சாகசம்: தண்ணியில மிதக்கலாம் வாங்க!

By ந.வினோத் குமார்

அன்று ஞாயிற்றுக் கிழமை.

“காலையில ஷார்ப்பா 7 மணிக்கு பொன்மார் ஏரிக்கு வந்துடுங்க… நாம ‘பேட்லிங்’ பண்ணலாம்” என்றார் குமரன்.

இந்திய நீர்நிலைகளைப் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் குமரன். அந்த விழிப்புணர்வை ஏற்படுத்த அவர் தேர்வு செய்திருக்கும் வழிதான் ‘பேட்லிங்’. ‘சர்ஃபிங்’ என்று சொல்லப்படும் நீர்ச் சறுக்கு விளையாட்டுபோல, இதுவும் உலக அளவில் பிரபலமாகிவருகிறது. இந்திய அளவில் அந்த விளையாட்டைப் பரவலாக அறிமுகம் செய்பவர்களில் முன்னணியில் நிற்கிறார் குமரன்.

கங்கை, கோதாவரி போன்ற நதிகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ‘பேட்லிங்’ செய்திருக்கிறார் இவர். இலங்கை, மலேசியா போன்ற நாடுகளிலும் ‘பேட்லிங்’ செய்து ‘லிம்கா’ சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார்.

அது சரி, பேட்லிங் என்றால் என்ன? நீர்ச் சறுக்கு விளையாட்டில் பயன்படுத்தப்படும் பலகை போன்று, இதிலும் ஒரு பலகை இருக்கும். அதன் மேல் ஏறி நின்று, துடுப்பைக் கொண்டு செலுத்த வேண்டும். அதுதான் ‘பேட்லிங்’. சில பத்தாண்டுகளுக்கு முன்பு, ஹவாய் தீவில் அறிமுகமான இந்த விளையாட்டு, இப்போது சென்னையிலும் ‘சாகச விரும்பி’களைக் கவர்ந்துவருகிறது.

இந்த விளையாட்டைப் பிரபலப்படுத்த ‘பேடில் ஃபார் ஃப்யூச்சர்’ எனும் அமைப்பைத் தொடங்கியிருக்கிறார் குமரன். அதன்மூலம் ஆர்வம் இருப்பவர்களுக்கு, அவ்வப்போது ‘பேட்லிங்’ செய்யக் கற்றுத் தருகிறார்கள் அவரது குழுவினர்.

ஞாயிறு காலையின் மிச்சத் தூக்கம் கண்களில் தேங்கியிருக்க, பொன்மார் சென்றடைந்தேன்.

“இந்த விளையாட்டுல நாம கடைப்பிடிக்க வேண்டிய முதல் பாதுகாப்பு அம்சம்… லைஃப் ஜாக்கெட் போட்டுக்கறதுதான்!” என்று சொன்னவர், அதை எனக்கு அணிவித்து, ஏரிக்குள் அழைத்துச் சென்றார்.

‘பேட்லிங்’ பலகை வந்தது. ‘பிளாஸ்டிக் போர்டாக இருக்கும்’ என்று நினைத்தேன். ஆனால், அது நைலானால் செய்யப்பட்ட ‘இன்ஃபிளாட்டபிள்’ பலகை. காற்றடித்து ஊத வைக்கும் தலையணை போன்று அந்தப் பலகையைக் காற்றடித்து உயிர்பெறச் செய்ய வேண்டும். நீரில் அந்தப் பலகை அங்குமிங்கும் ஆடியது.

“இது மேல ஏறி படுத்துக்குங்க…”

ஒவ்வொரு முறையும் பலகையைப் பிடித்து ஏறும்போது, ஒன்று, நான் நீரில் கவிழ்ந்தேன். அல்லது, பலகை என் மீது கவிழ்ந்தது.

“லைட்டா, ஜம்ப் பண்ணி அந்தப் பலகை மேல ஏறுங்க.”

அப்படியே செய்து, ஒருவழியாகப் பலகையின் மீது ஏறிப் படுத்துக்கொண்டேன்.

“நீச்சல் தெரியுமா?”

“தெரியாது...” கலக்கத்தோடு சொன்னேன்.

“நீச்சல் தெரிஞ்சா நல்லது. தெரியாட்டா இன்னும் நல்லது...” என்று சிரித்தார் குமரன்.

‘ஆஹா… மாட்டிக்கிட்டோமே’ என்று என் மனம் நினைப்பதை, என் முகம் காட்டிக் கொடுத்திருக்கும்போல.

“பயப்படாதீங்க… பலகை கவிழ்ந்தாலும் சரி, இல்ல, நீங்க பலகையிலிருந்து விழுந்தாலும் சரி… நீங்க மூழ்க மாட்டீங்க. காரணம், ஒண்ணு லைஃப் ஜாக்கெட். இன்னொன்னு, உங்க கால், பலகையோடு சேர்த்து கட்டப்பட்டிருக்கும். அதை ‘லீஷ்’னு சொல்லுவோம்” என்றார்.

போன உயிர் மீண்டும் வந்தது. பலகையில் குப்புறப்படுத்தவாறே, இரண்டு கைகளாலும் நீரை அளைந்தேன். நீரைப் பின்தள்ள, பலகை முன்னால் சென்றது. நீரை முன்னே தள்ள, பலகை பின்னால் வந்தது.

“குட்… இப்ப இந்தப் பலகையில, முட்டி போட்டு உட்காருங்க. இந்தத் துடுப்பை வெச்சு, லெஃப்ட், ரைட்டுன்னு துடுப்பு போடுங்க” என்றார். அப்படியே செய்தேன். ஒரு பத்தடி போனேன். குமரன், என் பலகையின் பின்னே நீந்தியபடி என்னைத் தொடர்ந்தார்.

“புதுசா ‘பேட்லிங்’ செய்ய வர்றவங்களை நாங்க தனியா அனுப்ப மாட்டோம். உங்க போர்ட் பின்னாடியே எங்க வாலண்டியர்ஸ் வருவாங்க. ‘நான் சமாளிச்சுடுவேன்’னு நீங்க எப்ப ஃபீல் பண்றீங்களோ, அப்ப உங்களுக்குப் பயம் போய்டும். உங்க பின்னாடி, நாங்க வரணும்னு அவசியம் இருக்காது” என்றார்.

பிறகு, மெல்ல மெல்லப் பலகையின் மீது ஏறி நிற்க முயன்றேன். ‘உங்களால முடியும்… ட்ரை பண்ணுங்க’ என்று குமரன் குழுவினர் ஊக்கப்படுத்தினார்கள். முதல் இரண்டு, மூன்று முறை பாதி எழுந்து நின்று, பிறகு மீண்டும் மண்டியிட்டேன். மிதக்கிற பலகையின் மீது நேராக நிற்க முயன்றால், கால்கள் நடுங்கின. அதைவிட மனது!

நிற்பதற்கே சிரமம் என்று நினைத்த என்னை ஊக்கப்படுத்த, ‘ஹாய் பிரதர்… கமான், கமான்’ என்று சொல்லியவாறே, இன்னொருவர் அந்தப் பலகையின் மேல் யோகா செய்துகாட்டி அசத்தினார். இறுதியில், ஒருவாறு மனத்தை திடப்படுத்திக்கொண்டு எழுந்து நின்றேன். துடுப்பு போடத் தொடங்கினேன். ஆஹா… என்னாலேயே நம்ப முடியவில்லை. நான் நீரில் மிதக்கத் தொடங்கினேன்.

அவ்வப்போது, ‘அந்தப் பக்கம் போகாதீங்க. ஆழம் இருக்கும். இந்தப் பக்கம் போகாதீங்க. தண்ணியில இருக்கிற கொடிகள்ல, பலகையோட ‘ஸ்பின்’ சிக்கிக்கும்’ என்று என்னை வழிநடத்தினார்கள் அவர்கள்.

சுமார் ஒன்றரை மணி நேரம் தண்ணீரில் மிதந்த பிறகு, நீரின் மீதிருந்த பயம் போயே போய்விட்டது.

“இப்படி இன்னும் இரண்டு மூணு செஷன் வாங்க. உங்களுக்குப் பழகிடும். அப்புறம், வேற ஏரி, நதியில பேட்லிங் பண்ணலாம்” என்றார்.

‘நீருக்கும் மனிதருக்கும் இடையே தொடர்பு இருந்துகொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான், நீர்நிலைகள் பாதுகாக்கப்படும்’ என்கிறார்கள் சூழலியலாளர்கள். அந்தத் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள ‘பேட்லிங்’ போன்ற நீர் விளையாட்டுகள் சிறந்த வழிகளில் ஒன்று என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
 

kumaran4‘பேட்லிங்’ கவனிக்க வேண்டியவை

மழைக்காலத்திலும், காற்று அதிகமாக வீசும் நேரத்திலும் ‘பேட்லிங்’கைத் தவிர்ப்பது நல்லது.

வெயில் அதிகமாக இருக்கும்போது, ‘பேட்லிங்’கைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், 40 டிகிரி செல்சியஸுக்கு மேலே வெப்பம் இருந்தால், பேட்லிங் பலகை வெடித்துப் பஞ்சராக வாய்ப்புண்டு.

உடல் நல்ல நிலையில் இருக்க வேண்டும். நோய் இருந்தால் ‘பேட்லிங்’ கூடாது.

ஆபத்துக்கு உதவும் எடைக்கு ஏற்ற லைஃப் ஜாக்கெட்டைத் தேர்வு செய்ய வேண்டும்.

நீங்களும் ‘பேட்லிங்’ பழகி, நீருடனான தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள விருப்பமா?

தொடர்புக்கு: குமரன் – 99710 91541

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்