வசூல் சாதனை படைத்த 'பாகுபலி' மூலம் உலக அளவில் எதிர்பார்ப்புக்குரிய நாயகனாக மாறியிருக்கிறார் பிரபாஸ். அவருடனான சந்திப்பில் அப்படி ஒரு விஷயமே தன் முன்னால் இல்லை என்ற ரீதியில் மிகவும் எளிய மனிதர்போல் பேசினார். ஆந்திர ரசிகர்களால் 'டார்லிங்' என்று வாஞ்சையுடன் அழைக்கப்படும் பிரபாஸ், தற்போது ‘சாஹோ’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அவரிடம் உரையாடியதிலிருந்து
‘சாஹோ' படமும் பெரிய முதலீடு, நிறைய நடிகர்கள் என பிரம்மாண்டமாக இருக்கிறதே...
‘சாஹோ' திரைக்கதையைப் பெரிதும் சார்ந்திருக்கும் படம். பெரிய பொருட்செலவில் உருவாகும் முழுமையான ஆக்ஷன் த்ரில்லர் என்று சொல்லலாம். திரைக்கதை அமைப்பு ரொம்பப் புதுமையாக இருக்கும். ‘பாகுபலி' படத்துக்கு முன்பாக இக்கதையைக் கேட்டேன். மிகவும் பிடித்துவிட்டது. இதற்காகக் காத்திருந்து இப்போதுதான் படப்பிடிப்பு தொடங்கியுள்ளோம். ‘பாகுபலி' படத்துக்காக உடலைக் கட்டுமஸ்தாக மாற்றினேன். இப்படத்துக்காக எடை குறைத்து உடலை இளைக்க வைத்துள்ளேன்.
‘பாகுபலி' கதாபாத்திரங்களால் உங்கள் மீது உலக அளவில் பார்வை விழுந்துள்ளதை உணர்கிறீர்களா?
(சிரித்துக்கொண்டே) ராஜமெளலியின் மேஜிக், என் வாழ்க்கையின் அதிர்ஷ்டம் ஆகியவைதான் காரணம். ராஜமெளலியின் எண்ண ஓட்டத்துக்கு ஒட்டுமொத்தப் படக்குழுவும் கடுமையாக உழைத்தோம். உலக மக்களிடையே இரண்டு பாகங்களும் வரவேற்பு பெற்றதற்குக் கண்டிப்பாக அதிர்ஷ்டமும் ஒரு காரணம்.
‘ பாகுபலி'க்குப் பிறகு, உங்கள் படங்கள் மீது அதிகப்படியான முதலீடு இருப்பதாகத் தெரிகிறதே...
அப்படியில்லை என நினைக்கிறேன். கதை மட்டுமே பொருளாதாரத்தை முடிவு செய்கிறது. ஆக்ஷன் கதை என்றால் பெரிய பொருட்செலவாகும். அடுத்ததாக ஒரு காதல் கதையில் நடிக்கவுள்ளேன். கதை நன்றாக இல்லாமல், பெரிய பொருட்செலவு செய்து பயனில்லை. ‘பாகுபலி' படத்தை ரூ.150 கோடியில் கூட எடுத்திருக்கலாம். ஆனால், ராஜமெளலி அனைத்து விதத்திலுமே சிறப்பாக இருக்க வேண்டும் எனப் பிடிவாதமாக இருந்தார். முதல் பாகத்தின் நீர்வீழ்ச்சி காட்சியை விவரிக்கும்போதே, இந்தியத் திரையுலகில் யாருமே பார்த்திராத ஒரு காட்சியாக அதைப் பார்த்தேன்.
இனி எந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்?
முன்பிலிருந்தே வரலாற்றுக் கதையில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அது ‘பாகுபலி' மூலம் நிறைவேறிவிட்டது. ஆக்ஷன், காதல் கதைகளும் ரொம்பப் பிடிக்கும். ஒரு கட்டத்தில் நிறைய ஆக்ஷன் படங்களில் நடித்துப் போரடித்துவிட்டது. உடனே ‘டார்லிங்' என்ற முழுமையான காதல் நகைச்சுவைக் கதையில் நடித்தேன். அடுத்து ‘மிஸ்டர் பெர்ஃபெக்ட்' என்ற குடும்பம் சார்ந்த கதை ஒன்றில் நடித்தேன். ஆக்ஷன், காதல் படங்கள் தனிப்பட்ட முறையில் எனக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காகத் தொடர்ச்சியாக அம்மாதிரியான படங்களிலேயே நடித்தால் கண்டிப்பாக போரடித்துவிடும்.
தெலுங்கில் பெரிய கதாநாயகர்களின் படங்கள் வெற்றியடைந்து வந்தாலும், ‘பெல்லி சூப்பூலு', ‘அர்ஜுன் ரெட்டி' போன்ற சிறு படங்களுக்கும் வரவேற்பு கிடைத்திருக்கிறதே... இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
‘பெல்லி சூப்பூலு', 'அர்ஜுன் ரெட்டி' படங்கள் கண்டிப்பாக மாற்றம்தான். தெலுங்கு திரையுலகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டு வருகிறது. பத்து வருடங்களுக்கு முன்பு இதுபோன்ற படங்கள் வரவில்லை. சமீபத்தில் ‘அர்ஜுன் ரெட்டி' பார்த்தேன். கண்டிப்பாக அது ஒரு ட்ரெண்ட் செட்டிங் படம்தான். அதற்கு மக்களிடையே கிடைத்திருக்கும் வரவேற்பைப் பார்த்து சந்தோஷப்பட்டேன். தெலுங்கு திரையுலகம் அதன் மாற்றத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. இன்னும் நிறையப் புதுப்புது கதைகளோடு புது இயக்குநர்கள் வந்தார்கள் என்றால் தெலுங்கு திரையுலகம் இன்னும் வலிமையடையும்.
எந்தவொரு விழாவாக இருந்தாலும், மிகவும் குறைவாகவே பேசுகிறீர்களே... நிஜத்திலும் அப்படித்தானா?
கூச்ச சுபாவம் கொண்டவன் நான். திரையுலகத்துக்கே தயங்கித் தயங்கித்தான் வந்தேன். ரொம்பவும் விளம்பரப்படுத்திக்கொள்வதை நான் விரும்புவதில்லை. அவ்வப்போது நண்பர்களோடு பேசுவேன். அதுவுமே குறைவாகத்தான் இருக்கும். பள்ளித் தோழர்கள்தான் இப்போதுமே நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டுமே எனது தோழமை புரியும்.
நீங்கள் திரையுலகத்துக்கு வந்து 15 ஆண்டுகளாகிவிட்டன. இவ்வளவு பெரிய உச்சத்தை எதிர்பார்த்தீர்களா?
நிறைய ரசிகர்கள் இருக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் இருந்தது. வாழ்க்கையில் நாம் ‘பாகுபலி' மாதிரியான படத்தில் நடிப்போம் என்று கனவிலும் எதிர்பார்த்ததில்லை. பெரிய இடத்துக்கு வரவேண்டும் என்று நினைத்தது உண்மை. ‘பாகுபலி' என்னை அந்த இடத்திற்கு நகர்த்திவிட்டது என நினைக்கிறேன். 'பாகுபலி' என்ற கதாபாத்திரத்தை ராஜமெளலி எனக்கு எழுதியதைத்தான் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டாகப் பார்க்கிறேன்.
மீண்டும் ராஜமெளலியோடு எப்போது இணையவுள்ளீர்கள்?
எனக்கு வரும் படங்களில் சிறப்பான கதையம்சம் எதுவோ அதைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். நானும் ராஜமெளலியும் குடும்ப நண்பர்கள்போல பேசிக்கொள்வோம். இதுவரை நாம் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என்று கேட்டதில்லை. வேலை வேறு, நட்பு வேறு என்பதை இருவருமே உணர்ந்துள்ளோம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago