ஆ
ங்கிலத்தில் ‘புரொட்டகானிஸ்ட்’ என்ற ஒரு சொல் உண்டு. அதாவது, கதையை முன்னகர்த்திச் செல்லும் முதன்மையான கதாபாத்திரம். இப்படித்தான் ஹாலிவுட்டிலும் புரிந்துகொள்கிறார்கள்.
இந்தியத் திரையுலகில் அவரை, சகல வித்தைகளையும் செய்யும் ‘ஹீரோ’வாகப் புரிந்துகொண்டிருக்கின்றனர். நல்லவேளையாக, பாலிவுட்டில் இந்தப் புரிதல் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. அப்படி அந்த முதன்மையான கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு, (கவனிக்க… ஹீரோ அல்ல!) சில நல்ல திரைப்படங்கள் அங்கு வரத் தொடங்கியிருக்கின்றன. அந்த வரிசையில் சமீபமாக வந்திருக்கும் படம், ‘நியூட்டன்!’. இந்தியா சார்பில் 90-வது ஆஸ்கர் விருது விழாவுக்கு இந்தப் படம் தேர்வு செய்யப்பட்ட தகவல் வெளியான அதே நாளில்தான் (செப்டம்பர் 22), படமும் திரையரங்கில் வெளியானது.
நேர்மை! இதுதான் படத்தின் மையம். அரசு அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு மத்தியதர இளைஞன், நேர்மையாகச் செயல்படுவதில் என்னென்ன சிக்கல்கள் உள்ளன என்பதை, ‘நியூட்டன்’ எனும் தனி மனிதனை முன்னிறுத்தி படம் ஆராய்கிறது.
இது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம், தேர்தல் நாள் ஒன்றில், சத்தீஸ்கர் மாநிலம், மாவோயிஸ்ட்டுகள் நிறைந்திருக்கும் தண்டகாரண்ய காட்டுக்குள் இருக்கும் கிராமத்தின் வழியாக, இந்தத் தேசத்தின் ஜனநாயகக் கூத்துகளை இந்தப் படம் அம்பலப்படுத்துகிறது.
நம்பிக்கை தராத தேர்தல்
நுட்டன் குமார். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் கிண்டலால், தனது பெயரை நியூட்டன் என்று மாற்றிக்கொள்கிறான். எம்.எஸ்.சி. பிசிக்ஸ் படித்த மத்திய தர இளைஞன். கலெக்டர் அலுவலகத்தில் ஒரு குமாஸ்தா வேலை. சரியாகக் காலை 9 மணிக்கு அலுவலகம் வந்துவிட்டு, மிகச் சரியாக மாலை 5 மணிக்கு அலுவலகத்தை விட்டுச் செல்வதற்காக, அலுவலகத்தில் விருது கொடுத்துப் பாராட்டப்படும் அளவுக்கு பொறுப்புமிக்க அரசு ஊழியன். ‘எதையாவது மாற்றாத வரை, எதுவுமே மாறாது’ என்ற விஞ்ஞானி நியூட்டனின் தத்துவத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவன்.
அவனுடைய வாழ்க்கையையும், இந்தத் தேசத்தையும் புரிந்துகொள்ள நாடாளுமன்றத் தேர்தல் வாய்ப்பாக அமைகிறது. தேர்தல் பணிக்காக சத்தீஸ்கருக்கு அனுப்பப்படுகிறான். அங்கு மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த ஆத்மா சிங், ‘ஓட்டுதானே. நாங்களே போடுறோம். எழுதித் தர்றேன். ஓட்டுப் போட இங்க ஒரு பய வரமாட்டான்’ என்று அந்த மாநிலத்தின் நிலையைச் சொல்கிறார்.
அவர் அப்படிச் சொல்வதற்குக் காரணம், சுரங்க நிறுவனங்களின் சுரண்டல், மாவோயிஸ்ட்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் மாட்டிக் கொண்டு திண்டாடுதல், வறுமை, கல்வி, மருத்துவம், சாலை போன்ற அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாதது உள்ளிட்ட காரணங்களால், மத்திய, மாநில அரசுகளின் மீது அங்குள்ள பழங்குடிகளுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, அவர்களுக்குத் தேர்தல் மீதும் நம்பிக்கை இல்லை.
இதைப் புரிந்துகொள்ளாத நியூட்டன், எப்படியும் தேர்தலை, ‘புரொசீஜர்’ படி நடத்தியே ஆக வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறான். அந்தப் பிடிவாதம் அவனுக்கு வெற்றியைத் தந்ததா, இல்லையா என்பது மீதிப் படம்.
நம்பிக்கை தரும் திரைக்கதை
புதுவித மாடல் செல்போன்களைக் கையில் வைத்திருக்கும் பழங்குடி மக்களிடையே, ‘உங்களுக்கு லேப்டாப்பும் மொபைல் போனும் தருகிறோம்’ என்று பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்க வரும் பழங்குடி அரசியல் தலைவர் ஒருவரை மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்வதிலிருந்து படம் தொடங்குகிறது. முதல் காட்சியிலேயே, இந்தத் தேசத்தின் ஒரு பகுதியைக் காட்டிவிடுகிறார் இயக்குநர் அமித் மசூர்கர். இது இவருக்கு இரண்டாவது படம்.
இப்படி ஒரு கனமான விஷயத்தைப் பார்வையாளர்களுக்குக் கடத்துவதற்கு, இயக்குநர் அமித்தும், கதாசிரியர் மயங்க் திவாரியும் நகைச்சுவையான திரைக்கதையைப் பிடித்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். யாருமே ஓட்டுப் போட வராத நிலையில், மூணு சீட்டு விளையாடத் தொடங்குகிறார் ஊழியர் ஒருவர். இதை எதிர்க்கும் நியூட்டனுக்கு ‘போலிங் பூத்துல இதெல்லாம் நடக்கிறதுதான் சார்’ என்கிறார் அவர். இன்னொரு காட்சியில், ‘வோட்டிங் மெஷினுங்கிறது ஒரு பொம்மை மாதிரி இருக்கும். அதுல ஸ்கூட்டரு, காரு, கேரட்டுனு படங்கள் ஒட்டியிருக்கும். உங்களுக்கு எது பிடிக்குதோ, அந்த பட்டனை அழுத்தினா போதும்’ என்று ஆத்மா சிங், பழங்குடி மக்களுக்கு ‘வாக்களிக்கும் முறை’யை சின்னப்பிள்ளைத்தனமாக விளக்குவார். இதுபோன்ற காட்சிகளால் திரைக்கதை தொய்வில்லாமல் நகர்கிறது.
எல்லாச் சட்டங்களையும் வைத்துக்கொண்டு, எதையும் சரிவரப் பின்பற்றாத ஒரு அமைப்பில், ஒருவர் மட்டும் நேர்மையாக இருந்து என்ன செய்ய முடியும் என்ற கேள்வியை இந்தப் படம் எழுப்புகிறது. ஆனால், நேர்மையாக இருப்பதன் மூலம் ஒரு சின்ன மாற்றத்தையாவது நிகழ்த்திவிட முடியும் என்ற நம்பிக்கையையும் இந்தப் படம் உருவாக்குகிறது.
சர்ச்சையும் வாழ்த்தும்
‘கடைசியில உனக்கு நேர்மை மட்டும்தான் திருப்தி தரப்போகுது’, ‘பெரிய விஷயங்கள் எல்லாம் ஒரே நாள்ல நடந்துடாது. இந்தக் காடு வளர்றதுக்கே நிறைய வருஷம் ஆச்சு’, ‘உன்னோடப் பிரச்சினை நீ நேர்மையா இருக்கிறது இல்ல. நீ நேர்மையா இருக்கேன்ற பிடிவாதம்தான் பிரச்சினை’ என்பன போன்ற வசனங்கள் ஈர்க்கின்றன.
‘ஷாகித்’, ‘அலிகார்’, ‘பரேலி கி பர்ஃபி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, ‘நியூட்டன்’ போன்ற அருமையான கதைகளைத் தேர்வு செய்து நடிக்கிறார் ராஜ்குமார் ராவ். திரையில் நியூட்டனாக இவரும், ஆத்மா சிங்காக பங்கஜ் திரிபாதி ஆகிய இருவரின் நடிப்பும் பிரமாதம்.
விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல், வசூல் ரீதியாகவும் இந்தப் படம் களை கட்டுகிறது. ஆஸ்கர் விருதுக்குத் தேர்வானாலும் ஆனது… இந்தப் படம் பல சர்ச்சைகளுக்கும் உள்ளாகிறது. அதில் முக்கியமானது… இது 2001-ல் வெளிவந்த ஈரானியப் படமான ‘சீக்ரெட் பால்லட்’டின் தழுவல் என்ற சர்ச்சை. இதை அந்தப் படத்தின் இயக்குநர் பாபக் பயாமியே மறுத்திருக்கிறார். கூடவே, இந்தப் படம் ஆஸ்கர் வெல்லவும் வாழ்த்தியிருக்கிறார். அந்த வாழ்த்து நிஜமாகட்டும்!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago