துப்பறியும் ராம்சேகர் 06: செங்கமலக்கண்ணன் எங்கே?

By ஜி.எஸ்.எஸ்

காரில் சென்றுகொண்டிருந்த ராம்சேகர், சாலையோரம் ஒரு சிறுவன் வலிப்பால் துடிப்பதைப் பார்த்து வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அவனை நோக்கிச் சென்றார்.

தன் காரிலிருந்து ஒரு விரிப்பை எடுத்து நடைபாதையில் போட்டு அதன் மீது அந்தப் பையனை​ப் படுக்கவைத்தார். சுற்றி இருப்பவர்களை நகரச் சொல்லி அவனுக்குப் போதிய காற்று கிடைக்கும்படி ​செய்தார்.

மனிதாபிமானமிக்க ஒருவர், “நான் போய் சோடாவோ டீயோ வாங்கி வரவா?” என்று கேட்க, வேண்டாம் என்று மறுத்தார் ராம்சேகர். கை, கால்கள் வெட்டி இழுக்கும் நேரத்தில் ​எந்த உணவுப் பொருளையும் கொடுக்கக் கூடாது என்று அவருக்குத் தெரியும். ஒருவர் தன் வீட்டுச் சாவிக் கொத்தை அந்த​ச் சிறுவன் கையில் திணித்தார். மருத்துவம் ஏற்றுக்கொள்ளாத விஷயம். என்றாலும் அவர் மனதைப் புண்படுத்த வேண்டாம் என்று அதற்கு ராம்சேகர் மறுப்புக் கூறவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாகச் சமநிலையை ​​அடைந்தான் அந்தச் சிறுவன்.

“தம்பி, உன் வீடு எங்கே இருக்கு, உங்க அப்பா, அம்மா எங்கே இருக்காங்க?”.

இத்தனை கேள்விகளுக்கும் அந்தச் சிறுவன் ஒரே கோணத்தில்தான் பதிலளித்தான். தன் அப்பாவைப் பற்றி அவன் சொன்ன விவரங்கள், அப்பாவின் மீது அவனுக்கு உள்ள அதிகமான பாசத்தை வெளிப்படுத்தியது.

“எங்க அப்பா பேரு செங்கமலக்கண்ணன். பக்கத்திலே எழும்பூரிலே​தான் வேலை செய்யறாரு. அப்பானா எனக்கு ரொம்ப இஷ்டம். பளிச்சினு உடை உடுத்திக்குவாரு. பைக்லதான் வேலை பாக்கற இடத்துக்குப் போவாரு. இன்னக்கி கறுப்பு பேண்ட், கறுப்பு ஷூ போட்டிருந்தாரு. எங்கப்பாவோட மீசை எனக்கு ரொம்பப் பிடிக்கும். காலையிலே வரும்போதெல்லாம் முந்திரி பிஸ்கெட், வாழைப்பழம்னு எனக்குப் பிடிச்ச விஷயங்களை வாங்கிட்டு வருவாரு. அவர் தலையிலே இருக்கும் நரைமுடிகூட அவருக்கு அழகாக இருக்கும். ஒரு வருஷத்துக்கு முன்னாலேதான் அவர் ​மூக்குக் கண்ணாடி போடத் தொடங்கினாரு. பாட்மிண்டன் நல்லா விளையாடுவாரு. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நானும் அவரும்...’’.

பேசிக் கொண்டிருந்தபோதே அந்தச் சிறுவன் மிகவும் பலவீனமானான். மயக்கமடைந்தான்.

ராம்சேகர் அவனது நாடியைப் பிடித்துப் பார்த்தார். கண்ணின் கீழுள்ள தசையைக் கீழ்ப்புறமாக இழுத்துப் பார்த்தார். கவலைப்பட எதுவுமில்லை. என்றாலும், அருகிலுள்ள மருத்துவமனையில் அவனுக்கு சிகிச்சை அளிக்கலாம் என்று முடிவெடுக்கும்போது கூட்டத்திலிருந்த நான்கு பேர் அடுத்தடுத்து சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.

“சார், எனக்குத் தெரிஞ்சு செங்கமலக் கண்ணன்ற பேர்ல எழும்பூரில் இருக்கிற பேக்கரியில் ஒருத்தர் வேலை ​செய்யறாரு. இன்னிக்கு அவரைப் பார்த்தேன். கறுப்பு பேண்ட்டும் நீல நிறச்சட்டையும் போட்டிருந்தாரு. ஆனால், அவர் ஷூ அணிந்திருந்தாரா, செருப்பான்னு எனக்குச் சரியா தெரியல” என்றார் ஒருவர்.

“எனக்குக்கூடச் செங்கமலக்கண்ணன்னு ஒருத்தரைத் தெரியும். அவர் இங்கிருக்கும் விசா ஆபீஸிலே வேலை செய்யறா​ரு. விசாவுக்கு விண்ணப்பிக்கும் மக்களை ஒழுங்குபடுத்தி அனுப்புவதுதான் அவர் வேலை. அவருக்குப் பெரிய மீசை உண்டு” என்றார் இன்னொருவர்.

மூன்றாவதாக மற்றொருவரும் தனக்கு செங்கமலக்கண்ணன் என்று ஒருவரைத் தெரியும் என்றார். “எழும்பூரிலுள்ள ​நூலகத்தில் ​நூலகராகப் பணிபுரிகிறார்’’ என்றவர், “அவர் தலையில் கொஞ்சம் நரை உண்டு” என்ற கூடுதல் தகவலையு​ம் அளித்தார்.

செங்கமலக்கண்ணன் என்ற ஒருவரை தனக்கும் தெரியும் என்றார் நான்காமவர். “எழும்பூரிலுள்ள நாளிதழ் ஒன்றில் பணியாற்றுகிறார் அவர்” என்றார். ​மூக்குக் கண்ணாடி அணிந்தவர் அவர் என்றும் குறிப்பிட்டார்.

சோதனையாக நான்கு பேருக்குமே தாங்கள் குறிப்பிட்ட செங்கமலக் கண்ணனின் குடும்பத்தைப் பற்றிய எந்த விவரமும் தெரியவில்லை.

நான்கு பேர் கூறிய தகவல்களையும் கேட்ட ராம்சேகர், அந்த நான்கு செங்கமலக்கண்ணன்களில் யார் இந்தச் சிறுவனின் அப்பாவாக இருக்க முடியும் என்பதை ஊகித்தார். அந்த இடத்துக்கு ஓர் ஆளை அனுப்பினார். அவர் ஊகம் சரிதான் என்பது உறுதியானது.

விவரங்கள் அளித்த நான்கு பேரில் யார் கூறியதை வைத்துக்கொண்டு ராம்சேகரால் இந்த ஊகத்தைச் செய்ய முடிந்தது? அந்த நால்வரில் சிறுவனுடைய அப்பா யார்?

(துப்பறியலாம்)

சென்ற வார விடை

காய்கறிகள் வரையப்பட்டிருந்த அந்தத் தாளைக் கொண்டு ராம்சேகர் கண்டுபிடித்தது என்ன?

பாகற்காய், உருளைக் கிழங்கு, பரங்கிக்காய், பூசணி, அவரைக்காய் ஆகியவற்றின் படங்கள் வரையப்பட்டிருக்கின்றன. இந்தப் பெயர்களில் இரண்டாவது எழுத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் க, ரு, ர, ச, வ. ஐவர் அணி என்று அழைக்கப்படும் ஐவரின் பெயர்களும் இந்த எழுத்துகளில்தான் தொடங்குகின்றன. அதாவது கந்தசாமி, ருக்மணி, ரங்கநாதன், சண்முகராஜன், வடிவேலு.

ஒவ்வொரு காய்க்கும் முன்பாக ஓர் எண் இருக்கிறது. அந்த எண்கள் தொடர்ச்சியாக இல்லை. 1, 2, 4, 5, 3 என்று காணப்படுகின்றன. ஐவர் அணியில் உள்ளவர்களின் பெயர்கள்தான் காய்கறிகளின் உருவத்தில் ​குறிக்கப்பட்டுள்ளன என்பதை ராம்சேகரால் ஊகிக்க முடிகிறது. அந்தந்தக் காய்கறிக்கு எதிரே காணப்படும் எண் (கோடிகளில்) ஒவ்வொருவருக்கும் எதற்காகவோ பகிரப்பட்ட கறுப்புப் பணமாக இருக்க வாய்ப்பு உண்டு என்றும் ஊகிக்கிறார் ராம்சேகர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்