இளமையின் ஆட்டம்

By அரவிந்தன்

விளையாட்டே இளமையின் ராஜ்ஜியம்தான். ஆனால் வெறும் இளமை வேகத்தை மட்டும் வைத்துக்கொண்டு மைதானத்தில் சாதிக்க முடியாது. கட்டுக்கோப்பான முயற்சி தேவை. ஆனால் சில சமயம் இதெல்லாம் கவைக்குதவாது.

நிதானம், கவனம் எதுவும் கை கொடுக்காது. சம்பிரதாயங்களைத் தூக்கி எறிந்துவிட்டு இறங்கி அடிக்க வேண்டும். இளமைக்கே உரிய வேகமும் துணிச்சலும் இருந்தால்தான் இதைச் செய்ய முடியும். அந்த வேகமும் துணிச்சலும் தனக்கு இருக்கிறது என்பதைத் தனக்கே உரிய விதத்தில் நிரூபித்தார் ரவீந்திர ஜடேஜா.

இவரை ஏன் அணியில் வைத்திருக்கிறார்கள் என்று சிலரைப் பற்றி அடிக்கடி கேள்வி எழும்பும். அப்படிப்பட்டவர்களில் ஒருவரான ஜடேஜா அந்தக் கேள்வியே எழ முடியாதபடி செய்துவிட்டார்.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வெற்றிக்குப் பலரும் பல காரணங்களைச் சொல்கிறார்கள். முதல் இன்னிங்ஸில் அஜிங்க்ய ரஹானே எடுத்த சதம், புவனேஸ்வர் குமார் எடுத்த விக்கெட்டுகள், இரண்டாவது இன்னிங்ஸில் முரளி விஜய் எடுத்த 95, மேன் ஆஃப் த மேட்ச் இஷாந்த் ஷர்மா எடுத்த 7 விக்கெட்டுகள் என்று பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. எல்லாமே முக்கியம்தான். ஆனால் திருப்புமுனைத் தருணம் என்ற ஒன்று இருக்கிறது. அந்தத் தருணத்தின் நாயகன் ஜடேஜா.

இஷாந்த் வீசிய பவுன்சர்களைப் பார்த்த மலைப்பில் பலரும் இரண்டாம் இன்னிங்ஸில் ஜடேஜாவின் அதிரடி ஏற்படுத்திய திருப்புமுனையை மறந்துபோனார்கள். ஜடேஜா 57 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள்.

அது வேகமாக ஆட வேண்டிய நேரம் அல்ல. ஆனாலும் ஜடேஜா அப்படி ஆடினார். அவர் களம் இறங்கிய நேரம் மிகவும் நெருக்கடியான கட்டம். 300 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயித்தால்தான் இந்தியா வெற்றி பெறுவது பற்றி நினைத்துப் பார்க்க முடியும் என்ற நிலை. 203க்கு 6 விக்கெட்கள்.

அடுத்த முனையில் ஸ்திரமாக ஆடிக்கொண்டிருந்த விஜயும் சிறிது நேரத்தில் ஆட்டமிழந்தார். ஸ்கோர் 235. இன்னும் 70-80 ரன் அடித்தால்தான் ஆட்டத்தில் நிற்க முடியும் என்னும் நிலை. கவனமாக ஆடிய தோனி, விஜய் உள்படப் பலரும் ஸ்விங் பந்துக்கு ஆட்டமிழந்தார்கள். இனி வரவிருப்பவர்கள் எல்லாரும் பந்து வீச்சாளர்கள். பார்த்தார் ஜடேஜா. கவனத்தைத் தூக்கி லார்ட்ஸ் மைதானத்துக்கு வெளியில் எறிந்தார்.

தன்னை நோக்கிச் சீறி வந்த பந்துகளை எதிர்த்துத் தாக்கத் தொடங்கினார். அடிக்கக்கூடிய பந்து, அடிக்கக் கூடாத பந்து என்ற விவஸ்தையையெல்லாம் அவர் கண்டுகொள்ளவே இல்லை. பந்துகள் மட்டையில் சரியாகப் படவில்லை. விளிம்பில் பட்டுத் தெறித்தன.

ஜடேஜா கவலைப்படவில்லை. மேலே பறந்து ஆளில்லாத இடத்தில் விழுந்தன. ஜடேஜா வருத்தப்படவில்லை. பந்தைக் குறுக்காக வெட்டி ஆடினார். அழகு, முறைமை என எதைப் பற்றியும் அலட்டிக்கொள்ளவில்லை. வேகப் பந்து வீச்சாளர்களை கிரீஸிலிருந்து வெளியே வந்து எதிர்கொண்டார்.

இந்த அதிரடியை எதிரணியினர் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் தொடர்ந்து விக்கெட் எடுக்கும் நோக்கில் பந்தை போட்டுக் கொண்டிருந்தார்கள். ஜடேஜாவோ விக்கெட்டைப் பற்றிக் கவலையே படவில்லை.

மட்டையை நாலாபுறமும் சுழற்றி ரன்களைக் குவிக்க ஆரம்பித்தார். அவர் அதிரடி ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தபோது மறு முனையில் புவனேஸ்வர் நிதானமாகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். கடைசியில் ஜடேஜா அவுட் ஆனபோது இந்தியா 333 என்னும் வலுவான நிலையை எட்டியிருந்தது.

ஜடேஜா ஆடியது சூதாட்டம். அந்தச் சூதாட்டத்துக்குப் பின் பலமாக இருந்தவை அவரது துணிச்சலும் வேகமும். சம்பிரதாயமான ஆட்டங்கள் கை கொடுக்காதபோது இந்தத் துணிச்சல் கை கொடுத்தது. இந்தியா வெல்ல இந்தக் கட்டமே மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. இங்கிலாந்துக்கு இலக்கு 319 ரன். லார்ட்ஸ் மைதானத்தில் கடைசி நாளுக்கு மிகவும் சவாலான இலக்கு அது.

அந்த இலக்கை இங்கிலாந்து எட்டிவிடும் என்னும் நிலை இருந்தபோது இன்னொருவர் தன் வேகத்தைக் கூட்டினார். அவர் இஷாந்த் ஷர்மா. வேகத்துக்குப் பேர் போனவராகச் சில ஆண்டுகளுக்கு முன் அணியில் நுழைந்த அவர் வேகமும் குறைந்து துல்லியமும் இல்லாமல் தடுமாறிக்கொண்டிருந்தார்.

அணியிலிருந்து அடிக்கடி நீக்கப்பட்டார். ஆனால், இங்கிலாந்து மண்ணில் வீறுகொண்டு எழுந்து தன் பழைய வேகத்தை மீட்டெடுத்தார். இந்திய மட்டையாளர்களை மிரட்ட வெளிநாட்டு பவுலர்கள் ஏவும் அஸ்திரத்தை, அவர்கள் மீதே செலுத்தினார். அடுக்கடுக்காக பவுன்சர்கள் போட்டார். சளைக்காமல் போட்டுக்கொண்டே இருந்தார்.

அதற்குக் கை மேல் பலன் கிடைத்தது. எகிறி வரும் பந்துகள் மட்டையாளர்களை மிரட்டின. அவர்கள் ரோஷத்தை உசுப்பின. அவர்கள் திணறி அவுட் ஆனார்கள் அல்லது பவுன்சர் விடுத்த சவால் வலையில் விழுந்து புல் (ஷாட்) தடுக்கி விழுந்தார்கள், இந்தியா வென்றது.

வேகமும் துணிச்சலும் பெற்றுத் தந்த வெற்றி இது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்