நீர்க் குமிழி 1: திடுக்கிட வைத்த ‘வனமோகினி’

By பிரதீப் மாதவன்

சினிமாவில் சின்ன துரும்பைக் கிள்ளிப் போடுவதென்றால் கூட, ஏழுகடல் ஏழு மலை தாண்டி வட இந்தியாவுக்குப் பயணிக்க வேண்டும். மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற ‘மாயாலோக’ த்தை சேலத்தில் உருவாக்கி, இந்தத் தேவையற்ற அலைச்சலைப் போக்கியவர் ‘செல்லுலாய்டு சீமான்’ டி.ஆர்.சுந்தரம். ஒரு டாக்கீயை உருவாக்க அனைத்து வசதிகளையும் அங்கே நிர்மாணித்த பிறகு, 1937-ல் அவர் தயாரித்து, இயக்கி, வெளியிட்ட முதல் படம் ‘சதி அகல்யா’. அதில்தான் அறிமுகப்படுத்தப்பட்டார் ‘சிங்களக் குயில்’ கே. தவமணிதேவி.

பரபரப்பான பத்திரிகையாளர் சந்திப்பு

இந்தப் படத்தின் பூஜை 1936-ல் நடந்தபோது, அதைத் தொடங்கிவைத்தவர் அன்றைய காங்கிரஸ் தலைவர் ஸ்ரீமதி ருக்மணி லட்சுமிபதி. பூஜை முடிந்து படப்பிடிப்பு தொடங்கவிருந்த சில தினங்களுக்கு முன் மதராஸிலிருந்து பத்திரிகையாளர்களைச் சேலத்துக்கு வரவழைத்தார் சுந்தரம். ‘சதி அகல்யா’ படத்தின் கதாநாயகியைப் பத்திரிகையாளர்களிடம் அறிமுகப்படுத்தினார். பதினைந்து வயதே நிரம்பிய தவமணிதேவி, இலங்கைப் பெண்களின் கலாச்சார உடையில் பத்திரிகையாளர்களைக் கைகூப்பி வணங்கினார். சிங்களம் கலந்த தமிழில் கொஞ்சிக் கொஞ்சி பதில்கள் கூறினார். பதின்மம் விலகாத தன் கற்கண்டுக் குரலால் ஒரு ஆங்கிலப் பாடலை பாடிக் காட்டினார். பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்த பின் ‘சதி அகல்யா’ படத்தில் ரிஷி பத்தினி அகலிகையாக நடிக்கவிருந்த தவமணி தேவியின் புகைப்படங்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்டன. அதில் நீச்சல் உடையில் ஒய்யாரம் காட்டிய தவமணி தேவியைக் கண்டு பத்திரிகையாளர்கள் ஆடித்தான் போனார்கள். பன்னிரண்டு முழம் சேலை கட்டும் தமிழ்நாட்டுக்குள் இப்படியொரு துணிச்சல் பெண் இலங்கையிலிருந்து நுழைந்தால் எப்படியிருக்கும்!

நீச்சல் உடைப் புகைப்படங்களால் ‘சதி அகல்யா’ படம் வெளியாகும் முன்பே ‘கிளாமர் குயின்’ஆகப் பிரபலமாகிவிட்டார் தவமணி தேவி. அப்படியிருக்க தெய்வீகத் தன்மைகொண்ட அகலிகை வேடத்தில் அவரை நடிக்கவைக்க இந்தத் திருச்செங்கோட்டுக்காரருக்கு எவ்வளவு துணிவு வேண்டும்’ என்று ஆச்சரியமாகப் பேசிக்கொண்டார்கள் அன்று. ‘ஒருகால் அகலிகையை கவர்ச்சியாகச் சித்தரிப்பாரோ’ என்று அனுமானம் செய்தவர்கள், படம் வெளியானபோது ஏமாந்துபோனார்கள்.

திடுக்கிட வைத்த மேனகை

ஆனால் அடுத்தடுத்து நடிக்த படங்களில் அவர் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தார். வெகு சில படங்களே நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவின் முதல் ‘கவர்ச்சிச் கன்னி’யாக மட்டுமல்ல, டி.ஆர்.ராஜகுமாரிக்கு முன் முதல் கனவுக் கன்னியாகவும் ஆனார் தவமணி தேவி. எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி முதன்முதலாக நடித்த ‘சகுந்தலை’யில் ‘மேனகை’யாகத் தோன்றினார். மார்பில் கச்சை கட்டிக்கொண்டு, ‘மேகத்துயில்’ என அன்று வர்ணிக்கப்பட்ட, உடல் வெளியே தெரியும் மெல்லிய ‘ட்ரான்ஸ்பரண்ட் ஜார்ஜெட்’ துணியால் ஆன பாவாடை அணிந்து, விஸ்வாமித்திர முனிவரின் கடும் தவத்தைக் கலைக்க இவர் ஆடிய நடனம், திரையரங்குகளில் வெப்ப அலைகளை உருவாக்கியது.

வனமோகினியும் ராஜகுமாரியும்

அடுத்து வெளியான ‘வனமோகினி’யில் தனது செல்ல யானையுடன் காட்டில் வாழும் பெண்ணாகக் கவர்ச்சி உடையில் தோன்றி கதிகலங்கவைத்தார் தவமணி தேவி. கவர்ச்சி உடை என்றால் மலேயா, மாலத்தீவு, ஹவாய் போன்ற தேசங்களில் பெண்கள் அணியும் ‘சாரத்தை’(sarong) என்ற பூப்போட்ட நீளமான துணியை உடலில் சுற்றி கழுத்தில் முடிச்சிட்டுக்கொள்ளும் ஆடையை தவமணி அணிந்திருந்தார். தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்திய சினிமாவிலேயே அப்படியொரு ஆடையைக் கதாநாயகி அணிந்தது அதுவே முதல்முறை. ‘வனமோகினி’யில் பத்துக்கும் அதிகமான பாடல்களைத் தன் இனிய குரலால் பாடி அசத்திய தவமணிதேவி, அந்தப் படம் வெளியான அதே ஆண்டில் வெளியான ‘வேதவதி அல்லது சீதா கல்யாணம்’ படத்தில், ‘வனமோகினி’க்கு நேர் எதிராக சீதையின் வேடத்தில் வந்தார். அதில் இந்திரஜித்தாகச் சிறுவேடத்தில் நடித்திருந்த எம்.ஜி.ராமச்சந்தர், பின்னர், ‘ராஜகுமாரி’யில் கதாநாயகனாக அறிமுகமானர். காலம் எல்லாவற்றையும் நீர்க்குமிழியாக மாற்றிவிடுகிறது. இப்போது ‘ராஜகுமாரி’ படத்தில், எம்.ஜி.ராமச்சந்தரைத் தன் அழகால் மயக்கமுயலும் சர்ப்பத்தீவின் விஷாராணியாக காமக் கதாபாத்திரம் ஒன்றை தவமணிதேவிக்கு வழங்கியது.

திறமைகளின் மொத்த உருவம்

தவமணிதேவியை அன்றைய தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் கவர்ச்சி பிம்பமாகச் சித்தரித்தார்கள். அவரை வைத்து தங்கள் கல்லாவை நிரப்பிக்கொண்டார்கள். அவரிடமிருந்து கவர்ச்சியை மட்டுமே எதிர்பார்க்க வைத்தார்கள். ஆனால் பரதம், கண்டி நடனம், ராக் அண்ட் ரோல், பாலே உள்ளிட்ட பல நடனங்கள் கற்றவர்தவமணிதேவி. சிறந்த பாடகி. ஆங்கிலத்தில் கவிதையும் பாடலும் எழுதும் ஆற்றல் அவருக்கு இருந்தது. ஆடை வடிவமைப்பு, ஒப்பனைக்கலை ஆகியவற்றை அறிந்தவர். யாழ்ப்பாணத்தின் இணுவில் பிறந்து வளர்ந்து 5 வயதுமுதல் அங்கே நடனமும் பாட்டும் கற்று, தங்கத் தட்டில் உண்டு வளர்ந்த தவமணிதேவியின் தந்தை கதிரேசன் சுப்ரமணியம் கொழும்பு நீதிமன்றத்தில் நீதியரசராகப் பணியாற்றியவர். தவமணிதேவியின் தாய் மாமா பாலசிங்கம், இலங்கை வெள்ளைக்கார அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தவர். 15 படங்களே நடித்த தவமணிதேவி, புதிய நடிகைகளின் வரவால் 1962-ல் சினிமாவிலிருந்து முற்றாக விலகி கோடிலிங்க சாஸ்திரியை மணந்து ராமேஸ்வரத்தில் குடியேறி அமைதியான வாழ்க்கையை வாழ்ந்தவர், தனது 81-வது வயதில் மறைந்தார்.

படங்கள் உதவி: ஞானம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்