அனுபவம் புதுமை 06: ஃபிரியா வுடு மாமே!

By கா.கார்த்திகேயன்

“கொஞ்சம்கூட பொறுப்பே இல்லாம இருக்கியே” - இந்த வார்த்தை ஒலிக்காத வீடுகளே இல்லை. ஒரு பேராசிரியராக நான் அடிக்கடி மாணவர்களிடம் உச்சரிக்கும் வார்த்தையும்கூட.

“திட்டமிடு, உறுதிப்படுத்து, செயல்படு. இதை ‘பாலிசி’யாக வைச்சுக்கோ” என்று சொல்லும்போது அந்த ‘பாலிசி’க்கு எவ்வளவு பணம் கட்ட வேண்டும் என்று குறும்பாகக் கேட்கும் மாணவர்களைப் புன்னைகையால் கடந்திருக்கிறேன். அறிவுரை என்ற பெயரில் ‘அட்ராசிட்டி’ செய்கிறாரே எனக் காதுபட வசவும் இளவட்டங்களும் உண்டு.

மாணவர்கள் மட்டுமல்ல; பொதுவாக எல்லோரையும் மூன்று விதமாகப் பிரிக்கலாம். ‘வரும் முன் காப்போம்’ வகையறாக்கள், அடுத்த மாத பயணத்துக்கு இப்போதே ரயிலில் முன்பதிவு செய்துவிட்டு உறுதிசெய்துவிடுவார்கள். இவர்கள் உஷார் பேர்வழிகள்!

எதையும் வரும்போது பார்த்துக் கொள்பவர்கள் இரண்டாவது வகையினர். திட்டமிடுதலை ஒத்திவைக்கவே இவர்கள் விரும்புவார்கள். ‘இப்போ என்ன அவசரம்; முந்திரிக்கொட்டை மாதிரி முந்திகிட்டு’ என்று முதல் வகை மனிதர்களை நக்கல் அடிக்கத் தயங்காதவர்கள். பேருந்தோ ரயில் பயணமோ; இரண்டு நாட்களுக்கு முன்னால் தீர்மானித்துக்கொள்ளலாம் என்ற மனப்பான்மை உள்ளவர்கள்.

மூன்றாவது வகையினர், இந்த இரண்டு பிரிவிலும் சேராதவர்கள். ‘சட்ட திட்டமெல்லாம் நமக்கு எதுக்கு? வாழ்க்கை போறபடி போய்க்கிட்டு இருப்போம். ‘டேக் இட் ஈசி’, ‘ஃபிரியா வுடு மாமே’ என்று அலட்சியம் காட்டுபவர்கள். எதிலும் ஈடுபாடு காட்டாமல், அவசரமில்லாமல் செயல்படுவார்கள். எல்லாவற்றையும் ஒரே மாதிரி பாவிப்பவர்கள். அதாவது, பயணம் செய்கிற அன்று பார்த்துகொள்வோம் எனும் ரகங்கள். பேருந்தோ ரயிலோ எது கிடைக்கிறதோ அதில் செல்லும் பேர்வழிகள். தானும் சிரமப்பட்டு, உடன் வருவோரையும் இவர்கள் சிரமப்படுத்திவிடுவார்கள்.

இன்று நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களைப் பார்க்கும்போது மூன்றாவது வகையினர் வட்டம் சற்றுப் பெரிதாகிவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது. என்னுடைய மாணவன் அறிவரசன் என்ற ‘அசால்ட் அறிவு’ பற்றிச் சொன்னால், மூன்றாவது வகையினரின் அசால்ட் தெரிந்துவிடும்.

அறிவு ரொம்பவே நல்ல பையன். உதவி என்று யாரும் கேட்காமலேயே ஓடிவந்து உதவும் ரகம். ஆனால், அவனுக்கு எல்லாவற்றிலும் ஓர் அலட்சியப் போக்கு உண்டு. ‘தேர்வுக்கு இரண்டு நாள்தான் இருக்கு. நல்லா படி’ என்று சொன்னால், ‘அது வரட்டும் சார். அதான் இரண்டு நாள் இருக்கே’ என்பான் அசராமல்.

ஆனால், இந்த ‘அசால்ட்’ மனப்பான்மை ஒரு முறை அவனை தீராத சோகத்தில் ஆழ்த்திவிட்டது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு செமஸ்டர் தேர்வுகள் நடந்த காலம். தொடர் மழையின் காரணமாக தேர்வு நாட்கள் மாறிக்கொண்டே இருந்தன. ஒவ்வொரு பாடத்துக்குமான தேர்வு நாள் தேதியை இணையதளத்தில் பார்த்தும் கல்லூரியில் கேட்டும் உறுதி செய்துகொள்ளும்படி பல்கலைக்கழகம் அறிவுறுத்தியிருந்தது.

ஒரு தேர்வு நாளின் மதியான வேளையில் அறிவு சோகமான முகத்துடன் என்னைப் பார்க்க வந்தான்.

“என்ன அறிவு, தேர்வு எப்படி எழுதியிருக்க” என்று கேட்டதும், “சார் தேர்வு மத்தியானம்னு நினைச்சுக்கிட்டு வந்தேன். ஆனா, காலையில முடிஞ்சு போச்சு” என்றான் முகத்தைப் பாவமாக வைத்தபடி.

அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்துபோனேன். “என்னது, தேர்வு எப்ப நடக்குதுன்னுகூடத் தெரியாமப் போச்சா” என்று கோபத்தை வெளிக்காட்டாமல் கேட்டேன்.

“சார், தேதி மாறிக்கிட்டே இருந்துச்சு. இன்னிக்குத் தேர்வுன்னு தெரியும், முதல்ல தந்த அட்டவணைல தேர்வு மத்தியானம்னு போட்டிருந்துச்சு. ஆனா, திருத்தியமைச்ச அட்டவணையில காலையில தேர்வாம், அது இப்போதான் தெரியும்” என்றான் சோர்வாக.

“என்னப்பா கொஞ்சம்கூடப் பொறுப்பில்லாம இருக்க. நேத்திக்கே உன்னோட நண்பர்கள்கிட்ட கேட்டு இருக்கலாமே. எனக்கு போன் பண்ணியிருந்தா, நான் சொல்லியிருப்பேனே” என்றேன் வருத்தமான குரலில்.

“எல்லாம் என்னோட விதியின் விளைவு” என்று தத்துவம் பேசினான். “அறிவு, இது உன்னோட ‘அசால்ட்’ குணத்தோட விளைவு. எதையுமே உறுதி செய்யாம, சீரியஸாக இல்லாமல் இருப்பது உன்னோட தப்பு. அடுத்த செமஸ்டர்ல இந்தத் தேர்வை எழுதி பாஸ் பண்ற வழிய பாரு” என்று சொன்னதும், தலையாட்டிவிட்டு நகர்ந்தான்.

அதுவரை தேர்வில் அரியரே வைக்காத அறிவரசன், எழுதாமல் போன பாடத்தையும் சேர்த்து அடுத்த பருவத் தேர்வில் தேர்ச்சி பெற்றான். இந்தச் சம்பவத்துக்கு பிறகு ‘அசால்ட் அறிவு’, ‘அலர்ட் அறி’வாக மாறி இருப்பான் என நம்புகிறேன்.

அறிவைப் போன்றவர்கள் நம்மைச் சுற்றி நிறையப் பேர் இருக்கிறார்கள். எதையும் மேம்போக்காக அணுகுவது, அப்புறம் பார்த்துக்கொள்வோம் என்று எண்ணுவது; எதையும் உறுதிப்படுத்திக்கொள்ளாமல் அது இப்படித்தான் இருக்கும் என்று சுயமாக முடிவெடுத்துக்கொள்வது என இருக்கிறோம். ஒரு விஷயத்தில் ஈடு படும்போது அதில் காட்டுகிற ஆர்வமும் திட்டமிடுதலும்தான் அந்த விஷயத்தை வெற்றிகரமாக முடிக்க உதவும். ‘அசால்ட்’ மனப்பான்மை எப்போதும் சேதாரத்தையே தரும்!

(அனுபவம் பேசும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: karthikk_77@yahoo.com

“அரசியல் என்பது சேவை. அதன்மீது எப்படி ஆசைப்பட முடியும்?” - விஜய் ஆண்டனி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

47 mins ago

சிறப்புப் பக்கம்

57 mins ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்