ஜெயலலிதா செய்த உதவி: ஸ்டில்ஸ் ஞானம் பேட்டி

By ச.கார்த்திகேயன்

திரையுலகிலும் தமிழ் வாசகர் மத்தியிலும் பரிச்சயமான பெயர் ‘ஸ்டில்ஸ்' ஞானம். சினிமா நட்சத்திரங்களின் ஒளிப்படங்களைக் காலவாரியாக சேகரித்து வைத்திருக்கும் தனிமனித ஆவணக் காப்பகம் இவர். இப்படிச் சேகரித்த படங்களைப் பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் கொடுத்துவரும் இவருக்கு முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்திலிருந்து ஒரு அழைப்பு... அடித்துப் பிடித்து போயஸ் தோட்டம் சென்றவர், அத்தனை சீக்கிரம் சந்திக்க முடியாத முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துத் திரும்பினார். அந்த அனுபவத்தை இப்போது நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ஞானம்.

உங்களைப் பற்றி கொஞ்சம் அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்....

முதல்வர் ஜெயலலிதா கதாநாயகியான அறிமுகமான படம், ‘வெண்ணிற ஆடை’. இந்தப் படத்துக்கு திருச்சி அருணாசலம்தான் ஒளிப்படக்காரர். அவரிடம் உதவியாளராகச் சேர்ந்தேன். அவர் செல்லும் படப்பிடிப்புகளுக்கெல்லாம் செல்வேன். அதன் பின்னர் கால மாற்றத்தால், திரைப்பட ஒளிப்பட ஆவணக் காப்பகத்தை தொடங்கி நடத்திவருகிறேன்.

பத்திரிகைகளிலிருந்து கேட்கும்போதும் நடிகர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் கேட்கும்போதும் ஒளிப்படங்களாகவும் டிஜிட்டல் வடிவிலும் கொடுத்துவருவதை எனது வாழ்க்கைத் தொழிலாகக் கடந்த 20 ஆண்டுகளாகச் செய்துவருகிறேன். எனக்கு அதற்காகத் தரப்படும் மதிப்பூதியத்தை விட ‘படங்கள் உதவி: ஞானம்’ என்று எனது பெயர் பத்திரிகைகளும் புத்தகங்களிலும் அச்சாகிவருவதில் கிடைக்கும் ஆத்மா திருப்திதான் இந்தத் துறையில் என்னை இயக்கிக்கொண்டிருக்கிறது.

சினிமா ஒளிப்படங்களைச் சேகரிக்க வேண்டும் என்ற ஆர்வம் எப்படி ஏற்பட்டது?

திருச்சி அருணாசலத்திடம் உதவியாளராக இருந்தபோது, சினிமா போஸ்டர் வடிவமைக்கும் உபால்டு, மேக்ஸ் போன்ற ஜாம்பவான்ளுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர்களிடம் பல ஒளிப்படங்கள், போஸ்டர்கள் டிசைனுக்காக வரும். அப்போது பொழுதுபோக்காக அவற்றைச் சேகரிக்கத் தொடங்கினேன். இவர்களைச் சந்திக்க வரும் பல ஒளிப்பட கலைஞர்களுடன் நட்பு ஏற்பட்டது. 1931-ம் ஆண்டு தொடங்கி தமிழில் வெளியான திரைப்படங்களில், சுமார் 80 சதவீதத் திரைப்படங்களின் ஒளிப்படங்கள் தற்போது என்னிடம் உள்ளன. மொத்தம் 4 லட்சம் ஒளிப்படங்கள், போஸ்டர்களைச் சேகரித்துப் பாதுகாத்துவருகிறேன்.

முதல்வரைச் சந்திக்கும் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?

முதல்வர் ஜெயலலிதாவின் பழைய ஒளிப்படங்களையும் நான் சேகரித்து வைத்திருக்கிறேன். அவற்றில் பல அபூர்வமான படங்கள் நாளிதழ்களில் வெளிவந்ததைப் பார்த்துவிட்டு என்னை அழைத்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன் அவரை இரு முறை சந்தித்தேன். என்னைப் போன்ற சாமனியனை அழைப்பார் என்றோ, அவரை நான் நேரில் சந்திப்பேன் என்றோ கனவிலும் நினைக்கவில்லை.

அவருடனான சந்திப்பின்போது என்ன நிகழ்ந்தது?

தான் இடம்பெற்றுள்ள ஒளிப் படங்களின் தொகுப்பை ஜெயலலிதா பார்வையிட விரும்புவதாக கார்டனிலிருந்து தெரிவித்திருந்தனர். அவர் இடம்பெற்றிருந்த சுமார் 800 ஒளிப்படங்களுடன் போயஸ் கார்டனுக்குச் சென்றிருந்தேன். படங்களைப் பார்வையிட்ட அவர், அவற்றிலிருந்து சுமார் 700 படங்களைத் தேர்வு செய்து, ஒரு ஆல்பமாகச் செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அசல் படத்தில் உள்ள தரம் அப்படியே வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அடுத்த சந்திப்பின்போது ஆல்பம் செய்து கொடுத்துவிட்டேன்.

முதல் சந்திப்பின்போது, உங்களிடம் ஜெயலலிதா என்ன பேசினார்? எப்படி நடந்துகொண்டார்?

இந்த எளியவனைக் கைகூப்பி வணங்கி வரவேற்றார். நானும் அவரை வணங்கி “அம்மா” என்றேன். என்னைப் பற்றியும், எனது தொழில், பொருளாதாரம் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் நான் கொண்டு சென்றிருந்த ஒளிப்படங்களைப் பார்ப்பதில் மூழ்கிவிட்டார். பழைய ஒளிப்படங்களைப் பார்க்கும்போது, அவர் முகத்தில் ஒளி படர்ந்தது.

பல படங்களுக்கு புன்முறுவல் பூத்ததைப் பார்த்தேன். அவரது முகத்தில் பழைய நினைவுகளின் எண்ண ஓட்டம் பரவியதையும் கண்டேன். அந்த அறையே அமைதியாக இருந்தது. அவர் தனது தனிப் படங்கள், எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோருடன் சேர்ந்திருக்கும் படங்களை அதிகமாகத் தேர்வு செய்து கொடுத்தார்.

இரண்டாவது சந்திப்பு எப்படி இருந்தது?

நான் புகைப்பட ஆல்பத்தை கொடுப்பதற்காக இரண்டாவது முறையாகச் சென்றிருந்தேன். ஆல்பத்தை அவரிடம் கொடுத்தேன். வாங்கிப் பார்த்தவரின் முகம் மகிழ்ச்சியால் நிறைந்தது. “ மிக்க நன்றி” என்றார். பிறகு என்னைப் பார்த்து எவ்வளவு கட்டணம் வழங்க வேண்டும் என்று என்னிடம் கேட்பார் என்று நினைத்தேன். ஆனால், அவர் அப்படிக் கேட்கவில்லை. அவரே ஒரு தொகையைக் கொடுத்தார். அவரது உதவி என்னைக் கைதூக்கிவிட்டது.

பத்திரிகைகளில் உங்களுக்குக் கிடைத்துவரும் மதிப்பூதியம் போதுமானதாக இருக்கிறதா?

தற்போது பத்திரிகைகளும் கலைஞர்களும் கவுரவமான மதிப்பூதியத்தை எனக்கு வழங்கிவருகிறார்கள். ஆனால், இப்படிக் கிடைக்கும் தொகையின் பெரும் பகுதியைப் படங்களைப் பாதுகாக்கவே செலவிட்டுவிடுகிறேன்.படங்களைப் பாதுகாக்க ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்துப் பயன்படுத்திவருகிறேன். என்னைப் பற்றி என் நண்பர்கள் சொல்லும்போது “சினிமா வரலாற்றை ஒரு வீட்டுக்குள் அடைத்து வைத்திருக்கிறார் இந்த ஞானம்” என்பார்கள்.

இதுபோன்ற பாராட்டுகள் எனக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தந்தாலும் என்னிடம் இருக்கும் எல்லாப் படங்களையும் டிஜிட்டல்மயமாக்க வேண்டும் என்பதுதான் தற்போது இருக்கும் மிகப் பெரிய சவால். அதற்கு அரசுத் தரப்பிலோ திரையுலகிலிருந்தோ யார் வந்து உதவி செய்தாலும் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

20 mins ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்