இ
ணையத்துக்குக் கொஞ்சம் சோதனையான காலம்தான் இது. ஏற்கெனவே ‘ஃபேக் நியூஸ்’ எனப்படும் பொய்ச் செய்திகள் இணையத்தை ஆட்டிப் படைத்துவரும் நிலையில், ஃபேஸ்புக் அனலிடிகா பிரச்சினை வடிவில் பிரைவசி அச்சம் பெரிதாக வெடித்துள்ளது. இன்னொரு பக்கம், ட்விட்டரில் ‘பாட்கள்’ எனப்படும் இயந்திரக் கணக்குகளின் ஆதிக்கமும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தவிர, பாஸ்வேர்டு திருட்டு, ஹேக்கர்களின் கைவரிசைகளும் இல்லாமல் இல்லை.
இந்தப் பின்னணியில் இணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது? இதைத் தெரிந்துகொள்ள ‘மொசில்லா பவுண்டேஷன்’ ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இணையத்தில் என்ன பிரச்சினை, எவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்பது போன்ற விஷயங்கள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இணைய உலகம் நன்கறிந்த பிரவுசர்களில் ஒன்று மொசில்லா. இணையம் எப்படி இருக்கிறது என்பதை அறிவதற்கான முயற்சியாக இணைய ஆரோக்கிய அறிக்கைத் திட்டத்தை ஓராண்டுக்கு முன்பு ‘மொசில்லா பவுண்டேஷன்’ அமைப்பு தொடங்கியது. இணையவாசிகள் பங்களிப்போடு நடைபெற்ற இந்தத் திட்டத்தின் அறிக்கையை மொசில்லா அண்மையில் வெளியிட்டது.
நேர்மறையான விஷயங்கள்
பிரைவசி, பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை, டிஜிட்டல் வாய்ப்புகள், இணைய விழிப்புணர்வு, மையமற்ற விரிவாக்கம் ஆகிய ஐந்து அம்சங்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாராகியுள்ளது. இணையத்தில் மனித வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் இது அமைந்திருப்பதாக மொசில்லா அமைப்பின் செயல் இயக்குநர் மார்க் சுர்மன் கூறியுள்ளார். இணையத்தின் ஆரோக்கியம் ஒட்டுமொத்தமாக மோசமில்லை. ஆனால், கவலைதரும் பல அம்சங்கள் இருக்கின்றன என இந்த அறிக்கை தெரிவிக்கிறது. குறிப்பாக, ஃபேஸ்புக் சர்ச்சை பின்னணியில் இந்த அறிக்கை சுட்டிக்காட்டும் பிரச்சினைக்குரிய அம்சங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
அதேநேரம் இணையத்தில் வரவேற்கக்கூடிய அம்சங்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அதிக எண்ணிக்கையிலான மக்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர், ஸ்மார்ட்போன்கள் எழுச்சியால் இணையத்தை அணுகுவது செலவு குறைந்திருக்கிறது, தகவல்கள் என்கிரிப்ட் செய்யப் படுவது அதிகரித்திருக்கிறது ஆகிய அம்சங்கள் நேர்மறையாக இருப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
எதிர்மறை அதிகரிப்பு
இணையத்தில் அரசுத் தணிக்கை அதிகரித்திருக்கிறது, ட்ரால்களின் தொல்லை தீவிரமாகி இருக்கிறது, இணையத்தில் குறிப்பிட்ட மெகா நிறுவனங்களின் ஆதிக்கம் வலுப் பெறுவது போன்றவை கவலை அளிக்கும் அம்சங்கள் என அறிக்கை தெரிவிக்கிறது. ஆப்பிள், ஃபேஸ்புக், கூகுள், அமேசான் போன்ற நிறுவனங்கள் ஏகபோக அந்தஸ்துடன் ஆதிக்கம் செலுத்துவதையும் பொய்ச் செய்திகள் பிரச்சினை பற்றியும் முக்கியமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும்விடக் கவலை அளிக்கும் விஷயமாக, இணையத்தின் வருவாய் பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பயனாளிகளிடம் இருந்து முடிந்த அளவு தகவல்களை அறுவடை செய்து, அவற்றை விளம்பரதாரர்களுக்கு விற்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஃபேஸ்புக்கும் கூகுளும் இதை அடிப்படையாகக் கொண்டுதான் வருவாய் ஈட்டுகின்றன.
ஃபேஸ்புக் பயனாளிகள் தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்ட பிரச்சினையில் இந்த வருவாய் வழி முக்கியமாக விவாதிக்கப்படும் சூழலில், மொசில்லா அறிக்கை இது குறித்து அழுத்தம் திருத்தமாக எச்சரிக்கிறது. தகவல்களைத் திரட்டுவது, அந்தத் தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளார்ந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு இல்லை
நிறுவனங்கள் இந்த அளவு தரவுகளைச் சேகரிப்பதற்குப் பயனாளிகளின் அறியாமையும் ஒரு முக்கியக் காரணம் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. எந்த அளவுக்குத் தகவல் சேகரிப்பு நடைபெறுகிறது என்பதை அறியாதவர்களாக நெட்டிசன்கள் இருப்பதாகவும் அறிக்கை கூறியுள்ளது. ஸ்மார்ட்போன்கள் மூலம் இணையத்தில் அடியெடுத்து வைக்கும் புதிய பயனாளிகள் பற்றியும் கவலையோடு அறிக்கை குறிப்பிடுகிறது. புதிதாக இணைய உலகில் நுழைபவர்கள், கண்களில் மண்ணைத் தூவும் பொய்ச் செய்திகள், மோசடி வலை, மயக்கும் விளம்பரங்கள், தவறான தகவல்கள் ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஸ்மார்ட்போன்கள் மூலம் இணையத்தை அணுகுவது எளிதாகி இருந்தாலும், இணையத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு பரவலாக இல்லை.
இணையப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த டிஜிட்டல் கல்வியில் கவனம் செலுத்துவது அவசியம் என்பதையும் அறிக்கை உணர்த்துகிறது. இணையம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டுவதுடன் மொசில்லா அறிக்கை நின்றுவிடவில்லை. இவற்றுக்குத் தீர்வு காணும் வகையில் செயல்பட்டு வரும் தனிநபர்களையும் அவர்களது பங்களிப்பையும் அடையாளம் காட்டியுள்ளது.
இணையத்தில் ஆங்கிலம் அல்லாத பிராந்திய மொழிகள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டுவரும் இந்தியாவின் சந்தோஷ் தோட்டிங்கல், சைபர் சிவில் உரிமைகள் அமைப்பை உருவாக்கியுள்ள ஹாலி ஜேக்கப்ஸ் ஆகியோர் பற்றியும் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இணைய ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்கள் மொசில்லா அமைப்பின் முழு அறிக்கையை (https://internethealthreport.org/) வாசிக்க வேண்டும். அது மட்டுமல்ல; இணைய ஆரோக்கியத்தைக் காக்கும் முயற்சியிலும் பங்கேற்கலாம்.
இணையவாசிகளுக்கு அழைப்பு
இந்த அறிக்கை இணைய பயனாளிகளின் பங்களிப்புடன் தயாராகியுள்ளது. இந்த அறிக்கை தொடர்பான கருத்துகளையும் மொசில்லா கோரியுள்ளது. இணையவாசிகள் தங்கள் கருத்துகளைச் சமர்ப்பிக்கலாம். இணையப் பிரச்சாரம் முதல் இணையத்தில் இணைக்கப்பட்ட பொருட்கள் தொடர்பாக ஆய்வு செய்வதற்கான நிதிநல்கையை இணையவாசிகளுக்காக வழங்குகிறது.
இதனிடையே ஃபேஸ்புக் பயனாளிகள் இந்த சேவையால் இணையத்தில் பின்தொடரப்படுவதைத் தடுக்கும் பிரவுசர் நீட்டிப்பு சேவையையும் மொசில்லா அமைப்பு அறிமுகம் செய்துள்ளது. https://mzl.la/2GHIX3n என்ற ஃபேஸ்புக் சேவையைப் பயன்படுத்தும்போது, பயனாளிகள் இணையத்தைப் பயன்படுத்தும் விதம் தொடர்பாகவும் ஃபேஸ்புக் தகவல்களைச் சேகரிப்பதையும் இந்த நீட்டிப்பு சேவை தடுக்கிறது. ஃபேஸ்புக்கின் பிரைவசி கொள்கையில் மாற்றம் தேவை எனும் இணைய பிரச்சாரத்தையும் ‘சேஞ்ச்.அர்க்’ தளத்தில் தொடங்கியிருக்கிறது.
தகவல்களுக்கு: https://apple.co/2IXQk3T
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago