திரை விமர்சனம்: மெர்சல்

By இந்து டாக்கீஸ் குழு

பரபரப்பான சென்னையில் நான்கு பேர் கடத்தப்படுகிறார்கள். அடுத்த காட்சியில் ஏழைகளின் மருத்துவர் மாறன் (விஜய் -1) கைது செய்யப் படுகிறார். அவரிடம் விசாரணையைத் தொடங்குகிறார் காவல் அதிகாரி சத்யராஜ். கைவிலங்குடன் இருக்கும் மாறன் கதை சொல்லத் தொடங்குகிறார். பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸுக்கு விருது பெறச் செல்லும் மாறன், அங்கே பிரம்மாண்ட மேஜிக் ஷோ நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார். அந்த நிகழ்ச்சியின் இறுதியில் விஜய்க்கு விருது வழங்கிய மற்றொரு இந்திய மருத்துவரான அர்ஜுன் சக்காரியா (ஹரீஷ் பெராடி) கொல்லப்படுகிறார். ஆரம்பக் காட்சியில் கடத்தப்படும் நால்வரும் கொல்லப்படுகிறார்கள்.

ஒரு மருத்துவர் உட்பட தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த அவர்களைக் கொன்றது மாறன் அல்ல என்பதும், அவரைப் போலவே தோற்றம் கொண்ட மேஜிக் கலைஞன் வெற்றி (விஜய் -2) என்பதும் தெரியவருகிறது. வெற்றியைக் கைதுசெய்ய அவரை காவல்துறை தீவிரமாக தேட, இன்னொரு பக்கம் தனியார் மருத்துவமனைக் குழுமம் ஒன்றின் தலைவரான டேனியலும் (எஸ்.ஜே.சூர்யா) வெற்றியைத் தேடுகிறார். இந்தக் கொலைகளுக்கான பின்னணிக் காரணம் என்ன? மாறனும் வெற்றியும் எப்படி ஒரே தோற்றதுடன் இருக்கிறார்கள்? அவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்டார்களா என்பது மீதிக் கதை.

பெற்றோரைக் கொன்றவர்களை, அவர்களின் பிள்ளைகள் பழிவாங்கும் கதைகள் தமிழ்த் திரையில் நிறையவே வெளிவந்துவிட்டன. ஆனால் கதாநாயகர்களின் பழிவாங்கும் உணர்வைத் தாண்டிய உயர்ந்த நோக்கங்கள் அவர்களுக்கு இருப்பதுதான் ‘மெர்சல்’ படத்தை தனித்துக் காட்டுகிறது.

‘அஞ்சு ரூபாய் டாக்டர்’ என்று அழைக்கப்படும் மருத்துவர் மாறன் ஏழை மற்றும் சாமானிய மக்களிடம் கட்டணம் என்று 5 ரூபாயை மட்டுமே பெற்றுக்கொண்டு தரமான மருத்துவ சேவை செய்வது, கிராமத் தலைவராக வரும் தளபதி (விஜய் -3), கோயில் கட்ட முடிவெடுத்த இடத்தில் மருத்துவமனை கட்டுவது, மேஜிக் கலைஞரான வெற்றி, மருத்துவத்துறை தொழிலாக மாறிவிட்டதையும் அரசின் பாரபட்சமான வரிவிதிப்புமுறையையும் துணிந்து விமர்சனம் செய்வது என ‘மூன்றுமுக’ கதாநாயகர்களின் நோக்கங்களைத் திரைக்கதையில் கச்சிதமாக பொருத்திய விதம் சிறப்பு. இந்த வகையில் ‘மெர்சல்’ நட்சத்திர நடிகரான விஜய் படம் என்பதைத் தாண்டி, மக்களுக்கு இன்று தேவைப்படும் பொது மருத்துவ வசதி, தனியார் மருத்துவத்துறையின் தொழில்மயம் ஆகியவற்றின் மீது வெளிப்படையான கடும் விமர்சனங்களை முன் வைக்கிறது. இது திணிப்பாக இல்லாமல், கதையோட்டத்தில் தெளிவாகவும் சீராகவும் ‘பேக்’ செய்யப்பட்டிருப்பதுதான் அட்லி திரைக்கதையின் ஸ்பெஷல்.

திரைக்கதை எந்த அளவுக்கு ரசிகர்களை ஈர்க்கிறதோ அதே அளவுக்குச் சீர்திருத்தம் கோரி விஜய் பேசும் வசனங்களும் ஈர்க்கின்றன. ‘‘மனிதாபிமானம்ங்கறது ஸ்பெஷல் குவாலிட்டி இல்ல, ஒவ்வொருத்தருக்கும் இருக்க வேண்டிய பேசிக் குவாலிட்டி’’, ‘‘7% ஜிஎஸ்டி வரி வாங்குகிற சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம், 18% ஜிஎஸ்டி வரி வாங்குற இந்தியாவில் மருத்துவம் இலவசமில்லை’’, ‘‘நான் பேசுற பாஷையும் போட்டிருக்க டிரஸ்ஸும்தான் உங்க பிராப்ளம்ன்னா, மாற வேண்டியது நான் இல்ல, நீங்க தான்’’, ‘‘எப்பலாம். நாம பெரிய ஆள் என்ற தலைக்கனம் வருதோ, அப்பவெல்லாம் ஏர்போர்ட் வந்தால் நாம் ஒரு சாதாரண ஆள் என்று செக்கிங்கில் சொல்லிடுவாங்க. இந்த உண்மையை நான் சொல்லல. ஷாரூக் கான் சொல்லிருக் கார்" என்று வசனங்களிலும் ரமணகிரி வாசனோடு இணைந்து மருத்துவத்துறையின் அநியாயங்களை விளாசியிருக்கிறார் அட்லி.

மூன்று கதாபாத்திரங்களையுமே ஏற்றுக்கொள்ளும் விதமாக தோற்றம், நடிப்பு, ஆக்ஷன், வசன உச்சரிப்பு என அனைத்து அம்சங்களிலும் அசத்தியிருக்கிறார் விஜய். நடனமாடுவதில் படத்துக்குப் படம் விஜய் தன்னைத் தானே ஜெயித்துக்கொள்கிறார். அது இதிலும் நடந்திருக்கிறது.

மதுரைக்கார தளபதியின் மனைவி யாக வரும் பஞ்சாபி பெண்ணாக நித்யா மேனன் நடிப்பில் அள்ளுகிறார் என்றால், “ டேய் தம்பி இங்க வாடா… ஒரு ரோஸ் மில்க் வாங்கித் தரேன்” என்று விஜயை அழைத்து கலாய்க்கும் சமந்தாவும் கொஞ்சம் ரசிக்க வைக்கிறார்.

டேனியலாக வரும் எஸ்.ஜே.சூர்யா பயமுறுத்துகிறார். ஆனால் அவர் நீண்டகாலம் வில்லன் வேடம் போடமுடியாது என்பதை அவரது ஒரே மாதிரியான நடிப்பு உணர்த்துகிறது. வடிவேலுவை கதைக்குத் தேவையான அளவுக்கு மட்டுமே பயன்படுத்தியிருப்பதைப் பாராட் டலாம்.

‘அபூர்வ சகோதரர்கள்', ‘ரமணா', ’சிவாஜி' என பல படங்களின் சாயல் இருந்தாலும், அதை எப்படி மக்கள் ரசிக்கும் வகையில் சொல்வது என்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் அட்லி.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘ஆளப்போறான் தமிழன்' பாடல் மட்டுமே படத்தோடு ஒன்றியிருக்கிறது. பின்னணி இசையில் இது ஏ.ஆர்.ரஹ்மானா என்ற கேள்வி எழுகிறது. அடுத்தடுத்த காட்சிகள் ஊகிப்பது போல் இருப்பதும் ஒரு மைனஸ். மேலும், படத்தின் நீளத்தை இன்னும் குறைத்திருக்கலாம். இடைவேளை வரை உள்ள காட்சிகள் அனைத்துமே மேலோட்டமாக இருக்கின்றன.

படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் ஒளிப் பதிவு. ஜி.கே.விஷ்ணுவுக்கு இது முதல் படமா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு அசத்தியிருக்கிறார். மேஜிக் நிபுணர், மருத்துவர், கிராமத்து இளைஞர் என ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒளிப்பதிவில் இவர் காட்டியிருக்கும் வித்தியாசம் ரசிக்க முடிகிறது.

மதுரையில் நடக்கும் ப்ளாஷ்பேக் கதையின் நீளத்தைச் சற்று குறைத்திருக்கலாம். அதேபோல டாக்டர் மாறன் கைது செய்யப்பட்டதும், ‘அவரை விடுதலை செய்யாவிட்டால் தீக்குளிப்பேன்’ என்று ஒரு பொடியன் பெட்ரோல் கேனை திறந்து உடம்பில் அதை ஊற்றிக்கொள்வதுபோன்ற காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம்.

ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற பல படங்களை நினைவூட்டினாலும் கதாநாயகர்களின் நோக்கம், அதில் அவர்கள் காட்டும் ஈடுபாடு ஆகிய அம்சங்களால், வழக்கமான பழிவாங்கும் படம் என்ற இடத்தில் இருந்து விலகி நின்று கவர்கிறது ‘மெர்சல்’.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்