இ
ன்றைய தம்பி ராமையாவை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அன்றைய பி.எஸ். ராமையாவை தெரியுமா? ‘மணிக்கொடி’ கால எழுத்தாளர் மட்டுமல்ல, மணி மணியாக 300 சிறுகதைகளை எழுதிக் குவித்தவர். இலக்கிய உலகத்திலிருந்து சினிமா உலகத்துக்குப்போன மூத்த படைப்பாளிகளில் முக்கியமானவர், நாம் மறந்துபோய்விட்ட பத்தலக்குண்டு சுப்ரமணியன் ராமையா. ஆறு படங்களுக்கு வசனம், ஐந்து படங்களுக்கு கதை மட்டும், எட்டு படங்களுக்கு கதையும் வசனமும், இரண்டு படங்களை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியது என மொத்தம் 19 படங்களில் பி.எஸ்.ராமையாவின் திரை ஆளுமை திறம்பட விளங்கியது.
இளமையில் வறுமையை விரட்ட
இன்றைய திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டை வெள்ளைக்காரர்கள் பத்தலக்குண்டு என்று உச்சிரித்து அதையே ஆங்கிலப் பயன்பாடாகவும் மாற்றினார்கள். அந்த பத்தலக்குண்டு ஊரைக்குறிக்கும் ‘பி’தான் ராமையாவின் முதல் இனிஷியல். இரண்டாவது இனிஷியலான எஸ், ராமையாவின் தந்தை சுப்ரமணிய ஐயரைக் குறிப்பது. வத்தலக்குண்டு அருகேயுள்ள ஆத்தூர் கிராமம்தான் சுப்ரமணியருக்குப் பூர்வீகம். பிழைப்புக்காக சுப்ரமணியர் வத்தலக்குண்டுக்கு குடியேறினார். அவரது மகன் ராமையாவோ பிழைப்புக்காக சொல்லாமல் கொள்ளமால் மதராஸுக்கு குடியேறினார். இள வயதிலேயே தாயை இழைந்து வறுமையில் வாடினாலும் எட்டாம் வகுப்புவரை கற்றுத் தேர்ந்தார். தனது 16-ம் வயதில் மதராஸ் பட்டணத்துக்கு 1921-ல் வந்து சேர்ந்தார். ஆதரவின்றி வருபவர்களுக்கு உடனே அடைக்கலம் தரும் புண்ணியத் தலங்களாக அன்றும் ஹோட்டல்களே இருந்தன. ஹோட்டல் ஒன்றில் சர்வராகப் பணிபுரிந்து வயிற்றைக் கழுவிக்கொண்ட ராமையா, தனக்குக் கிடைத்து வந்த சொற்ப ஊதியத்தின் ஒருபகுதியை தந்தையாருக்கு அனுப்பியதுபோக எஞ்சிய அனைத்தையும் பத்திரிகையும் புத்தகங்களும் வாங்கப் பயன்படுத்தினார். வாசிப்பும் தமிழ் மீதிருந்த காதலும் 25 வயதில் அவரை கன்னி எழுத்தாளனாக மாற்றியிருந்தன. அதேசமயம் அண்ணல் காந்தியடிகளின் உப்பு சத்தியாகிரகப்போராட்டமும் அவரை ஈர்த்தது. 25.02.1930-ல் சென்னையில் நடந்த உப்புக் காய்ச்சும் போராட்டத்தில் கலந்துகொண்ட ராமையா கைது செய்யப்பட்டு அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையே பயிற்சிக்கூடம்
ராமையாவின் எழுத்துத்திறமைக்கு மேலும் உரம்போட சிறையே சிறந்த பயிற்சிக்கூடமாக அமைந்துபோனது. ஏனென்றால் சிறையில் ஏ.என்.சிவராமன், வ.ரா போன்ற எழுத்தாளுமைகளை சக சிறைவாசிகளாகப் பெற்றார். அவர்கள் வழியே வாசிப்பின் புதிய தளங்களைக் கண்டடைந்தது மட்டுமல்ல; சிறுகதை எழுதும் கலையிலும் சிறந்த பயிற்சியை அவர்களிடம் பெற்றார். சிறையில் அவர் எழுதிய சில கதைகள், விடுதலையாகி வெளியேவந்ததும் ‘காந்தி’, ‘ஜெயபாரதி’ போன்ற சிறு பத்திரிகைகளில் பிரசுரமாகின. இந்தக் கதைகளுக்கு முன்னர் அவரைப் பிரபலமாக்கியது ‘மலரும் மணமும்’ என்ற சிறுகதை. 1933-ல் ஆனந்தவிகடன் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற இந்தச் சிறுகதையின் இலக்கியத் தரம் குறித்த விசாரம், கறாரான இலக்கியச் சிறுபத்திரிகையான ‘மணிக்கொடி’யின் ஆசிரியர் குழுவை எட்டியது. ‘மணிக்கொடி’யின் தீவிர வாசகராக இருந்த ராமையாவுக்கு அதே பத்திரிகையில் எழுதும் வாய்ப்பு மடியில் வந்து விழுந்தது. அவ்வளவு ஏன்… மணிக்கொடி ஒரு கட்டத்தில் நின்றுவிட்டபோது அதைத் தன் பொறுப்பில் எடுத்து, அதன் ஆசிரியராக இருந்து அதைச் சிறுகதைக்கோவையாக மூன்று ஆண்டுகள் வெளிகொண்டுவந்தார் ராமையா.
சினிமா பிரவேசம்
மணிக்கொடி பரம்பரையில் மிகப்பின்னால் இணைந்துகொண்ட சி.சு.செல்லப்பா, “பாரதிக்குப்பின் கவிஞன் என்றால் ந.பிச்சமூர்த்தி, சிறுகதை ஆசிரியர் என்றால் பி.எஸ். ராமையா” என்று கூறும் அளவுக்கு மணிக்கொடியிலும் ஆனந்த விகடனிலும் கதைகளை எழுதிக்குவித்தார் ராமையா. சினிமாவைப் பற்றி எதுவும் எழுதக்கூடாது என்று விரதம் பூண்டிருந்த மணிக்கொடியிலிருந்து ராமையா விலகியபின், 1938 முதல் சினிமா விமர்சனங்கள் வரத் தொடங்கின. பத்திரிகையிலிருந்து விலகியபின் 1940-ல் ‘பூலோக ரம்பை’ என்ற படத்துக்கு வசனம் எழுதியதன் மூலம் தனது திரைப் பயணத்தைத் தொடங்கினார் ராமையா. அடுத்த ஆண்டே இவர் கதை, வசனம் எழுதிய ‘மதன காமராசன்’ சிறந்த கதாசிரியர் என்ற பெயரை இவருக்குப் பெற்றுத்தந்தது. அடுத்தடுத்து வாய்ப்புகளும் குவிந்தன. பின்னர் பி.யூ.சின்னப்பா, இளமை திரும்பிய குசேலனாக நடித்திருந்த ‘குபேர குசேலா’(1943) படத்தை கே.எஸ். மணியுடன் சேர்ந்து இயக்கினார்.
வாழ்வளித்த கலைஞன்
அதன்பின் 1947-ல் ‘தன அமராவதி’ என்ற படத்தை இயக்கிய பி.எஸ்.ராமையா, அந்தப் படத்தில்தான் ‘நகைச்சுவை மன்னன்’ என்று பெரும்புகழ்பெற்ற ஜே.பி. சந்திரபாபுவை திரையுலகத்துக்கு அறிமுகப்படுத்தினார். “சினிமா வாய்ப்பு தரவில்லை என்ற கோபத்தில் ஸ்டூடியோ வளாகத்தில் தற்கொலைக்கு முயன்ற இளைஞர் இவர்தான். சுதந்திரப் போராட்ட வீரரின் மகனும் கூட” என்று ராமையாவிடம் ஒட்டைக்குச்சிபோல் நின்ற சந்திரபாபுவை அறிமுகப்படுத்தினார்கள். சுதந்திரப்போராட்ட வீரரின் மகன் என்ற காரணத்துக்காக ‘தன அமராவதி’யில் சந்திரபாபுவுக்குச் சிறிய வேடம் கொடுத்தார் ராமையா. எஸ் எம் குமரேசன், பி எஸ் சரோஜா ஜோடி சேர்ந்து நடித்த அந்தப் படத்தில் அண்ணன் மாணிக்கம் செட்டியாராக புளிமூட்டையும். தம்பி ரத்தினம் செட்டியாராக சந்திரபாபுவும் நகைச்சுவை ‘ரகளை’ செய்தனர். சந்திரபாபுவின் நடனத் திறன், பாடும் திறன் இரண்டையும் கண்ட ராமையா, அறிமுப்படத்திலேயே ‘உன்னழகிற்கு இணை என்னத்தை சொல்வது’ என்ற முதல் பாடலையும் பாடவைத்து ஆடவும் வைத்து அழகுபார்த்தார். தனது நாடக எழுத்துக்களால் பல நடிகர்களுக்கு மேடையிலும் திரையிலும் வாழ்வளித்த கலைஞன் என்று ராமையாவை துணிந்து கூறலாம். சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் நாடகக் குழுவினருக்காக பி.எஸ்.ராமையா எழுதிய ‘பாஞ்சாலி சபதம்’, ‘பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்’, ‘தேரோட்டி மகன்’, ‘மல்லியம் மங்களம்’, ‘ கைவிளக்கு’, ‘சறுக்குமரம்’ போலீஸ்காரன் மகள்’ போன்ற நாடகங்களில் நடித்துக் கிடைத்த புகழால் முத்துராமன், வீ.கோபால கிருஷ்ணன், சகஸ்ரநாமம் போன்ற பல கலைஞர்கள் திரையிலும் நிரந்தமான இடத்தைப் பிடித்தனர். இந்த நாடகங்களில் பல திரைவடிவமும் பெற்று வெற்றியும் பெற்றன.
முதன் முதலில்
திரையுலகம் குறித்து முதன்முதலில் புத்தகம் எழுதிய பெருமைக்கு உரியவரான பி.எஸ்.ஆர், இந்திப் படவுலகின் தொடக்ககால பிதாமகர்களில் ஒருவரான மெஹ்பூப், ராமையாவின் பரந்த கதை அறிவை அறிந்திருந்ததால், அவர் தயாரித்து இயக்கிய ‘ஆன்’, ‘அமர்’ ஆகிய வெற்றிப்படங்களின் கதையாக்கத்துக்கு பெரும் ஊதியம் தந்து ராமையாவை பயன்படுத்திக்கொண்டார். தமிழகத்திலிருந்து இந்திப் படவுலம் மதித்து வரவேற்ற முதல்பெரும் திரை எழுத்தாளுமையுமான பி.எஸ்.ராமையா தனது 78-வது வயதில் மறைந்தார்.
படங்கள் உதவி: ஞானம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago