தமிழ்த் திரைப்படங்களுடன் ஒப்பிட்டால், இந்தி மொழியில் எடுக்கப்பட்ட முழு நீள நகைச்சுவைப் படங்கள் மிகவும் சொற்பம். அதிலும் வெற்றி அடைந்த நகைச்சுவைப் படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். தமிழ்த் திரை உலகைப்போன்று, அங்கு உடல் மொழி, வசன உச்சரிப்பு, ஏற்ற இறக்கத் தொனிகள் ஆகிய எல்லா அம்சங்களையும் ஒருங்கிணைத்து நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் திறன் பெற்ற நகைச்சுவை நடிகர்கள் அதிகம் இல்லாததே இதற்கு முக்கியக் காரணம். நகைச்சுவைப் படங்களின் வெற்றிக்கு முதுகெலும்பாக விளங்கும் நடிகர்கள், இசை, பாடல் வரிகள், பின்னணிப் பாடகர்கள் ஆகிய அம்சங்கள் ஒப்பீட்டளவில் தமிழ்த் திரையில் மற்ற எல்லா மொழித் திரைப்படங்களையும்விடச் சிறப்பான இடத்தை வகித்து வருகின்றன.
மறுஆக்க எண்ணிக்கையில் சாதனை
இந்தப் பொதுவிதிக்கு விதிவிலக்காகத் திகழ்கிறது ‘படோசன்’ (அடுத்த வீட்டுப் பெண்) என்ற இந்திப் படம். நாகேஷுக்கு இணையான நகைச்சுவை, குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தும் திறன் கொண்ட ஒரே இந்தி நகைச்சுவை நடிகர் எனக் கருதப்படும் அந்த அற்புத நடிகர் மெஹமூத். இவருடன் நமது ஆச்சி மனோரமா இணைந்து நடித்த ‘குன்வாரா பாப்’ என்ற இந்திப் படத்திலும் இவரது அபாரமான நடிப்பைக் காணலாம். அப்படிப்பட்ட மெஹமூத் தயாரித்து, முக்கிய வேடத்தில் நடித்த இந்தத் திரைப்படம், அவருக்கு மட்டுமின்றி இந்தித் திரை உலகுக்கும் ஒரு மைல்கல்லாகத் திகழ்கிறது.
எல்லா மொழிகளுக்கும் எப்பொழுதும் பொருத்தமாக இருக்கும் கதையம்சம் கொண்ட இப்படத்தின் மூல வடிவம் 1952-ல் எழுதப்பட்ட ‘பாஷர் பரி’ என்ற வங்காளக் கதை. அதே வருடம், அதே பெயரில், 300 படங்களுக்கு மேல் நகைச்சுவை நடிகராக நடித்துள்ள வங்காளி நகைச்சுவை நடிகர் பானு முகர்ஜியை மைய்யபடுத்தி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் பின்னர் ‘பக்க இண்டி அம்மாயி’ என்ற ஒரே பெயரில் இரு முறை தெலுங்கிலும் (1953, 1981) ‘அடுத்த வீட்டுப் பெண்’ என்ற பெயரில் தமிழிலும் (1960) ‘படோசன்’ என்று இந்தியிலும் (1969) ‘பக்கட மன ஹுடுகி’ என்ற பெயரில் கன்னடத்திலும் வெளிவந்து அனைத்து மொழிகளிலும் வெற்றி அடைந்தது.
ஒரு தமிழ் பாட்டுவாத்தியார்
‘படோசன்’ இந்திப் படத்தில் ‘மதராசி’ என்று அப்போது அழைக்கப்பட்ட தமிழ் பேசும் பாட்டு வாத்தியார் வேடத்தில், மெஹமூத் வெளிப்படுத்திய சற்று மிகையான, ஆனால் அருமையான நடிப்பு, தமிழ்நாட்டைத் தவிர இந்தியாவெங்கும் மிகவும் அதிகமாக ரசிக்கப்பட்டது. வட இந்திய நகரங்களில் கர்னாடக இசை கற்றுக் கொடுக்கும் தமிழ்ப் பாட்டு வாத்தியார்களை அசலாகச் சித்தரித்துக் காட்டிய நடிப்பு அது.
வட இந்தியாவில் வாழ்ந்த தமிழர்கள் பலர், இந்தி மொழியைச் சரியாகப் பேசுவதில் மட்டுமின்றி, அம்மொழியை எழுதுவதிலும் படிப்பதிலும்கூட இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டவருக்கு இணையாக, சில சமயம் மேலாகவும் திகழ்ந்தார்கள். மெஹமூதின் நடிப்பு தங்களை அவமானப்படுத்தியதாக அவர்கள் கருதினார்கள்.
எனினும், கதைச் சூழலையும் படத்தின் ஜீவனாக விளங்கிய நகைச்சுவை உணர்வையும் கணக்கில் கொண்டு படத்தைப் பார்த்தபோது அந்த எதிர்ப்புணர்வு மெல்ல மறைந்துவிட்டது.
வெற்றியின் பின்னணியில்...
‘படோசன்’ படத்தின் மிகப் பெரிய வெற்றிக்குப் பல காரணங்கள் இருந்தன. அதுவரை பொது வெளியில் அப்பட்டமாகக் காட்டப்படாத தென்னிந்திய மக்களின் இந்தி உச்சரிப்பை நக்கலடிப்பது அதன் ஒரு அம்சம் மட்டுமே. இன்று அந்தப் படத்தைப் பார்த்தாலும், ‘ஆஹா என்ன அழகு’ என்று வியக்க வைக்கும் கதா நாயகி சாய்ராபானுவின் (கிட்டத்தட்ட நம்மூர் லைலாவைப் போன்ற குழந்தைத்தனமான, கன்னத்தில் குழி விழும்) எழில் வதனம், முரட்டுக் கதாபாத்திரங்களின் முதல் தேர்வு எனக் கருதப்பட்ட சுனில் தத் காட்டிய அசட்டுத்தனமான நகைச்சுவை, இவை எல்லாவற்றையும் விஞ்சி நிற்கும் கிஷோர்குமாரின் பன்முக ஆற்றல் ஆகியவை குறிப்பிட வேண்டியவை.
அடுத்த வீட்டுப் பெண் தமிழ்ப் படத்தில் தங்கவேல் நடித்திருந்த நண்பனின் வேடத்தில் நடித்த கிஷோர் குமார், நடிப்பு மட்டுமின்றி நாயகனுக்காகப் பாடப்பட்ட அனைத்துப் பாடல்களையும் பாடியிருந்தார். கர்னாடக, இந்துஸ்தானி இசையைத் திரையில் பாடுவதில் நிகரற்று விளங்கிய மன்னா டேக்கு இணையாக அவருடன் சேர்ந்து கிஷோர் பாடிய ‘ஏக் சதுர நாரி ஹோ சிங்கார்’ என்ற பாடல் காலத்தைக் கடந்து நின்றது. தொடக்கத்தில் கிஷோருடன் சேர்ந்து பாடத் தயங்கிய மன்னா டே இப்பாடலுக்குப் பிறகு, “குரு” என்று அவரை அன்புடன் அழைக்கத் தொடங்கினார்.
எள்ளல் நகைச்சுவை
அந்தப் பாடல் காட்சியின்படி தமிழ்ப் பாட்டு வாத்தியார் மெகமூதுக்காகப் பின்னணி பாடிய மன்னா டே, நடு நடுவில் ‘அய்யோ, என்னாய்யா’ ‘போடா’ ‘கியாஜி’ என்றெல்லாம் சொல்ல வேண்டும். தமிழ், மலையாளம் எல்லாம் ஓரளவுக்கு நன்கு அறிந்த மன்னா டே இதற்கு இணங்கவில்லை. அதனால் மெகமூதுவே அந்தச் சொற்களைத் தனது பிரத்தியேக எள்ளல் குரலில் பேசிப் படத்தின் சுவையை அதிகப்படுத்தினார்.
காமெடிப் படங்களின் பாடல்கள் பிரபலம் அடைந்தாலும் அவற்றின் கவித்துவம் மக்களால் அதிகம் உணரப்படுவதில்லை. இப்படத்திற்காக ராஜேந்திர கிஷன் எழுதிய எல்லாப் பாடல்களும் கருத்துச் செறிவானவை. குறிப்பாக, ‘மேரே சாம்னே வாலி கிடிக்கிமே ஏக் சாந்த் கீ துக்கடா ரஹத்தா ஹை’ என்ற கிஷோர்குமாரின் பாட்டு, ‘ வாடாத புஷ்பமோ’ என்ற அடுத்த வீட்டுப் பெண் படத்தின் பி.பி னிவாஸின் இனிமையான பாடலுக்கு நிகரானது.
இந்திப் பாடலின் பொருள்:
என்னுடைய எதிர்வீட்டு ஜன்னலில்
நிலாவின் ஒரு அங்கம் இருக்கிறது.
சிக்கல் என்னவென்றால் அது
என்னோடு கொஞ்சம் சிடுசிடுப்பைக் காட்டுகிறது.
என்றைக்கு அவளைப் பார்த்தேனோ
அன்றிலிருந்து என் வீட்டில் விளக்கு ஏற்ற
நான் மறந்துவிட்டேன்.
மனம் தடுமாறி அமர்ந்துவிட்டேன்.
அங்கும் இங்கும் செல்வதையே மறந்துவிட்டேன்.
இப்போழுது, எப்போதும் அவள் எழில் வதனமே
என் கண்களில் நிற்கிறது.
மழைகூட வந்து நின்றுவிட்டது.
மேகங்களும் இடித்துப் பொழிந்துவிட்டன.
ஆனால் அவளின் ஒரு பார்வைக்காக
இந்த அழகு ராஜா தவித்துவிட்டேன்.
எப்பொழுது என் விழிகளின்
தாகத்தைத் தீர்ப்பாள் என்ற துக்கத்தில்
இரவு பகல் காத்திருக்கிறேன்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago