தமிழ் சினிமா 100 நூற்றாண்டு நிறைவு: மறக்கக் கூடாத முன்னோடிகள்

By பிரதீப் மாதவன்

தமிழ் சினிமா ஒரு நூற்றாண்டை நிறைவு செய்கிறது. 1916-ல் தமிழரான நடராஜ முதலியார் கீசகவதம் திரைப்படத்தை எடுத்ததை வைத்து தமிழ் சினிமா நூற்றாண்டு தொடங்கியதாகக் கொள்ளலாம். ‘இது நமது சினிமா, நமக்குப் பெருமை சேர்த்த சினிமா’என்று இன்று மார்தட்டிக்கொள்கிறோம். ஆனால், நமக்குப் பாதை போட்டுக்கொடுத்த முன்னோடிகளை நாம் எளிதாகக் கடந்து வந்துவிடுகிறோம். சினிமா நூற்றாண்டு நம்மைக் கடந்து செல்லும் இந்த நேரத்தில் நாம் மறக்கக்கூடாத இரண்டு முக்கிய முன்னோடிகள் பற்றிய அறிமுகத்தைப் பார்க்கலாம்.

சாதனைகள் படைத்த சாமிக்கண்ணு

1892-ல் கண்டுபிடிக்கப்பட்ட கைனடோஸ்கோப் (Kinetoscope) ஒளிப்பதிவுக் கருவியைக் கொண்டு, பிரான்ஸ் நாட்டின் லூமியர் சகோதரர்கள் முதல் சலனத் துண்டுத் படத்தைப் பதிவுசெய்தனர். அதை பாரிஸில் 1895, டிசம்பர் 28-ம் தேதி திரையிட்டுக் காட்டினார்கள். அதிலிருந்து சரியாகப் பத்து வருடங்கள் கழித்து 1905, ஏப்ரல் மாதம், ஈஸ்டர் பண்டிகைக்கு முந்திய தினத்தன்று திருச்சியில் தென்னிந்தியாவில் முதன் முதலாக ஒரு சலனப் படத்தைத் திரையிட்டார் 24 வயதே நிரம்பிய தமிழ் இளைஞர் ஒருவர். புனித ஜோசப் கல்லூரியை அடுத்திருந்த பொது மைதானத்தில் துணியால் அமைக்கப்பட்டிருந்த ‘டெண்ட்’ கூடாரத்துக்குள் ஒளிர்ந்த அந்த மவுனத் திரைப்படம் ‘இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கைச் சரிதம்’ (Life of Jesus) என்ற பெயரில் சுமார் 45 நிமிடங்கள் ஓடியது.

அதைத் திரையிட்ட சாமிக்கண்ணு வின்சென்ட் பிரிட்டிஷ் ரயில்வேயில் ட்ராஃப்ட்மேனாக இருந்தவர். இயேசுவின் வாழ்க்கைச் சரிதம் உட்பட ஐந்து விதமான துண்டுப் படங்களைப் பல ஆசிய நாடுகளில் திரையிட்டுவந்த பிரான்ஸ் நாட்டின் சினிமா எக்ஸிபிட்டரான டுபாந்த் தனது இந்தியப் பயணத்தில் திருச்சி வந்தபோது உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். அதனால் தனது திரையிடல் கருவி, துண்டுப் படங்கள் ஆகியவற்றை இங்கேயே விற்றுவிட்டு நாடு திரும்ப முடிவு செய்தார். திருச்சியில் பணியாற்றிவந்த சாமிக்கண்ணு வின்செண்ட் இதைக் கேள்விப்பட்டு அவரிடமிருந்து 1905-ம் வருடம் பிப்ரவரி மாதம் அவற்றை வாங்கிக்கொண்டார்.

அதன் பிறகு அந்த எலெக்ட்ரிக் கார்பன் கருவியை இயக்கக் கற்றுக்கொண்டார். பின் திருச்சியில் முதல் திரையிடலைச் செய்தபோது மக்கள் அதற்குத் தந்த வரவேற்பைப் கண்டு தன் வேலையை ராஜிநாமா செய்துவிட்டுக் கிளம்பினார். தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும் பயணம் செய்து மக்களிடம் சினிமா எனும் அதிசயத்தை அறிமுகப்படுத்தினார். பின்னர் கேரளத்தின் மலபார், வடஇந்தியாவின் முக்கிய நகரங்கள், ஆப்கானிஸ்தானின் பெஷாவர், ரங்கூன், சிங்கப்பூர், மலேசியா எனப் பல நாடுகளுக்கு சுமார் மூன்று ஆண்டுகள் சுற்றித்திரிந்து வெற்றிகரமான எக்ஸிபிட்டராகப் பொருளீட்டியவர் தனது சொந்த ஊரான கோவைக்குத் திரும்பி அங்கே தென்னிந்தியாவின் முதல் நிரந்தரத் திரையரங்கை 1914- ல் கட்டி, அதற்கு ‘வெரைட்டி ஹால்’ என்று பெயரிட்டார். அதன் பிறகு தனது சகோதரர் ஜேம்ஸ் வின்செண்ட்டையும் தனது சினிமாத் தொழிலில் இணைத்துக்கொண்டு கோவையில் பல திரையரங்குகளைக் கட்டினார்கள்.

சினிமாவை அதிகமாக நேசித்த சாமிக்கண்ணு நவீன அறிவியல் சார்ந்த தொழில்களில் விரிவாக்கம் செய்யவும் தவறவில்லை. ஆயில் என்ஜின் ஒன்றை வாங்கி அதன் மூலம் தனது திரையரங்குக்கான மின்சாரத்தை உற்பத்திசெய்த அவர், பின் இதே வகையில் மின் உற்பத்தி செய்து அதை விற்பனை செய்யும் நிறுவனத்தைத் தொடங்கி நடத்தியதன் மூலம் கோவைக்கு மின்னொளியைக் கொண்டுவந்த சாதனையை நிகழ்த்தினார். கோவையின் முதல் மின்சார அச்சகத்தை நிறுவியதோடு ‘மஹாஜனநேசன்’ என்ற காங்கிரஸ் ஆதரவு பத்திரிகை ஒன்றையும் நடத்தினார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, திரைப்படமே அவரை ஆக்கிரமித்திருந்ததால் திரைப்படத் தயாரிப்பாளராக மாறினார். அன்று திரைப்படங்களைத் தயாரிக்க கல்கத்தா செல்ல வேண்டியிருந்த நிலையில் அங்கு சென்று கல்கத்தாவின் பயனியர் ஸ்டியோவில் ‘சம்பூர்ண ஹரிச்சந்திரா’ என்ற பெயரில் முழுவதும் தமிழ் வசனங்கள், பாடல்கள் அடங்கிய முதல் தமிழ்ப் படத்தை தயாரித்து 1935-ல் வெளியிட்டார். அடுத்து, இவர் தயாரித்த ‘வள்ளித் திருமணம்’ தமிழ் சினிமாவின் முதல் பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப் படமாக அமைந்தது. இந்த இரண்டு படங்களிலும் தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி டி.பி. ராஜலட்சுமி நடித்திருந்தார். சாமிக்கண்ணு வின்சென்ட்டின் திரையுலகச் சாதனைகள் காலத்தால் மறக்கப்பட்டது துயரம்.

பன்முக ஆளுமை டி.பி. ராஜலட்சுமி

நாடகங்களில் ஆண்களே பெண் வேடம் போட்டுவந்த நாட்கள் அவை. பாலர் நாடக சபாக்களில் பெண் பிள்ளைகளுக்கு இடம் மறுக்கப்பட்ட காலத்தில் நாடகத் தந்தை சங்கரதாஸ் சாமிகள் சிபாரிசுடன் திருச்சி சி.எஸ். சாமண்ணா நாடக கம்பெனியில் சேர்த்துக்கொள்ளப்பட்டாள் 11 வயதுச் சிறுமி. அவள்தான் தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகியாகவும் முதல் பெண் இயக்குநராகவும், முதல் பெண் திரைக்கதாசிரியராகவும் வரலாற்றில் தன்னைப் பதிவு செய்துகொண்ட டி.பி. ராஜாலட்சுமி.

தஞ்சை அருகேயுள்ள திருவையாறுதான் ராஜலட்சுமியின் சொந்த ஊர். தாயின் சொந்த ஊரான சாலியமங்கலத்தில் தெலுங்கில் பாடி நடிக்கும் ‘பாகவதமேளா’ நாடகங்கள் மதராஸ் வரையிலும் அன்று பிரசித்தம். ராஜலட்சுமியின் அம்மா மீனாட்சி நன்கு பாடக்கூடியவர். ஐந்து வயதுமுதல் அம்மாவிடம் வாய்ப்பாட்டு கற்றுக்கொண்ட ராஜலட்சுமி, பாகவதமேளா நாடகங்களை அம்மா, அப்பாவுடன் பார்த்துப் பார்த்து தெலுங்குக் கீர்த்தனைகளைப் பாடக் கற்றுக்கொண்டதோடு நில்லாமல் நாடகத்தின் மீதும் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார்.

8 வயதில் நடந்த பால்ய விவாகம் தோல்வியில் முடிந்துவிட்ட நிலையில் பத்து வயதில் ராஜலட்சுமியின் அப்பா பஞ்சாபகேச சாஸ்திரி இறந்துவிட, தாயுடன் திருச்சியில் குடியேறி, துணிவு மிக்க பெண்ணாக நாடக கம்பெனியில் சேர்ந்து நடிப்பைப் பயின்றார். 13 வயதில் ராஜலட்சுமிக்கு ‘பவளக்கொடி’ நாடகத்தில் கிடைத்த ‘புலந்திரன்’ என்ற ஆண்வேடம்தான் முதல் வேடம். அதன் பிறகு அதே நாடகத்தில் 15 வயதில் பவளக்கொடியாகப் பதவி உயர்வு.

ராஜலட்சுமியின் நடிப்புத் திறனும் பாடும் திறனும் அவருக்கு வெகு விரைவாகவே புகழைக் கொண்டுவந்து சேர்த்தன. மூன்றே ஆண்டுகளில் அன்று பிரபலமாக இருந்த கே.பி. மொய்தீன் சாகிப், கே.எஸ்.செல்லப்பா, கண்ணையா போன்ற ஜாம்பவான்கள் நடத்திவந்த நாடக சபாக்களின் ஸ்பெஷல் நாடகங்களில் கதாநாயகன், கதாநாயகி, இரட்டை வேடம் என மாறிமாறி வேடங்கள் ஏற்றுப் புகழின் உச்சியைத் தொட்டார் ராஜலஷ்மி. அன்று நாடக மேடையில் புகழ்பெற்று விளங்கிய எஸ்.ஜி. கிட்டப்பாவுடன் ராமாயண நாடகத்தில் சீதையாகவும் எம்.கே. தியாகராஜ பாகவதருடன் 'பவளக்கொடி' நாடகத்தில் பவளக்கொடியாவும் ஜோடி சேர்ந்து நடித்ததில் மதாராஸ் மாகாணம் முழுவதும் அவர் புகழ் பரவியது.

எ. நாராயண் என்பவர் சிலப்பதிகாரக் கதையை ‘The Fatal Anklet’ என்ற பெயரில் மவுனப் படமாகத் தயாரிக்க முயன்றபோது அதில் கண்ணகியாக நடிக்க ராஜலட்சுமியைத் தேடிவந்து ஒப்பந்தம் செய்தார். அந்தப் படத்தின் மூலம் தனது 18 வயதில் சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய ராஜலட்சுமி அடுத்து தமிழ் சினிமாவின் பிதாமகன்களில் ஒருவரான ராஜா சாண்டோ இயக்கிய மவுனப் படங்களில் நடித்துத் திரையிலும் புகழ்பெற்றார்.

மவுன யுகம் முடிந்து இந்தியாவின் முதல் பேசும் படமான 'ஆலம் ஆரா' வெளியானது. அந்தப் படத்தைத் தயாரித்த வட இந்தியரான அர்தேசிர் இரானி தமிழ், தெலுங்கு, இந்தி வசனங்கள் இடம்பெற்ற, 'காளிதாஸ்' படத்தை, அதாவது தமிழின் முதல் முழு நீளப் படத்தை 1931-ல் எடுத்தார். ‘காளிதாஸ்' படத்தின் மூலம் முதலில் தமிழ் பேசிய சினிமாவின் முதல் கதாநாயகியாக ராஜலட்சுமி அறிமுகமானார்.

அடுத்தடுத்து வரிசையாக வெற்றிப் படங்களில் நடித்து ‘சினிமா ராணி’ என்று மக்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்றுவிட்டாலும் நாடக மேடையை அவர் துறக்கவில்லை. தேசபக்திப் பாடல்களை நாடக மேடைகளில் பாடியதற்காக ஆங்கிலேய அரசு ராஜலட்சுமியைக் கைதுசெய்து சிறையில் அடைத்த வரலாறும் உண்டு. தமிழ்நாட்டில் முதல் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டதும் இவருக்குத்தான்.

1933-ல் வருடம் வெளியான ‘சத்தியவான் சாவித்திரி’ என்ற படத்தைத் தயாரித்து, தமிழ் சினிமாவின் முதல் பெண் தயாரிப்பாளர் என்ற பெருமையைப் பெற்ற இவர், ’கமலவேணி’, ‘விமலா’ என இரு நாவல்களையும் எழுதியிருக்கிறார். ‘கமலவேணி’ நாவலையே ‘மிஸ் கமலா என்ற திரைப்படமாகத் திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியதோடு கதாநாயகியாகவும் நடித்துத் தமிழ் சினிமாவின் முதல் பெண் இயக்குநர்-எழுத்தாளர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார். இவரது பாதையில் இன்று பல பெண்கள் திரையில் ஜொலித்து வருகிறார்கள். அடுத்த வாரம் ஆர்.நடராஜ முதலியார், ராஜா சாண்டோவை நினைவு கூர்வோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்