முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் இசை, டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. மாலை 6 மணிக்குத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த விழா 7.40 மணிக்குத்தான் தொடங்கியது.
மணி ரத்னம் - சுஹாசினி இருவரும் முன்னதாகவே வந்திருந்து, விருந்தினர்கள் அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தனர். தொடக்கம் முதல் இறுதிவரை இருவரும் மிகுந்த மலர்ச்சியுடன் காணப்பட்டனர். டிடி என்றழைக்கப்படும் திவ்யதர்ஷினியும் ராஜு ஜெயமோகனும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.
படத்தின் வசன கர்த்தாவும் திரைக்கதைக்குப் பங்களித்தவருமான ஜெயமோகன் முதல் ஆளாக மேடையேறி “இரண்டாம் பாகம் இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும்” என்றார். மணி ரத்னம் படங்களின் கதாநாயகிகள் ரேவதி, ஷோபனா, ‘அலைபாயுதே’ படத்தில் கெளரவத் தோற்றத்தில் நடித்த குஷ்பு, சுஹாசினி நால்வரும் ஒன்றாக மேடையேற்றப்பட்டுப் பேசியது விழாவின் ‘ஹைலைட்’களில் ஒன்றாக அமைந்தது.
நந்தினி, குந்தவை இருவரில் யாரை மிகவும் பிடிக்கும் என்கிற கேள்விக்கு ஷோபனா மட்டும் குந்தவை என்று கூறியபோது கீழே முன்வரிசையில் அமர்ந்திருந்த த்ரிஷாவின் முகம் புன்னகையில் மேலும் அழகானது.
வாயிலில் காத்திருந்த விக்ரம்: ஆதித்த கரிகாலர், விக்ரமின் வருகைக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். குஷ்பு பேசியவுடன் விக்ரம் வந்தார். குஷ்பு பேசிக்கொண்டிருந்தபோது இடைமறிப்பதாகிவிடக் கூடாது என்பதற்காக அவர் பேசி முடிக்கும்வரை அரங்க வாயிலில் காத்திருந்து அதன் பிறகு உள்ளே வந்தார் விக்ரம்.
முதல் பாகத்தின் இசை, டிரைலர் வெளியீட்டு விழாவில் தனது அபாரமான பலகுரல் திறமையால் ரசிகர்களுக்குக் கலகலப்பூட்டிய ‘ஆழ்வார்க்கடியான்’ ஜெயராம், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. அதை ஈடுசெய்யும் முயற்சியாக ‘பொன்னியின் செல்வன்’ நாவலில் அமரர் கல்கி அதிக முக்கியத்துவம் கொடுத்தது ‘காதலுக்கே..!’ என்று பாரதி பாஸ்கரும் ‘வீரத்துக்கே..!’ என்று ராஜாவும் பட்டிமன்றம் போல் விவாதம் செய்தனர்.
அமைச்சரின் அவநம்பிக்கை: சிறப்பு விருந்தினர்களில் ஒருவராகப் பங்கேற்றிருந்த தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், வரலாற்றுப் புனைவுப் படங்களுக்கு மணி ரத்னம் ஒத்துவர மாட்டார் என்னும் தன்னுடைய எண்ணத்தை மணி ரத்னம் பொய்யாக்கிவிட்டதாகக் கூறிப் பாராட்டினார். இயக்குநர் இமயம் பாரதிராஜா பொன்னியின் செல்வன் கதையை கமல்-ஸ்ரீதேவியை வைத்து திரைப்படமாக இயக்க தன்னை எம்.ஜி.ஆர், கேட்டுக்கொண்டதை நினைவுகூர்ந்தார்.
தேசிய விருதுபெற்ற மூத்த கலை இயக்குநர் தோட்டா தரணி, ’பொன்னியின் செல்வன்’ படத்தில் தனக்கு பணியாற்ற வாய்ப்பளிக்குமாறு மணி ரத்னத்தைக் கேட்டுக்கொண்டதாகவும் அவர் அதை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி என்றும் கூறி நெகிழ்ந்தார்.
டிரைலரை வெளியிடுவதற்காக மேடையேறிய கமல் ஹாசன் “சோழர்களின் காலம் தமிழர்களுக்குப் பொற்காலம் என்பதுபோல், இந்தக் காலம் தமிழ் சினிமாவின் பொற்காலம்” என்றார். மணி ரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் திரைப்படம் குறித்த கேள்விக்கு “படம் கண்டிப்பாக உண்டு” என்று உறுதியளித்ததோடு நிறுத்திக்கொண்டார்.
பாடல்கள் வெளியிடுவதற்கு முன் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், இளங்கோ கிருஷ்ணன் உட்பட அனைத்துமொழிப் பாடலாசிரியர்கள், டிரம்மர் சிவமணி தொடங்கி படத்தில் பங்களிந்த பல்வேறு இசைக் கலைஞர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார்.
கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் பேசும்போது, ‘சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், பாரதியார் பாடல்கள், மணிபிரவாள நடை ஆகிய அனைத்தையும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்பாடல்களில் கொண்டுவந்திருப்பதாகவும் அதற்கு மணி ரத்னம் அளித்த ஊக்கமே காரணம் என்றும் கூறினார்.
சின்னக்குயிலும் திருப்பாவையும்: இசைத் தொகுப்பில் உள்ள ஏழு பாடல்களும் மேடையில் பாடகர்கள், இசைக் கலைஞர்களால் நிகழ்த்தப்பட்டன. ‘வீர ராஜ வீரா’ என்னும் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான், ‘சின்னக்குயில்’ சித்ரா, ஹரிசரண் உள்ளிட்டோர் மேடையில் ஒன்றாகப் பாடியது, நிகழ்ச்சி நீண்டுகொண்டே போய் நேரமாகிவிட்ட நிலையிலும் அனைவரையும் இன்பத்தில் ஆழ்த்தியது.
‘ஆழி மழைக் கண்ணா’ என்கிற திருப்பாவை பாடலை ஹரிணி பாடியதும் இசை ரசிகர்களுக்கு எதிர்பாராத விருந்து. பழுவேட்டரையர்கள் சரத்குமாரும் பார்த்திபனும் ஐஸ்வர்யா ராயுடன் நடித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் அரங்கத்தைக் கலகலப்பாக்க முயன்றனர்.
‘பத்து தல’ படம் நேற்று வெளியான சூழலில் வந்திருந்த சிலம்பரசன் “என் வாழ்வின் மிக கடினமான காலகட்டத்தில் மணி ரத்னம் என்னை நம்பி ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்தார். அதற்கு நான் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். இரவுப் பட்சியான நான், அதிகாலையில் எழுந்து வேலைகளைத் தொடங்குவதில் உள்ள நன்மைகளை அவரிடமிருந்தே கற்றுக்கொண்டு, அதைப் பின்பற்றுகிறேன்” என்று கூறினார்.
த்ரிஷாவின் உயிர் யாருக்கு? - நேரமாகிவிட்டதாலோ என்னவோ திரைப்படத்தின் முதன்மைக் கதாபாத்திரத்தை ஏற்றவர்கள் ஜோடி ஜோடியாக மேடையேற்றப்பட்டனர். ‘பொன்னியின் செல்வ’ராக இரண்டாம் பாகத்தில் இன்னும் கூடுதலாக வரப்போகிற ஜெயம் ரவி, படத்தில் பணியாற்றியவர்கள், படத்துக்கு ஊக்கம் அளித்த கமல் ஹாசன் என அனைவரையும் நன்றி மழையால் நனைத்தார்.
‘வந்தியத்தேவன்’ கார்த்தி, ‘பையா’ வெளியான பிறகு தனக்கு நிறைய காதல் கடிதங்கள் வந்ததுபோல் ‘பொன்னியின் செல்வன்’ வந்த பிறகு இன்ஸ்டகிராமில் நிறைய காதல் மெஸேஜ்கள் வருவதாகக் கூறினார்.
‘குந்தவை’ த்ரிஷா, ‘உயிர் எப்போதுமே உங்களுடையதுதான்’ என்று படத்தில் தன்னைப் பார்த்து வந்தியத் தேவனால் சொல்லப்படும் பிரபலமான வசனத்தை ரசிகர்களுக்கு அர்ப்பணித்து அரங்கின் ஒட்டுமொத்தக் கரவொலி, விசில்கள், மகிழ்ச்சிக் கூவல்களை அள்ளிக்கொண்டார்.
இறுதி நிகழ்வாக விக்ரமும் ஐஸ்வர்யா ராயும் மேடையேறினர். “மணி ரத்னத்தின் காலத்தில் வாழ்வது தனக்குப் பெருமை” என்று விக்ரம் கூறினார். “உங்க எல்லாருடைய அன்புக்கும் நன்றி” என மழலைத் தமிழில் தெரிவித்தார் ஆண்டகானிஸ்ட் ‘நந்தினி’யாக இரண்டாம் பாகத்தில் பல ஆச்சரியங்களை நிகழ்த்தியிருக்கும் ராய்.
தயாரிப்பாளரும் லைகா நிறுவனருமான சுபாஸ்கரன் அல்லிராஜா, தன்னுடைய தாய், மனைவியுடன் விழாவில் கலந்துகொண்டார். மணி ரத்னம் மேடையேறியபோதும் பேசவில்லை. “படம் பேசட்டும்” என்று செய்கை காண்பித்தார். அதற்கு ஏப்ரல் 28வரை காத்திருக்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago