வகுப்பு ஏதோ இறுக்கமாகவே இருந்தது. முதல் கேள்விக்காக காத்திருந்த இயக்குநர் மிஷ்கினிடம் பார்த்தா கேட்டான்: “சினிமாவுக்கென மொழி, இலக்கணம் இருக்கிறதா?”
சினிமா என்பது ஒரு கலை. கலைக்கு மொழியும் பயிற்சியும் உண்டு. லாங்க்வேஜ் என்பது எக்ஸ்பிரஷன்; எப்படி எக்ஸ்பிரஸ் செய்வது என்ற பயிற்சியை அளிப்பது கிராமர். சைக்கிள் ஓட்டுறதுக்கு அண்ணனோ மாமாவோ நமக்குக் கத்துக்கொடுப்பாங்க. முதலில் குரங்குப் பெடல் போட்டு ஓட்டுவோம். அப்புறம் போதுமான பயிற்சி கிடைச்சதும் தன்னம்பிக்கையோட தனியா ஓட்டுவோம். இதுதான் சைக்கிள் கத்துக்குற ப்ராசஸ். இப்படி இல்லாமல், ஒரு சைக்கிளை தொடர்ச்சியா இருபது நாள் பாத்துட்டே இருந்துட்டா அந்த சைக்கிளை ஓட்டிட முடியுமா? கடலில் பயிற்சி இல்லாமல் நீச்சல் அடிக்க முடியுமா? அது மாதிரிதான் கலைக்கும் பயிற்சிகள் உண்டு. ஒளிப்பதிவு, இசை, நடிப்பு, எடிட்டிங் என பல்வேறு கலைகளும் சினிமாவில் இருக்கின்றன. அந்த ஒவ்வொரு கலைக்குமான இலக்கணத்தை அறியவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக திரைக்கதை எழுதத் தெரியவேண்டும்.
“நீங்க எப்படி கத்துகிட்டீங்க?” என்று கேட்டான் ப்ரேம்.
“நான் ரொம்ப சிஸ்டமாட்டிக்கா சினிமா லாங்க்வேஜ் கத்துக்கிட்டு இருக்கேன். ஹிட்ச்காக், குரோசவா, மெல்வில், கிம் கி டுக், டகாஷி கிட்டானோ போன்றவர்களை ஆழமா படிச்சேன், ரொம்ப ஆழமா படிச்சிகிட்டே இருக்கேன். இன்னும் ஆழமா படிக்கப் போறேன். அப்பதான் நான் ஒரு ஃபிலிம் மேக்கரா சஸ்டைன் பண்ண முடியும்.”
“சினிமாவோட ஸ்பெஷலே நெகிழ்வுத்தன்மைதான். தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏத்த மாதிரி சினிமா தன்னை மாற்றி அமைத்துக்கொள்ளும். அப்படி இருக்க, வழக்கமாக பின்பற்றப்படும் திரைமொழியும் இலக்கணமும் அவசியம்தானா?” என்று கேட்டாள் ப்ரியா.
கொஞ்சம் நிதானித்த மிஷ்கின், “ஆங்கில வார்த்தைகள் தெரிந்தால்தான் ஆங்கில மொழியைப் பேச முடியும். ஆங்கிலத்தில் பேசிக்கா பேசுறதுக்கு சுமார் 3,000 வார்த்தைகள் தெரிஞ்சிருக்கணும்; ஒரு பேராசிரியருக்கு12,000 வார்த்தைகள் தெரிஞ்சிருக்கலாம்; ஒரு பெரிய ஸ்காலருக்கு 20,000 வார்த்தைகள் தெரிஞ்சிருக்கணும்; ஒரு சுமைதூக்கும் தொழிலாளிக்கு எட்டு வார்த்தை தெரிஞ்சா போதும்; ஒரு ரிக்ஷாகாரருக்கு மூணு வார்த்தை தெரிஞ்சா போதும். நீங்க எதுவா ஆசைப்படுறீங்களோ, அதுக்கு ஏத்த மாதிரி தெரிஞ்சிக்கலாம். இதை அப்படியே சினிமா படைப்பாளிகளுக்கும் பொருத்திப் பாத்துக்கலாம்” என்றார்.
“நீங்க வைக்கிற கால்கள் ஷாட்டை பார்த்துட்டே இது மிஷ்கின்னு சொல்லிடுறோம். உங்களோட பாணின்னு சொல்றதா இல்ல, இதுவும் ஒரு பின்னடைவான விஷயமா?” என்று கிளறினாள் கவிதா.
“இதுல பாசிட்டிவ், நெகட்டிவ் ஒண்ணுமே கிடையாது. ஒரு பிலிம் மேக்கர் பத்து படம் பண்றார்ண்ணு வெச்சுக்குவோம். அவருக்கென சில அம்சங்கள் மேல தனி ஈடுபாடு இருக்கும்; அவர் சினிமாவைப் பார்க்குற விதம்; அவருக்குன்னு ஒரு ஸ்டைல் ஃபார்ம் ஆயிடும். சினிமாவை உன்னிப்பா பார்க்குற சிலர் சிமிலாரிட்டீஸ் கண்டுபிடிக்கிறதுல ஆர்வம் காட்ட ஆரம்பிப்பாங்க. நான் கால்ல ஷாட் வைக்கிறதை மிஷ்கின் ஷாட்னு அவங்களே சொல்லிப்பாங்க. இதே மாதிரி வேற யாராவது ஷாட் வெச்சா, “இது மிஷ்கின் ஷாட்தானே நீ ஏன் வெச்சே”ன்னு கேப்பாங்க.
ஒரு தமிழ்ப் படத்துல சராசரியா 450-ல் இருந்து 500 ஷாட். இதுல 400 ஷாட் க்ளோஸ்-அப். அப்ப யாருமே வந்து “என்ன சார் வெறும் க்ளோஸ்-அப் ஷாட்டா எடுக்குறீங்க”ன்னு யாரையுமே கேட்குறது இல்லை. தமிழில் 75% ஹீரோயிஸம் சார்ந்த படங்கள்தான் எடுக்குறாங்க. அதுல முழுக்க முழுக்க க்ளோஸ்-அப் ஷாட் என்பதே வெறும் பிரச்சார உத்திதான். ஆனால், அகிரா குரோசவா போன்றோரின் படங்களை எடுத்துக்கொண்டால் க்ளோஸ்-அப் ஷாட்டில் கேரக்டர்கள் பேசாது; முணங்கும்; வலியைச் சொல்லும். இந்தியாவுல மட்டும்தான் க்ளோஸ்-அப்ல கேரக்டர்கள் பேசும். இதெல்லாம் ஏன் திருப்பத் திரும்ப வந்துகிட்டே இருக்குன்னு தெரிய மாட்டேங்குது. ஒரு மூணு ஷாட் காலில் வெக்கிறதை கோடிட்டு காட்றாங்க.
பிரெஞ்ச் இயக்குநர் ராபர்ட் பிரெஸ்ஸன் அதிகளவில் கைகளைத் திரையில் காட்டியவர். உலகத்துலயே கைகளை மிக அழகாகவும், நேர்மையாகவும் காட்டியவர் அவர்தான். அதுக்கு சரியான திரைக்கதைக் காரணமும் இருக்கும். “அவரு கைலயே ஷாட் வைப்பாருப்பா”ன்னு ஈஸியா சொல்லிட முடியுமா? என்னுடைய படங்கள் பயணத்தை ஒட்டியவை என்பதால் காலுக்கு க்ளோஸ்-அப் வைப்பேன். அதைப் பார்த்துட்டு மிஷ்கின் ஷாட்னு சொல்றது கொடுமையா இருக்கு” என்று சற்றே கொந்தளிப்புடன் காணப்பட்டார்.
“எந்த ஒரு கலை வடிவத்துக்குமே இன்ஸ்பிரேஷன் தேவை. சினிமாவில் இதை எப்படி அணுகணும், நீங்க எப்படி?” என்று இதமாகக் கேட்டாள் ப்ரியா.
“குரோசவா, டகாஷியை பார்த்துதான் நான் சினிமா கத்துக்கிறேன். என்னைப் பார்த்துதான் என் உதவியாளர்கள் கத்துக்கிறாங்க. இது இன்ஸ்பிரேஷன் இல்லை; லேர்னிங் புராசஸ். என்னோட குருவா நான் நினைக்குறது குரோசவா. ஆனா, அவரை மாதிரி ஷாட் வைக்க ஆசைப்பட்டதுகூட இல்லை. இன்னொரு படங்கள் பார்த்து கத்துக்கணும். படம் எடுக்க ஆரம்பிக்கணும். ஆனா, நம்மளோட தனித்துவத்தை விட்டுடக் கூடாது. அப்பாவும் அம்மாவும் சாகுற வரைக்கும் நமக்குள்ள இருப்பாங்க. கடைசி வரைக்கும் எனக்குள்ள குரோசவா தந்தையா இருப்பார்” என்று சொன்னார்.
“உங்கள் படங்கள் பெரும்பாலும் கொரியன் படத் தழுவல்கள் மாதிரியே இருக்கே?”
ப்ரேம் எழுப்பிய இந்த சந்தேகம் மிஷ்கினை கோபமூட்டிவிடுமோ என்று மற்றவர்கள் அஞ்சினர்.
கொஞ்சமும் யோசிக்காத மிஷ்கின், “நான் இன்னொரு விஷயம் சொல்றேன். என்னோட மூணு படத்தை கொரியாவுல காப்பி அடிச்சிட்டாங்க. அது தெரியுமா உனக்கு?” என்றதும் ப்ரேம் மிரண்டான்.
“என்ன ஆச்சரியமா இருக்கா. நான் சொன்னதும் ஒரு பொய்தான். நான் மொத்தமே நாலு கொரியன் படம்தான் பார்த்திருப்பேன். உங்களுக்கு கொரியன் படம் புரியுதுன்னா, அதை இங்கே எதுலயாவது பொருத்திப் பார்க்க நினைக்கிறீங்க. அதுக்கு நான்தான் கிடைச்சிருக்கேன். கொரியா சமீப காலத்தில்தான் சினிமா பழக ஆரம்பிச்சிருக்கு. ஆனா, இந்தியாவில் 75 வருட சினிமா இருக்கு.” என்று சன்னமான குரலில் சொன்னார் மிஷ்கின்.
“உங்களோட அசிஸ்டெண்ட் ஆக, உங்களை எப்படி இம்ப்ரஸ் பண்றது?” என்று பிட்டுப் போட்டான் ஜிப்ஸி.
“எங்கிட்ட எத்தனையோ பேரு வந்து போயிருக்காங்க. என்னை இம்ப்ரஸ் பண்ணினது புவனேஷ் ஒருத்தன். ரொம்ப சின்சியரா படம் பார்ப்பான். நாளொன்றுக்கு நூறு பக்கங்கள் படிச்சிட்டு இருப்பான். இப்போ ஒரு சினிமாவுக்கு கதை பண்ணிட்டு இருக்கான். வேறு யாரையும் குறிப்பிட்டு சொல்றதுக்கு இல்லை. சினிமா ஒரு கடுமையான போதையா ஆயிட்டு இருக்கு. இதோட வெற்றியும் புகழும் ரொம்பவே போதை ஆக்கிடுது. இதை நான் கண்கூடா பார்க்குறேன்.”
“மனிதர்களை நேரடியா படிக்கிறதும், பயணங்கள் செய்றதுமே சினிமா படைப்பாளிக்குப் போதும்னு நினைக்கிறேன். நீங்க புக்ஸ்தான் எல்லாம்னு சொல்றீங்க...” என்று பார்த்தா முடிப்பதற்குள் பேசத் தொடங்கினார் மிஷ்கின்.
“சினிமா படைப்பாளிக்கு புத்தக வாசிப்பு மட்டுமே துணைபுரியும். சினிமா பார்த்து சினிமா கத்துக்கலாமே... நாங்க ஏன் வாசிக்கணும்ன்ற கேள்வியே பரிதாபமாக இருக்கு. கதைகள் எப்படி உருவாக்கப்படுகிறது? கதைகள் எழுதியது யார் யார்? மேன்மையான கதைகள் என்னென்ன? உலகின் மிகச் சிறந்த கதைகள் எவை? இப்படி பல கேள்விகளை உள்ளடக்கிய பயணமாகவே நம்மை போன்ற சினிமா கலைஞர்களுக்கான வாசிப்பு இருக்க வேண்டும். இந்த வாசிப்பில் தீவிரம் இருந்தால்தான் சினிமாவில் நல்ல கதை சொல்லியாக இருக்க முடியும். நூறு படங்கள் பார்ப்பதால் சினிமாவில் கதை சொல்லிவிட முடியாது.
குரோசவா, பிரெஸ்ஸன், ஹிட்ச்காக்... இவங்கள்லாம் சாகுற வரைக்கும் புத்தகங்கள் படிச்சாங்க; தங்களோட வாழ்நாள் முழுக்க மேன்மையான சினிமா படைப்புகளைத் தொய்வில்லாமல் தந்தாங்க.”
சினிமாலஜி படிப்பு முடித்த கையோடு வீட்டில் சின்ன நூலகம் ஒன்றை அமைப்பது என்று முடிவெடுத்தான் பார்த்தா.
(நிறைவடைந்தது)
தொடர்புக்கு siravanan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago