பயணத்தின் பாதை: மலைக்கவைத்த யாத்ரிகர்!

By முகமது ஹுசைன்

ஒரு முறை பிகாரில் உள்ள நாளந்தாவுக்குப் பயணம் மேற்கொண்டேன். அது இந்தியாவில்தான் இருக்கிறதா என்று சந்தேகம் ஏற்படும் வகையில் வெளிநாட்டவர்களின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. பேருந்து நிலையத்திலிருந்து கூட்டம் கூட்டமாக வெளிநாட்டவர்கள் குதிரை வண்டிகளில் எங்கோ சென்றுகொண்டிருந்தனர். முதியவர்களைவிட இளம் வயதினர் அதிகம் காணப்பட்டனர். ஆனால், அவர்கள் சுற்றுலாப் பயணிகளுக்கே உரித்தான கொண்டாட்ட மனநிலையில் இல்லாமல், ஆழ்ந்த சிந்தனை வயப்பட்ட நிலையில் இருந்தனர். அதைப் பார்க்கவே கொஞ்சம் வியப்பாக இருந்தது. எங்கே செல்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளும் ஆவலில், நானும் அவர்களுடன் ஒரு குதிரை வண்டியில் சென்றேன்.

shutterstock_146817716rightஒரே மக்களாகப் பயணம்

அந்த வண்டியில் என்னையும் சேர்த்து மொத்தம் ஐந்து பேர் இருந்தோம். அதில் இரண்டு பேர் திபெத்தியர், இரண்டு பேர் சீனர். அரசியல் காரணங்களால் நாடுகள் தங்களுக்கிடையே பகைமையுடன் இருந்தாலும், மக்கள் மனிதம் என்கிற புள்ளியில் இணைந்து பயணித்தனர். அவர்கள் வெகு இயல்பாக நட்புடன் பேசிக்கொண்டு வந்தனர். அவர்கள் எங்கே செல்கிறார்கள் என்று கேட்டேன்.

அதற்குள் வண்டியின் ஒரு திருப்பத்துக்குப் பின் தெரிந்த அந்தக் கட்டிடம், ஆச்சரியப்படத்தக்க வகையில் சிறிதுகூட இந்தியத் தன்மையற்றுக் காட்சியளித்தது. அதைச் சுட்டிக்காட்டி, தாங்கள் அங்கே செல்வதாகக் கூறினர். அது என்ன கட்டிடம் என்று கேட்டேன்? என்னைச் சற்று வினோதமாகப் பார்த்தனர். உங்கள் நாட்டைப் பற்றி, வெளிநாட்டவரான எங்களிடம் கேட்கிறீர்களே என்று கேட்பதுபோல இருந்தது அந்தப் பார்வை.

அந்தக் கட்டிடம் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன அறிஞர் யுவான் சுவாங்கின் (சுவான் சாங்) நினைவரங்கம் என்று திபெத் பெண் ஒருவர் கூறினார். என்னுடைய சொந்த ஊர் எது என்று அவர்கள் கேட்டனர். சென்னையிலிருந்து வருவதாகச் சொன்னேன். யுவான் சுவாங், சென்னைக்கு அருகே உள்ள காஞ்சிபுரத்துக்கு கி.பி. 640-ல் வந்து தங்கியிருக்கிறார் என்று சொல்லி ஆச்சரியமளித்தார் அந்தப் பெண். மேலும், அவர்கள் காஞ்சிபுரம் சென்றுவிட்டுத்தான், இங்கு வந்திருப்பதாகவும் சொன்னார்கள். பின் நான் கேட்காமலேயே, யுவான் சுவாங் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

வரலாறு சொன்ன பெண்

“யுவான் சுவாங்கின் உண்மையான பெயர் சென் யீ. அவர் 602-ல் சீனாவில் ஹீனான் மாகாணத்தைச் சேர்ந்த யான்ஷி எனும் ஊரில் பிறந்தார். அவர் தன் மூத்த சகோதரரின் பாதிப்பால், புத்த வேத நூல்களை விரும்பிப் படித்தார். அதன் பின் புத்த மதத்துக்கு மாறினார். பின் அங்கு நிலவிய அரசியல் குழப்பங்களால், ஸீசுவான் சென்று புத்தம் பற்றி அதிகம் படிக்க ஆரம்பித்தார். அந்தப் புத்தகங்களில் இருந்த முரண்பாடுகளும் குறைபாடுகளும் அவருக்கு நிறையக் குழப்பங்களை ஏற்படுத்தின. அவருடைய கேள்விகளுக்கு விடை அளிக்க அங்குள்ள சீன குருமார்களால் முடியவில்லை.

எனவே, அதற்கு விடை தேடி, புத்தம் பிறந்த இந்தியாவுக்கு 629-ம் ஆண்டு வந்தார். டாக்லா மகான் பாலைவனம், டுர்ஃபான், கராசர், குச்சா, தாஸ்கந்து, சமர்கந்து, இந்து குஷ் மலை, காந்தராம் வழியாக காஷ்மீர் வந்து, பின் அங்கிருந்து கங்கை நதி வழியே மதுரா வந்தடைந்தார். இவர் இந்தியாவில் புத்த கயா, நாளந்தா, விஜயவாடா, காஞ்சிபுரம், அஜந்தா எனப் பல இடங்களில் சுற்றியிருந்தாலும், அவர் புத்த கல்விக்குப் புகழ்பெற்ற நாளந்தா மடத்தில் அதிக காலம் தங்கினார்.

புத்த ஞானத்தோடு சேர்த்து சம்ஸ்கிருத மொழியையும் இந்திய ஆன்மிக நூல்களையும் கற்றுத் தேர்ந்தார். பின் 643-ம் ஆண்டு இந்தியாவிலிருந்து கிளம்பி சீனா சென்றடைந்தார். அவரைக் கவுரவிக்கும் விதத்தில், அளிக்கப்பட்ட அமைச்சர் பதவியைக் கண்ணியமாக மறுத்து, சமயப் பணியில் முழுமையாக மூழ்கினார். 664-ம் வருடம் மறைந்தார்” என்று யுவான் சுவாங்கின் வாழ்வை எளிமையாக விவரித்துவிட்டு விடைபெற்றார்.

அழகான கட்டிடம்

சீன கட்டிட வடிவமைப்பில் நினைவரங்கம் கட்டிடத்தின் நேர்த்தியும் அழகும் மனதைக் கொள்ளைகொள்வதாக இருந்தது. சுத்தமாகப் பராமரிக்கப்பட்டிருந்தது. 1957-ம் ஆண்டு கட்டத் தொடங்கி, பல்வேறு தடங்கல்கள் காரணமாக 2007-ம் ஆண்டுதான் கட்டுமானம் முடிவடைந்துள்ளது என்பதை அங்கு இருந்த அடிக்கல்நாட்டுக் கல்லில் படித்தபோது அதிர்ச்சியாக இருந்தது. அந்த அரங்கத்தின் உள்ளமைப்பு ஒரு தியான மண்டபம்போல் அமைதியாக இருந்தது. தன் 62 வருட வாழ்க்கையில் சுமார் மூன்றில் ஒரு பங்கைப் பயணத்தில் செலவழித்த யுவான் சுவாங்கை நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருந்தது. என்னுடன் வண்டியில் வந்தவர்கள், ஒரு ஜென் மனநிலையில் அங்கு அமர்ந்து இருந்தனர். நான் ஒரு வழிப்போக்கன் மனநிலையில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்