பெருநகரங்களில் கடற்கரை, பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் சந்தித்துப் பேசுவதை இன்றைய இளைய தலைமுறையினர் விரும்புவதில்லை. தனிமையையும் கட்டற்ற சுதந்திரத்தையும் விரும்பும் இன்றைய தலைமுறையினருக்கு இந்தப் பொதுவெளிகள் ஒருவித அசௌகரியத்தையே கொடுக்கின்றன.
மனதாரப் பேசிக்கொள்ள இதுவரை இருந்துவந்த வெற்றிடத்தைப் போக்குவதில் காபி ஷாப்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நண்பர்கள், காதலர்கள் என யாராக இருந்தாலும், உட்கார்ந்து மணிக்கணக்கில் பேசிக்கொள்ளும் இடங்களாக காபி ஷாப்புகள் மாறிவிட்டன.
சூரிய உதயம் ஆரம்பிக்கும் பொழுதில் தொடங்கப்படும் காபி ஷாப்புகள், இரவு 11 ஆனாலும் பரபரப்பாகவே இருக்கின்றனன. ஒரு காபியோ, குளிர்பானமோ வாங்கிவிட்டு, எவ்வளவு மணி நேரம் வேண்டுமானாலும் அரட்டை அடிக்கலாம். அந்நியர்களின் பிரவேசம் கிடையாது, உறுத்தலான பார்வை கிடையாது. அவரவர் வேலையில் தடங்கல்கள் என்ற பேச்சுக்கெல்லாம் காபி ஷாப்புகளில் இடமில்லை.
இவ்வளவு தனிமையைத் தரும் இங்கு செல்ல வேண்டுமானால், நம் பாக்கெட்டுகளில் காந்தித் தாத்தா பளிச்செனச் சிரிக்க வேண்டும். சாதாரண கடையில் காபிக்கு 25 ரூபாய் இருந்தால் போதும்.
பெரிய ஹோட்டல்கள் என்றால் கூடவே இன்னும் சில இருபது ரூபாய்கள் வேண்டும். ஆனால், காபி ஷாப்புகள் என்றால் நூறுகளில் பணம் வேண்டும். கும்பகோணம் டிகிரி காபி முதல் கோல்டு காபி வரை வகை வகையாக காபிகள் கிடைக்கும்.
அப்படியே லஞ்ச், டின்னர் முடிக்க உணவு வகைகள், ஜூஸ்கள், பீட்சா, பர்க்கர் என நொறுக்குத் தீனிகளுக்கும் பஞ்சம் கிடையாது.
குறைந்த விலையில் காபி, ஜூஸ், உணவு வகைகள் எத்தனையோ ஹோட்டல்களில் கிடைத்தாலும், நிறையப் பணம் வசூலிக்கும் காபி ஷாப்புகளுக்கு ஒருவர் ஏன் வர வேண்டும்? இதற்கு ஒரே காரணம் தனிமை.
இங்கே கிடைக்கும் தனிமை காரணமாகவே நண்பர்கள், காதலர்கள் காபி ஷாப் வர ஆர்வம் காட்டுகிறார்கள். இன்றைய இளைய தலைமுறையினர் காபி ஷாப்புகளுக்கு வருவதைச் சமூக அந்தஸ்தின் குறியீடாகவும் நினைக்கிறார்கள்.
வீட்டுக்கு வீடு விமானம்! - வீட்டுக்கு வீடு இருசக்கர வாகனம் இருக்கலாம். அவ்வளவு ஏன் வீட்டுக்கு வீடு கார்கூட இருக்கலாம். ஆனால், வீட்டுக்கு வீடு விமானம் இருக்க முடியுமா? இருக்கும் என்று நிரூபித்திருக்கிறது அமெரிக்காவில் உள்ள ஓர் ஊர்!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கேமரான் ஏர்பார்க் என்கிற சிறுநகரம்தான் அந்தப் பெருமையைப் பெற்றிருக்கிறது.
இது மக்கள் பயன்படுத்தும் ஏர்போர்ட் நகரம். இங்கு வசிக்கும் மக்கள் அருகே உள்ள விமான நிலையம் செல்ல வீட்டுக்கு வீடு விமானம் வைத்திருக்கிறார்கள்.
கடந்த 1963இல் கேமரான் ஏர்பார்க் நகரம் அமைக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக விமான நிறுவனங்களிலிருந்து ஓய்வு பெறும் விமானிகள், விமானப்படை ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற விமானிகளுக்குக் குடியிருப்பு உருவாக்குவதற்காகவே இந்த நகரை உருவாக்கியிருக்கிறார்கள்.
இந்த ஊரில் சுமார் 100 வீடுகள் மட்டுமே உள்ளன. இங்கு குடியிருப்பவர்கள் பெரும்பாலும் ஓய்வு பெற்ற விமானிகள் என்பதால், அவர்கள் குட்டி விமானங்களை இயக்க அனுமதி கொடுத்திருக்கிறார்கள். அதனால்தான் இந்தப் பகுதிக்குச் சென்றால் வீட்டுக்கு வீடு விமானம் இருப்பதைக் காண முடியும். விமானம் மேலே ஏறவும் இறங்கவும் வசதியாகத் தெருவையே விமான ஓடுதளம் போல 100 அடி அகலத்தில் அமைத்திருக்கிறார்கள். அமெரிக்காவின் காஸ்ட்லியான சிறு நகரங்களில் இதுவும் ஒன்று. இப்படியும் ஓர் ஊர்!
முதல் ஏ.ஐ. டீச்சர்! - எங்கும் செயற்கை நுண்ணறிவுப் (AI-Artificial Intelligence) பற்றிய பேச்சுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. எதிர்காலத்தில் நம் வாழ்க்கையோடு ஏதோ ஒரு வகையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமும் நீக்கமற நிறைந்திருக்கும் என்கிற நிலை வந்தாலும் ஆச்சரியமில்லை. ஏற்கெனவே ஊடகத் துறை, மருத்துவத் துறை போன்றவற்றில் ஏ.ஐ. தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன.
தற்போது கல்வித் துறையிலும் ஏ.ஐ. கால் பதித்துள்ளது. ஆம், கேரளத்தில் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட ஆசிரியரை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். ஐரிஸ் என்று பெயரிடப் பட்டுள்ள இந்த ஆசிரியர், நாட்டில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட முதல் ஆசிரியர். திருவனந்தபுரத்தில் உள்ள கேடிசி மேல்நிலைப் பள்ளியில்தான் இந்தச் செயற்கை நுண்ணறிவு ஆசிரியர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்தச் செயற்கை நுண்ணறிவு ஆசிரியர் 3 மொழிகளைப் பேசும் வகையிலும் சிக்கலான கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் வகையிலும் வடிமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏ.ஐ. ஐரிஸ் ஆசிரியருக்கென தனிப்பட்ட குரல், கையாளும் திறன்கள், மாணவர்களுக்குச் சுலபமாகக் கற்பிக்கும் திறன், வகுப்பில் நகர்ந்துகொண்டே பாடம் நடத்த சக்கர உதவி என பல வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. ஏ.ஐ. ரூபத்தில் இன்னும் என்னென்ன நடக்குமோ?
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago