தொலைக்காட்சியில் நிகழ்த்தித் தொகுப்பாளர், நாடக நடிகர், செய்தி வாசிப்பாளர் உள்ளிட்ட பல அனுபவங்கள் கொண்ட ப்ரியா பவானிசங்கர், தற்போது ‘மேயாத மான்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமாக உள்ளார். கார்த்திக் சுப்புராஜ் தயாரித்திருக்கும் படத்தில் நடித்த அனுபவம் குறித்துப் பேசியதிலிருந்து..
திரையுலகில் நாயகியாக நடித்த அனுபவம்?
சினிமா மிகவும் பிரம்மாண்டமானது என்ற பயமே வரவில்லை. தொலைக்காட்சியிலிருக்கும்போது எப்படிப் படப்பிடிப்புக்குச் செல்வேனோ, அப்படித் தான் ‘மேயாத மான்’ படப்பிடிப்புக்கும் சென்றேன். நாம் நாயகியாகி விட்டோம், இனிமேல் நாம் ஸ்டார் என்ற எண்ணம் எனக்கு ஏற்படவில்லை. எப்போதுமே வேலையில் நேர்மையாக இருப்பேன். அதே நேர்மையுடன் படத்தில் நடித்திருக்கிறேன். படம் வெளியானவுடன் மக்களின் கருத்து என்னவாக இருக்கிறது என்பதைத் தெரிந்தவுடன் வேண்டுமானால் நாயகியாகிவிட்டோம் என்ற எண்ணம் வரலாம்.
தொலைக்காட்சி நடிப்பு, சினிமா நடிப்பு இரண்டுக்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?
தொலைக்காட்சிக்கான ரீச் பெரியது. நம்மை நேரடியாக மக்களிடையே கொண்டுபோய்ச் சேர்த்துவிடும். அதனால்தான் சினிமாவை விளம்பரப்படுத்தக் கூடத் தொலைக்காட்சிக்குச் செல்கிறோம். சினிமாவில் தற்போதுதான் அறிமுகம் என்றாலும், தொலைக்காட்சி மூலமாக அனைவரது வீட்டுக்கும் ஏற்கெனவே சென்றடைந்துவிட்டேன். தொலைக்காட்சியில் என்னைப் பார்த்துப் பாராட்டியவர்கள், சினிமாவில் பார்த்து என்ன சொல்லப் போகிறார்கள் என்பதற்காகக் காத்திருக்கிறேன். தொலைக்காட்சி, சினிமா என அனைத்துமே வேலைதான். அதற்கான வரவேற்பு என்ன என்பது விரைவில் தெரியும்.
பொறியாளர் பணியை விடுத்து, தொலைக்காட்சிக்கு வந்ததற்கான காரணம் என்ன?
பொறியாளர் வேலையை விட்டு, மீடியாவுக்குள் வருவதை பேஷனாக நினைக்கிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. பொறியாளர் வேலையைப் பிடித்துச் செய்பவர்கள், குடும்பச் சூழலால் பணிபுரிபவர்கள், என்ன பண்றோம் எனத் தெரியாமல் பணிபுரிபவர்கள் உள்ளிட்ட பலரைப் பார்த்திருக்கிறேன். சினிமா ஒரு பெரிய துறையைப் போல, ஐ.டியும் ஒரு பெரிய துறை. எனக்குப் பொறியாளர் வேலை பிடிக்கவில்லை, விட்டு விட்டேன். கல்லூரியில் படிக்கும்போதே எனக்கு மீடியாமீது ஒரு ஈர்ப்பு இருந்தது. பகுதி நேரமாகச் செய்து வந்ததை, முழு நேரமாகச் செய்து பார்க்கலாம் என்று இதற்குள் வந்தேன்.
உங்களைச் சுற்றியிருக்கும் நண்பர்கள், நாயகியானதை எப்படிப் பார்க்கிறார்கள்?
நண்பர்களுக்குக் கலாய்ப்பதே வேலை. படம் வெளியாகி என்ன விமர்சன வரும் என்பதைத் தாண்டி நண்பர்கள் வாயிலிருந்து வரும் கருத்துகளிலிருந்து எப்படித் தப்பிப்பது என்று தெரியவில்லை. ஏனென்றால் சமூகவலைத்தளத்தில் ஒரு புகைப்படம் போட்டாலே, கலாய்க்கத் தொடங்கிவிடுவார்கள். 10 பேர் பார்ப்பார்கள், தயவுசெய்து கொஞ்சம் குறைவாகக் கிண்டல் செய்யுங்கள் என்றால் கூடக் கேட்க மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை கல்லூரித் தோழியாகத்தான் இப்போதும் பார்க்கிறார்கள். மக்கள் நம் தோழியை என்ன சொல்லப் போகிறார்கள் என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் அவர்களும் இருக்கிறார்கள்.
‘மேயாத மான்’ கதாபாத்திரம் குறித்து...
பக்கத்து வீட்டுப் பெண்போல இருப்பேன். வானத்திலிருந்து இறங்கிவந்த காதல் தேவதையைப் போல நடிக்கவில்லை. சாதாரணமான கல்லூரிப் பெண் வேடத்தில் நடித்துள்ளேன். என்னுடைய நடைமுறை வாழ்க்கையில் எப்படியிருக்கிறேனோ, அப்படித்தான் படத்திலும் இருப்பேன்.
நாயகியாக எந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்?
தொலைக்காட்சியில் நடிப்பதைத் தவிர்த்த வரைக்கும்கூட சினிமா எண்ணத்திலில்லை. தொலைக்காட்சியில் நடித்தபோதே 2 பட வாய்ப்புகள் வந்தன. அதைத் தவிர்த்தது ஏன் என்றுகூட யோசித்திருக்கிறேன். ‘மேயாத மான்’ வாய்ப்பு வந்தபோதுகூட, இதையும் ஏன் விட வேண்டும் என்று கண்ணை மூடி யோசித்தேன். நடித்துத்தான் பார்ப்போமே என்றுதான் நடித்தேன். இந்த மாதிரியான கதாபாத்திரங்கள் கிடைக்கும், அதில் நடித்து விருதுகள் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் வரவில்லை. தமிழ்த் திரையுலகில் எனக்கென்று எழுதப்படும் கதாபாத்திரங்கள் வரும். அதில் நம்பிக்கையுண்டு.
நடிப்பில் எந்த நாயகியை முன்மாதிரியாகப் பார்க்கிறீர்கள்?
‘பூ’ பார்வதி மேனன் நடிப்பு ரொம்ப பிடிக்கும். அவர் ஒரு திறமையான நடிகை. எப்படி இவருக்கு மட்டும் இந்த மாதிரி கதைகள் அமைகின்றன என்று யோசித்திருக்கிறேன். அதே வேளையில் ரொம்ப சிரத்தை எடுத்துக்கொள்ளாமல் யதார்த்தமாக நடிக்கும் மாதவன் சாரோடு ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பது ஆசை.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago