மொழி கடந்த ரசனை 12: காதல் தடத்தின் சாம்பலைக் கொண்டுவருவேன்

By எஸ்.எஸ்.வாசன்

ஒரு திரைப்படத்தின் வெற்றி பல அம்சங்களைச் சார்ந்து நிற்கிறது. புகழ் பெற்ற நடிகர் - நடிகை, இசை, இயக்கம், பாடல்கள் ஆகிய இவையெல்லாம் அந்தப் படத்தின் கதை ரசிகர்களிடம் ஏற்படுத்தும் நீண்ட தாக்கத்தின் மூலமே வலிமை பெறுகின்றன. அவ்விதத் தாக்கம் வாழ்க்கையில் நடப்பதை அப்படியே சித்தரிப்பதால் மட்டும் ஏற்படுவதில்லை. பிரச்சினைகளின் தீர்வாக, மனிதர்கள் ‘விரும்புவதை’ திரைப்படம் காட்ட வேண்டுமேயன்றி உண்மையில் ‘நிகழ்வதை’ அல்ல. இந்த சூட்சுமத்தைக் கைக்கொள்ளத் தவறிய படங்கள், மிகச் சிறப்பான பாடல்கள், இசை நடிப்பு ஆகிய அனைத்தையும் தாண்டித் தோல்வி அடைகின்றன. ஷராபி (குடிகாரன்) என்ற படமும் அதன் பாடல்களும் இதற்குச் சான்று.

குடிப் பழக்கம் இருந்தும் பணக்காரப் பெண்ணின் காதலைப் பெற்ற நாயகன், அப்பழக்கத்திலிருந்து மீண்டு வந்து, அனைவரின் ஒப்புதலுடனும் காதலியைத் திருமணம் செய்துகொள்ளும் தருணத்தில், தகுந்த காரணம் எதுவும் இன்றி மறுபடியும் அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகி, எல்லாவற்றையும் இழக்கிறான்.

வித்தியாசமான, ஆனால் யதார்த்தம் நிறைந்த இப்படம் தோல்வி அடைந்ததால், படத்தின் விரக்தி உணர்வை வெளிப்படுத்தும் செறிவான கவிதை வரிகளும், அதை மிகச் சிறப்பாகப் பாடியுள்ள முகம்மது ரஃபியின் மேன்மையும் பிரபலம் அடையாமல் போய்விட்டன.

வேகமான தனது வசன உச்சரிப்பாலும் இடது காலை வளைத்து வளைத்து நடக்கும் வசீகரத்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற தேவ் ஆனந்த் குடிகாரனாக நடித்த இப்படத்தின் இரண்டு சோகப் பாடல்களும் ‘குடி’யைப் போற்றும் ஒரு மகிழ்ச்சிப் பாடலும் கவனிக்கத் தக்கவை. ராஜேந்திர கிஷன் எழுதிய 41 படங்களின் 287 பாடல்களுக்கு மதன் மோகன் இசை அமைத்திருந்தாலும் அவற்றில் தேவ் ஆனந்த் நடித்த படங்கள் மூன்று மட்டுமே. அந்த மூன்றும் தோல்வியைத் தழுவின.

புறக்கணித்த காதலியை நினைத்து ஏங்கும் விதமாக அமைந்துள்ள இப்பாடலை, வழக்கத்துக்கு மாறான மெதுவான கதியில் பாடியிருக்கும் முகம்மது ரஃபியின் குரல் உருக்கமும் கவித்துவமுமான பல உருதுச் சொல்லாடைகளுடன் கூடிய ராஜேந்திர கிஷனின் பாடல் வரிகளும் தனித்துவம் மிக்க சிறப்பான பாடலாக்கின.

“முஜே லே சலோ ஃபிர் வோ கலி மே, ஜஹான் பஹலே - பஹலே யே தில் லட்காயா” என்று தொடங்கும் இப்பாடலின் பொருள்:

என்னை அழைத்துச் செல்லுங்கள்

மறுபடியும் அந்த இடத்திற்கு

எங்கு முதன் முதலில் இந்த உள்ளம்

பறிபோனதோ, அந்த உலகம்

அந்த என் காதலின் உலகம்

எங்கிருந்து நான் அமைதியின்மையைக்

கொண்டுவந்தேனோ, அந்த இடத்திற்கு

என்னை இட்டுச் செல்லுங்கள்.

எங்கு என் இனிய வாழ்க்கை

உறங்கிக்கொண்டிருக்கிறதோ

எங்கு என் இளமையை

விட்டுவிட்டு வந்தேனோ அங்கு இன்றும்கூட

ஒரு புதிய தோரணம்போல

என் காதலின் சரணாகதி

அடையாளப்படுத்தப்பட்டிருக்கும்

எங்கு அவளின் காலடி படுகிறதோ

அங்குதான் என் இன்பமும் துன்பமும் உள்ளன.

அழிந்து போன என் காதல் தடத்தின்

சாம்பலை நான் கொண்டுவருவேன்.

அங்கு ஒரு வண்ணத் திரைக்குப்

பின்னால் அவளின் எழில் கன்னம் இருக்கும்.

அந்த அழகைக் கண்களில் இருத்திக்கொள்வேன்

அது சிறிதாவது உன் உள்ளத்தின்

வலியின் மருந்தாக அமையும்.

என்னை அழைத்துச் செல்லுங்கள்

மறுபடியும் அந்த இடத்திற்கு...

இந்தப் பாடலில் உள்ள ‘சாஜ்டோ’ (தோரணம், குவியம்) ரஹ்குஜார் (பாதை, போக்கு, தடம்) நக்ஷ்-இ-கதம் (காலடி) ருக்காசர், (கன்னம்) இலாஜ்-இ-தில்-இ ஜார், (உள்ளத்தின் வலியின் மருந்து) போன்ற பலர் அறிந்திராத உருது கவித்துவச் சொற்றொடர்கள் இப்பாடலை இந்தி மட்டுமே தெரிந்தவர்கள் முழுவதுமாக ரசிக்க முடியாமல் செய்துவிட்டன.

இதற்கு மாறாக எளிய வரிகளில் அமைந்த பாடல், “கபி ந கபி கஹீன் ந கஹீன் கோயி ந கோயி தோ ஆயேகா” என்று தொடங்குகிறது. அதன் பொருள்:

எப்பொழுதாவது, எங்காவது

எவராவது வருவார்கள்

அவர்களில் ஒருவராக என்னை ஏற்று

இதயத்தில் இடம் தருவார்கள்.

எத்தனை நாட்களாகத் தனிமையில் அலைகிறேன்

இந்த மதுசாலாவில்

போதையில் அமர்கிறேன்

எவராவது வருவார் என்

தாகத்தைத் தீர்க்க.

யாரும் என் உள்ளத்தைப் பார்க்கவில்லை

என் துன்பத்தைக் கேட்கவில்லை.

என் பெயரைக் கேட்டே

தறுதலை என்கின்றனர்.

இதுவரை இப்படியே இனிமேலாவது

எவராவது என் அருகில் வந்து

என் கண்ணீரைத் துடைப்பார்.

**

இப்படத்தின் மூன்றாவது பாடல், குடியைப் போற்றுவது போல, வஞ்சப் புகழ்ச்சி பாணியில் அமைந்துள்ளது “சாவன் மஹீனா மே ஏக் ஆக் ஸி ஸீனே மே” என்று தொடங்கும் இந்தப் பாடலின் பொருள்:

யோசிக்கிறேன் குடிப்பதா வேண்டாமா

கிழிந்த மனதைத் தைப்பதா வேண்டாமா

என்ன செய்வேன், வாழ்வதா வேண்டாமா

ஒரு மழை மாதத்தில் உள்ளத்தில்

நெருப்பு எழுவதால் குடிக்கிறேன் கொஞ்சம்

அதனால் வாழ்கிறேன்

ரொம்ப காலமாக அறிவேன்

இந்தப் போத்தலும் தாகமும்

சிறிது குடித்தால்

அது நம்மையே குடித்துவிடும்

நீண்ட வாழ்க்கையைவிட நாம் விரும்பும்

ஒரு பொழுது நன்று (என) கொஞ்சம் குடித்து

பிறகு இந்த உலகத் துன்பத்தை

நினைத்து அஞ்சி

மேலும் குடித்துவிடுகிறேன்.

பருவ கால அழைப்பால் மதுசாலைக்கு வருகிறேன்.

அழகை ரசிக்க எண்ணி அமர்கிறேன்.

பிடிவாதம் பிடிக்கும் காதலியைக் காண

வெட்கப்பட்டுக் குடித்துவிடுகிறேன் கொஞ்சம்

அதனால் வாழ்கிறேன்.

கவித்துவமும் வாழ்க்கை அனுபவமும் இணைந்த இந்தக் கவித்துவமான வரிகளைக் கொண்ட பாடல்கள் வெளியானபோது அதிகம் பேரைச் சென்றடையவில்லை என்பது இந்தக் கதாநாயகனின் வாழ்க்கையைப் போலவே சோகமானதுதான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்