மாற்றத்துக்காக காத்திருக்கிறார்கள் மக்கள்!- ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டி

By ஆர்.சி.ஜெயந்தன், கா.இசக்கி முத்து

‘கத்தி’ படத்துக்குப்பின் ‘அகிரா’ இந்திப் படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், ஆந்திரப் படவுலகின் இன்றைய ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ்பாபுவை ‘ஸ்பைடர்’ மூலம் தமிழுக்கு அறிமுகப்படுத்துகிறார். படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் இருந்தவரை சந்தித்துப் பேசியபோது…

‘ரமணா’ தொடங்கி ஹீரோயிசம்தான் உங்கள் படங்களில் முக்கிய அம்சம். என்றாலும் சமூக அக்கறையும் மனிதநேயமும் அதற்குள் இருக்கும். இந்த உணர்வு உங்களிடம் எப்படி உருவானது?

நான் மிக மிகச் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவன். காலையில் எழுந்ததும் யார் முதலில் குளிப்பது, சாப்பிடுவது என பால்யத்தின் அன்றாட வாழ்க்கையே போராட்டமாகத்தான் தொடங்கும். வீட்டுக்கு வெளியே சமூகம் என்று வரும்போது, நான் பிறந்தது அரசு மருத்துவமனை, படித்தது அரசுப்பள்ளி. இன்று ஆசிரியர்கள் அடித்தால் மாணவர்கள் பொங்குகிறார்கள். நான் படித்தபோதெல்லாம் பள்ளியில் விடும்போதே “நல்லா அடிங்க சார், புள்ள ஒழுங்காப் படிச்சா போதும்” என்று சொல்லித்தான் விடுவார்கள். அன்று அடிக்கும் வாத்தியார், நல்ல வாத்தியார். கண்டிப்பு இருந்தாலும் பணக்கார மாணவன், நிறம் உள்ளிட்ட பல வேறுபாடுகள் பள்ளியில் அன்று என் மனதை அழுத்தியிருக்கின்றன. சமூகத்துடன் நெருக்கமான தொடர்புகொண்ட அழுத்தமான சூழலிலேயே வளர்ந்ததால் நிறைய புறக்கணிப்புகள், நசுக்கப்படுதல் ஆகியவற்றை நேரடியாக அனுபவித்தே வளர்த்திருக்கிறேன். அன்றாடப் பாட்டுக்கே அல்லாடும் அந்த வெகுஜனக் கூட்டத்திலிருந்து வாழ்க்கை கிடைத்து இன்று நான் வெளியே வந்துவிட்டேன். ஆனால், எல்லோருக்கும் எல்லாம் மாறிவிட்டதா என்று பார்த்தால் இல்லை. சாமானியர்களின் பிரச்சினைகள் அப்படியே இருக்கின்றன. சொல்லப்போனால் அவர்கள் சுவாசிப்பதே சிரமமாகத்தான் இருக்கிறது. நான் கடந்துவந்த வாழ்க்கை வாழ்பவர்களின் எண்ணிக்கை இப்போது மேலும் பெருகியிருக்கிறது. அந்தக் கோபமும் ஆற்றாமையும் ஆறிப்போகாமல் அப்படியே இருப்பதால் அவற்றை என் கதைகளில் வைக்கிறேன்.

கடந்த 2015-ன் சென்னை வெள்ளத்தில் எடுக்கப்பட்ட சில அசலான காட்சிகளையும், அப்போது வெளிப்பட்ட மனிதாபிமானத்தையும் ‘ஸ்பைடர்’ படத்தில் இணைத்திருக்கிறீர்கள் என்று செய்திகள் வெளியானதே..

இந்தப் படம் சென்னை வெள்ளம் சம்பந்தப்பட்டது இல்லை. சமீபகாலமாக மக்கள் தங்கள் உரிமைகளுக்காக ஒன்றுசேரத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்குக் காரணம் சமூகவலைத்தளங்கள். முன்பு மக்களின் பொதுக்கருத்தை அறிய, அவர்களது உணர்வில் இருக்கும் ஒற்றுமையைத் தெரிந்துகொள்ள தேர்தல் காலம் மட்டும்தான் உதவியது. ஆனால் இன்றைக்கு அப்படியல்ல. நீங்களே சமூகவலைத்தளத்தில் வாக்களிக்கும் முறையில் கேள்வி எழுப்பினீர்கள் என்றால் குறைந்தது 1,000 பேர் வாக்களிக்கலாம். அதிலிருந்து எந்தக் கருத்துக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்ற உண்மையை நீங்கள் உடனே கண்டுகொள்ள முடிகிறது. இன்று பேரிடர் என்பது எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்ற காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். வெள்ளமும் புயலும் நம்மை அப்படித்தான் தாக்கின. தகவல் தொடர்பு வளர்ச்சியால் மனிதாபிமானம் எவ்வளவு சீக்கிரமாக உருவானது என்பதை நாம் கண்கூடாகக் கண்டோம். பேரிடரின்போது மட்டுமல்ல, அப்துல் கலாம் மறைவின் போதும், ஜல்லிக்கட்டின்போதும் எப்படி அனைவருமே ஒன்று போல கிளம்பினார்கள். மக்கள் இனியும் மந்தை மனோபாவத்துடன் இருக்கப்போவதில்லை என்பதைத்தான் இந்த நிகழ்வுகள் காட்டின. இன்று அனைவருமே ஏதோ ஒரு மாற்றம் வேண்டும் என எதிர்நோக்கி இருப்பது தெரிகிறது. அந்தொரு விஷயம்தான் நம் அனைவரையும் இணைக்கிறது. அதற்கு ஜல்லிக்கட்டும் வெள்ளமும் கலாமின் இறப்பும் நமக்குக் காரணங்களாக இருந்திருக்கின்றன அவ்வளவுதான்.

 

தமிழில் அறிமுகமாக மகேஷ்பாபு உங்களுக்காகக் காத்திருந்தார் என்று சொல்லலாமா?

 

அப்படிச் சொல்ல முடியாது. சரியான சந்தர்ப்பத்தை இருவருமே எதிர்பார்த்திருந்தோம். தமிழில் படம் இயக்கி அதைத் தெலுங்கில் டப்பிங் செய்து, இந்தியில் அதையே ரீமேக் செய்கிறோம். தெலுங்கில் இயக்கி தமிழில் வந்தால் எப்படியிருக்கும் என யோசித்துக் கொண்டிருந்தேன். கதையின் களம் மற்றும் திரைக்கதையின் வலு ஆகியவைதான் முக்கியம். எந்தமொழிப்படம், வட்டார ரசனை என்றாலும் இன்று முகங்கள் இரண்டாம் பட்சமாக ஆகிவிட்டன. அதன் விளைவுதான் ‘தங்கல்’ மாதிரியான படம் சீனாவில் மிகப்பெரிய வசூல் புரட்சியை உருவாக்கியது. அதே போல தென்னிந்தியாவில் தயாரான பல படங்கள் வட இந்தியாவில் பெரிய வெற்றிடைந்தன. முகங்கள் இரண்டாவதாகவும், கதை முதலாவதாகவும் ஆகிவிட்டது. தெலுங்கில் படம் இயக்கலாம் என்றபோது, மகேஷ்பாபுவின் அடுத்த படங்கள் குறித்து விசாரித்தேன். அவருக்கும் எனக்கும் தேதிகள் சரியாகப் பொருந்தின. அது மட்டுமன்றி என்னோடு படம் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு இருந்தது. அப்படித்தான் இப்படம் அமைந்தது.

மகேஷ்பாபுவின் கதாபாத்திரம் என்ன?

 

ஜூனியர் இன்வெஸ்டிகேட்டீவ். விசாரணைக் குழுவில் பெரிய அதிகாரி கிடையாது. சாதாரண அதிகாரி ஒரு வழக்கை எவ்வளவு சுவாரசியமாகக் கையாண்டார் என்பதில்தான் அவரது கதாபாத்திரம் மிளிரும். அவரே டப்பிங் செய்திருக்கிறார். மிக அழகாகத் தமிழ் பேசுவார்.

 

காதலும் நகைச்சுவையும் இழையோடும் ஒரு முகமாகவே எஸ்.ஜே.சூர்யா ரசிகர்களிடம் பதிந்திருக்கிறார். அவர் எதிர்மறைக் கதாபாத்திரத்துக்கு சரியாக இருப்பார் என்று ஏன் நினைத்தீர்கள்? நீங்கள் எதிர்பார்த்த வில்லனாக அமைந்துவிட்டாரா?

 

சமீபத்திய படங்களில் பார்த்த வில்லன்களை எல்லாம் விட, பார்த்தவுடன் பயப்படுகிற மாதிரியான வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார். பிரமாதமாக நடித்திருக்கிறார். இப்படம் வெளியானவுடன் அவருக்கு மிகப் பெரிய அங்கீகாரமும் பெயரும் கிடைக்கும்.

 

இன்று தெலுங்கு நடிகர்கள் இங்கே வருகிறார்கள். தமிழ் நடிகர்கள் ஆந்திராவில் மார்க்கெட் பிடிக்கிறார்கள். இதனால் இரண்டு மாநில ரசிகர்களுக்கு ஒத்துவருகிற மாதிரியான கதை, சித்தரிப்பு எனச் செய்யும்போது ஏற்கெனவே இங்கிருக்கும் ரசனை மேலும் மழுங்கிவிடாதா?

நான் எப்போதுமே அப்படிப் படம் எடுப்பதில்லை. இதில்கூட மகேஷ்பாபுவை ஆராதிக்கிற ரசிகர்களை மனதில் கொள்ளாமல் நல்ல கதையை, திரைக்கதையை எதிர்பார்த்து வரும் நிலையான ரசிகர்களுக்குத்தான் படம் எடுத்துள்ளேன். மொழி கடந்த, வட்டார ரசனை கடந்த சினிமா ரசிகர்களை முக்கியமாகப் பார்க்கிறேன். பன்ச் வசனங்கள், ஹீரோயிசம் என்பதை எல்லாம் விட, ஒரு நல்ல வேகமான திரைக்கதைக்குள் ஹீரோயிசம் இருக்க வேண்டும் என நினைப்பேன். என் படங்களில் மிகைப்படுத்தப்பட்ட ஹீரோயிசம் இருக்காது.

 

சிறந்த கதாசிரியர் என்று பெயர் வாங்கியிருப்பவர் நீங்கள். ஆனால் வெளியிலிருந்து ‘மௌனகுரு’ கதையை வாங்கி இந்தியில் படமாக்கினீர்கள் அது ஏன்?

 

அக்கதை மிகவும் பிடித்திருந்தது. அதே கதை கதாநாயகியின் பின்னணியில் நடந்தால் எப்படியிருக்கும் எனத் தோன்றியது. இயக்குநர் சாந்தகுமாரிடமே இதை ரீமேக் செய்கிறீர்களா எனக் கேட்டேன். இந்தி ரீமேக்கில் விருப்பமில்லை என்றார். எனக்கும் எனது படங்களை ரீமேக் செய்வதில் விருப்பமில்லை. மறுபடியுமே அதே படப்பிடிப்பு தளத்துக்குச் செல்லும்போது போரடிக்கிறது. சீக்கிரமாக ஒரு படம் பண்ணலாம் என்றுதான் ‘மெளனகுரு’ ரீமேக்கைத் தொடங்கினேன். இனி என் படங்கள் மட்டுமன்றி, வேறெந்த படங்களின் ரீமேக்கையும் செய்யும் எண்ணமில்லை.

 

கதை உட்பட எல்லாம் தயார் என்ற நிலையில் ரஜினியை நீங்கள் இயக்குவது ஏன் தள்ளிப்போகிறது?

 

தேதிகள் பிரச்சினைதான் முக்கிய காரணம். அவரைத் தொடர்ச்சியாக எப்படித் தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை. அவரும் படங்களில் மும்முரமாக இருக்கிறார். அடுத்த படத்தில் இணையலாம் என்று நினைக்கும்போது, நான் வேறு ஏதோ படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறேன். இப்படி மாறி மாறிப் போகிறது. எங்கள் இருவரையும் இணைக்கும் பாலமாக யாராவது இருந்தால் நன்றாக இருக்கும். அவருக்காகச் செய்த கதை அப்படியே இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்