யாரையும் புண்படுத்தாத நகைச்சுவைக்கு உத்தரவாதமான படம் The Hundred-Year-Old Man Who Climbed Out the Window and Disappeared (ஜன்னல் வழியே எகிறிக் குதித்து காணாமல் போன நூறு வயது மனிதர்). இப்படத்தில் உலக வரலாற்றின் சீரிய காட்சிகளையும் போகிற போக்கில் காண முடிவது இன்னொரு ஆச்சரியம்.
தப்பிக்கும் தாத்தா
ஆலனுக்கு 100-வது பிறந்தநாள் விழா. அவர் வசிப்பது ஸ்வீடன் நாட்டின் மாம்கோப்பிங் நகரில். அகன்ற தோட்டமும் காற்றோட்டமும் மிக்க அவரது ஓய்வில்லத்திலேயே கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பத்திரிகையாளர்கள், உள்ளூர் பெரிய மனிதர்கள் என அவருக்கு வாழ்த்து சொல்ல பலரும் திரண்டு வருகிறார்கள். ஏனோ ஆலனுக்குத் தனது பிறந்த நாளைக் கொண்டாடுவதில் விருப்பமில்லை. எனவே கொண்டாட்ட நிகழ்விலிருந்து தப்பிக்க யாருக்கும் தெரியாமல் தனது அறையின் ஜன்னல் வழியாக எகிறிக் குதித்து வெளியேறிவிடுகிறார்.
ஆலன் காரிசன் வெடி வைப்பதில் கில்லாடி. அவரை வெடிகுண்டு நிபுணர்(?) என்றும் கூறலாம்.சம்பவத்தன்று காலைகூட அவர் அப்படியொரு வேலையைச் செய்ய வேண்டியிருந்தது. அது வேறொன்றுமில்லை. தனக்குப் பிரியமான செல்லப் பூனைக்குட்டியை அந்தப் பக்கமாக வந்த நரி கொன்றுவிடுகிறது. அதைப் பார்த்த ஆலன் டைனமைட்டை உணவில் கலந்து நரிக்குச் சாப்பிடக் கொடுக்கிறார். அவரைப் புரிந்துகொள்ள இந்தக் காட்சி உதவும். அதன்பிறகு படம் வேறு திசைக்குப் பாய்ந்துசெல்கிறது.
பெட்டி நிறைய பணம்
வீட்டை விட்டுப் புறப்பட்ட ஆலன் உள்ளூர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருக்கிறார். அப்போது அவரிடம் சிறிதுநேரம் தனது சூட்கேஸைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, அங்கிருக்கும் கழிறைக்குள் சென்று தாழிட்டுக்கொள்கிறான் இளைஞன் ஒருவன். தரையில் இழுத்துச்செல்லும் மெகா சூட்கேஸ் அது. நூறு வயது முதுமை கொண்ட ஆலனால் அந்தப் பெட்டியை நகர்த்த முடியுமா என்று நாமும் கேள்வியோடு காத்திருக்கிறோம். ஆலனோ அந்த இளைஞனுக்காகக் காத்திருக்கிறார். அப்போது பேருந்து வந்துவிடுகிறது. அந்த சூட்கேஸோடு ஆலன் பேருந்தில் ஏறிவிடுகிறார். அதன் பிறகு ஏராளமான அனுபவங்கள் அவருக்குக் கிடைக்கின்றன. வழியில்தான் அந்தப் பெட்டி நிறைய பணம் இருப்பதையே ஆலன் தெரிந்துகொள்கிறார்.
அம்மாவின் அறிவுரை
அவர் வாழ்வில் இப்படியான எதிர்பாராத பயணங்களைத் தொடர்ந்து எதிர்கொண்டுவருபவர் ஆலன். அப்படியான பயணங்களில்தான் சரித்திரத்தைப் புரட்டிப் போட்டவர்களுடனான சந்திப்புகளும் நட்புகளும் அவருக்கு அமைந்தன. தனிமனித வாழ்க்கை மட்டுமல்ல ஒட்டுமொத்த சரித்திரமும் சாதனைகளும்கூட நிச்சயமற்றவை, தற்செயலானவை என்பதுதான் அவர் கணிப்பு. அதற்கு அடிப்படை, சிறுவனாக இருந்தபோது ஆலனிடம் அவனுடைய தாய் இறக்கும் தறுவாயில் கூறிய வார்த்தைகள்தான். இள வயதிலேயே ஆலனின் டைனமைட்டைப் பயன்படுத்தும் திறமையை உணர்ந்த தாய் அதன் முக்கியத்துவம் அறிந்ததால் ஆலனுக்குச் சில வார்த்தைகளைக் கூறிவிட்டு இறக்கிறார்.
“நீ நிறைய பேசக் கூடாது. உன் செயல்கள் என்னவாக அமைகின்றன என்பதைப் பொறுத்துத்தான் உனது வாழ்க்கைக்கான அர்த்தத்தைச் சொல்ல முடியும். நீ எதைச் செய்தாலும் அந்த ஒன்றுதான் இன்னொன்றுக்கு வழி வகுக்கும்” என்பன போன்ற அம்மாவின் வார்த்தைகள் ஆலன் மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகின்றன.
சர்க்கஸ் குழுவிடம் தஞ்சம்
ஆலன் எனும் கடந்த நூற்றாண்டு மனிதரின் தந்திர உத்திகளில் தடுக்கிவிழுவது சாமானியர்கள் மட்டுமல்ல; சரித்திரப் புருஷர்களும்தான். எந்தவிதச் சிக்கலும் தர்க்கப் பிழையுமின்றி மிக அழகாக வந்துள்ளது என்பதுதான் இந்தத் திரைக்கதையின் உச்சபட்ச வெற்றி.
காட்டுக்குள் சர்க்கஸ் கம்பெனியாரிடம் தஞ்சமடையும் ஆலன், அக்குழுவிடமுள்ள யானையுடன் ஆற்றில் நீந்திக்குளித்து விளையாடுகிறார். பணப்பெட்டியைத் தேடிவரும் கடத்தல் கும்பலின் முக்கிய ஆசாமி அது இவரிடம் இருப்பதைக் கண்டுபிடித்துவிடுகிறார். யானை இருப்பது தெரியாமல் ஆலனையும் சர்க்கஸ் குழுவையும் துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார் அந்த ஆசாமி. எல்லோரும் நடுங்கியவாறே பணப்பெட்டியை அவனிடம் கொண்டு வந்துகொடுக்கும் வரை காத்திராமல் அவனுக்குப் பின்னே வரும் யானை அந்த ஆசாமியை நசுக்கிவிடுகிறது. இப்படிப் படம் முழுவதும் நகைச்சுவைக்குப் பஞ்சமில்லை.
ஒரு நூற்றாண்டைக் கடந்த இந்த மனிதர் உலகின் வேறுவேறு திசைகளின் தலைவர்களோடும் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தில் இடையிடையே காட்டப்படுகின்றன. நிகழ்காலக் கதையோட்டமும் கடந்த காலக் காட்சிகளும் படத்தில் அவ்வப்போது குறுக்கும் நெடுக்குமாக வருகின்றன.
கொஞ்சம் வரலாறு நிறைய நகைச்சுவை
சின்ன வயதிலிருந்து நாட்டு வெடிகுண்டு வைத்து மிரளவைக்கும் ஆலன் புரட்சிகர இயக்கங்களோடு இணைந்து பிரமாண்ட பாலங்களையும் வெடிவைத்துத் தகர்த்தெறிகிறார்; ஆலன், ஸ்பானியப் புரட்சிகர இயக்கத் தலைவர் பிரான்சிஸ்கோவுக்கு நண்பராகிறார். வின்ஸ்டன் சர்ச்சிலைக் கொல்ல முயலும் சதிகாரர்களின் வேலையை முறியடிக்கிறார்; சர்ச்சில், ஸ்டாலின் போன்றவர்களின் விருந்துகளில் பங்கேற்கிறார்; அவர்களது அரசியல் பிரச்சினைகளில் தலையிட்டுச் சில முக்கிய முடிவுகளில் துணை நிற்கிறார். இவற்றை எல்லாம் நம்ப முடியாதுதான். ஆனால், ஆலன் கார்ல்ஸன் அதைச் சாதுரியமாகச் செய்துகாட்டுகிறார்.
ஒருபக்கம் பத்திரிகையாளர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் தேடிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் போலீஸ் தேடியலைய, வேறொரு பக்கம் சூட்கேஸைப் பறிகொடுத்த கிரிமினல்கள் அவரைக் குறிவைத்துத் தேட, துரத்தல், தப்பித்தல் என ஒன்றே முக்கால் மணிநேரப் படக் காட்சிகள் விறுவிறுப்பாகச் செல்கின்றன.
ஆலனாக நடித்த ரோபர்ட் கஸ்டாஃபின் நடிப்புதான் இப்படத்தின் மையத் தூண். நாற்பது வயதுகளிலிருந்து 100 வயது வரை அவர் தோன்றும் வெவ்வேறு பரிணாமங்களில் பலவிதத் தோற்றங்களையும் தனது நடிப்பின் ஆற்றலால் மிளிர வைத்துவிடுகிறார்.
ஜோனாஸ் ஜோனாசன் எனும் ஸ்வீடன் எழுத்தாளர் எழுதி உலகம் முழுவதும் மூன்று மில்லியன் பிரதிகள் விற்பனையான ஒரு நாவலைப் படமாக்குவது சாதாரண காரியமல்ல. அதற்கு மிகப் பெரிய நகைச்சுவை உணர்வும் பரந்து விரிந்த சரித்திர அறிவும் வேண்டும்.
ஸ்வீடன் மக்களை வயிறு வலிக்கச் சிரிக்கவைத்து அவர்களது உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்த சோல்ஸிடான் எனும் தொலைக்காட்சித் தொடரின் இயக்குநர் பெலிக்ஸ் ஹெர்ன்கிரென் எனும் இயக்குநருக்கு இதெல்லாம் கூடுதலாகவே இருக்கிறது எனலாம். ஸ்வீடன் நாட்டில் தயாரிக்கப்பட்ட படங்களிலேயே மூன்றாவது வெற்றிப் படமாகி அதிகம் வருமானத்தைப் பெற்றுத் தந்துள்ளது இத்திரைப்படம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago