கோலிவுட் ஜங்ஷன்: மீண்டும் இணைந்த ஜோடி!

By செய்திப்பிரிவு

பரத், சந்தியா நடிப்பில், பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 19 ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘காதல்’ திரைப்படத்தை கண்ணீர் மல்க ரசித்தவர்கள் அதிகம். தற்போது ‘லவ்’ என்கிற தலைப்பில் பரத், வாணி போஜன் நடித்துள்ள படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது. பிறமொழிப் படங்களை தமிழில் மொழிமாற்றம் செய்யும் கலையில் பெயர் பெற்றவரான ஆர்.பி.பாலா தயாரித்து, இயக்கியுள்ளார்.

திருமணத்துக்குப் பிறகு காதல் படும் பாட்டினை மையப்படுத்தி குடும்ப த்ரில்லராக படத்தை உருவாக்கியிருக்கிறார். கடந்த மாதம் வெளியாகி வெற்றி பெற்ற ‘மிரள்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இந்தப் படத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள் பரத்தும் வாணி போஜனும்.

மணி ரத்னம் இயக்க விரும்பிய கதை! - சமீப காலமாக எழுத்தாளர் ஜெயமோகனின் பல படைப்புகள் திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் அவரது ‘கைதிகள்’ சிறுகதையைத் தழுவி, ஆஹா ஓடிடி தளத்தின் ஒரிஜினல் பட வரிசையில் படமாகியிருக்கிறது ‘ரத்தசாட்சி’. ஆஹா தமிழ் - மகிழ் மன்றம் தயாரிப்பில் ரஃபீக் இஸ்மாயில் எழுதி, இயக்கியிருக்கிறார்.

ஒரு நக்சல் இளைஞன் தனது தலைமறைவு வாழ்க்கையை உதறிவிட்டு வந்து எடுக்கும் முடிவை ரத்தமும் சதையுமாகப் பேசுகிறது படம். அதன் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. அதில் பேசிய படத்தின் இயக்குநர்: “மணிரத்னம், வெற்றிமாறன் ஆகியோர் இந்தக் கதையை இயக்க ஆசைப்பட்டார்கள். இன்னும் பலரைத் தாண்டி ஜெயமோகன் சார் இந்தக் கதையை எனக்குக் கொடுத்தார். அவர் மட்டும் என் மீது நம்பிக்கை வைத்துக் கொடுக்காமல் போயிருந்தால் என்னால் சினிமா எடுத்திருக்க முடியுமா என்று தெரியவில்லை” என்று நெகிழ்ந்தார். இன்று முதல் இப்படத்தை ஆஹா ஓடிடியில் காணலாம்.

பா.இரஞ்சித் பாராட்டும் படம்! - இயக்குநர் பா.இரஞ்சித் பார்த்து பாராட்டியிருக்கும் படம் ‘காலேஜ் ரோடு’. ‘கபாலி’, ‘பரியேறும் பெருமாள்’, ‘டாணாக்காரன்’ உள்பட பல படங்களில் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்து கவர்ந்த லிங்கேஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் படம். கல்விக் கடன் என்பது ஏழை, நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒரு வரமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், கல்விக் கடன் பெறுவதிலும் பெற்ற பிறகும் சாமானியக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் சந்திக்கும் துயரங்களை விரிவான கள ஆய்வுக்குப் பின் திரைக்கதையாக்கியிருக்கிறார் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கும் ஜெய் அமர்சிங்.

“சீரியஸான ஆனால் இதுவரை பொதுவெளியில் உரிய முக்கியத்துவம் அளித்துப் பேசப்படாத ஒரு பிரச்சினையின் ஆழமும் நாளைய தலைமுறைக்கு வந்துசேரப்போகும் ஆபத்தையும் அந்தத் தலைமுறைக்குச் சென்று சேரும்விதமாக படமாக்கியிருக்கிறேன்” என்கிறார் இயக்குநர்.

துரை சுதாகரின் நன்றி! - ‘களவாணி 2 ’ படத்தின் மூலம் கவனிக்க வைத்தவர் துரை சுதாகர். ஏ. சற்குணம் இயக்கத்தில் அதர்வா - ராஜ்கிரண் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பட்டத்து அரசன்’ படத்தில் ராஜ்கிரணின் மகனாக நடித்து தனது திறமையைக் காட்டியிருந்தார்.

சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், “‘களவாணி 2’ படத்தில் பெரிய மக்கள் கூட்டத்துடன் நடித்தது ஒரு அனுபவம் என்றால், பெயர் பெற்ற பெரும் நடிகர்கள் கூட்டத்துடன் ‘பட்டத்து அரசன்’ படத்தில் நடித்தது வேறொரு அனுபவம். நிறைய வாய்ப்புகள் வந்தாலும் ரசிகர்களின் மனதில் நிற்கும் கேரக்டர்களையே ஏற்று நடிக்க விரும்புகிறேன். என்னை அறிமுகப்படுத்திய ஏ.சற்குணத்துக்கு நன்றி” என்றார்.

மூத்தவர்களின் பிரச்சினை! - முழுவதும் புதுமுகங்களின் நடிப்பில், இயக்குநர் பாஸ்கி டி. ராஜ் இயக்கியிருக்கும் படம் ’ஹை 5’. பேஸ்கட் பிலிம்ஸ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர், முதல் தோற்றம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசினார் மூத்த இயக்குநரான ஆர்.வி.உதயகுமார்: “கனடா நாட்டிலும் தமிழ்நாட்டிலும் படத்தை எடுத்திருக்கிறீர்கள். நடித்துள்ள யாரும் புதுமுகங்கள்போல் தெரியவில்லை.

மூத்த குடிமக்கள் இரண்டாவது குழந்தை பருவத்தில் இருப்பவர்கள். அவர்களைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்ள வேண்டியது உறவுகளின் அன்பும் கடமையும். ஆனால், இன்று கடமை, அன்பு இரண்டையுமே தட்டிக்கழிக்கிறோம். அவ்வளவு சீரியசான பிரச்சினை இது. மீண்டும் மீண்டும் பேசப்பட வேண்டிய களம். சிறுவர்களின் பார்வையில் இந்தக் கதையைப் பேசியிருக்கும் இயக்குநருக்கும் குழுவுக்கும் என் பாராட்டும் வாழ்த்துகளும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்