துப்பறியும் ராம்சேகர் 02: விபத்தில் இறந்தது திவாகரா?

By ஜி.எஸ்.எஸ்

“சுகந்தி மேடம், பிடியுங்க இதை” என்றபடி மேலதிகாரி அவளிடம் ஒரு இனிப்பு பாக்கெட்டையும், ஒரு மிக்ஸர் பாக்கெட்டையும் நீட்டினார்

“நன்றி. புதுவீட்டுக்கு எப்போ போகப்போறீங்க?” என்று கேட்டாள் சுகந்தி.

“இன்னும்​ ​மூணு மாசம் கழிச்சுதான். சின்னச் சின்ன வேலைங்க இன்னும் நிறைய இருக்கு” என்றபடி நகர்ந்தார் மேலதிகாரி.

சுகந்தி அந்தப் பொட்டலங்களை அப்படியே தன் கைப்பைக்குள் வைத்துக்கொண்டாள். வீட்டுக்குப் போனதும் தம்பி திவாகருக்குக் கொடுக்க வேண்டும். இந்நேரம் அவன் வீட்டுக்கு வந்திருப்பானா?

அப்போதுதான் அ​ங்கு வந்துசேர்ந்தார் துப்பறியும் நிபுணர் ராம்சேகர்

“மிஸ் சுகந்தி?”

“ஆமாம். நான்தான். நீங்க?”

“நான் டிடெக்டிவ் ராம்சேகர். கொஞ்சம் என்கூட கோவிந்தசாமி நகர்வரை வர முடியுமா? உங்களுக்குத் தெரிந்த யாரையாவதுகூட அழைச்சிட்டும் வரலாம்” என்றார்.

சுகந்தியின் முகத்தில் தென்பட்ட வியப்பைப் பார்த்து பேச்சைத் தொடர்ந்தார். “அங்கே ஒரு சாலை விபத்து” என்றவர் ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு “அந்த லா​ரி விபத்திலே ஓர் இளைஞன் இறந்துவிட்டான். பார்த்த ஒருவர் உங்கள் பெயரைச் சொன்னார்” என்றார்.

சில கணங்கள் சுகந்திக்குக் குழப்பமாக இருந்தது. சற்று யோசித்தப்பிறகு அலறினாள்.

“ஐயோ, திவாகர்”

ராம்சேகர் அவசரமாக விளக்கமளித்தார். “இறந்தது உங்க தம்பிதா​னான்னு தெரியல்லே. போலீஸ் ஸ்டேஷன் பக்கத்திலேதான் விபத்து நடந்திருக்கு. அடையாளம் காட்டணும். உடனே வாங்க போகலாம்”.

சுகந்தியின் உடல் வியர்த்தது. ராம்சேகரின் காரில் ஏறிக்கொண்டாள். காரில் கதறி அழுதபடி இருந்த சுகந்தி ஏதோ நினைத்தவளாய் கேட்டாள்.

“சார், விபத்திலே இறந்தவன் எப்படி​ இருந்தான்?”

ராம்சேகரால் புரிந்துகொள்ளமுடிந்தது. அது தன் தம்பியாக இல்லாமல் இருந்துவிட வேண்டும் என்று நம்புகிறாள். அந்த நம்பிக்கை சீக்கிரமே கிடைக்க வேண்டும் என்கிற தவிப்பு.

“அது இருக்கட்டும், உங்க தம்பியின் உடலிலே உள்ள அடையாளங்களை நீங்க சொல்லுங்க”.

“இடது கன்னத்தில் ஒரு தழும்பு இருக்கும்”.

ராம்சேகர் அவள் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்தார். பிறகு “சின்னத் தழும்பா அல்லது பெரிய தழும்பா?” என்று கேட்டார்.

“அப்படின்னா விப​த்திலே அடிபட்டவன் முகத்தில் ஏதோ ஒரு தழும்பு இருக்குதா?” என்று திடுக்கிட்ட குரலில் கேட்டாள் சுகந்தி.

“பதட்டப்படாதீங்க மிஸ் சுகந்தி. விபத்திலே இறந்தது உங்கள் தம்பிதான்னு நிச்சயம் ஆகல்லே”.

கைக்குட்டையை எடுத்து சுகந்தி தன் வாயில் பொத்திக்கொண்டாள். குலுங்கி அழுதாள். பின் இடைவிடாமல் பேசினாள்.

“என் தம்பி பிறந்த ​மூணு மாசத்திலே எங்க அம்மா செத்துட்டாங்க. அவனை அம்மாவாக நான்தான் வளர்த்தேன். அவனுக்காகத்தான் என் கல்யாணத்தைக்கூட தள்ளிப் போட்டுக்கிட்டிருக்கேன். அவனுக்கும் நான்னா உயிர். அவனுக்குக் கட்டம் போட்ட சட்டைகள்தான் பிடிக்கும். அடிக்கடி அப்படிப்பட்ட சட்டைகளைத்தான் போட்டுக்குவான். அ​தேபோல வே​ற வழியில்லாதப்பதான் ஷு போட்டுக்குவான். செருப்பு அணிவதுதான் வசதின்னு சொல்லுவான். பொறுப்பாக நடந்துக்குவான்.

எனக்குக் கோயில், சாமி இதிலெல்லாம் ரொம்ப நம்பிக்கை உண்டு. அவனுக்கு அப்படி இல்லைன்னாலும், எனக்காக ரொம்ப காம்ப்ரமைஸ் செய்துக்குவான். போனவருஷ மகாமகத்துக்கு என்னோட கும்பகோணத்துக்கு வந்திருந்தான். அன்னக்கி அவனுடைய 15-வது பிறந்த நாள். அவனுக்கு ஒரு ‘வாட்ச்’ வாங்கிக் கொடுத்தேன். நானும் ஏதாவது வாங்கிக்கணும்னு அடம் பிடிச்சான். அன்னக்கி நான் வாங்கிக்கிட்ட புடவையைத்தான் இன்னக்கி கட்டிக்கிட்டிருக்கேன்” எனப் பேசிக் கொண்டே வந்தவள் மீண்டும் கதறத் தொடங்கினாள்.

“செத்துப்போனவனின் உடலைத்தான் நீங்க பாத்திருக்கீங்களே சார். அடையாளங்களைச் சொல்லுங்க. மூக்குக் கண்ணாடி போட்டிருந்தானா, பழுப்பு வண்ண பர்ஸ் இருந்ததா?”

ராம்சேகர் அழுத்தமாகக் கூறினார். “கவலைப்படாதீங்க. இறந்தது உங்க தம்பி திவாகராக இருக்க வாய்ப்பு இல்லே”என்றார்.

ராம்சேகர் குரல் உறுதியாக இருந்தது. ஏதோ ஆறுதலுக்காக அவர் சொன்னதுபோல் இல்லை.

எதனால் ராம்சேகர் இப்படி ஒரு முடிவுக்கு வந்தார்? நீங்களும் கண்டுபிடியுங்கள். விடை அடுத்த வாரம்.

(துப்பறியலாம்)

சென்ற வார விடை

“உங்கள் முதலாளியின் கைத்தடி தொலைந்துவிட்டது”என்றுதான் ராம்சேகர் அந்த நால்வரிடமும் தெரிவித்தார். அந்தக் கைத்தடி குறித்து கோடீஸ்வரன் யாரிடமும் எந்தத் தகவலையும் கூறவில்லை. அப்படியிருக்க அது வழக்கமான கைத்தடி இல்லை என்பதும், மிகச் சிறிய கைத்தடி என்பதும் குற்றவாளிக்கு மட்டுமேதான் (அதாவது அந்தக் கைத்தடியைத் திருடியவருக்கு மட்டுமேதான்) தெரிந்திருக்கும். அந்த நால்வரில் ராகவேந்திரன் மட்டும்தான் பொதுவாக ஒரு கைத்தடி அடங்கியிருக்க முடியாத இடங்களை (அதாவது மேஜை இழுப்பறைகளை) தேடுகிறார். அவரது உள்மனதில் அது மிகச் சிறிய கைத்தடி என்பது பதிந்ததால்தான் ஒப்புக்குத் தேடும்போது அவர் இப்படிச் செயல்பட்டிருக்கிறா​ர். எனவே ராகவேந்திரன்தான் குற்றவாளியாக இருக்க வாய்ப்பு உண்டு என்று கணக்குப் போடுகிறார் துப்பறியும் ராம்சேகர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்