வெ
றும் ஐந்து நிமிடங்களில்கூட நறுக்குத் தெறித்தமாதிரி கதை சொல்லலாம், வாழ்க்கை அனுபவங்களைப் பதிவுசெய்யலாம் என்பதை யூடியூபில் வெளிவரும் இணையத் தொடர்கள் நிரூபித்து வருகின்றன. சினிமாவில் செய்ய முடியாத சோதனை முயற்சிகளை இங்கு இளைஞர்கள் செய்துவருகின்றனர்.
அந்த வகையில் காதல் திருமணம் செய்துகொண்ட இளம் தம்பதியினரின் உறவு சிக்கல்களைச் சிரிக்கவும் சிந்திக்க வைக்கும் வகையில் ‘பிளாக் பசங்க’ என்ற பேனரில் யூடியூபில் ‘கால்கட்டு’ என்ற இணையத் தொடராகத் தந்துகொண்டிருக்கிறார் வெற்றிவேல் சந்திரசேகர். காதல் கல்யாணத்தில் முடிகிறதோ இல்லையோ; பெரும்பாலும் கல்யாணத்தோடு தீர்ந்துபோய்விடுகிறது காதல்.
இதற்கு முக்கியக் காரணம் அன்றாட வாழ்க்கை குறித்த சில தவறான புரிதல்களும் அலட்சியப்போக்கும்தான். இவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் ‘கால்கட்டு’ இணையத் தொடரில் நவீன கணவன், மனைவியாக நடித்திருக்கிறார்கள் பிரதீப்பும், சத்யா சம்பத்தும்.
மனைவியைக் கிண்டலடிக்கும் மீம்ஸ்
“எவ்வளவுதான் நாம நவீனமா மாறினாலும் கணவன் மனைவியைக் கிண்டல் பண்ற போக்கு இன்னமும் மாறல. கணவன்னாலே அப்பாவி, மனைவின்னாலே சந்தேகப்படுறவங்க, கொடுமைப்படுத்துறவங்கனு இன்னைக்கும் வாட்ஸ்அப் மீம்ஸ், ஃபேஸ்புக் ஜோக்ஸ்னு போட்டுக்கிட்டிருக்காங்க. அதிலும் தமிழ் சினிமாவில புருஷன் டாஸ்மாக் போறதுக்குக்கூட மனைவி தான் காரணம்னு காட்டுறாங்க. நாமும் இதெல்லாம் பார்த்துச் சிரிச்சிக்கிட்டிருக்கோம். இது எப்பவுமே எரிச்சல்மூட்டிக்கிட்டே இருந்தது.
ஏற்கெனவே கோலிவுட்டில் உதவி இயக்குநராகச் சில படங்களில் வேலைபார்த்திருந்தாலும், நான் சொல்ல நினைக்கிற கதைகளையும் திரையில் கொண்டுவந்து நிறுத்த ஆசைப்படுற கதைக்களங்களையும் தடையில்லாமல் சொல்றதுக்கான ஊடகம் யூடியூப் சேனல்தான். அதனால, காதல் நிறைந்த கணவன் மனைவிக்கு இடையிலான ஊடல், கூடலைப் பெண்ணின் கோணத்திலிருந்து நான் படமாக்கிட்டிருக்கேன் ” என்கிறார் வெற்றிவேல்.
7CH_YoutubeVetri வெற்றி rightதலைவலியில் தவிக்கும் மனைவிக்கு காபி போட முயன்று சொதப்புவது, முன்னாள் காதலியோடு ஃபேஸ்புக்கில் அரட்டையடித்து மனைவியிடம் மாட்டிக்கொள்வது, புகைப்பழக்கத்தைக் கைவிடுவதாகச் சத்தியம் செய்துவிட்டுத் திருட்டு தம் அடித்துக் கையும் களவுமாகப் பிடிபடுவது, காதலித்த நாட்களில் காதலிக்காக அத்தனையும் செய்யும் காதலன், அவள் மனைவியான பிறகு அவளுடைய பிறந்த நாள் முதற்கொண்டு அத்தனையும் மறந்துவிடும் அலட்சியப் போக்கு, கண்ணோடு கண் பார்த்துக்கூடப் பேசாமல் வேலை வேலை என்று சுற்றுவது - இப்படி இன்றைய இளம் கணவர்கள் செய்யும் சொதப்பல்களைச் சுவாரசியமாகப் பதிவுசெய்கிறது ‘கால்கட்டு’.
அதேநேரத்தில் ஒரேடியாக ஆண்களுக்கு எதிரானதாக இல்லாமல் ஆண் மனதோடு நுட்பமாக உரையாடவும் முயல்கிறது.
வெளியே மனைவி வீட்டில் கணவன்
‘படபட’வெனப் பொரிந்து தள்ளும் மனைவியாக நடித்திருக்கும் சத்யா சம்பத், சென்னையில் பிரபல ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்துவரும் கரூர் பொண்ணு. நடிப்பு வாசனையே தெரியாதவர் என்பது இவரைப் பார்க்கும்போதே தெரிகிறது. ஆனாலும், இயல்பான வாழ்க்கைப் பதிவுக்கு அவர் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். “ஆமாம் எனக்கு நடிப்பு தெரியாததுனால ஆரம்பத்துல 7 நிமிஷக் காட்சிக்கு ஒரு நாள் முழுக்க டேக் எடுத்திருக்கேன். ஆனால், போகப்போக இந்த கான்செப்ட் பிடிச்சு நடிப்பைக் கத்துக்கிட்டேன்” என்கிறார் சத்யா.
pjimagejpgபிரதீப் - சத்யாleftதன்னுடைய அப்பாவித்தனமான முகபாவங்களாலும் குறும்புத்தனமான உடல்மொழியாலும் நடிப்பில் சொதப்பாமல் கணவனாகச் சிறப்பாக ‘சொதப்பு’கிறார் நடிகர் பிரதீப். டெக்கியாக வேலைபார்த்துவந்த இந்த மதுரைக்காரப் பையன், நடிப்பு மீதான தீராக் காதலால் வேலையை ராஜினாமா செய்துவிட்டுக் கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்று நடிகரானவர்.
ஒரு புறம் குறும்படங்களில் நடிப்பது, குறும்படங்களை இயக்குவது, தமிழ் இலக்கிய வாசிப்பு எனத் துடிப்பானவர். தமிழ் சினிமாவில் சிறுவேடங்களில் நடித்துவந்தாலும் அடுத்த பாய்ச்சலுக்காகக் காத்திருக்கிறார்.
“நானும் காதல் கல்யாணம் செஞ்சுகிட்டவன்தான். அதனாலேயே எனக்கு இந்தக் கான்செப்ட் ரொம்பவும் பிடிச்சுது. நான் வெளியில செய்யுற வேலையை என் மனைவியும் செய்யும்போது அவங்க வீட்டுல செய்யுற வேலையை நானும் ஏன் செய்யக் கூடாது? இதுதான் இந்தக் கதையோட அடிப்படை. இந்த தொடரால என்னுடைய நடிப்பு வாழ்க்கை மட்டுமல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நல்ல மாற்றங்கள் நிகழ்ந்துக்கிட்டிருக்கு” என்று டபுள் ஸ்மைலியாகச் சிரிக்கிறார் பிரதீப்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago