பொழுதுபோகாத நேரத்தில் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று, காற்றில் பிளாஸ்டிக் வட்டத் தட்டை பறக்கவிடும் ‘ஃபிரிஸ்பீ’ விளையாட்டு. இது ஏதோ சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு என்று நினைத்தால், அது தவறு. வரும் ஜூலையில் அமெரிக்காவில் உள்ள சின்சினாட்டி நகரில் நடைபெற இருக்கும் ‘2018 உலக அல்டிமேட் ஃபிரிஸ்பீ சாம்பியன்ஷிப்’ போட்டிக்கு இந்தியாவிலிருந்து தேர்வாகி இருக்கிறது சென்னையைச் சேர்ந்த ‘ஸ்டால்7’ குழு.
சும்மா இல்லை
இந்த ஆண்டு 40 நாடுகளைச் சேர்ந்த 150 ஃபிரிஸ்பீ குழுக்கள் பங்கேற்க இருக்கும் சர்வதேச அளவிலான இந்தப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஒரே இந்தியக் குழு இதுவே. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் டெல்லியில் தேசிய அளவிலான ஃபிரிஸ்பீ போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. அணிக்கு ஏழு பேர் வீதத்தில் இரண்டு அணிகள் நேருக்கு நேர் மோதும் இந்த விளையாட்டை ஆண்களும் பெண்களும் இணைந்து விளையாடுகிறார்கள். மொத்தம் 14 - 26 பேர் ஒரு குழுவில் இருப்பார்கள்.
சும்மா தூக்கி எறிந்து பிடித்து விளையாடுகிற ஃபிரிஸ்பீக்கும் விதிமுறைகள் உண்டா? என்று கேட்டால், “கிரிக்கெட்டுக்குப் பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன் இருப்பதுபோல ஃபிரிஸ்பீக்குத் தட்டை எறியும் ‘ஹேண்ட்லர்ஸ்’, அதைப் பிடிக்கும் ‘கட்டர்ஸ்’ என இரு பிரிவினர் உண்டு. அவர்களுக்கு உடல் உறுதியும் துரிதமாகச் செயல்படும் திறனும் உத்வேகமாகத் தாவிப் பிடிக்கும் ஆற்றலும் அவசியம். அப்படிப் பார்த்தால் கொஞ்சம் தடகள விளையாட்டு, கொஞ்சம் கூடைப்பந்து, கொஞ்சம் கால்பந்து எனப் பல விளையாட்டுகளின் அம்சங்களும் ஃபிரிஸ்பீயில் உள்ளன” என்கிறார் ‘ஸ்டால்7’ அணி வீரரான ரகு. கடந்த ஏழாண்டுகளில் 65 மாநில, தேசிய அளவிலான ஃபிரிஸ்பீ போட்டிகளில் இவர் பங்கேற்றிருக்கிறார்.
பாரபட்சம் கிடையாது
60 ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்காவைச் சேர்ந்த கல்லூரி ஒன்றின் மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ‘ஃபிரிஸ்பீ’ விளையாட்டு, இன்று உலகம் முழுவதும் பிரபலமடைந்துவருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை 2009-ல் சென்னையைச் சேர்ந்த 7 இளைஞர்கள் பெசன்ட் நகர் கடற்கரையில் ‘ஸ்டால்7’ குழுவைத் தொடங்கினார்கள் என்கிறார் ரகு. ஆரம்பத்தில் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற இந்த விளையாட்டில் 4:3 என்ற வீதத்தில் ஆண்களும் பெண்களும் பங்கேற்கும்படி ‘ஃபிரிஸ்பீ’ விளையாட்டு தற்போது முறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதனால், அதிக எண்ணிக்கையில் இளம் பெண்களும் இந்தப் போட்டியில் பங்கேற்க ஆர்வம் காட்டத் தொடங்கி இருக்கிறார்கள். அகமதாபாத்தைச் சேர்ந்த ரிச்சா, ‘ஸ்டால்7’ குழுவின் உற்சாக வீராங்கனை. “ஃபிரிஸ்பீயைப் பொறுத்தவரை ஒவ்வொரு விளையாட்டு வீரரும் முக்கியம். ஒருவரோடு ஒருவர் ஒத்துழைச்சு சரியான புரிதலோடு விளையாடினால் மட்டுமே இதில் வெற்றி பெற முடியும். அதனாலேயே இதில் ஆண், பெண் என்ற பாரபட்சம் கிடையாது. ஆனால் குஜராத்தில் தமிழகத்தைப் போலப் பெண்கள் விளையாடுவது இன்னமும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதனால் ஆரம்பத்தில் என்னுடைய பெற்றோரிடம் சம்மதம் வாங்க கஷ்டப்பட்டேன். பிறகு சென்னை வந்து அடிக்கடி இவர்களோடு பயிற்சி எடுக்கத் தொடங்கினேன். இப்போது உலக சாம்பியன்ஷிப்புக்காகத் தயாராக இருக்கிறேன்” என்கிறார் ரிச்சா.
அங்கீகாரமும் ஆதரவும் தேவை
‘ஃபிரிஸ்பீ’ விளையாட்டின் தனித்துவமே நேர்மையும் ஒத்துழைப்பும்தான் என்கிறார் சென்னையைச் சேர்ந்த சங்கமித்ரா. கடந்த எட்டாண்டுகளாக ‘ஸ்டால்7’ அணியின் முக்கிய வீராங்கனை இவர். “ஃபிரிஸ்பீ போட்டியில் நடுவர் கிடையாது. புள்ளிகளையும் நேரத்தையும் மட்டும் கணக்கிடப் பொதுவாக ஒருவர் இருப்பார். அதனால் 55 - 65 நிமிடங்கள் அல்லது புள்ளிகளின் அடிப்படையில் ஒவ்வொரு போட்டியும் நடத்தப்படும். உலக சாம்பியன்ஷிப்பில் நாளுக்கு 2 அல்லது 3 போட்டிகள் என்ற கணக்கில் தொடர்ந்து 5 நாட்களுக்கு நடைபெறும். விளையாட்டு வீரர்கள்தான் வெற்றியையும் தோல்வியையும் நிர்ணயிப்பார்கள். அதனால் நேர்மையாகவும் சக போட்டியாளர் மீது நம்பிக்கையும் இதில் அவசியம்” என்கிறார் சங்கமித்ரா.
“ஒவ்வொரு தொடர் முடிந்ததும் பயிலரங்கம் நடத்துவோம். இப்படி 30-க்கும் மேற்பட்ட புதிய ஃபிரிஸ்பீ வீரர்களை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். அதிலும் பெரும்பாலான நேரம் நாங்கள் பெசன்ட் நகர் கடற்கரையில்தான் விளையாடுவதால் பக்கத்தில் உள்ள மீனவ இளைஞர்களும் எங்களுடன் விளையாட ஆர்வம் காட்டினார்கள். அவர்களிடம் வெளிப்பட்ட துடிப்பைப் பார்த்துப் பயிற்சி அளித்தோம். அதன்மூலம் ‘Flywild’ என்ற அவர்களுடைய டீம் தேசிய அளவில் 5-ம் இடத்தில் உள்ளது” என்கிறார் ரகு.
பெருவாரியான விளையாட்டுகளுடன் ஒப்பிடுகையில் ஃபிரிஸ்பீக்கு அதிகம் செலவாகாது. ஒரு ஃபிரிஸ்பீ தட்டின் விலை ரூ.500. நல்ல காலணி இருந்தால்போதும். அவ்வளவுதான், இந்த விளையாட்டுக்கு அதற்கு மேலே எந்தச் செலவும் இல்லை. இதனால் அனைத்துத் தரப்பினரும் இந்த விளையாட்டை எளிதில் கற்றுக்கொண்டு விளையாடலாம் என்கிறார்கள் இக்குழுவினர்.
சர்வதேச அளவில் இப்போட்டி நடத்தப்பட்டாலும் வெற்றியாளர்களுக்குச் சன்மானம் வழங்கப்படுவதில்லை. இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை. இதனால் முழுக்க முழுக்க சுய ஆர்வத்தால் மட்டுமே விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் இந்திய ‘ஃபிரிஸ்பீ’ வீரர்கள்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago