சினிமாலஜி 19: மயக்கமா... கலக்கமா...?

By சரா

சி

னிமாலஜி படிப்பு முடியும் தறுவாயில் இருக்கிறது. எனினும், வகுப்பிலும் வெளியிலும் விவாதத்தை வளர்ப்பதில் குறைவில்லை. வழக்கமான பாடநேரம் இன்று முடிந்த நிலையிலும், புதிதாகப் பேசுபொருள் ஒன்றை முன்வைத்தான் பார்த்தா.

“சினிமா படைப்பாளிகள் பலரிடம் உள்ள பிரச்சினையே ஏதோ ஒரு சூழலில் தொய்வு ஏற்படுவதுதான். அது அப்போதைய மிக முக்கியமான இயக்குநர் மகேந்திரன் தொடங்கி இப்போதைய ஸ்டைலிஷ் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் வரைக்கும் தொடருது. சினிமாக்குள்ள நுழையப் போற நாம இந்தப் பிரச்சினையை டீல் பண்ணியே ஆகணும்.”

ஆர்வமான கவிதா, “எனக்கும் இதுல பெரிய கவலை இருக்கு. ‘உதிரிப்பூக்கள்’ மாதிரியான அற்புதமான படைப்புகள் கொடுத்தவர்களால் தன் வாழ்நாள் முழுவதும் திரைத்துறையில் இயங்க முடியாத நிலை ஏன்னு யோசிச்சு இருக்கேன். சினிமான்றதே பல்வேறு கலைகளை உள்ளடக்கியதுதான். குறிப்பாக, எந்த ஒரு தொழில்நுட்ப வளர்ச்சியும் சினிமாவுல முக்கியப் பங்கு வகிக்கும். அதுல, தங்களை அப்டேட் பண்ணிக்காததாலதான் பிரச்சினையோன்னு தோணுது. பாரதிராஜா, பாக்யராஜ் முதலான பலர்கிட்டையும் அப்டேட் இல்லாதததுதான் குறைன்னு நினைக்கிறேன்” என்றாள்.

“அந்த வகையில இன்னிக்கும் நிக்குற மணி சார் கிரேட்” என்று கிடைத்த இடைவெளியில் கால் டாக்ஸி ஓட்ட முயன்றான் ப்ரேம்.

இதற்காகவே காத்திருந்ததுபோல் சட்டென கிளம்பிய ஜிப்ஸி, “பார்றா... வெறும் டெக்னிக்கல் அப்டேட் மட்டும் போதாதுன்றதுல உங்க மணி சாரே சரியான உதாரணம். காதல் அணுகுமுறைகள் தொடர்பா மட்டும்தான் அவர் அப்டேட் பண்ணியிருக்கார். வேற உருப்படியான சப்ஜெக்டுக்குள்ள போக மாட்டேங்குறார். எந்த மாதிரி சப்ஜெக்ட்ல படம் எடுக்கணும்ன்றது ஒரு தனிப்பட்ட படைப்பாளியோட உரிமைதான். அந்த விருப்பத்தைக் குறை சொல்லலை.

ஆனா, ரொட்டீன் ஆடியன்ஸ் கிடைக்குற பெரிய படைப்பாளின்னு சொல்லிட்டு இருக்குறவங்க காதல் சப்ஜெக்ட்ல மட்டும் அதிகமா கவனம் செலுத்துறதை ஏத்துக்க முடியலை. ஆபாவாணன் மாதிரியானவங்க எவ்ளோதான் ஃபிலிம் மேக்கிங்ல ஸ்ட்ராங்கா இருந்தாலும் கன்டென்ட்ல கோட்டை விடுறதைப் பார்க்குறோமே” என்று பொருமினான்.

“ஆமா, எனக்கென்னவோ ஒரு ஸ்டேஜுக்கு மேல பெரிய ஆளானவங்க பெருசா ஹோம்ஒர்க் கூட பண்றது இல்லையோன்னு தோணுது. கதைக்களமும் கதாபாத்திரங்களும் முடிவு பண்ணிட்டா, அது நிஜத்துல எப்படி இருக்கு, அதுபோன்ற மனிதர்கள் எப்படி இருக்குறாங்கன்றதே நேரடி ரிசர்ச்ல கூட யாரும் ஈடுபடுறது இல்லை. அதான், ரியலிஸ்டிக் தன்மையோட சினிமா எடுக்குறேன்னு சொல்ற இயக்குநர்களோட படைப்புகள் கூட அந்நியத்தன்மையோட இருக்கு” என்றாள் ப்ரியா.

“ஆனா, இப்ப இருக்குற முக்கியமான இளம் படைப்பாளிகள் இந்த விஷயத்துல ரொம்ப கவனமா இருக்காங்கன்னு தோணுது” என்றாள் மேனகா.

“மிகச் சிலர்தான் அப்படி இருக்காங்க. புதுசா வர்றவங்க தங்களோட வாழ்க்கை முழுவதும் அசைபோட்ட, மனத்திரையில் பார்த்துக்கொண்ட, அதுகூடவே டிராவல் பண்ணின படங்களைத் தர்றாங்க. தங்களோட ஒட்டுமொத்த அனுபவத்தையும் திறமையையும் ஒரே படத்துலயோ ரெண்டு மூணு படத்துலயோ காட்டுறாங்க. அதுக்கப்புறம் கற்பனைத்திறன் காலியான மாதிரி மொக்கைப் படங்கள் கொடுத்துட்டு ஃபீல்டுல இருந்தே காலி ஆகுறாங்க” என்றாள் ப்ரியா.

01CHRCJ__SHOOTING_SPOT ‘உதிரிப்பூக்கள்’ படப்பிடிப்பில் நாயகி அஸ்வினி, பேபி மஞ்சு, மாஸ்டர் ஹாஜா ஷெரிஃப் ஆகியோருடன் இயக்குநர் மகேந்திரன் right

“நிச்சயமா ‘காதல் கோட்டை’, ‘கோகுலத்தில் சீதை’ மாதிரியான சூப்பரான படங்களைக் கொடுத்த அகத்தியன் தன்னோட அட்ரஸை இழக்க இதான் காரணம்போல. ஷங்கர், ஹரி மாதிரியான இயக்குநர்கள் தங்களுக்குன்னு ஒரு கிராஃப்ட் வெச்சிக்கிறாங்க. அதை மீறி அவங்களால பண்ண முடியலை.

ஷங்கர் தன்கிட்ட இருக்குற வெறுமையைச் சரிசெய்ய ‘நண்பன்’மாதிரி ரீமேக் பக்கமும் ஒதுங்கிப் பாத்தாரு. ‘ஐ’ படத்துல டோட்டலா காலி. இப்போது ‘2.0’ மேக்கிங் வீடியோவும் பெருசா இம்ப்ரஸ் பண்ணலை. ஆனாலும், அவராவது எழுத்தாளர்களோட பங்களிப்பை அப்பப்ப வாங்கிகிட்டு பேலன்ஸ் பண்ண ட்ரை பண்றாரு. இன்னொரு பக்கம் யோசிச்சா, காமெடி தூக்கலா இருக்குற மசாலா படம்தான் சேஃப்னு தோணுது” என்றான் ரகு.

“ஹே... மக்கள் எப்பவும் ரசிக்கிற மாதிரி காமெடி மசாலா படம் எடுக்குறது ஒண்ணும் அவ்ளோ ஈஸி இல்லை கண்ணா. குடியும் குடி நிமித்தமுமா கதாநாயகனையும் அவனோட நண்பனையும் கும்மாளம் அடிக்கவெச்ச இயக்குநர் ராஜேஷால ரெண்டு படத்துக்கு மேல தாக்குப் பிடிக்க முடியலை. ஆனால், சுந்தர்.சி இன்னமும் சூப்பரான பொழுதுபோக்கு சினிமா கொடுக்குறார். அதுக்கும் வெரைட்டியும் அப்டேட்டும் முக்கியம்” என்றான் பார்த்தா.

“சிலர் தனக்குன்னு சில ஸ்டைல்களில் மாட்டிகிட்டு, கதை வறட்சியில சிக்கித் திணறுறாங்களோன்னு தோணுது. என்ன பண்ணினாலும் ஃப்ளேவர் மாறவே மாறாது. இதுக்குச் சரியான முன்னுதாரணம் கெளதம் வாசுதேவ் மேனன். சேரன், அமீர் மாதிரியானவங்க புயல் மாதிரி வெளியே வந்து மழையே இல்லாத வறட்சி நிலைக்கு மாறி, வெறும் கருத்தாளர்களா தங்கள் இருப்பைப் பத்திரமா பாத்துக்குற நிலைமையும் இருக்கு. இவங்கள்லாம் நமக்கு நல்ல பாடம். சினிமாவுல பெரிய ஆள் ஆகுறதுக்கு முன்னாடி தன் கதைகளைச் செதுக்க பல தரப்பினருடனும் கலந்து ஆலோசிச்சு டெவலப் பண்றாங்க. ஆனா, ஒரு லெவல் போயிட்டா தங்களோட உதவி இயக்குநர்கள்கிட்டகூட கதையைச் சொல்றது இல்லை” என்றாள் ப்ரியா.

“நான் கேள்விப்பட்டதுல இந்த மேட்டர்ல முருகதாஸ் அணுகுமுறை கரெக்ட்னு நினைக்கிறேன். நான் கேள்விப்பட்டவரை அசிஸ்டெண்ட்ஸ் வெச்சு இம்ப்ரோவைஸ் பண்றதுல அவர் சூப்பர்” என்றாள் கீர்த்தி.

“ஃபிலிம் மேக்கிங்ல எவ்ளோதான் திறமையாளர்களா ஆனாலும், கதை சொல்லும் உத்தியிலும், கதையைத் தெரிவு செய்றதுலயும் கவனம் செலுத்தாதுதான் பெரிய பின்னடைவுன்னு நினைக்கிறேன். எவ்ளோதான் ‘விவேகமா’ ‘தெறி’க்கவிட்டாலும் தேக்கநிலைல சிக்கித்தான் ஆகணும்” என்றான் மூர்த்தி.

“கதையைப் போலவே திரைக்கதையையும் கவனத்துல எடுத்துக்கணும். இன்னும் இங்க எல்லாமே தான்தான் பண்ணனும்ன்ற தேவையில்லாத போதை போகலை. கதை, திரைக்கதை, வசனம், டைரக்‌ஷன் எல்லாமே ஒருத்தர் பேருதான் இருக்கணும்னா அது எல்லாருக்கும் சரியா வராது. இந்தப் போதையில இருந்து மீண்டா, ஒரு நல்ல ஃபிலிம் மேக்கர் என்ற வகையில் டைரக்‌ஷன் மட்டும் பாத்துகிட்டு, கதையையும் திரைக்கதையையும் வெவ்வேறு திறமையாளர்கள்கிட்ட இருந்து வாங்கிக்கிற பக்குவம் வேணும். இது இல்லைன்னா ஒரு பீரியடுக்கு அப்புறம் அம்பேல்தான் தோணுது. மலையாள சினிமாவுல திரைக்கதை எழுத்தாளர்களுக்கு செம்ம மரியாதை இருக்கு. நல்ல சன்மானமும் கிடைக்குதுன்னு சொல்றாங்க. ஆனா, இங்க ஒரு படம் ரிலீஸ் ஆவுற ஸ்டேஜ்லகூட திரைக்கதையாளருக்கு ஒரு ரூபாய்கூட கிடைக்காத நிலைமைதான் இருக்கு. எப்போ திரைக்கதைக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்குமோ அப்போதான் நம்ம சினிமா இன்னும் வேற லெவலுக்குப் போகும்” என்று விரிவாகவே பொங்கினான் பார்த்தா.

“இப்பதான் மிஷ்கின்கிட்ட இருந்து மெசேஜ் வந்திருக்கு. நம்ம க்ளாஸுக்கு வரேன்னு சொல்லியிருக்கார். இதான் நம்மளோட கடைசி க்ளாஸா இருந்தாலும், சினிமால ஜெயிக்கிறதுக்கும் தொய்வு இல்லாம இயங்கவும் அவரோட வகுப்பு உதவும்னு நம்புறேன்” என்று சொல்லிவிட்டு நகர்ந்த ப்ரியாவின் கால்களையே நோக்கிக்கொண்டிருந்தான் பார்த்தா.

தொடர்புக்கு siravanan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்