பதினெட்டு லட்சம் சொற்களைக் கொண்ட, உலகின் மிகப் பெரிய இதிகாசமான மகாபாரதத்தைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? சிறுவயதில் அமர் சித்ர கதாவில் படித்ததைத் தவிர்த்து, முழுமையான மகாபாரதக் கதையை எப்போது காமிக்ஸ் வடிவில் படித்தீர்கள்? முழுமையான மகாபாரதக் கதையை இது வரையில் காமிக்ஸ் வடிவில் நாம் படித்ததே இல்லை என்பதுதான் உண்மை.
அமர் சித்ர கதாவில் 42 தனிப் புத்தகங்களாக வந்த மகாபாரதம்கூடச் சிறார்களுக்காக உருவாக்கப்பட்டதுதான். அப்படி இருக்க, இந்தியாவின் தலை சிறந்த இரண்டு படைப்பாளிகள் ஒன்றுகூடி வாசிப்பில் முதிர்ச்சி பெற்றவர்களுக்காக மகாபாரதத்தை கிராஃபிக் நாவல் வடிவில் தயாரித்தால் எப்படி இருக்கும்?
மகாபாரதம் ஆரம்பம்
அந்த வகையில், இந்த கிராஃபிக் நாவல் பிரம்மாண்டமான யுத்த களத்தைக் காட்சிப்படுத்தித்தான் ஆரம்பிக்கிறது. இரண்டு மாபெரும் போர்ப் படையினர் எதிரெதிரே நின்று போரிட ஆயத்தமாக இருக்கிறார்கள். யானை, குதிரைப் படைகள் கிளப்பிய தூசி சூரியனையே மறைத்துவிடுகிறது.
காற்று வீச ஆரம்பிக்க, ஒரு மாபெரும் யுத்தம் தொடங்குகிறது. அதேநேரம் கறுத்த உருவமும் வெண்ணிறத் தாடியும் கொண்ட ஒரு முனிவர் அரண்மனைக்குள் நுழைந்து, பார்வையற்ற மன்னரிடம் பேசத் தொடங்குகிறார்.
உலகமே ஒரு விசித்திரமான விலங்குக் காட்சி சாலையாகிவிட்டதென்றும் இயற்கைக்கு மாறான நிகழ்வுகள் நடக்கின்றன என்றும் மாறுபாட்டை விவரிக்கிறார். கழுதைகளை ஈனும் பசுக்கள், மூன்று கொம்புகளைக் கொண்ட விலங்குகள், நான்கு கண்களைக் கொண்ட குதிரைகள், இரண்டு தலைகளைக் கொண்ட நாய்கள் என்று விசித்திரமான விலங்குகளால் உலகம் நிறைந்திருக்கிறது.
கருமையான, பெயர் தெரியாத செடிகொடிகள் உலகை ஆக்கிரமிக்கின்றன. ஓர் இறக்கை, ஒரு கண், ஒரு கால் கொண்ட விசித்திரமான பறவையின் ஓலம் பயமுறுத்துகிறது. குடும்ப உறவுகள் மாறி, நதிகள் அனைத்தும் ரத்தமாக, மேகங்கள் வித்தியாசமாகக் காட்சியளிக்கின்றன என்று அந்த முனிவர் சொல்கிறார். நடக்க இருக்கும் யுத்தத்தின் விளைவுகளை முன்கூட்டியே சொல்லி யுத்தத்தை நிறுத்தும்படி அவர் கேட்கிறார்.
சொல் பேச்சுக் கேட்காத வாரிசுகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருக்கும் அந்த மன்னருக்கு ஒரு வரம் அளிக்கிறார் அந்த முனிவர். அந்த மன்னரின் அருகில் இருப்பவரால், யுத்த களத்தில் நடப்பவை அனைத்தையும் காண இயலும். கிளம்பும்போது, இந்த யுத்தத்தின் கதையை நான் உலகுக்குச் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு அந்த முனிவர் கிளம்புகிறார்.
இந்த கிராஃபிக் நாவலின் ஆரம்பப் பக்கங்களிலேயே நாம் இதுவரையில் பார்க்காத, படிக்காத ஒரு வகையான வாசிப்புக்கு நம்மைத் தயார்படுத்திவிடுகிறார்கள். குறிப்பாக, உலகில் வித்தியாசமாக நடக்கும் சம்பவங்களைப் பற்றிய அந்த இரண்டு பக்க ஓவியங்கள், இந்திய கிராஃபிக் நாவலின் உச்சம் என்றே சொல்லலாம்.
மகாபாரதமே ஒரு நான்-லீனியர் வடிவக் கதைதான். ஆனால், இந்த கிராஃபிக் நாவலில் அதன் வடிவத்தை உடைத்து, சமகால ரசனைக்கேற்ப அதை ஒரு நவீன பாணிக் கதையாகச் சொல்லி இருக்கிறார்கள்.
கதை சொல்லல்
மகாபாரதப் போரில் வென்ற மன்னரின் வாரிசான ஜனமேஜெயன் ஒரு யாகத்தை அஸ்தினாபுரத்தில் நடத்துகிறார். அவருடைய தந்தையை ஒரு பாம்பு கடித்துவிட, உலகிலிருக்கும் அனைத்துப் பாம்புகளையும் அழிக்க அவர் நடத்தும் யாகத்தில் வியாசரும் அவருடைய ஐந்து சீடர்களில் ஒருவரான வைசம்பாயனரும் கலந்துகொள்கிறார்கள். அப்போதுதான் முதல்முறையாக மகாபாரதத்தை வைசம்பாயனர் சொல்கிறார்.
ஜெயம் என்னும் பெயரில் தன் குருநாதரான வியாசர் பாடிய 8,800 அடிகளை விரிவுபடுத்தி, 24, 000 அடிகளாக வைசம்பாயனர் சொல்ல, அதை உக்கிரசிரவஸ் என்ற சூதர் கேட்கிறார். ஒரு கதைசொல்லியான உக்கிரசிரவஸர், தான் கேட்ட கதையை நைமிசாரண்யத்திலிருக்கும் சவுனக முனிவருக்குச் சொல்லும்போது அது 90,000 அடிகளாக முழுமை பெற்று, பாரதமாக உருவெடுக்கிறது.
இந்த கிராஃபிக் நாவலில் வைசம்பாயனர் சொன்னதை மையப்பொருளாகக் கொள்ளாமல், உக்கிரசிரவஸ் என்ற சூதரின் வடிவத்தைக் கையாண்டதால், நமக்கு இன்னொரு வடிவமும் கிடைக்கிறது. கதையை எழுதிய வியாசரே இந்தக் கதையில் ஒரு பாத்திரமாக வருகிறார். பின் நவீனத்துவ பாணியில் இந்தக் கதை அமைக்கப்பட்டிருந்தாலும், தாழ்த்தப்பட்டவராகக் கருதப்படும் ஒருவரது வடிவில்தான் (உக்கிரசிரவஸ்) இந்த கிராஃபிக் நாவல் உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த கிராஃபிக் நாவல் முன்வைக்கும் அரசியலும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
அமைப்பும் வடிவமும்
இனிமேல் இந்தியாவில் உருவாக்கப்படும் எந்த ஒரு கிராஃபிக் நாவலும் இதுபோல சிறப்பாக உருவாக்கப்பட வேண்டும் என்ற ஒரு அளவீட்டை இந்த கிராஃபிக் நாவல் ஏற்படுத்தியிருக்கிறது. கதை சொல்லலில் சிபாஜி பாந்தோபாத்யாய் ஒரு உச்சத்தைத் தொடுகிறார் என்றால், ஓவியரான பானர்ஜி அதை இன்னொரு தளத்துக்கு உயர்த்துகிறார்.
குறியீடுகளால் நிறைந்த இந்தப் புத்தகத்தில் 1,600-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் உள்ளன. ஒவ்வோர் ஓவியமும் கோணங்களில், அளவுகளில், பார்வை அமைப்புகளில், வண்ணக் கலவையிலிருந்து வேறுபட்டு, சிறப்பாக அமைந்துள்ளது.
அதேநேரம், இரண்டு படைப்பாளிகள் போட்டி போட்டுக்கொண்டு உருவாக்கியதால், கதையும் (வார்த்தைகளும்) களமும் (ஓவியங்களும்) பல இடங்களில் முரண்பட்டு இருப்பதைக் காண முடிகிறது.
ஆறு பாகங்களைக் கொண்ட இந்த கிராஃபிக் நாவலின் முதல் பாகம் படிக்கப் புதிய அனுபவத்தைத் தந்தாலும், மிகவும் கவனமாகப் படிக்க வேண்டிய புத்தகங்களில் ஒன்றாக இது அமைந்துவிடுகிறது.
சிபாஜி பாந்தோபாத்யாய்(கதாசிரியர்): இந்தியாவின் தலை சிறந்த படைப்பாளிகளில் ஒருவர். 63 வயதுடைய இவர், மாற்றுப் பார்வை கொண்ட சிந்தனையாளர். வங்கச் சிறுவர் இலக்கியத்தில் காலனியாதிக்கத்தின் காரணிகளைப் பற்றிய இவரது புத்தகம் மிக முக்கியமானது. ஆங்கில இலக்கியம், நாடகங்கள், பெண்ணியம், திரைப்படத் திறனாய்வு என்று பல களங்களில் இயங்கி வருகிறார். தேசிய, சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ள இவரை, இயக்குநர் ரிதுபர்னோ கோஷ் தனது கடைசி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவும் வைத்துள்ளார்.
சங்கா பானர்ஜி(ஓவியர்): முதலில் பானர்ஜி ‘இந்தியா டுடே’ குழுமத்தில் டிசைனராக வேலைக்குச் சேர்ந்தார். ஆனால், சிறு வயது முதலே ஓவியத்தின் மீது தீராக்காதல் கொண்ட இவர், முழுநேர ஓவியராக மாறினார். அதன் பிறகு, கேம்ப்ஃபையர் நிறுவனத்துக்காகப் பல கிராஃபிக் நாவல்களை உருவாக்கினார். பழைய கலாச்சாரம் மற்றும் பழங்குடியினரின் வாழ்க்கை முறையில் ஆர்வம் கொண்டவர் என்பதால், அவரது ஓவியங்களில் இது பற்றிய குறியீடுகள் காணப்படும்.
தலைப்பு: வியாஸா – ஆரம்பம்!
கதாசிரியர்: சிபாஜி பாந்தோபாத்யாய்
ஓவியர்: சங்கா பானர்ஜி
வெளியீடு: பெங்குயின் ரான்டம் ஹவுஸ்
கதைக்கரு: பாரதம், மகாபாரதமாக உருவான கதை..
பக்கங்கள்: 232
முழு வண்ணப் பக்கங்கள், ₹599.
கட்டுரையாளர், காமிக்ஸ் ஆர்வலர்
தொடர்புக்கு: TamilComicsUlagam@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago