பாப்கார்ன்: குருவியைக் காவு வாங்கிய மஸ்க்!

By செய்திப்பிரிவு

முன்னணி சமூக வலைதள நிறுவனங்களில் ஒன்று ட்விட்டர். இந்நிறுவனத்தை வாங்கியது முதல் எண்ணற்ற அதிரடி மாற்றங்களைச் செய்துவருகிறார் அமெரிக்கத் தொழிலதிபர் எலான் மஸ்க். ஏற்கெனவே விமர்சனத்துக்குள்ளான பல விஷயங்களைத் தொடர்ந்து ட்விட்டரின் நீண்ட நாள் லோகோவான நீலக் குருவியையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டார் மஸ்க். அதோடு நின்றுவிடவில்லை, ட்விட்டரின் பெயரையும் ‘எக்ஸ்’ எனவும் மாற்றிவிட்டார். இதற்கு உலக அளவில் ட்விட்டர் பயனர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

ட்விட்டரை வாங்கியவுடனே குருவி லோகோவுக்குப் பதிலாக நாய் படத்தை மாற்றிச் சர்ச்சையை ஏற்படுத்தினார் மஸ்க். அதற்கு எதிர்ப்புக் கிளம்பியவுடன் குருவி லோகோவே மீண்டும் இடம்பெற்றது. எனவே, குருவி லோகோ மாறாது என்று பயனர்கள் நினைத்தனர்.

ஆனால், திடீரென லோகோவை மாற்றுவதாகக் கூறி, அடுத்த நாளே ‘எக்ஸ்’ லோகோவை வைத்துவிட்டார் மஸ்க். தொடங்கிய நாள் முதலே ட்விட்டர் குருவியின் வடிவங்கள் மாறி வந்திருக்கின்றன. ஆனால், குருவி ஒரேடியாக மாறியதில்லை. இன்று அதை மாற்றிக் குருவிக்கு சமாதி கட்டிவிட்டார் மஸ்க்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ‘எக்ஸ்’ என மாற்றப்பட்டிருக்கும் ட்விட்டர் தளத்திலேயே பயனர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் மீம்ஸ்களைப் பதிவிட்டு இணைய வாசிகள் தங்களது எதிர்வினையைப் பதிவு செய்யவும் தவறவில்லை.

இது ஒரு புறம் இருக்க, கண்ணீர் சிந்தும் நீலக் குருவிக்கு ‘RIP’ எனப் பதிவிட்டு பிரியா விடை கொடுத்துள்ளனர் இன்னும் சில பயனர்கள். இதோடு விடுவாரா அல்லது இன்னும் மாற்றங்கள் எனும் பெயரில் மஸ்க் ஏதேனும் செய்வாரோ என்று கிலியிலும் ஆழ்ந்துள்ளனர் ட்விட்டர் பயனர்கள்.

சொகுசு காரில் டீ விற்கும் இளைஞர்கள்! - நம்மூரில் சைக்கிளில் தேநீர் விற்கும் இளைஞர்கள் நிறைய பேரைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், மும்பையில் இரண்டு இளைஞர்கள் ‘ஆடி’ சொகுசு காரில் வந்து தேநீர் விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள்! காரில் வந்து தேநீர் விற்கும் அவர்களுடைய காணொளிகள் இணையத்தில் வைரலாகி உள்ளன.

வட இந்தியாவில் எம்.பி.ஏ. தேநீர்க்காரர், பிடெக் தேநீர்க்காரர் எனப் பல இளைஞர்கள் பற்றிய காணொளிகள் உண்டு, அந்த வரிசையில் ஆடி கார் தேநீர்க்காரரும் சேர்ந்திருக்கிறார். அமித் காஷ்யப், மனு சர்மா என்ற இரண்டு இளைஞர்கள்தான் இதன் பின்னணியில் இருக்கிறார்.

மும்பையில் லோகண்ட்வாலா என்ற பகுதியில் தினமும் மாலை வேளையில் ஆடி காரில் வந்து இறங்கி, அதன் அருகேயே மேசை மீது அடுப்பை வைத்துச் சுடச்சுடத்தேநீரைத் தயாரித்து வழங்குகிறார்கள். ஏலக்காய், மசாலா தேனீரைத் தயாரித்து தருவதால், இந்த நடமாடும் கடையில் கூட்டமும் அள்ளுகிறது.

பகலில் இவர்கள் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகவும், மாலையில் ஆடி கார் தேநீர்க் கடையை நடத்தி வருவதாகவும் சொல்கிறார்கள். தினமும் 600 தேநீரை விற்கும் இவர்கள், ஆடி கார் வாங்கச் செலவுசெய்த தொகையை 19 மாதங்களிலேயே எடுத்துவிடுவார்களாம். சொகுசான ஆடி காரே வாங்கினாலும், சாலையில் தேநீர் விற்கும் இந்த இளைஞர்களின் கதை ஒரு முன்னுதாரணம்தான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE