காமிக்ஸ் ஆவணப் படம்: ஃபெலுடா டூ வேதாளர்!

By கிங் விஸ்வா

 

டிட்டிங், கேமரா, கிராஃபிக்ஸ் என்று பல துறைகளில் படித்துக்கொண்டிருக்கும் சில இளைஞர்கள், ஓர் ஆவணப்படத்தை எடுத்தார்கள். கொல்கத்தாவைச் சேர்ந்த அவர்கள், சத்யஜித் ராய் உருவாக்கிய இந்தியத் துப்பறியும் நிபுணரான ஃபெலூடாவைப் பற்றி எடுத்துள்ள ஆவணப்படம்தான் அது. பெரும் வரவேற்பைப் பெற்ற அந்தப் படம் சென்ற ஆண்டு வெளியானது. இந்த ஆண்டு அவர்கள் இன்னொரு ஆவணப்படத்தை எடுத்துள்ளார்கள். அந்தப் படம், வேதாளரை (The Phantom) பற்றியது.

யார் இந்த வேதாளர்?

1936-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதிதான் வேதாளர் உலகுக்கு முதன்முறையாக அறிமுகம் ஆனார். அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸின் முதன்மை மாலுமியின் பெயர் வாக்கர். இவரது மகன் கிட் வாக்கர். இவர்கள் பயணம் செய்த கப்பலை, கடற்கொள்ளையர்கள் தாக்க, கிட் மட்டும் உயிர் பிழைத்து கரையேறுகிறார். இவரை ஆப்பிரிக்க பாந்தர் இனத்தினர் காப்பாற்றுகின்றனர். தந்தையைக் கொன்றவனின் மண்டையோட்டின் மீது அநீதியையும் கொள்ளையையும் எதிர்த்து போராடுவதாக சத்தியப்பிரமாணம் செய்கிறார் வாக்கர். அதோடு அடிமைகளாக இருக்கும் பாந்தர் இனத்தவரையும் காப்பாற்றுகிறார். அவர்கள் ஆழ நெடுங்காட்டில் இருக்கும், நீர்வீழ்ச்சியால் மறைக்கப்பட்ட கபால குகைக்கு (மண்டை ஓட்டு மாளிகை) அழைத்து சென்று, அவரையே தலைவராக ஏற்றுக்கொள்கின்றனர்.

அதுமுதல் வாக்கரும் அவரது வாரிசுகளும் குற்றங்களை எதிர்த்துப் போரிடும் நாயகர்களாக வலம் வருகின்றனர். வெளியுலகைப் பொறுத்தவரையில், வேதாளர் என்பவர் சாகா வரம் பெற்றவர். 400 ஆண்டுகளாக நீதிக்காவலனாக வாழ்ந்துவருபவர். அவரைக் கொல்லவே முடியாது என்ற கருத்து பரவியது. அதுமுதல், 20 வேதாளர்கள் நீதிக்காக போராடினர். இப்போதைய கதைகளில் ஹீரோவாக வருபவர் 21-வது வேதாளர். (2017 முதல் வேதாளரின் வாரிசுகளும் சாகசங்கள் செய்ய ஆரம்பித்து இருக்கின்றனர்).

வேதாளரின் மோதிரங்கள்

வலது கையிலிருப்பது மண்டையோட்டு சின்னம் கொண்ட கபால மோதிரம். இதைக்கொண்டு வேதாளர் ஒருவரை குத்தினால், அவரது முகத்தில் என்றும் அழியாத சின்னமாக இது பதிந்துவிடும். இடது கையில் இருப்பது, அனைவரும் மதிக்கும் நற்சின்னம். வேதாளரின் நண்பர்கள் என்று பொருள்கொண்ட இச்சின்னம், காலங்காலமாக மக்களை காப்பாற்றும் ஒன்று. இது எங்கே இருக்கிறதோ, அங்கே வேதாளர் இருக்கிறார், அந்த இடம் பாதுகாப்பாக உள்ளது என்று பொருள்.

கொல்கத்தா தொடர்பு

இந்தியாவிலேயே வங்காளத்தில்தான் வேதாளருக்கு மிக அதிகமான வாசகர்கள் இருக்கிறார்கள். அதிலும், வேதாளரை உருவாக்கிய லீ ஃபாக், கிட் வாக்கர் கரையேறிய இடம் பெங்காளி / பெங்கல்லா என்றுதான் எழுதியிருந்தார். இந்தியாவில் அப்படி ஒரு இடம் உண்மையாகவே இருக்கிறது என்று தெரிந்த பிறகு, இந்திரஜால் காமிக்ஸ் முதற்கொண்டு பலவற்றில் அது டென்காலி என்று மாற்றப்பட்டது. ஆக, கொல்கத்தாவைச் சேர்ந்த இவர்கள் வேதாளரைப் பற்றி ஒரு குறும்படம் எடுக்க எண்ணியதில் ஆச்சரியம் இல்லை.

சோலொமான் ஒஷொரீரி

அபிர் ராய் இயக்கும் இந்த ஆவணப்படத்தில் சில முக்கியமான மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள். கதைப்படி முதலாம் வேதாளரின் கதை 16-ம் நூற்றாண்டில்தான் நடக்கிறது. ஆனால், நடைமுறை சிக்கல், பட்ஜெட் காரணத்தால் இதைச் சமகால படமாக, 2017-ல் நடப்பதுபோல கதையமைத்திருக்கிறார்கள். அதைப்போலவே, கதை நடப்பதும் வங்காளத்தில் இருக்கும் சுந்தரவனக் காடுகளில்தான்.

ஆவணப்படத்தின் கதை

28 வயதான ஆவணப்பட ஹீரோ ஒரு என்.ஜி.ஓ.வில் பணியாற்றி வருகிறார். மாங்குரோவ் காடுகளுக்கு அப்பால் வசிப்பவர்களுக்காக மருந்துகளை கப்பலில் ஏற்றிச் செல்கிறார். அவரது கப்பல் தாக்கப்பட, மகனைக் காப்பாற்றும் முயற்சியில் தனது உயிரை விடுகிறார் ஹீரோவின் அப்பா. காயமுற்று கரையேறும் ஹீரோவைக் காப்பாற்றுகிறார்கள் அப்பகுதி மக்கள். அவர்களின் தலைவரான குரன் என்பவர் காயமுற்ற ஹீரோவின் உடல்நிலையை குணமாக்குகிறார். தந்தையைக் கொன்றவனின் உடல் கரையில் ஒதுங்க, அவனது மண்டையோட்டின் மீது, அநீதிக்கெதிராக போராடப் போவதாக சபதம் எடுக்கிறார் ஹீரோ.

வேதாளர் என்ற ஹீரோ எப்படி உருவாகிறார் என்பதை ஆவணப்படமாக எடுக்கும் முயற்சி என்பதால், முதல் வேதாளரின் கதையை அப்படியே சமகாலத்துக்கு மாற்றி இருக்கிறார்கள். இந்த மாதம் இந்த ஆவணப்படத்தை ரிலீஸ் செய்ய உத்தேசித்துள்ளனர். கொல்கத்தாவைச் சேர்ந்த சந்தீப் ராய் நாயகனாக நடித்துள்ளார். ஷிவ கிருஷ்ணராயா அமைத்துக் கொடுத்த மூன்று அட்டகாசமான சண்டைக் காட்சிகளும் இதில் இருக்கின்றன. வங்காள மொழியில் எடுக்கப்பட்டாலும் ஆங்கில சப் டைட்டில்களுடன்தான் இந்தப் படம் யூடியூபில் ரிலீசாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்