தனி ஒருவன்!

By திரைபாரதி

 

வா

னுயர்ந்த தகவல் தொழில்நுட்பப் பெரு நிறுவனங்கள் உள்ள சென்னை தரமணி டைடல் பார்க் பின்னால் இருக்கிறது அந்தக் குடிசைப் பகுதி. கல்லுக்குட்டை என்பார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்புதான் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மின்சாரமே கிடைத்தது.

அங்கேபோய் “ரித்தீஷ் வீட்டுக்கு எப்படிப் போகணும்?” என்றதும், இன்னும் “பத்து வீடு தள்ளிப்போங்க” என்று வழி சொல்லி அனுப்புகிறார் காகிதம் சேகரித்த கோணிப்பையை முதுகில் சுமந்தபடி சென்ற பெரியவர். ரித்தீஷ் அந்தப் பகுதியில் புகழ்பெற்றவனாகிவிட்டான். அவனைப் புகழ்பெற வைத்திருக்கிறது அவன் எடுத்திருக்கும் ‘தனி ஒருவன்’ என்ற குறும்படம். 2 நிமிடங்கள் 59 விநாடிகள் ஓடும் அந்தக் குறும்படம் காட்டும் பாதை, நாளை திரையுலகில் தளைக்கவிருக்கும் சிறந்த விதை என அவனை அடையாளம் காட்டுகிறது.

rithis ரித்தீஷ்

குப்பை மேடுகள்தான் குடிசைப்பகுதிகளாக இருக்க முடியும். ஒதுக்கப்பட்ட இடங்களில்தான் விளிம்புநிலையில் வாழும் எளிய மக்கள் வாழ்விடம் தேடி அடைக்கலாமாவர்கள். அப்படிப்பட்ட இடத்தில் வசிக்கும் ரித்தீஷ், குப்பைகளை முறையாக அகற்ற வேண்டும் என்ற ‘தூய்மை பாரதம்’ திட்டத்தின் கருத்தைத் தன் குறும்படத்தில் சித்திரித்திருக்கிறான்.

சென்னை மாவட்டப் பள்ளிகளுக்கு இடையேயான ‘தூய்மை பாரதம்’ குறும்படப் போட்டியில் அது முதல் பரிசையும் வென்றுள்ளது. இது தவிர மேலும் ஆறு குறும்படங்களையும் எடுத்திருக்கிறான். ‘தனி ஒருவன்’ தவிர மற்ற குறும்படங்களை அனைத்தையுமே அவன் ஸ்மார்ட்போன் மூலமே எடுத்து, தானே எடிட் செய்து படங்களாக உருவாக்கியிருக்கிறான்.

அம்மாவின் கைப்பேசி

“தாத்தா, பாட்டிதான் எனக்கு எல்லாம். அம்மா மும்பையில் வீட்டு வேலை செய்து என்ன படிக்க வைக்கிறாங்க. நான் துரைப்பாக்கம் அரசு மேல் நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கிறேன். அடிக்கடி தரமணியில் அரசு திரைப்படக் கல்லூரி வழியா போவேன். அப்போ ஒருநாள் இந்த இன்ஸ்டிடியூட்ல வந்து சேரனும்னு எனக்குத் தோணும். குறும்படம் மேல ஆர்வம் வந்ததுக்குக் காரணம் ‘எந்திரன்’ படம்.

‘ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் ‘எந்திரன்’ என்ற வாசகத்தோட போஸ்டர் ஓட்டியிருந்தது. பிரம்மாண்ட இயக்கம்னா என்னன்னு எனக்குத் தெரியல. படம் பார்த்தப்போதான் அதை உணர முடிஞ்சது. அதுக்கு அப்புறம் லீவுக்கு ஊருக்கு வந்த அம்மாகிட்ட ஒரு போன் வேணும்னு கேட்டேன். முதல்ல மறுத்தாங்க. நான் அதை வெச்சு குறும்படம் எடுக்கப்போறேன்னு சொன்னதும் வாங்கிக் கொடுத்தாங்க.

போனை வெச்சுத்தான் படம் எடுக்க ஆரம்பிச்சேன். என்னோட ஆர்வத்தைப் பார்த்துட்டு இங்கே இரவுப்பள்ளி நடத்துற தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நிர்வாகி ‘துளிர்’ உதயன் குறும்பட போட்டியில் கலந்துக்க வாடகைக்கு கேமரா ஏற்பாடு செஞ்சு கொடுத்தார். அதை வெச்சுத்தான் ‘தனி ஒருவன்’ குறும்படத்தை எடுத்தேன். தலைப்பு ‘தனி ஒருவன்’னு இருந்தாலும், என்னோட பங்கு மட்டும் இதுல இருக்கக் கூடாதுன்னு இங்கே வாழ்ற என் நண்பர்கள், தோழிகள் எல்லாரும் சேர்ந்து உட்கார்ந்து கதையை உருவாக்கினோம்.

நாங்க எதிர்கொள்ற பிரச்சினையில நாங்களே நடிச்சோம். நான் இயக்கினேன். எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி இன்னும் நிறைய எடுக்கணும்.” என்று சொன்ன ரித்தீஷ், “தனக்கும் தனது குழுவுக்கும் இத்தனை சீக்கிரம் பாராட்டுகள் வந்துசேரும் என்று எதிர்பார்க்கவில்லை” என்கிறார்.

பாராட்டும் நன்றியும்

இந்தக் குறும்படம் பரிசு பெற்றதால், சென்னை லயோலா கல்லூரியின் வகேஷனல் எஜூகேஷன் (லைவ்) துறையின் சார்பில் அண்மையில் ரித்தீஷுக்குப் பாராட்டு விழாவும் நடந்துள்ளது. “கல்லூரி முதல்வர் தலைமையில, மாணவர்கள் மத்தியில பாராட்டு விழா நடத்தி, பரிசு கொடுத்தாங்க. இன்னும் சிறந்த குறும்படங்கள் எடுக்க எந்த உதவி என்றாலும் செய்றோம்னும் சொன்னாங்க. லயோலா கல்லூரிக்கு மட்டுமில்ல; துளிர் இயக்கத்துக்கும் நாங்க நன்றிக்கடன் பட்டிருக்கோம்” என நெகிழ்கிறார் ஆர். ரித்தீஷ்.

குறும்படத்தைக் காண:goo.gl/kqovsv

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE