இ
ப்போதெல்லாம் உதவி தேவைப்படுவபர்கள்கூட சமூக ஊடகங்கள், இணையம் வழியாகவே உதவியைக் கேட்கிறார்கள். இப்படிக் கேட்கப்படும் உதவிகள் உண்மையானவையா என்ற சந்தேகம் உங்களுக்கு எழும் அல்லவா? உதவி கேட்பவர்களின் உண்மைத் தன்மையை ஆராய்ந்தும் அதன் அடிப்படையில் உதவியும் கிடைத்தால் பிரச்சினையே இருக்காதுதானே! அதைத்தான் ‘மிலாப்’ (Milaap) என்ற இணையதளம் ‘கிரவுட் ஃபண்டிங்’ முறையில் செய்துவருகிறது. பெங்களூருவில் 2010-ல் தொடங்கப்பட்ட இந்த இணையதளம் இன்று இந்தியாவின் மிகப் பெரிய கிரவுட்ஃபண்டிங் இணையதளமாக உருவெடுத்துள்ளது. .
கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த அனுஜ் சிங்கப்பூரில் படித்துவிட்டு டெல்லியில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அந்த நிறுவனத்தில் அவரது மேலாளராக இருந்த மயூக் சவுத்ரி என்பவருடன் இணைந்து மிலாப் இணையதளத்தை அனுஜ் தொடங்கினார். “நிதி உதவிக்கான தேவைகள் என்று வரும்போது தனிநபர்கள் இணைக்கப்படுகையில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கிறது. உதவி தேவைப்படும் நபர்களையும் உதவக்கூடிய நபர்களையும் இணைப்பதற்கான தொழில்நுட்பக் கருவி ஒன்றைத் தொடங்க முடிவெடுத்தோம். எனவேதான் இந்த இணையதளத்தைத் தொடங்கினோம். மிலாப் என்றால் இணைத்தல் என்று பொருள்” என்று இணையம் தொடங்கிய கதையைச் சொல்கிறார் அந்த நிறுவனத்தின் சி.ஓ.ஓ. அனுஜ். இதைத் தொடங்கும்போது இவருக்கு 22 வயதுதான். மயூக்குக்கு 24.
இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புறங்களில்தான் இவர்கள் கவனம் செலுத்திவருகிறார்கள். பொது சுகாதாரம், சூரிய விளக்குகள் பொருத்துவது, கழிப்பறைகள் கட்டுவது என ரூ.100 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மிலாப் இணையதளம் மூலம் நிதி வசூலித்துக் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார் இதன் சி.இ.ஓ. மயூக். 2014-ல் தான் நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்தியிருக்கிறார்கள். கிரவுட்ஃபண்டிங் மூலம் இதுவரை ரூ.230 கோடி தொகையைப் பெற்றுத் தந்திருக்கிறார்கள் இவர்கள். இதில் 70 சதவீதம் மருத்துவ அவசரத் தேவைகளுக்கே சென்றுள்ளன.
பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் வரும் நிதி உதவிக் கோரிக்கைகளின் உண்மைத்தன்மையை நாம் சரிபார்க்க முடிவதில்லை. இதனாலேயே பலர் அந்தக் கோரிக்கைகளை நிராகரித்துவிடுவார்கள். எனவே, இந்த உண்மைத்தன்மையைச் சரிபார்த்து உறுதிசெய்துகொள்வதில் மிகுந்த அக்கறை செலுத்துகிறார்கள் மிலாப் குழுவினர். “உதவிகேட்பவரின் உண்மைத்தன்மையை உறுதி செய்வதற்கான வலுவான வலைப்பின்னலை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். இந்தியா முழுவதும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுடன் தொடர்பு வைத்திருக்கிறோம். உதவி கேட்டுவருபவர்களின் உண்மைத்தன்மையை அதன் மூலம் சரிபார்த்துவிடுகிறோம். எங்களது வலைப்பின்னலுக்குள் வராத மருத்துவமனைகள் என்றாலும், சம்பந்தப்பட்ட மருத்துவமனையிடம் பேசி அவர்களை எங்கள் தொடர்பில் இணைத்துக்கொள்வோம். ” என்கிறார் அனுஜ்.
மிலாப் இணையதளம் சமூக ஊடகங்களிலும் சிறப்பாக இயங்குகிறது. இவர்களுடைய இணையதளத்திலும் சமூகவலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும் கட்டுரைகளும் காணொளிகளும் மனதைத் தொடுபவையாகவும் உள்ளன. இவர்களது இடுகைகளைப் பல மீம் பக்கங்கள் பகிர்கின்றன. இன்று இணையம், முகநூலைப் பயன்படுத்தாதவர்களையும் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் இருப்பவர்களையும் சென்றடைவதை அடுத்தகட்ட நோக்கமாக வைத்திருக்கிறார்கள்.
“எங்கள் கோரிக்கைகளை பிராந்திய மொழிகளில் உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறோம். வாட்ஸ்அப் மூலம் பிராந்திய மொழியில் பலரைச் சென்றடையவும் முயல்கிறோம்” என்கிறார் அனுஜ்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago