இந்தியாவில் பெண் உயர் கல்விக்கு இது நூற்றாண்டு. எப்படி என்கிறீர்களா? பெண் உயர் கல்விக்காக முதன்முதலில் நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட ராணி மேரிக் கல்லூரி நூற்றாண்டைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. அப்படியென்றால் பெண் உயர் கல்வியின் நூற்றாண்டுதானே இது?
இதன் முக்கியத்துவம் எள்ளளவும் குறையாமல் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் ராணி மேரியின் இளவரசிகள் என்பதைக் கல்லூரியில் நுழைந்த உடனே புரிந்துகொள்ள முடிகிறது. நூற்றாண்டைக் கொண்டாடும் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறோம் என்ற பெருமை எதிர்ப்படும் ஒவ்வொருவர் முகத்திலும் தெரிகிறது.
கல்லூரி மாணவிகளின் பிரசிடெண்ட் பிரியதர்ஷினியிடம் நூற்றாண்டுக் கொண்டாட்டங்களைப் பற்றிக் கேட்டவுடன் உற்சாகமாகப் பேசத் தொடங்குகிறார். “எங்க கல்லூரி இரண்டு உலகப் போர்களைச் சந்தித்திருக்கிறது. சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்களையும் சமாளித்திருக்கிறது. சமகாலத்தின் பல்வேறு போராட்டங்களையும் பார்த்திருக்கிறது. எங்க சீனியர்களின் மனவலிமையையும், பெண் கல்வியின் உன்னதத்தையும் இந்த நூற்றாண்டில் முழுமையாகப் புரிந்துகொண்டிருக்கிறோம். இந்த முக்கியமான நிகழ்வில் நானும் பங்கெடுத்துக்கொண்டிருக்கிறேன் என்று நினைக்கும்போதே பெருமையாக இருக்கிறது” என்கிறார் பி.ஏ. ஆங்கிலம் படித்துக்கொண்டிருக்கும் இவர்.
ஜூலை 14, 2014 அன்று நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னாள் மாணவிகள் சங்கத்துடன் இணைந்து கலக்கலாக “ஹேப்பி பர்த்டே க்யூஎம்சி” என்று பாடிக் கொண்டாடியிருக்கிறார்கள். மெட்ராஸ் தினத்தையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை. கல்லூரி வளாகத்தில் இருக்கும் மரங்களைப் பற்றித் தாவரவியல் பேராசிரியர் திலகவதி ‘ப்ளோரா ஆஃப் குயின் மேரிஸ்’ என்ற புத்தகத்தை வெளியிட்டு ‘இயற்கை நடை’ சென்றிருக்கிறார்கள். “எங்க கல்லூரியின் இந்த பசுமையான ஆம்பியன்ஸ் இன்னும் நூறு ஆண்டுகளானாலும் இப்படியேதான் இருக்கும். இதுவரை என்.எஸ்.எஸ்.ஸுடன் இணைந்து 97 சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறோம். இன்னும் மூன்று நிகழ்ச்சிகள்தான் பாக்கி. அரசு கல்லூரிதானே, இவர்கள் என்ன செய்துவிடப்போகிறார்கள் என்ற எண்ணத்தை நூற்றாண்டுக் கொண்டாட்டங்கள் மூலம் உடைத்திருக்கிறோம். இங்கே படிப்பது என்பது எங்கள் அனைவருக்கும் ஒரு வரம்தான்”, என்கிறார் சோஷியல் சர்வீஸ் லீக் செகரட்டரி பிரகதி.
எந்தக் கல்லூரிக்கும் இல்லாத தனிச்சிறப்பு இந்தக் கல்லூரிக்கு இருக்கிறது. பார்வைத் திறன் இழந்த நூறுக்கும் மேற்பட்ட மாணவிகள் இங்கே படித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான சிறப்பு நூலகம் கல்லூரி வளாகத்தில் இருக்கிறது. “இந்த சிறப்பம்சத்தை வேறு எந்த கல்லூரியிலும் நீங்கள் பார்க்க முடியாது. அதோடு எங்க கல்ச்சுரல்ஸில் எப்போதும் தமிழ் பாரம்பரியத்தை வலியுறுத்தும் நிகழ்ச்சிகளுக்குத்தான் முக்கியத்துவம். இந்த நூற்றாண்டு கொண்டாட்டங்களிலும் அதுதான் ஸ்பெஷல்” என்கிறார் கல்ச்சுரல் செகரட்டரி திவ்யா.
கிராமங்களில் இருந்து சென்னைக்குக் கல்விக் கனவோடு வந்து இறங்கும் பல்லாயிரக்கணக்கான மாணவிகளின் லட்சியங்களை இன்றளவும் ராணி மேரிக் கல்லூரிதான் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது. “நான் விழுப்புரம் பக்கத்தில் இருக்கிற சின்ன கிராமத்தில் இருந்து சென்னைக்கு படிப்பதற்காக வந்திருக்கிறேன். வசதி இல்லாத எங்களைப் போன்ற மாணவிகளின் உயர் கல்வி கனவு ராணி மேரிக் கல்லூரி இல்லையென்றால் என்னவாகியிருக்கும் என்று யோசிக்கக்கூட முடியவில்லை. இங்கே இருக்கும் பேராசிரியர்கள் அனைவரும் எங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்கள். அவர்களைப் பார்க்கும்போது கட்டாயம் என் தமிழ் பேராசிரியர் கனவும் நனவாகும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்கிறார் எம்ஏ தமிழ் படிக்கும் சுகன்யா.
இந்தக் கல்லூரியின் இளவரசிகள் டிசம்பர் மாதம் நடக்கவிருக்கும் நூற்றாண்டு நிறைவு விழாவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். இந்த நூற்றாண்டில் அறுபது புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு அரசு திட்டமிருக்கிறதாம். ராணியின் கம்பீர நடை இந்த நூற்றாண்டிலும் தொடர்வதற்கான முன்னோட்டமாக அமைந்திருக்கிறது இந்த அறிவிப்பு.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago