எத்தனையோ ஆவணப்படங்கள், திரைப்படங்கள் தேச விடுதலையைப் பேசியிருக்கின்றன. ஆனால், ‘காலம்’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்த ஆவணப்படம், கி.பி.1755-ம் ஆண்டு தொடங்கி 1947 ஆகஸ்ட்15 வரையிலான இந்திய தேச விடுதலைப் போர் வரலாறு எனும் பெரும் காலகட்டத்தைப் பின்னணியாகக் கொண்டிருக்கிறது.
‘தமிழகத்தில் திருநெல்வேலி அருகேயுள்ள நெல்கட்டும் சேவல்பாளையத்தில், மொகலாயருக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய பூலித்தேவன் செய்த போரில் தொடங்கி, காந்தியை கோட்சே படுகொலை செய்தது வரையிலான வரலாற்றுச் சம்பவங்களைத் தகுந்த ஆதாரங்களுடன் விவரித்துச் செல்லும் 20 நிமிட கால அவகாசம் கொண்ட 37 எபிசோட்களாக, ஒரு ஆய்வுத் தொகுப்புபோல விரிகிறது இந்த ஆவணப்படம். இதற்குக் ‘காலம்’ என்ற பொதுத் தலைப்பு பொருத்தமாக இருக்கிறது.
இந்தியத் துணைக் கண்டத்தின் பல்வேறு பகுதிகளில், பல காலகட்டங்களிலும் நடந்திருக்கிற நீண்ட நெடிய வரலாற்றைக் கோக்கும் சரடு எதுவாக இருக்க முடியும் என்பதைக் கண்டறிய முயலும் ஆய்வுத் தேடலை நோக்கமாகக் கொண்டு விறுவிறுப்பாக நகர்கிறது இந்த ஆவணப்படம். ஒளிப்படம், காணொளி இல்லாத தொடக்க காலகட்டத்தை விவரணை ஓவியங்கள், பின்னணி இசை ஆகிய அம்சங்கள் மூலம் ஈடுகட்டியிருப்பதைப் பாராட்டலாம்.
ஆவணப்பட உருவாக்கம் என்றாலே எதிர்பார்ப்பில்லாத ஆர்வம், பெரும் கால அவகாசத்தைக் கோரும் உழைப்பு ஆகிய இரண்டும் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் பெரும் சவாலாக விளங்கும். அவற்றை வெற்றிகரமாகக் கடந்து, பெரும் சுயாதீன முனைப்பு, உழைப்புடன் இந்த ஆவணப்படத்தை எழுதி இயக்கியிருக்கும் பத்திரிகையாளர், ஆவணப்பட இயக்குநர், ‘தினகரன்’ ஜெய், ஜெகமதி கலைக்கூடம் மூலம் இதைத் தயாரித்திருக்கும் சி.தீனதயாள பாண்டியன் ஆகிய இருவரது ஆர்வமும் உழைப்பும் படம் முழுவதும் வெளிப்பட்டிருக்கிறது.
இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பை விவரிப்பது மட்டுமின்றி, இந்திய அளவிலான போராட்டப் பின்னணியை விளக்கி, விடுதலைப் போராட்ட எழுச்சிக்குத் தமிழகமே பிரதான ஊக்கியாக இருந்ததை இப்படம் விளக்கிக் கூறுகிறது. அதேநேரம் வெளித்தெரியாத பல அரிய வரலாற்றுத் தகவல்களைப் பதிவு செய்துகொண்டே, வரலாற்றின் பக்கங்களில் விடைதெரியாமல் தொக்கி நிற்கும் பல கேள்விகளையும் இயக்குநரின் பார்வையில் எழுப்பிச்செல்கிறது.
குறிப்பாகப் பூலித்தேவனும் மருதநாயகமும் நேருக்கு நேர் கடுமையாக மோதிக் கொண்டதும் பின்னொரு சந்தர்ப்பத்தில் இருவருக்கும் பொது எதிரியாக விளங்கிய நவாபை இருவரும் கூட்டணி அமைத்து எதிர்க்காமல் இருந்ததற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்பி இருப்பதும் கவனிக்கத்தக்கது. இப்படிப் பல கேள்விகளை ஆவணப்படம் நெடுகிலும் எழுப்புவது, பார்வையாளர்களுக்கு வரலாற்றின் மீதான ஆர்வத்தைத் தூண்டும் உந்துதலைத் தந்துவிடுகிறது.
காந்தியின் வருகைக்குப் பின்னர்தான் விடுதலைப் போராட்டம் நாடு முழுவதும் பரவி, தேசிய உணர்வு எனும் பேராற்றல் உருவானதாக இப்படம் கோடிட்டுக் காட்டுகிறது. இதுபோல் விவாதத்துக்கான பல வரலாற்றுக் குறிப்புகளை இயக்குநர் தயக்கமின்றி, விருப்பு வெறுப்பின்றி காலவரிசை மாறிவிடாமல் ஆவணப்படுத்தியிருக்கிறார்.
இந்த ஆவணப்படத்தில் சில பல சம்பவங்களும் ஆளுமைகளும் விடுபட்டிருக்க வாய்ப்புள்ளது என்றாலும் மாற்று ஊடகச் செயல்பாட்டில் மிக முக்கியமான, அதே நேரம் பாராட்டப்பட வேண்டிய முயற்சி ‘காலம்’. கல்வி நிறுவனங்கள், வரலாற்றைக் கற்றுக்கொள்ள நினைக்கும் யாவருக்கும் ‘காலம்’ தேர்ச்சியான ஆவணம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago