துப்பறியும் ராம் சேகர் 15: சூப்பர் மார்க்கெட் ரகசியம்!

By ஜி.எஸ்.எஸ்

“ராம்சேகர், எங்கூட கொஞ்சம் கவியன்பனின் வீட்டுக்கு வர முடியுமா?” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர் விக்ரம். ராம்சேகர் ஒத்துக்கொண்டார்.

“கவியன்பனின் மகனுக்குப் பத்து வயசு இருக்கும். வீட்டுக்குள்ளே வீடியோகேம் விளையாடிக்கிட்டிருந்த அவனைக் காணோம்னு சொல்றாரு அவனோட அப்பா. அவனை யாராவது கடத்திட்டுப் போயிருப்பாங்களோன்ற சந்தேகம் அவருக்கு. அவருடைய பின்னணியைப் பற்றித் தெரிஞ்சுகிட்ட பிறகு, அவர் மேலே எனக்கு மதிப்பு அதிகமாகுது” என்ற விக்ரம் அந்தப் பின்னணியையும் குறிப்பிட்டார்.

கடத்தப்பட்டதாகக் கூறப்பட்டவன், கவியன்பனின் சொந்த மகன் அல்ல. அவருடைய மனைவிக்கும் நண்பருக்கும் பிறந்த மகன்.

பத்து வருடங்களுக்கு முன்பு கவியன்பனின் நண்பர், காவ்யா என்பவரைக் காதலித்தார். திருமணத்துக்கு முன்பே காவ்யா கர்ப்பமானார். இருதரப்புப் பெற்றோரும் அவர்களது திருமணத்தை ஏற்கவில்லை. கவியன்பன்தான் அவர்களுடைய பதிவுத் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தார்.

ஆனால், சார்-பதிவாளர் அலுவலகத்துக்குக் குறிப்பிட்ட நாளில் அந்த நண்பர் வரவில்லை. மாறாக, அவரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. “பெற்றோரைப் பகைத்துக்கொள்ள முடியவில்லை. காவ்யாவைத் திருமணம் செய்துகொள்ள முடியாது. சாரி” என்று கூறிவிட்டுத் தொடர்பைத் துண்டித்துவிட்டார். திடுக்கிட்ட கவியன்பன் அவரை மீண்டும் பலமுறை தொடர்புகொ​ண்டும் பலனில்லை.

காவ்யா தற்கொலை செய்துகொள்ள முயன்றார். அவரது வீட்டார் அவரை முற்றிலுமாக ஒ​துக்கிவிட்டார்கள். இந்நிலையில் கவியன்பன் அவரைத் திருமணம் செய்துகொண்டார். நண்பர் ​மூலமாகத் தன் மனைவிக்குப் பிறந்த குழந்தையைத் தன் குழந்தையாகவே வளர்த்துவருகிறார்”.

வித்தியாசமான வாழ்க்கைதான் என நினைத்தபடியே கவியன்பனின் வீட்டுக்குள் நுழைந்தார் ராம்சேகர். கூடவே இன்ஸ்பெக்டர் விக்ரமும்.

வீடு விசாலமாக இருந்தது. மூன்று அறைகள் கொண்ட ஃபிளாட் அது. நுழைந்தவுடனேயே பூஜை அறை கண்களில் தென்பட்டது. அங்கே பிரம்மாண்டமாக ஜம்புகேஸ்வரர், அம்மனின் படம் காணப்பட்டது. உள்ளே நுழைந்தபோது சோஃபாவில் உட்கார்ந்திருந்த கவியன்பனின் கண்கள் சிவந்திருந்தன.

“இன்று எனக்கு வார விடுமுறை. என் மகன் வைபவுக்கும் ​லீவுதான். உள்ளே வீடியோ கேம் விளையாடிக்கிட்டிருந்தான். எப்படியோ அவனைக் கடத்திட்டுப் போயிருக்காங்க”.

வைபவ் வீடியோ கேம் விளையாடியதாகக் கூறப்பட்ட அந்தச் சிறிய அறைக்குள் ராம்சேகர் நுழைந்தார். உள்ளே களேபரம் நடந்ததற்கான எந்தச் சூழலும் தெரியவில்லை.

வெளியே இன்ஸ்பெக்டர் விக்ரம் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

“உங்க மகனை ஏற்கெனவே யாராவது கடத்தும் முயற்சியில் ஈடுபட்டதுண்டா?”

“இல்லை”.

“உங்க மனைவி எங்கே இருக்காங்க?”.

“மும்பையிலே இருக்கும் அவருடைய மாமா மிகவும் சீரியஸாக இருக்கிறார். அவரைப் பார்க்கப் போயிருக்கார். வைபவுக்கு அரையிறுதித் தேர்வு என்பதால் போகவில்லை” என்ற​வர், “இன்னும் வைபவ் காணாமல்போன விஷயத்தை அவருக்குச் சொல்லவில்லை” என்றார் கலக்கத்துடன்.

“எத்தனை மணிக்கு அவன் கடத்தப்பட்டிருக்கலாம்னு நினைக்கிறீங்க?”

“மதியம் 12 மணிக்குக் கடத்தியிருக்கணும். அப்போ எங்க வீட்டு வாசலிலேர்ந்து ஒரு கார் போனதையும் உள்ளே வாய் பொத்தப்பட்ட ஒரு சிறுவனும் இருந்ததையும் தெருவிலே சிலர் பார்த்திருக்காங்க. அந்தச் சிறுவன் வைபவாகத்தான் இருக்கணும்”.

“அப்போ நீங்க எங்கே இருந்தீங்க?”

“அதுதான் நான் செய்த தப்பு” என்று தன் தலையில் அடித்துக்கொண்டார் கவியன்பன். “தெரு முனையில் இருக்கும் முருகன் சூப்பர் மார்க்கெட்டுக்குப் போயிருந்தேன். 11.50-க்குக் கிளம்பினேன். கால் மணி நேரத்தில் வந்துட்டேன். அதுக்குள்ளே வைபவ் காணாமப் போயிட்டான்”.

“சூப்பர் மார்க்கெட்டில் என்ன வாங்குனீங்க?”.

“எதுவுமே வாங்கல. எனக்குத் தேவைப்பட்ட ஷேவிங் கிரீம் அங்கே ஸ்டாக் இல்லே’’.

ராம்சேகரின் தொண்டை கமறியது. தொடர்ந்து இருமினார்.

“தண்ணீர் வேணுமா?” என்று கேட்டார் கவியன்பன்.

“வெந்நீர் கிடைக்குமா?” என்று ராம்சேகர் கேட்க, சமையல் அறைக்குள் சென்றார் கவியன்பன்.

அங்கிருந்த செல்போனை எடுத்து ஆராய்ந்தார் ராம்சேகர்.

சில நிமிடங்களுக்குப் பிறகு அந்த வீட்டிலிருந்து கிளம்பி, தெரு முனையை அடைந்தபோது அவர்களுக்கு வியப்பு காத்திருந்தது. முருகன் சூப்பர் மார்க்கெட் வெளியே ஓர் அறிவிப்புப் பலகை. “எங்கள் நிறுவனர் மரணம் காரணமாக இன்றும் நாளையும் சூப்பர் மார்க்கெட் விடுமுறை”. அருகில் விசாரித்ததில், அன்று காலையிலேர்ந்து அந்த சூப்பர் மார்க்கெட் திறக்கப்படவில்லை என்பது தெரிந்தது.

“அப்படின்னா கவியன்பன் பொய் சொல்லியிருக்கார்’’ என்றார் விக்ரம்.

“அது நான் முன்பே ஊகித்ததுதான்” என்றார் ராம்சேகர்.

“எப்படி? போகும்போது நாம் இந்த வழியாகப் போகவில்லையே!”

அதற்கு நேரடியாகப் பதிலளிக்காமல், “எனக்கு வெந்நீர் எடுத்துட்டு வர கவியன்பன் உள்ளே போனபோது அவரது தொலைபேசியை ஆராய்ந்தேன். 11.55-லிருந்து 12.10 வரை அவர் அகிலாண்டேஸ்வர் என்பவரிடம் தொடர்ந்து பேசியிருக்கிறார். அப்போதே சூப்பர் மார்க்கெட் போனதாக அவர் சொன்னது பொய் என்று எனக்குப்பட்டது”.

“வாங்க உடனே கவியன்பனை லாக்கப்பிலே தள்ளி உண்மையை விசாரிக்கலாம். ஒருவேளை அந்த வைபவ் தன் சொந்த மகன் இல்லை என்பதால் அவரால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லையோ என்னவோ? மனைவி வெளியூர் போனவுடன் மகனைக் கடத்துவதற்கு இவரே ஏற்பாடு செய்திருக்கலாமே!”.

“இல்லை மிஸ்டர் விக்ரம். சூப்பர் மார்க்கெட் போனதாகச் சொன்னது பொய் என்றாலும், கடத்தலுக்கும் கவியன்பனுக்கும் சம்பந்தம் இருக்காதுன்னு தோணுது. அவரை விட்டுவிட்டு வேறு சாத்தியங்களை முதலில் பார்த்துவிடுவோம்” என்றார் ராம்சேகர்.

எதனால் ராம்சேகர் இப்படிக் கூறினார்? பொய் கூறிய கவியன்பனை உடனடியாகத் ​தீவிரமாக விசாரிக்கத் தேவையில்லை என்று அவர் ஏன் எண்ண வேண்டும்?

(துப்பறியலாம்)

சென்ற வார விடை

எங்கேதான் போனார் ரங்கராஜ்’ என்று தேடிய ராம்சேகர், பேப்பர் போடும் பையனிடம் விசாரித்த பிறகு, மீண்டும் விசாரிக்க முடிவு செய்தது ஏன்?

தீபாவளியன்று நாளிதழ் அலுவலகங்களுக்கு விடுமுறை என்பதால் அதற்கு அடுத்த நாள் நாளிதழ்கள் வெளி வராது. எனவே, தீபாவளிக்கு அடுத்த நாள் பேப்பர் போட வேண்டாம் என்று ரங்கராஜ் கூறியது தவறு. ஒரு வேளை அவரே ​​​​​ ​​ஞாபக மறதியாகக் கூறியிருந்தாலும், பேப்பர் போடும் பையனுக்கு இது மறந்திருக்காது. எனவே, அவன் அப்படிக் கூறுவது பொய்யாக இருக்கக்கூடும். எனவேதான் ராம்சேகர் அவனை மேலும் விசாரிக்க வேண்டுமென்று கருதுகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்