துப்பறியும் ராம்சேகர் 13: முகத்தில் தழும்பு - மனதில் காயம்

By ஜி.எஸ்.எஸ்

“என்ன எழுதிட்டு வந்திருக்கீங்க” என்று ஆச்சரியமாகக் கேட்டார் ராம்சேகர்.

தான் சந்தித்த ஒரு வழக்கை எழுத்துபூர்வமாக எழுதிக்கொண்டு வந்திருப்பதாகக் கூறிய இன்ஸ்பெக்டர், அந்தத் தாள்களை ராம்சேகரிடம் நீட்டினார்.

அந்தத் தாள்களில் எழுதியிருந்ததாவது:

“அது சென்னையில் உள்ள புகழ்பெற்ற தனியார் மருத்துவமனைகளில் ஒன்று. அதன் நான்காவது தளத்தில் அமைந்திருந்தது மகளிருக்கான அந்தப் பிரிவு. ஒவ்வொரு பெண் நோயாளிக்கும் ஒரு தனி அறை. அதிகச் செலவைப் பொருட்படுத்தாதவர்கள் வசதிக்காகத் தனி அறையைத் தேர்ந்தெடுத்திருந்தனர்.

அவர்களில் ஒருவர்தான் சுந்தரி. சுமார் 35 வயது இருக்கும். இரு வாரங்களுக்கு முன் தோழியின் வீட்டு கிரகப்பிரவேச விழாவில் கலந்துகொண்டார். அ​ப்போது அந்த வீட்டின் பால்கனிக்குச் ​சென்றார். சரியாகக் கட்டி முடிக்கப்படாத பால்கனி சுவர் விழுந்துவிட, சுந்​தரியும் கீழே விழுந்துவிட்டார். முதுகில் பலத்த அடி. அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு 15 நாட்களாகி விட்டன. இன்னும் ஒரு வாரம் மருத்துவமனையில் இருக்க நேரிடும் என்று மருத்துவர் கூறியிருந்தார்.

சுந்​தரியின் உடல் வலித்தது. கொஞ்சம் திரும்பிப் படுக்க வேண்டும் என்பதுபோல் இருந்தது. கூட இருந்த தங்கையை வீட்டில் ஓய்வெடுக்க சுந்தரி அனுப்பியிருந்தார். இப்போது அவர் இருந்தால் உதவியிருப்பார்.

தன் கைக்கு அருகே இருந்த சுவிட்சை அழுத்தினார். அப்படி அழுத்தினால் செவிலியர் யாராவது உதவ வருவது வழக்கம். ஆனால், அன்று யாரும் வரவில்லை. உடல் மேலும் வலித்தது. “யாராவது இருக்கீங்களா? கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க” என்று கத்தினார் சுந்தரி.

அந்தப் பக்கமாகச் சென்ற நர்ஸ் ராதாவின் காதுகளில் சுந்தரியின் குரல் விழுந்தது. உடனடியாக அந்த அறைக்குள் ராதா நுழைந்தார். சுந்தரியின் தேவையை ராதாவால் புரிந்துகொள்ள முடிந்தது. எத்தனை வருட அனுபவம் ராதாவுக்கு!

ஆனால், வேறொரு வருந்தத்தக்க அனுபவமும் ராதாவுக்கு இரு மாதங்களுக்கு முன்பு ஏற்பட்டிருந்தது. சின்னம்மை நோய் பாதிக்க, அதன் விளைவாக ராதாவின் முகத்தில் வடுக்கள் நிரந்தரமாகத் தங்கிவிட்டன. மருத்துவமனையிலேயேகூட ராதாவைக் கொஞ்சம் தயக்கத்துடன்தான் மீண்டும் வேலைக்குச் சேர்த்தனர். “நோயாளிகளுக்கு உன் முகத்தைப் பார்த்து அதிர்ச்சி ஏற்படக் கூடாது’’ என்று வெளிப்படையாகவே கூறினார் மருத்துவமனையின் டீன். எனவே, ராதாவுக்கு ஸ்டோர்​​ஸில் வேலை வழங்கப்பட்டது.

என்றாலும், சுந்தரியின் வலி நிறைந்த குரல், ராதாவை உதவிட அழைத்தது. ஆனால், ராதாவின் முகத்தைப் பார்த்த சுந்தரி அலறினார். “நீங்க இந்த வார்டுக்கான நர்ஸ் கிடையாதே. ப்ளீஸ் போயிடுங்க” என்று வெளிப்படையாகவே கூறினார்.

“மேடம், இது ஒரு சேவை. அர்ப்பணிப்போடு வந்திருக்கேன். அதுக்கு மேலே உங்க இஷ்டம்” என்றபடி நகர்ந்த ராதாவின் கண்களில் கண்ணீர்த் துளிகள் எட்டிப் பார்த்தன.

மருத்துவமனையின் டீன் ராதாவைக் கூப்பிட்டு அனுப்பினார்.

“உன்னுடைய வேலை ஸ்டோர்ஸில்தான். மிஸஸ் சுந்தரியைக் கவனிக்க வேறு நர்ஸ்கள் இருக்காங்க. உனக்கு ஏன் இந்த வேலை? சுந்தரி ஒரு புகார் கடிதம் எழுதியிருக்காங்க. அவங்க எழுதினதை நான் அலட்சியம் செய்ய முடியாது. எனவே, உன்னை இரண்டு வாரங்களுக்குத் தற்காலிகப் பணி நீக்கம் செய்கிறேன்”.

அன்று மாலை ராதா ​தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார்.

இதைப் படித்து முடித்த ராம்சேகரிடம் இன்ஸ்பெக்டர் விக்ரம் இப்படிக் கூறினார். “சந்தேகமில்லாமல் அது தற்கொலைதான். தெளிவாக அது ராதாவின் கடிதத்திலும் வெளிப்பட்டிருந்தது’’. இந்த இடத்தில் ஒரு இடைவெளி விட்டார் இன்ஸ்பெக்டர். அவர் முகத்தில் சிறு புன்னகையும் எட்டிப் பார்த்தது. “நடந்த பின்னணியை ஏற்கெனவே தொலைபேசியில் எனக்கு விவரிச்சிருந்தாங்க. ஆனாலும், நேரே சென்று ராதாவின் உடலைப் பார்த்தபோதுதான் எதிர்பாராத ஒரு கோணம் எனக்குக் காத்திருந்தது” என்றார்.

அடுத்து விக்ரம் மவுனமாக இருந்தது, ‘எங்கே அந்தக் கோணத்தை நீங்க கண்டுபிடியுங்க பார்க்கலாம்’ என்று கூறுவதுபோல் இருந்தது.

சிறிது நேரம் கழிந்தபின் ராம்சேகரின் முகத்தில் ஒரு மலர்ச்சி. “இது உ​ண்மையில் நீங்க சந்தித்த கேஸா அல்லது எனக்குச் சவாலாக சொல்றீங்களான்னு தெரியல்லே. இருந்தாலும் அதை உண்மையில் நடந்ததாகவே நான் வச்சுக்கிறேன். ராதா மிகவும் பாவம். ஒரு நல்ல நர்ஸை மருத்துவ உலகம் தன் தவறான போக்கால் இழந்துவிட்டது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும்” என்றார் ஆங்கிலத்தில்.

‘அந்த எதிர்பாராத கோணம்’ ராம்சேகருக்கு விளங்கிவிட்டது என்பது அவர் கூறியதிலேயே தெரிந்தது.

அது என்ன? நீங்களும் கண்டுபிடியுங்கள்.

சென்ற வார விடை

‘மாலினிக்கு என்ன ஆச்சு?’ ராம்சேகர் மாலினி தூக்குப் போட்ட அறையில் கண்காணித்தது என்ன? தூக்குப் போட்டுக்கொண்ட அறை மிகவும் வெறிச்சென்று தரையில் எதுவுமே இல்லாமல் காட்சியளித்தது என்பதை ராம்சேகர் கவனித்தார். குறைந்தபட்சம் தூக்கில் தொங்க ஒரு கட்டிலோ மேஜையோ தேவை. அல்லது எட்டி உதைக்க ஒரு ஸ்டூலாவது இருந்திருக்க வேண்டும். இவை எதுவுமே இல்லை எனும் அடிப்படை விஷயமே இது தற்கொலை அல்ல என்ற முடிவுக்கு வர ராம்சேகருக்குப் போதுமானதாக இருக்கிறது.

(துப்பறியலாம்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்