துடிப்புமிக்க 19 இளைஞர்கள் ஒரே மேடையில் கம்பீரமாக ஆடிப் பாடி இசைத்து, புறக்கணிக்கப்பட்ட இசை வடிவங்களின் வழியாகவே ஒடுக்குமுறைக்கு எதிரான தங்களுடைய உரிமைக் குரலை எழுப்பினால் எப்படியிருக்கும்? சென்னையில் நடைபெற்ற ‘தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ இசை நிகழ்ச்சி நம்முடைய கற்பனைக்கும் அப்பால் பிரம்மாண்டமாக ‘சாதி மறுப்பு இசை’யை ஆயிரக்கணக்கான மக்களுக்கு முன்னால் அரங்கேற்றியது. வழக்கமான பாணியிலிருந்து மாறி கோட்டு, சூட்டு அணிந்து மிடுக்காக கானாவை இசைத்துக்காட்டினார்கள் இந்த இளைஞர்கள்.
கானா-ராப்-ராக்
சமகால இந்தியக் கல்வி சூழலில் உள்ள சவால்கள் குறித்த கருத்தரங்கம், துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்வுலகைக் காட்சிப்படுத்தும் ஒளிப்படக் கண்காட்சி எனச் சமூக-அரசியல் நடவடிக்கைகளுக்கு தன்னுடைய எதிர்வினையை ஆக்கப்பூர்வமான வடிவங்களில் நீலம் பண்பாட்டு மையத்தின் மூலமாக முன்னிறுத்திவருகிறார் இயக்குநர் பா. இரஞ்சித். அதன் அடுத்த கட்டமாக இசை மூலம் சமூக நீதிக்குக் குரல் கொடுக்க மெட்ராஸ் ரெக்காட்ஸுடன் இணைந்து அவர் உருவாக்கியிருக்கும் ‘கானா-ராப்-ராக்’ இசை பேண்ட், ‘தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’.
உருக்கமும் ஆக்ரோஷமும்
சம உரிமைக்காகப் போராடிய அயோதிதாச பண்டிதரின் சிந்தனைகள், சாதியை அழித்தொழிக்கத் துணிகரமாக இயங்கிய அம்பேத்கரின் கருத்துகள் ஆகியவற்றிலிருந்து ஊக்கம் பெற்று இந்தக் குழுவை இரஞ்சித் வடிவமைத்தாக சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கானா முத்து கூறுகிறார். 19 பேர் கொண்ட ‘தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ இசை பேண்டைச் சேர்ந்த 4 ராப் பாடகர்கள், 7 இசை கருவிக் கலைஞர்கள், கானா பாடகி இசை வாணி உட்பட 8 கானா குயில்களில் கானா முத்துவும் ஒருவர்.
உருக்கமும் ஆக்ரோஷமும் கலந்து ஒலிக்கும் அபூர்வமான இவருடைய குரலில் ‘இட ஒதுக்கீடு’, ‘அம்பேத்கர்’ பாடல்கள் பெருந்திரளின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றன. அதிலும், ‘தலைமுறையா தலைமுறையா சாதி பாக்குற…நான் படிக்கிறேன் முதல் முறையா அதையும் கேட்குற’, ‘ஜெய் பீம்’ என்று அவருக்கே உரிய கானா பாணியில் பாடும்போதெல்லாம் இசை ரசிகர்கள் உத்வேகத்தில் ஆர்ப்பரித்தனர்.
போக்கை மாத்து!
“பெண்களைக் கேலி செய்வதுதான் கானா என்ற போக்கை மாத்தி உரிமைகளைக் கேட்கிற இசை கானா எனக் காட்டலாம் வாங்க என்று ரஞ்சித் கூப்பிட்டார். 20 நாட்கள் நுங்கம்பாக்கத்திலேயே வொர்க் ஷாப் நடத்தி கூவம் ஆறு வரலாறு, இசைப் புரட்சியாளர் பாப் மார்லி கதைன்னு பல விஷயங்களை அறிமுகப்படுத்தினாங்க. அப்போதான் நாங்க யாருனு எங்களுக்கே புரிஞ்சுது. மும்பையிலிருந்து வந்த அபிஷேக், ராஜேஷ், தோபி ஆகிய ராக், ராப் கலைஞர்களோடு சேர்ந்து இசை நிகழ்ச்சிய திட்டமிட்டோம். இந்த நிகழ்ச்சியில் நாங்க பாடுன பல பாடல்களை அறிவு எழுதினார். ஆனா, ‘அம்பேத்கர்’ பாடல் ‘சேத்துப்பட்டு ரமேஷ்’ என்ற கானா பாடகர் 20 வருஷத்துக்கு முன்னால் எழுதுனது.
அப்படியொரு அற்புதமான பாடலை எழுதுனவரு இன்னைக்குப் பிச்சை எடுத்துகிட்டு இருக்காருன்னு நினைக்கும்போது மனசு வலிக்குது. இப்படியான உணர்வுகளோட முதன்முறையா அந்தப் பிரம்மாண்ட மேடையில ஏறும்போதே நாங்க எல்லோரும் அழுதுட்டோம். கோட்-சூட்டு போட்டு நாங்க கவுரவமா பாடுற வாய்ப்பு இதுவரை கிடைச்சதுல்ல. அதிலும் நல்ல கருத்த தைரியமா பாடுறீங்கன்னு பெண்களும் சிறுவர்களும் எங்ககிட்ட வந்து சொல்றப்ப பெருமையா இருக்கு” என்கிறார் கானா முத்து.
‘மீனவக் கொலை’, ‘ஆணும் பெண்ணும் காதலித்தால்’ – இப்படி மீனவர்கள் முதல் மாணவர்கள் பிரச்சினைகள்வரை பாடி அசத்திய ‘தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ பேண்டின் பாடல்கள் இன்று யூடியூபிலும் ஹிட்!
பறை, முரசு கட்டை, இடு கட்டி சட்டியோடு டிரம்ஸ், கிட்டாரும் இசையால் கைகோக்க முடியும் எனக் காட்டியது இந்த இசை இரவு. வடசென்னை பகுதியில் உள்ள கானா குயில்களையும் மும்பை தாராவியின் குடிசை பகுதியைச் சேர்ந்த ராப், ராக் இசை அரசர்களையும் ஆர்ப்பாட்டமாகச் சங்கமிக்கச் செய்த தருணம் அது. அதே வேளையில் வெவ்வேறு இசை அடையாளங்களின் தனித்தன்மையையும் சிதைக்காமல் அழகிய இசை கதம்பமாகக் கோத்தது அருமையான முயற்சி.
சாதிய ஒடுக்குமுறையை, வர்க்கப் பாகுபாட்டை உடைத்தெறியச் சமீபகாலமாக ஊரூர் ஆல்காட் குப்பம் இசைவிழா போன்ற முன்னெடுப்புகள் ஆங்காங்கே நடந்தேறிவருகின்றன. இவை வெறும் பொழுதுபோக்கு அம்சமாக அல்ல, அரசியல் விழிப்புணர்வுக்கான மகத்தான கருவி இசை என்பதை நிரூபிக்கத் தொடங்கியுள்ளன.
வலியைச் சொல்லும் இசை
இந்த இசை நிகழ்ச்சியைப் பற்றி இரஞ்சித்திடம் கேட்டோம். “‘காலா’ படப்பிடிப்பின் போது அறிமுகமான மும்பை, தாராவியிலுள்ள குடிசைப் பகுதியைச் சேர்ந்த ராப், ராக் கலைஞர்களை இதில் இணைத்துக்கொண்டோம். இசை மூலமாக சாதிய வேறுபாடு களையும் என்று நினைக்கவில்லை. ஆனால், எங்கள் வலியையும் துயரையும் அதிலுள்ள அரசியலையும் வெளிப்படுத்தும் சிறு முயற்சி இது. இசையிலோ கலையிலோ சாதியில்லை என்றுதான் நான் சொல்கிறேன். ஆனால், கலைஞர்களுக்குள் சாதியுள்ளது. இந்நிகழ்ச்சி எதிர்பார்த்ததைவிட அதிக வரவேற்ப்பைப் பெற்றது எங்களுக்கு இன்னும் ஊக்கம் கிடைத்துள்ளது. அதனால் இனி, பல இடங்களில் நிகழ வாய்ப்புள்ளது” என்கிறார் அவர்.
- ச.ச. சிவ சங்கர்
கானா மழையில் நனைய - goo.gl/8BHNdn, goo.gl/QJtw8w
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago