தமிழ் சினிமா 2016: கவனம் ஈர்த்த இயக்குநர்கள்

By ரிஷி

ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக் கான திரைப்படங்கள் தமிழில் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை முழுமையான பொழுதுபோக்குப் படங்களே. திரைப்படம் பார்க்க வரும் ரசிகர்கள் பொழுதைப் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் என்னும் உந்துதலில் மாறுபட்ட முயற்சிகளை மேற்கொள்ளும் ஓரிரண்டு படங்களே ஒவ்வோர் ஆண்டும் தேறுகின்றன.

இந்த ஆண்டும் இந்தப் போக்கிலிருந்து தமிழ்ப் படங்கள் வேறுபடவில்லை என்பதையே 2016-ல் வெளியான தமிழ்ப் படங்கள் நிரூபிக்கின்றன. கறார்த் தன்மையுடன் சொல்ல வேண்டுமானால் தமிழ்த் திரைப்படங்களில் இயக்குநர்களின் பிடி தொடர்ந்து தளர்ந்துவருகிறதோ என்னும் அச்சத்தையே இந்த ஆண்டில் வெளியான பல படங்கள் உருவாக்குகின்றன. சொல்லிக் கொள்ளத் தக்கவையாக, ‘விசாரணை', ‘ஜோக்கர்', ‘மாவீரன் கிட்டு' போன்ற சில படங்களையே சுட்ட முடிகிறது.

வெற்றி மாறனும் விசாரணையும்

சிறந்த வெளிநாட்டுப் படம் என்னும் பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டிருக்கும் ‘விசாரணை'யை இயக்கிய வெற்றி மாறன், தொடர்ந்து ஓரளவு நம்பிக்கைக்குரிய இயக்குநராக இருக்கிறார் என்பது முக்கியமான விஷயமாகப் படுகிறது. விசாரணை பல விழாக்களில் விருதுகளைப் பெற்றிருந்தபோதும், இந்தப் படம் கலாபூர்வமாகப் பல சறுக்கல்களைக் கொண்டிருந்தது என்று எழுந்த விமர்சனங்களையும் மறுக்க முடியாது. ஆனாலும்கூட வெற்றி மாறன் உருப்படியான படத்தைத் தருவார் என்னும் நம்பிக்கை இன்னும் அடிவாங்காமலேயே உள்ளது என்பதை ஆரோக்கியமாகப் பார்க்க வேண்டியதிருக்கிறது.

கவனிக்கப்படாத தலித் படம்

‘மாவீரன் கிட்டு’ படத்தை ஒரு தலித் படம் எனச் சொல்லலாம். பா. இரஞ்சித்தால் இயக்கப்பட்ட, தலித் படம் எனப் பெரும்பாலானோரால் கருதப்பட்ட ரஜினிகாந்த் நடித்த கபாலி என்னும் சராசரியான மசாலா சினிமா கவனிக்கப்பட்ட அளவுக்கு மாவீரன் கிட்டு கவனிக்கப்படாமைக்குக் காரணம், அது வெளியான நேரம் என்று நினைத்துக்கொள்வது நியாயமானதுதானா என்பது சந்தேகமே. ரஜினி என்னும் நடிகர் நடித்த ஒரு படத்துக்கு ஊடகங்களில் கிடைத்த முக்கியத்துவம் மாவீரன் கிட்டு போன்ற உருப்படியான முயற்சிக்குக் கிடைக்கவில்லை என்பதே உண்மை.

எப்போதும் ஏதாவது ஒன்றை வித்தியாசமாகச் செய்து ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்துவிட வேண்டும் என்ற தன்முனைப்புடனேயே திரையில் தோன்றும் பார்த்திபன் மாதிரியான ஒரு நடிகரின் வாயைக் கட்டிப் படம் எடுப்பது என்பது மூக்கால் உணவு உண்பதைப் போல. அதைத் திறம்பட நிறைவேற்றியிருக்கிறார் என்றால் சுசீந்திரனின் திறமையைச் சாதாரணமாக எடைபோட்டுவிட முடியாது. சாதியப் படங்களில் பொங்கி வழியும் சத்தமின்றி, ரத்தமின்றி ஒரு சமூகம் நிமிர்ந்தெழத் தன் உயிரைத் தந்த தியாகி ஒருவரின் தியாகத்தை ஆரவாரமின்றி அமர்த்தலாகச் சொன்ன விதத்தில் மாவீரன் கிட்டு மூலம் சுசீந்திரன் நிமிர்ந்து நிற்கிறார் என்பதில் சந்தேகமில்லை.

ஜோக்கரின் சலனங்கள்

ஜோக்கர் திரைப்படத்தைப் பொறுத்த அளவில் ராஜுமுருகன் இயக்கிய ‘குக்கூ’வை ஒப்பிடும்போது, ‘ஜோக்கர்’ சற்று மேம்பட்டிருந்தது. முழுக்க முழுக்க செயற்கைத் தன்மை கொண்ட படம் குக்கூ. ஆனால், ஜோக்கருக்கு அந்த விபத்து நேரவில்லை. அடித்தட்டு நிலையில் வாழும் மனிதர்களின் வாழ்க்கையை அரசு நிர்வாகம் எப்படிப் பாதிக்கிறது என்பதை மனதில் பதியும் வகையில் படமாக்கியிருந்தார் ராஜுமுருகன்.

பெரிய நட்சத்திரங் களை நம்பாமல் கதையின் பிரதான வேடங்களுக்கே சோமசுந்தரத்தையும் மு.ராமசாமியையும் பயன்படுத்தி யிருந்த தன்மை இயக்குநரின் தன்னம்பிக்கையை வெளிக்காட்டியது. எதைச் சொல்ல வேண்டுமோ அதை எப்படிச் சொல்ல வேண்டுமோ அப்படிச் சொல்லியிருந்த விதத்தில் ஜோக்கரைத் தந்த ராஜுமுருகனின் அடுத்த படைப்பைப் பொருட்படுத்தக்கதாகக் கருதலாம் என்னும் நம்பிக்கையை அளித்திருக்கிறது ஜோக்கர்.

மணிகண்டன் பாணி சினிமா

‘காக்கா முட்டை’ மூலம் எதிர் பார்ப்பை உருவாக்கிய மணிகண்டனின் ‘குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய திரைப்படங்கள் இந்த ஆண்டில் வெளிவந்தன. ‘குற்றமே தண்டனை’ படமாக்கப்பட்ட விதத்தில் வித்தியாசம் தெரிந்தது, திரைக்கதை, இயக்கம் போன்றவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் அது முழுமையான திரைப்படமல்ல. திரைக்கதையில் ‘காக்கா முட்டை’யில் வெளிப்பட்டிருந்த நேர்த்தியை இதில் காண முடியவில்லை. ஆண்டவன் கட்டளை பொழுதுபோக்குத் திரைப்படமே. என்றபோதும் அதில் இடம்பெற்றிருந்த நீதிமன்றக் காட்சிகளில் தென்பட்ட இயல்புத்தன்மை மணிகண்டன் யாரென அடையாளம் காட்டியது. இந்த நீதிமன்றக் காட்சிகளில் மராட்டியப் படமான கோர்ட்டின் சாயலை உணர முடிந்தது.

நலனும் சுப்புராஜும்

‘சூது கவ்வும்’ படத்தின் வாயிலாகப் பலத்த கவனத்தை ஈர்த்திருந்த நலன் குமாரசாமியின் இயக்கத்தில், விஜய் சேதுபதியின் நடிப்பில் இந்த ஆண்டு ‘காதலும் கடந்து போகும்’ படம் வெளியானது. இது ஒரு மறு ஆக்கப்படம் என்பதால் அதில் இயக்குநருக்குப் பெரிய வேலையில்லை. மூலப் படத்தை அப்படியே தமிழில் தந்திருந்தார் என்பதைத் தவிர வேறு குறிப்பிட்டுச் சொல்ல அப்படத்தில் எதுவுமில்லை. அது ஒரு வழக்கமான பொழுதுபோக்குத் திரைப்படம். அதில் இயக்குநருக்குரிய தனித்துவம் எதுவும் பளிச்சிடவில்லை.

‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’ படங்களின் மூலம் தொடர்ந்து முன்னேறிவந்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘இறைவி’யும் இந்த ஆண்டு வெளியானது. இந்தப் படத்தைச் சிறப்பான படம் என்று சொல்ல எந்த ஒரு தடயத்தையும் இப்படம் விட்டுச்செல்ல வில்லை. பெரும் பாய்ச்சல் எடுக்க விரும்பி, பாதியில் விழுந்தது போன்ற சித்திரத்தையே படம் தந்தது.

இறுதிச் சுற்றும் இன்னும் சில படங்களும்

ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் தமிழ்த் திரையில் பெண் இயக்குநர்கள் சரியான இடத்தைப் பிடிப்பதற்குப் பெரும் பிரயத்தனம் தேவைப்படுகிறது என்னும் நிலைமையில் இந்த ஆண்டும் எந்த மாற்றமும் இல்லை. இந்த ஆண்டில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘இறுதிச்சுற்று’ அவருக்குக் கவுரமான ஓரிடத்தை அளித்திருக்கிறது. ஓரளவு கவனிக்கத்தக்க விதத்தில் இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் அவர் இப்படத்தை உருவாக்கியிருப்பதாகவே பரவலான விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.

இவற்றைத் தவிர்த்து ‘உறியடி’, ‘ஒருநாள் கூத்து’, ‘மெட்ரோ’, ‘அப்பா’, ‘தர்மதுரை’ போன்ற படங்கள் வெளியான சமயத்தில் முணுமுணுப்புகள் எழுந்தன. தமிழில் முக்கிய இயக்குநராகக் கருதப்படும் பாலாவின் ‘தாரை தப்பட்டை’ பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது. இவ்வளவு மோசமான படத்தை இனி பாலாவாலேயே உருவாக்க முடியாது என்பதையே இந்தப் படம் உணர்த்தியது.

சற்றேறக்குறைய 200 படங்கள் தமிழில் இந்த ஆண்டு தயாரிக்கப்பட்டிருக்கின்றன இதில் சில படங்களே மாற்றுப்பட முயற்சிகள், சில படங்களே வணிகரீதியிலும் பெரிய வெற்றிபெற்றிருக்கின்றன. இதுபோக எஞ்சிய நூற்றுக்கணக்கான படங்கள் உருவாக்கப்படுவதன் நோக்கம்தான் என்ன? இது குறித்து அந்த இயக்குநர்கள் யோசிப்பது அவர்களுக்கும் தமிழ்த் திரைப்படத் துறைக்கும் நலம் பயக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்