இந்தியாவின் முதல் மவுனப் படமான ‘ராஜா ஹரிச்சந்திரா’ 1913-ல் வெளியானது. ஆனால், மவுனப் படங்கள் மக்களின் முழுமையான ஆதரவைப் பெற்று லாபம் சம்பாதிக்க ஆரம்பித்தது நிரந்தரத் திரையரங்குகள் பெருக ஆரம்பித்த இருபதுகளில்தான். எனவேதான் 1920-30 வரையிலான காலகட்டத்தை மவுனப் படங்களின் பொற்காலமாக வரையறுக்கிறார்கள் திரைப்பட வரலாற்றாசிரியர்கள். அப்படிப்பட்ட இருபதுகளில் பம்பாய் படவுலகில் சூப்பர் ஸ்டாராகப் புகழ்க்கொடி நாட்டியவர் ஒரு தமிழர்!
சுமார் 70-க்கும் அதிகமான மவுனப் படங்களில் நடித்தது மட்டுமல்ல, பல படங்களை எழுதி இயக்கி ஒரு திரை எழுத்தாளராகவும் இயக்குநராகவும் வெற்றிக்கொடி நாட்டியவர் அவர். தனது படங்களுக்குத் தானே சண்டைப் பயிற்சியாளராக விளங்கியவர். துணிந்து படங்களைத் தயாரித்தவர் என்று பல சாதனைகளை நிகழ்த்திக் காட்டினார். அதுமட்டுமல்ல, தமிழ் சினிமா பேசத் தொடங்கியபிறகு அதை சமூகச் சீர்திருத்தத்துக்கான சாதனமாகக் கண்டதும் இந்த முன்னோடிதான்.
ஒரு திரைப்படத்துக்கான கதையைப் புராணத்திலிருந்து எழுதுவதைப் போல் நாவலிருந்தும் எழுதலாம் என்று தமிழ் சினிமாவுக்கு முதல் ‘நாவல் சினிமா’வை உருவாக்கி வரலாற்றில் இடம்பிடித்தார். அத்துடன் தமிழின் முதல் ‘சமூகப் பட’த்தையும் இயக்கித் தமிழ் சினிமா வரலாற்றில் தனித் தடம் பதித்துச் சென்றார். அவர்தான் ராஜா சாண்டோ.
புதுக்கோட்டையிலிருந்து பம்பாய்க்கு
1894-ல் பொள்ளாச்சியில் பிறந்து புதுக்கோட்டையில் வளர்ந்த ராஜா சாண்டோவின் இயற்பெயர் பி.கே. நாகலிங்கம். பாடி பில்டிங், ஜிம்னாஸ்டிக்ஸ், மல்யுத்தம் ஆகிய உடல் வளக் கலையில் இளவயது முதலே ஆர்வம் கொண்டிருந்த அவர், தனது உடலில் ‘டுவெல் பேக்ஸ்’ எனப்படும் 12 தசைக் கட்டுக்களை உருவாக்கி ஆணழகனாக வலம் வந்தார். தனது நண்பர்களையும் உடல் வளக் கலையில் ஊக்குவித்தார். நண்பர்களைக் கொண்டு தனக்கென்று ஒரு தனிக் குழுவை அமைத்து ‘பாடி பில்டிங் ஷோ’நடத்தினார்.
நாடகமும் தெருக்கூத்தும் புகழ்பெற்றிருந்த காலத்தில் இவரது முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. புதுக்கோட்டை அரண்மனையில் மன்னர் முன் முதன்முதலாகத் தனது 18-வது வயதில் பாடி பில்டிங் ஷோ நடத்தினார். அதற்குக் கிடைத்த வரவேற்பால் திருவிதாங்கூர், கொல்லங்கோடு, திருச்சி, தஞ்சை ஆகிய அரண்மனைகளிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. கொல்லங்கோடு அரண்மனைக்குச் சென்றிருந்தபோது அங்கு வந்திருந்த பரோடா மன்னர், ராஜா சாண்டோவின் திறமையைக் கண்டு வியந்து பாராட்டியதோடு 100 ரூபாய் பண உதவிசெய்தார்.
“இந்தத் திறமையை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல் நாடகத்தில் நடிக்கச் செல்” என்று நண்பர்கள் அறிவுறுத்தியபோது நாடகங்களை ஏனோ சாண்டோ வெறுத்தார். பின்னர் திருச்சியிலும் கோவையிலும் மவுனப் படங்களைக் கண்டு வியந்த அவர் சினிமாவில் நடிக்கும் முடிவுடன் 20 வயதில் மதராஸ் வந்து சேர்ந்தார்.
திரைக்குமுன் குஸ்தி
ஆனால் திரையரங்கில் ஜிம்னாஸ்டிக், குஸ்தி போன்ற உடல் வள விளையாட்டுகளைப் படம் திரையிடும் முன் செய்துகாட்டும்படி அவரை அழைத்தார் மதராஸ் ஒற்றை வாடை திரையரங்கின் முதலாளி. திரையில் நடிக்க வந்தவர் வெள்ளித்திரையின் முன்னால் தனது ஷோவை நடத்த, கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார். அந்தத் திரையரங்கில் மாதக் கணக்கில் சாண்டோவின் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அதைக் காணவந்தார் பம்பாயில் புகழ்பெற்ற பாடி பில்டராக விளங்கிய ஓமர் ஷோபானி.
சாண்டோவின் திறமையைக் கண்கூடாகக் கண்டு அவரைப் பம்பாய் அழைத்துச் சென்றார். அங்கேயும் போய் சும்மா இருக்காமல் பாம்பாய் வைசிராய் ஜெனரலின் அரண்மனையில் தனது திறமையை நிகழ்த்திக் காட்ட அதைக் கண்டு அவரைப் பாராட்டினார் அன்றைய வைசிராயின் துணைவியாரான லேடி வெலிங்டன். இதன் பிறகும் சும்மா இருப்பாரா சாண்டோ.. பம்பாயில் அன்று புகழ்பெற்று விளங்கிய நேஷனல் ஸ்டூடியோ பிலிம் கம்பெனியில் நுழைந்து “நான் நடிக்க வந்திருக்கிறேன்” எனக் கம்பீரமாகக் கூற, அதைக் கேட்ட அந்த ஸ்டூடியோவின் முதலாளி எஸ். என். பதங்கர், சாண்டோவின் தன்னம்பிக்கையைக் கண்டு “முதலில் உன்னைச் சண்டை நடிகராக நியமிக்கிறேன்” என்று முதல் வாய்ப்பைத் தந்தார்.
நேஷனல் ஸ்டூடியோவில் சேர்ந்த இரண்டாம் ஆண்டிலேயே அந்தக் கம்பெனியின் கதாநாயகன் ஆனார். பதங்கரின் இயக்கத்தில் 1922-ல் வெளியான ‘பக்தபோதனா’என்ற மவுனப்படத்தில்101 ரூபாய் ஊதியம் வாங்கிக் கொண்டு ராஜா சாண்டோ கேமரா முன்பு கதாநாயகனாக நின்றார். அறிமுகப்படமே பெரிய வெற்றியைச் சந்தித்ததால் பம்பாய் படவுலகெங்கும் அவரது புகழ் பரவியது.
எழுத்தாளர், இயக்குநர்
நேஷனல் ஸ்டூடியோ தவிர பம்பாயின் கோஹினூர் பிலிம்ஸ், லட்சுமி பிலிம்ஸ், ரஞ்சித் ஸ்டூடியோஸ் என அன்று மவுனப்பட உலகை ஆண்டு வந்த நிறுவனங்கள் சாண்டோவைக் கொண்டாடின. சிறந்த நடிகர் என்று பெயர் பெற்ற பிறகு ரஞ்சித் ஸ்டுடியின் இயக்குநராக மாத சம்பளத்துக்கு வேலையில் சேர்ந்து சாண்டோ இயக்கிய முதல் படம் 1928-ல் வெளியான ‘சினேஹ் ஜோதி’.
பல மவுனப் படங்களை இயக்கிய பின் அவரது மனதில் ஒரு ஏக்கம் எழுந்தது, “மதராஸ் மண்ணை மறந்துவிட்டோமே” என்று. உடன் மதராஸ் திரும்பிய அவர் ஆர். பத்மநாபனின் அசோசியேட் ஃபிலிம் நிறுவனத்துக்காகப் பல மவுனப் படங்களை இயக்கி, நடிக்கவும் செய்தார். அவற்றில் ‘பேயும் பெண்ணும்’ (1930), ‘நந்தனார்’ (1930), ‘அனாதைப்பெண்’ எனத் தமிழ் மக்களுக்கான மவுனப் படங்களைச் சமூகச் சீர்திருத்தப் படங்களாக உருவாக்கினார். அதனால் அவருக்குத் தமிழில் படங்களை இயக்கும் வாய்ப்புகள் குறைந்தது.
மைல் கல் சாதனைகள்
இந்த நேரத்தில் பேசும்பட யுகம் தொடங்கியது. “ பேசும் படங்கள் நடிகர்களின் திறமையை மங்கச் செய்துவிடும்” என்று ஆரம்பத்தில் சாண்டோ கடும் விமர்சனம் செய்தாலும் மவுனப் படங்களிலேயே தேங்கி நிற்கவில்லை. பம்பாய் சென்று பல பேசும் படங்களை இயக்கினார். பின்னர் 1935-ல் மதாராஸ் திரும்பி இவர் இயக்கிய முதல் தமிழ்ப் பேசும்படம் ‘மேனகா’. அது தமிழ் சினிமாவின் முதல் சமூகச் சீர்திருத்தப் படம் என்ற பெருமையைப் பெற்றது.
நாடகவுலகில் புகழ்பெற்று நின்ற டி.கே.எஸ் சகோதரர்களின் நாடகத்துக்கு அவர் உண்மையாகவே திரைவடிவம் தந்தார். இதில்தான் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், சகஸ்ரநாமம் ஆகிய ஜாம்பவான்கள் திரைக்கு அறிமுகமானார்கள். இவர்களை மட்டுமல்ல காளி என். ரத்னத்தை ‘சந்திரகாந்தா’(1936) படத்தின் மூலம் புகழ்பெறச் செய்தார்.
படத்தைத் தயாரித்த கம்பெனி, முதலாளி, இயக்குநர் ஆகியோரின் பெயர்கள் மட்டுமே திரையில் காட்டப்பட்டு வந்த நிலையில் அவர்களோடு படத்தில் நடித்த நடிகர், நடிகையர், சங்கீதக்காரர் ஆகியோருக்கும் கேமரா மேனுக்கும் திரையில் பெயர் போட வேண்டும் என்ற உரிமையை பாம்பாயில் போராடிப் பெற்றுக்கொடுத்ததுடன் அதைத் தனது தமிழ்ப் படங்களில் பின்பற்றி வரலாற்றில் மற்றொரு மைல்கல் சாதனையைப் பொரித்தார்.
பின்னாளில் தமிழ் சினிமாவை ஒரு சமூகச் சீர்திருத்த ஆயுதமாகப் பயன்படுத்தித் தமிழ் சினிமாவின் தந்தையாக உயர்ந்த கே.சுப்ரமணியம் திரைக்கலை நுட்பத்தைக் கற்றுக்கொண்டது ராஜா சாண்டோவிடம்தான். அப்படிப்பட்ட முன்னோடியான இவர் இயக்கிய கடைசிப் படம் எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்த ‘சிவகவி’ (1943). இதே ஆண்டில் சாண்டோ மறைந்தபோது வழக்கம்போல் அது வெறும் பெட்டிச் செய்தியானது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago