எ
ம்.ஜி.ஆர். நடித்த அந்தப் படத்தைப் பார்த்தவர்கள் கண்ணீர் சிந்தினர். ரசிகர்கள் கதறித் துடித்தனர். பெண்கள் அடித்துக்கொண்டு அழுதனர். இத்தனைக்கும் ‘பாசம்’ படத்தைப் போல் கதைப்படி கடைசி காட்சியில் எம்.ஜி.ஆர். இறக்க மாட்டார். வழக்கமான எம்.ஜி.ஆர்.பாணியில் உற்சாகமான படம்தான். இருந்தாலும் படம் பார்த்த மக்களை உருகவைத்த அந்தப் படம்… ‘காவல்காரன்’!
கொஞ்சம் ‘ப்ளாஷ்பேக்’
‘காவல்காரன்’ படம் 1966-ன் பிற்பகுதியில் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியது. ‘மெல்லப்போ.. மெல்லப்போ… மெல்லிடையாளே மெல்லப் போ…’, ‘அடங்கொப்புரானே சத்தியமா நான் காவல்காரன்…’ ஆகிய பாடல் காட்சிகள், ஓரிரு வசனக் காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நிலையில், 1967 ஜனவரி 12-ம் தேதி திரையுலகம் மட்டுமல்லாது, தமிழகத்தையே அதிரவைத்து அரசியல் வரலாற்றைத் திருப்பிப் போட்ட அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை நடிகவேள் எம்.ஆர். ராதா துப்பாக்கியால் சுட்டுவிட்டார்.
01chrcj_Kavalkaran 2‘காவல்காரன்’ படத்தில்...ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எம்.ஜி.ஆர்., டாக்டர்களின் பல மணி நேர போராட்டத்துக்குப் பின்னர், அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். 1967 பொங்கலையொட்டி ஜனவரி 13-ம் தேதி எம்.ஜி.ஆர். நடித்த ‘தாய்க்குத் தலைமகன்’ படம் ரிலீஸ். எம்.ஜி.ஆர். கொண்டாடும் ஒரே பண்டிகை தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை.
அன்று தன்னைக் காண வரும் பிரமுகர்கள், அரசியல்வாதிகள், திரையுலகினர், ரசிகர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் ராமாவரம் தோட்டத்தில் சுவையான பொங்கல் விருந்தளித்து, எல்லாருக்கும் பணம் கொடுத்து மகிழ்வது எம்.ஜி.ஆரின் வழக்கம்.
சுடப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் எம்.ஜி.ஆரை இனி நேரில் காண முடியுமா என்ற ஏக்கத்தோடு திரையில் அவரைப் பார்க்க ‘தாய்க்குத் தலைமகன்’ படத்துக்குக் கூட்டம் அலைமோதியது. இப்போதுபோல நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள், அலைவரிசை தொலைக்காட்சிகள் அப்போது கிடையாது. படம் பார்க்கும் மக்களை ஆசுவாசப்படுத்துவதுபோல ‘தாய்க்குத் தலைமகன்’ திரையிடப்பட்ட அரங்குகளில் ‘எம்.ஜி.ஆர். உயிர் பிழைத்துவிட்டார். நலமுடன் இருக்கிறார்’ என்று சிலைடுகள் காட்டப்பட்டன. அந்தப் படம் பார்க்கும்போது ரசிகர்களுக்கு எம்.ஜி.ஆரிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை.
‘டப்பிங்’ யோசனை
அதைத் தொடர்ந்து 1967-ம் ஆண்டு மே 19-ம் தேதி ‘அரசகட்டளை’ படம் ரிலீஸ். இந்தப் படத்தில் பெரும்பாலான காட்சிகள் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு முன்பே படமாக்கப்பட்டவை. அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசுக்கு எதிராக வசனங்கள் இடம்பெற்றிருக்கும். ஆனால், படம் வெளியானபோது திமுக ஆட்சி அமைந்து அண்ணா முதல்வராகிவிட்டார். சில காட்சிகள் மட்டுமே துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பின் எடுக்கப்பட்டவை என்பதால் இந்தப் படத்திலும் எம்.ஜி.ஆரிடம் பெரிதாக வித்தியாசத்தை உணர முடியவில்லை.
அடுத்து செப்டம்பர் மாதம் 7-ம் தேதி வெளிவந்தது ‘காவல்காரன்’. இந்தப் படத்தின் 95 சதவீதக் காட்சிகள் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகே எடுக்கப்பட்டன. எம்.ஜி.ஆர். பேசும் காட்சிகளில் அவரது வழக்கமான வெண்கலக் குரல் உடைந்துபோய், சற்று சன்னமாகவும் கட்டையாகவும் வார்த்தைகள் தெளிவில்லாமலும் குரல் ஒலித்தது. ‘காவல்காரன்’ படம் பார்த்த ரசிகர்கள் கண்ணீர் சிந்தவும் பெண்கள் அடித்துக்கொண்டு அழவும் இதுதான் காரணம்!
01chrcj_Kavalkaran 3 எம்.ஜி.ஆருடன் மோதுகிறார் மனோகர். rightஎம்.ஜி.ஆருக்கு எப்போதுமே ஒரு ராசி உண்டு. அவருடைய பலவீனம் என்று மற்றவர்கள் எதைச் சொல்கிறார்களோ அதுவே அவருக்குப் பலமாக மாறிவிடும், அல்லது மாற்றிக்கொண்டுவிடுவார். ஒரு நடிகனுக்கு முக்கியமானது குரல் வளம், தெளிவான வார்த்தை உச்சரிப்பு. (அந்தக் காலத்தில் சொல்கிறேன்!) அந்தக் குரல் வளமே போன பிறகு ஒரு நடிகரை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்..
இந்தச் சிந்தனை ‘காவல்காரன்’ படப்பிடிப்புக் குழுவில் உள்ள சிலருக்கும் இருந்தது. வேறு யாரையாவது நல்ல குரல் வளம் உள்ளவரைக் கொண்டு எம்.ஜி.ஆருக்கு ‘டப்பிங்’ கொடுத்தால் என்ன…? இந்த யோசனையைக் கடுமையாக எதிர்த்தார் எம்.ஜி.ஆர்.!
சவாலில் வென்ற எம்.ஜி.ஆர்.
தீவிரமான பயிற்சிகளில் ஈடுபட்டுச் சொந்தக் குரலில் பேசி நடித்தார். இருந்தாலும் அது அவ்வளவு சுலபமாக இல்லை. படமாக்கப்படும் காட்சியில், தான் பேசும் வசனங்களை எம்.ஜி.ஆர். மூன்று, நான்கு முறை தனியாக ஒலிப்பதிவு செய்தார். பிறகு, அப்படி ஒலிப்பதிவு செய்யப்பட்டவற்றில் எதில் எந்த வார்த்தை நன்றாக ஒலிக்கிறதோ அதை ஒவ்வொன்றாகத் தேர்ந்தெடுத்து ஒருங்கிணைத்து எடிட்டிங்கில் படக்காட்சியோடு இணைத்தார். எம்.ஜி.ஆரின் திரைப்படத் தொழில்நுட்பத் திறமைக்கு இது ஒரு சவால். இந்த சவாலில் எம்.ஜி.ஆர். வெற்றிபெற்றார்.
அவர் எதிர்பார்த்தது போலவே அவரது குரலை மக்களும் அனுதாபத்தோடு ஏற்றுக்கொண்டனர். ‘காவல்காரன்’ படமும் மிகப் பெரிய வெற்றிபெற்றது.
எம்.ஜி.ஆரின் குரலே படத்துக்குப் பெரிய விளம்பரமாகிவிட்டது. படம் பார்க்க மக்கள் குவிந்தனர். குறிப்பாகப் பெண்கள் அலை அலையாக வந்தனர். பெண்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் திரண்டதால் சென்னை குளோப் திரையரங்கில் முழுக்க முழுக்க பெண்களுக்காகவே தனிக் காட்சி திரையிடப்பட்டது.
துப்பறியும் நாயகன்
ஒரு பெரிய பங்களா. அங்கு நடக்கும் குற்றச்செயல்களைக் கண்டுபிடிக்க வரும் போலீஸ் அதிகாரி கொல்லப்படுகிறார். அந்த பங்களாவில் நடக்கும் அக்கிரமங்களைக் கண்டுபிடித்து குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துகிறார் கதாநாயகன். நம்பியாரிடம் கார் டிரைவராக வேலைக்குச் சேரும் மணி என்ற பாத்திரத்தில் எம்.ஜி.ஆர். நடித்திருந்தார். நம்பியாரின் மகளாக சுசீலா என்ற பாத்திரத்தில் வரும் ஜெயலலிதா, எம்.ஜி.ஆருடன் காதல் வசப்படுகிறார்.
தந்தையின் எதிர்ப்பை மீறி காதலனைக் கரம்பிடிக்கிறார். தன்னை அழிக்க முயலும் எதிரிகளின் திட்டங்களைத் தவிடுபொடியாக்கி குற்றவாளிகளைச் சிறைக்கு அனுப்புகிறார் எம்.ஜி.ஆர்.! கடைசியில்தான் தெரிகிறது நம்பியாரிடம் டிரைவராக வேலைக்குச் சேர்ந்த அவர் ஒரு துப்பறியும் போலீஸ் அதிகாரி!
ஜெயலலிதாவுடன் காதல், தம்பி சிவகுமாரிடம் பாசம், சிவகுமார் இறக்கும் காட்சியில் சோகம், எதிரிகளிடம் வீரம் என எம்.ஜி.ஆர். வெளுத்து வாங்கியிருந்தார். துப்பாக்கித் தோட்டா அவரது குரலைப் பாதித்ததே தவிர சுறுசுறுப்பை முடக்கவில்லை. சண்டைக் காட்சியில் நடிகர் கண்ணனை எம்.ஜி.ஆர். குத்துவார். கண்ணன் விலகிக்கொள்ள அந்தக் குத்து பீரோவில் விழுந்து அதைத் துளைக்கும். தப்பித்த கண்ணன் பீதியடைவார்.
எம்.ஜி.ஆர். லேசாக வலது கை மணிக்கட்டைத் தடவிக் கொடுத்தபடியே திடீரென ஞாபகம் வந்தவராகக் கையில் கட்டியிருக்கும் வாட்ச் சரியாக ஓடுகிறதா என்பதைச் சரிபார்க்க காதோடு கையின் மணிக்கட்டை ஒட்டிவைத்து ‘டிக் டிக்’ சத்தத்தை உற்றுக் கேட்கும்போது தியேட்டரே உற்சாகக் கூச்சலுடன் ஆடியது.
தனித்த வெற்றி
‘காவல்காரன்’ படத்துக்கு முதலில் வைத்த பெயர் ‘மனைவி’. பிறகுதான் ‘காவல்காரன்’ என்று பெயர் மாற்றப்பட்டது எம்.என். நம்பியார், அசோகன், மனோகர், வி.கே.ராமசாமி, சிவகுமார், நாகேஷ், ஜெயலலிதா, பண்டரிபாய், மனோரமா, புஷ்பமாலா மற்றும் பலர் நடித்திருந்தார்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடல்களை வாலி, ஆலங்குடி சோமு எழுதியிருந்தனர்.
ஒளிப்பதிவு வி.ராமமூர்த்தி. வித்வான் லட்சுமணன், நா.பாண்டுரங்கன்ஆகியோர் வசனம் எழுத, ப.நீலகண்டன் இயக்கியிருந்தார். சத்யா மூவீஸ் பேனரில் எம்.ஜி.ஆரை வைத்து ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த 3-வது படம் ‘காவல்காரன்’. திரைக்கதையும் வீரப்பன்தான்.
எம்.ஜி.ஆருடன் சிவகுமார் நடித்த முதல் படம். 1967-ம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம். அந்த ஆண்டின் சிறந்த படமாகத் தமிழக அரசின் விருது பெற்றது. சென்னையில் குளோப், அகஸ்தியா, மேகலா ஆகிய திரையரங்குகள் மற்றும் மதுரை, திருச்சி, சேலம் நகரங்களில் 100 நாட்களை கடந்தும் இலங்கை யாழ்ப்பாணத்தில் 160 நாட்களைக் கடந்தும் ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்றது. படத்தின் வெற்றிவிழாவில் அப்போது முதல்வராக இருந்த அண்ணா கலந்துகொண்டு கலைஞர்களுக்கு விருது வழங்கினார்.
1967-ல் வெளியான ‘காவல்காரன்’ படம் செப்டம்பர் 7-ம் தேதி 50 ஆண்டுகள் நிறைவு பெற்று பொன்விழா கொண்டாடுகிறது. படத்துக்கு இப்போது 50 வயது. படம் வெளியானபோது எம்.ஜி.ஆருக்கும் 50 வயது! படத்தில் இளமை துள்ளும் கம்பீரமான அவரது தோற்றத்தைப் பார்த்தால் நம்ப முடிகிறதா?
படங்கள் உதவி: ஞானம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago