துப்பறியும் ராம்சேகர் 12: மாலினிக்கு என்ன ஆச்சு?

By ஜி.எஸ்.எஸ்

“ஐயோ மாலினி”.

அலறல் சத்தம் ராம்சேகரை உலுக்கிப்போட்டது.

வெளியூரில் நடைபெற்ற நண்பரின் திருமணத்துக்குச் சென்றிருந்தார் ராம்சேகர். அங்கிருந்த ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். நள்ளிரவைத் தாண்டி சுமார் ஒரு மணி நேரம் சென்றிருக்கும் இந்த நேரத்தில்தான் அந்த அலறல்.

ராம்சேகர் வேகமாக வெளியே வந்தார். வலது பக்கத்தில் பழங்காலக் கட்டிடம் ஒன்று இருந்தது. அங்கிருந்துதான் அந்தக் கூக்குரல் வந்திருக்க வேண்டும்.

அந்தக் கட்டிடத்தைப் பற்றி ஏற்கெனவே ராம்சேகருடைய நண்பர் குறிப்பிட்டிருந்தார். ஒரு காலத்தில் பெரும் செல்வந்தராக இருந்த ஒருவரின் வீடு அது. அவரது வாரிசுகளெல்லாம் வெளிநாடுகளில் தங்கிவிட, அவர்கள் நியமித்த மேனேஜர் ஒருவர் அந்தக் கட்டிடத்திலுள்ள அறைகளை வாடகைக்கு விட்டு, அதை நிர்வகித்து வந்தார்.

கீழ்ப்புறம் இரண்டாவதாக அமைந்திருந்த கதவுக்கு உட்புறத்திலிருந்துதான் அந்தக் குரல் வெளிப்பட்டிருக்க வேண்டும் என்று ஊகித்தார் ராம்சேகர். அந்த அறைக்குள்ளே மின்விளக்கு எரிவது கதவின் வழியாகப் புலப்பட்டது. அந்தக் கதவை வேகமாகத் திறந்தார் ராம்சேகர். உள்ளே கண்ட காட்சி ராம்சேகரை அதிரவைத்தது. அங்கே தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தாள் ஓர் இளம் பெண். அவள் கால்களைப் பிடித்தபடி விசும்பிக்கொண்டிருந்தான் ஓர் இளைஞன்.

அந்தப் பெண் இறந்துவிட்டாள் என்பது உறுதியானது. காவல் துறைக்குத் தகவல் அனுப்பினார் ராம்சேகர். பின்னர், அந்த இளைஞனிடமிருந்து தகவல்களைச் சேகரிக்கத் தொடங்கினார்.

அவர் பெயர் சங்கர். இறந்த பெண்ணின் பெயர் மாலினி. இருவரும் நான்கு வருடங்களாகக் காதலிக்கிறார்கள். இரு குடும்பங்களும் இதை ஏற்கவில்லை. சமீபத்தில்தான் இந்தக் காதலை அறிந்த மாலினியின் வீட்டார் கடும் கோபம் அடைந்தனர். மாலினியை வெளியே எங்கும் அனுப்பாமல் வீட்டுக்காவலில் வைக்கத் தொடங்கினர். எப்படியோ தப்பிவந்த மாலினியை அழைத்துக்கொண்டு இந்த ஊருக்கு வந்திருக்கிறார் சங்கர். அடுத்த நாள் கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டிருந்தனர்.

“அதுக்குள்ளே இப்படியொரு முடிவை தேடிக்கிட்டாளே என் மாலு” என்று கதறிக்கொண்டிருந்தான் சங்கர்.

காவல்துறைக்குத் தகவல் அனுப்பக் காவலர்கள் வந்து சேர்ந்தனர். பக்கத்து அறைகளுக்கும் செய்தி மெதுவாகப் பரவத் தொடங்கியது.

“உங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது சண்டை ஏற்பட்டதா?’’ என்று ராம்சேகர் கேட்டார்.

அதற்கான பதிலை சங்கர் கூறுவதற்குள் எதிர்பாராத ஒரு நிகழ்வு உண்டானது.

“ஐயோ மாலினி, உன்னை இந்தக் கோலத்திலா நான் பார்க்க வேண்டும்?” என்று அலறியபடியே தாடி வைத்திருந்த ஒருவர் அந்த அறைக்குள் நுழைந்தார். அவரைப் பார்த்தவுடன் சங்கரின் முகம் மாறியது. “முதல்லே வெளியே போடா” என்று சங்கர் கத்த, தயங்கித் தயங்கி வெளியேறினார் அந்தத் தாடிக்காரர். அ​வரை வெளியில் காத்திருக்கச் சொன்னார் ராம்சேகர். அவருடன் ஒரு காவலரையும் இருக்கச் செய்து விட்டு மீண்டும் நுழைந்தார். சங்கரைக் கேள்விக்குறியுடன் பார்த்தார்.

“இவனும் எங்கள் ஊரைச் சேர்ந்தவன்தான். மாலினியைக் காதலிச்சிருக்கான். ஆனால், அவளுக்கு இவன் மேல் விருப்பமில்லை” என்றார்.

“மாலினியின் இறப்புக்கும் இவனுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறீர்களா?” என்று கேட்டார் ராம்சேகர்.

“எனக்குத் தெரியல்லே” என்ற சங்கர் சிறிது தயக்கத்துக்குப் பிறகு மீண்டும் பேசத் தொடங்கினான்.

“இன்னிக்கு சாயங்காலம் நானும் மாலினியும் கோயிலுக்குப் போயிருந்தோம். வரும் வழியில் இரண்டு பேரைப் பார்த்ததும் மாலினியின் முகம் மாறியது. அவர்கள் இருவரும் அவருடைய அப்பாவுக்குத் தெரிந்தவர்கள். என்னுடன் அவளைப் பார்த்ததை உடனே தன்னுடைய அப்பாவிடம் அவர்கள் சொல்லிடுவார்கள் என்று மாலினி பயந்தாள். ‘இப்பவே வேற ஊருக்குப் போயிடலாம்’னு பிடிவாதம் பிடித்தாள். நான்தான் நாளைக்குக் கல்யாணம் செய்துகொண்ட பிறகு போகலாம் என்று சமாதானப்படுத்தினேன். ஊரைவிட்டுப் போவதற்குள் உலகத்தை விட்டே போய்விட்டாள்” என்றபடி தன் தலையில் அடித்துக்கொண்டார் சங்கர்.

ராம்சேகர் சுற்றுப்புறத்தை நோட்டமிட்டார். இரு அறைகளாகக் காட்சியளித்தது அந்தப் பகுதி. உள்ளுக்குள் இருந்த அறைக்குள் நுழைந்தார் ராம்சேகர். தூக்குப் போட்டுக் கொண்ட அறை மிகவும் வெறிச்சென்று தரையில் எதுவுமே இல்லாமல் காட்சியளிக்க, இரண்டாவது அறையில் சாமான்கள் நிரம்பி வழிந்தன. அகலமான கட்டில் ஒன்றும் அங்கே இருந்தது. அதனருகே இருந்த மேஜை மீது ஆப்பிளும் கத்தியும் காணப்பட்டன. மாலினியின் பெட்டி திறந்து கிடக்க அதிலிருந்து சில புடவைகள் எட்டிப் பார்த்தன. கொண்டு வந்திருந்த ஒரு புடவையில்தான் மாலினி தூக்கு மாட்டிக் கொண்டிருக்க வேண்டும்.

சங்கரின் சூட்கேஸ் பூட்டப்பட்ட நிலையில் இருந்தது. அந்த அறையுடன் இணைக்கப்பட்டிருந்த பாத்​ரூமுக்குள் எட்டிப் பார்த்தார் ராம்சேகர். உள்ளே சந்தன மணம் வீசியது. சந்தன சோப் ஒன்று ஈரமாகக் காட்சியளித்தது.

ராம்சேகரின் செல்போன் ஒலித்தது. மறுமுனையில் இன்ஸ்பெக்டர்.

“அங்கே நடந்த கொலை பற்றி எனக்குத் தகவல்கள் வந்திருக்கின்றன. கல்யாணத்துக்கு வந்த இடத்திலும் உங்களுக்கு இந்த மாதிரி சவால்கள் வந்து சேருதே. உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” இந்த இன்ஸ்பெக்டரும் ராம்சேகருக்குத் தெரிந்தவர்தான்.

ராம்சேகர் உடனடியாகக் கூறினார். “மாலினியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினாலே என் சந்தேகம் உறுதியாகிவிடும் என்று நினைக்கிறேன்” என்றார்.

“ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? ஒருவேளை அந்தப் பெண் தற்கொலை செய்யவில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா?”

“ஆமாம்” என்றார் ராம்சேகர்.

எதனால் ராம்சேகர் அந்த முடிவுக்கு வர வேண்டும்? விடை அடுத்த வாரம்.

சென்ற வார விடை

‘உள்ளே... வெளியே.. இடையே ஒரு கொலை’யை யார் செய்திருப்பார்? ராம்சேகர் கொலையாளி பற்றி ஊகிப்பது என்ன?

அகிலன் படிக்காதவன் என்று தெரிகிறது (“உங்க குடும்பத்தில் ஒருத்தர்கூட படித்ததில்லை” என்கிறான் அகிலன்). ஆனால், சிறையில் எடுத்த வீடியோவில் ஓஷோவின் வாசகத்தையும் சங்க இலக்கியத்தையும் மேற்கோள் காட்டிப் பேசுகிறான் அகிலன். அப்படியானால் சிறைக்கு வந்து அவன் புத்தகங்களில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். இந்த விதத்தில் நூலகர் அவனுக்கு நெங்கிய நண்பராக இருக்க வாய்ப்பு உ​ண்டு. சிறையில் இருக்கும் ஒருவர் வெளியில் சென்று கொலை செய்துவிட்டு வருவதைவிட சிறை ஊழியரான நூலகரால் வெளியில் செல்வது எளிது. எனவே, அவரிடம் தீவிர விசாரணை நடத்தினால் புதிய கோணம் புலப்படும் என்று எண்ணுகிறார் ராம்சேகர்.

(துப்பறியலாம்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்