவிடும்.

தேநீர் விற்பனை

இதையெல்லாம் மனதில் வைத்து கணக்குப் போட்ட ரகுவீர், தேநீர் விநியோகிக்கும் தொழிலைத் தொடங்கினால் என்ன என்று யோசித்தார். ஜெய்ப்பூர் நகரின் முக்கிய பகுதிகளில் தொழில் செய்பவர்களுடன் இது பற்றி அவ்வப்போது பேச்சுக் கொடுத்தார் ரகுவீர். வணிகர்களைப் பொறுத்தவரை, வாய்க்கு ருசியான தேநீர் கிடைத்தால் கூடுதல் விலை கொடுத்தாவது வாங்கிக்கொள்வோம் என்றார்கள். இதையடுத்து, தனக்குத் தெரிந்த சில நூறு கடைகளையும் அதில் இருந்த வணிகர்களையும் நம்பி, தேநீர் விநியோகிக்கும் தொழிலில் இறங்கினார் ரகுவீர்.

பைக் இல்லாததால், சைக்கிளில்தான் அவரது தேநீர் விற்கும் பயணமும் தொடங்கியது. அமேசானிலிருந்து வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை கொண்டுசெல்வதற்குப் பதிலாக, ஒரு கேனில் சுவையான தேநீரை நிரப்பிக்கொண்டு விற்பனைக்குக் கிளம்பினார் ரகுவீர். அவரைப் பொறுத்தவரை, எதுவுமே அப்போது மாறிவிடவில்லை. இன்னும் சொல்லப்போனால், மாதந்தோறும் கிடைத்து வந்த ரூ.9,000 வருமானமும் இனி கிடைக்காது என்பதுதான் அப்போதைய நிலை.

உயர்ந்த வாழ்க்கை

ஆனால், தன் உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து ரகுவீர் அன்று மேற்கொண்ட சிறிய முயற்சி, இன்று சராசரியாக மாதம் தோறும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் அவருக்கு வருமானத்தை ஈட்டித் தருகிறது. சுவையான தேநீரை நியாயமான விலைக்கு குறித்த நேரத்தில் விநியோகித்த ரகுவீருக்கு, ஜெய்ப்பூர் நகர வணிகர்கள் ஆதரவுக் கரம் நீட்டினர். விரைவிலேயே ஆர்டர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. தன் நண்பர்கள் மூவரைத் தனது தொழிலுக்கு உறுதுணையாக அழைத்துக்கொண்டார் ரகுவீர். படிப்படியாக வளர்ச்சி பெற்ற அவரிடம் இன்று 10 பேர் பணியாளர்களாக இருக்கிறார்கள். 4 பைக்குகளைச் சொந்தமாக வாங்கியிருக்கும் ரகுவீர், அவற்றின்மூலம் தற்போது வாடிக்கையாளர்களின் வீடு தேடி தேநீர் விநியோகிக்கிறார்.

வாட்ஸ்அப் மூலம் ஆர்டர் செய்தால் போதும், சொன்ன இடத்துக்கு 15 நிமிடங்களில் சுடச்சுடத் தேநீர் வந்துவிடும். ஒரு கப் வெறும் ஐந்து ரூபாய்க்கு விற்பதால் அவருக்குத் தேநீர் ஆர்டர்களும் தொடர்ந்து குவிந்துவருகின்றன. தனது தேநீர் விற்பனையைப் பிற முக்கிய நகரங்களுக்கும் விரிவு படுத்தத் திட்டமிட்டுவருகிறார் ரகுவீர்.

டெலிவரி பையனாகவே அவர் இருந்திருந்தால், இன்று அவரின் சம்பளம் எத்தனை ஆயிரமாக உயர்ந்திருக்கும் என்று தெரியாது. ஆனால், சுயமாகச் சிந்தித்து, தனிப் பாதையில் தொழில் தொடங்கி அதில் வெற்றியும் பெற்றதால், ரகுவீர் சிங்கின் வருமானம் லட்சத்தில் உயர்ந்துவிட்டது. எந்த ஒரு விஷயத்தையும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் சிந்தித்தால், வெற்றி நிச்சயம் என்பதற்கு சிறந்த முன்னுதாரணம் ஜெய்ப்பூர் இளைஞர் ரகுவீர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்