வாருங்கள் நாற்பது வயது கம்பீர லைலாவைச் சந்திப்போம். லைலாவைப் போன்ற ஓர் ஈரானியப் பெண்ணிடமிருந்து நிறையக் கற்றுக்கொள்ளலாம். நாற்பது வயது வரை திருமணம் பற்றி யோசிக்க மனமில்லாமல் தன்னுடைய பெற்றோர், நான்கு சகோதரர்களை கவனித்துக் கொள்வதில் மட்டுமே தன் வாழ்நாளை செலவிட்டுள்ளார்.
சர்வதேசப் பொருளாதாரத் தடைகளின் பிடியில் சிக்கியுள்ள ஒரு நாட்டில், அவருடைய குடும்பம் ஒரு எளிய வாழ்க்கைக்காகப் போராடுகிறது. கடன்களின் அழுத்தத்தால் நசுங்குகிறது. நான்கு ஆண்கள் இருந்தும் வருமானத்துக்கு வழியில்லாத நிலையில் லைலா ஒரு திட்டத்தை வகுத்தார்; வறுமையிலிருந்து காப்பாற்றும் ஒரு குடும்பத் தொழிலைத் தொடங்க துணிந்து முடிவெடுத்தார்.
அந்த முடிவுக்காகவே நீங்கள் லைலாவை சந்திக்க விரும்புவீர்கள். அப்படியானால் வரும் 15ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை டிசம்பர் மாத சென்னையின் கலை அடையாளங்களில் ஒன்றாக மாறியிருக்கும் 20வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவுக்கு நீங்கள் வந்தே ஆக வேண்டும்.
33 வயதே ஆன சயீத் ரோஸ்தயி (Saeed Roustayi) பெர்சிய மொழியில் இயக்கி, கான் திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளை வென்ற ‘லைலாஸ் பிரதர்ஸ்’ (Leila’s Brothers) படத்தில் லைலாவின் வாழ்க்கையை கண்டு உணர்வுகளின் ஊஞ்சலில் ஒரு ரோலர் கோஸ்டர் ரைட் போய்வர முடியும்.
» பிரதமர் மோடி பாதுகாப்பில் குறைபாடு? - அண்ணாமலை புகாரின் பேரில் அரசிடம் அறிக்கை கோரினார் ஆளுநர்
» திருச்சி | ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கியதாக சார்பதிவாளர் கைது
லைலாவைப் போல் சொந்த நாட்டில் வாழ முடியாத அவலத்துடன், மொழி தெரியாத மண்ணில் அடையாளச் சிக்கலுடன் புலம்பெயர்ந்து வாழும் மனிதர்களின் பிரதிபலிப்பாக படைக்கப்பட்டுள்ள கதாபாத்திரங்கள், உலகமயமாக்கலின் பக்க விளைவுகளால் அல்லாடும் கதாபாத்திரங்கள், நுகர்வுக் கலாச்சாரத்தில் சிக்கி, அழகான வாழ்க்கையைச் சிக்கலாக்கிக் கொண்ட கதாபாத்திரங்கள், பாலியல் வேட்கை, பாலியல் சமத்துவம், பாலியல் சுதந்திரம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கதாபாத்திரங்கள் என தற்கால வாழ்க்கையின் அத்தனை வண்ணங்களையும் நம் கண்களின் முன்னால் பரப்பும் கதாபாத்திரங்களை சந்திக்கும் ஒரே களமாக இருக்கப் போகிறது 20வது சென்னை சர்வதேசத் திரைப்படவிழா.
கவனம் ஈர்க்கும் கான் படங்கள்: திரையிடல் பட்டியலில் இடம்பெற்றுள்ள தென்கொரியப் படமான ‘புரோக்கர்’ (Broker), ரோமானியப் படமான ‘மெட்ரோனாம்’ (Metronom), பாலஸ்தீன படமான ‘மெடிட்டரேனியன் ஃபீவர்’ (Mediterranean Fever), இப்படவிழாவில் ‘ஓப்பனிங் ஃபிலிம்’ ஆக திரையிடப்படவிருக்கும் ‘ட்ரையாங்கிள் ஆஃப் சேட்னஸ்’ (Triangle of sadness) ஆகிய 5 படங்கள், கான் பட விழாவில் தங்கப் பனை உள்ளிட்ட விருதுகளை வென்றவை மட்டுமல்ல; 2022இன் புத்தம் புதிய உலகப் படங்கள்!
கான் படங்களைப் போலவே உலகப் புகழ்பெற்ற பெர்லின் படவிழா, உலகப் படங்களைக் கொடுப்பதில் உயர்த்த இடத்தில் இருக்கும் ஈரானின் டெஹ்ரான் படவிழா, வெனிஸ் படவிழா, ஸ்பானிய நகரமான புனித செபஸ்டியன் படவிழா, உலகின் மிகப்பெரிய திறந்தவெளித் திரையிடலுக்கு புகழ்பெற்ற லொகார்னோ படவிழா ஆகியவற்றில் போட்டிப் பிரிவுகளில் நுழைந்து முக்கிய விருதுகளை வென்றுள்ள படங்களும் சென்னையில் வரிசை கட்டிக் காத்திருக்கின்றன.
50 நாடுகளும் ஆஸ்கரும்: இம்முறை 48 உலக நாடுகளில் இருந்து 107 படங்கள் திரையிடப்படவிருக்கின்றன. அவற்றில் ‘சிறந்த வெளிநாட்டு மொழிப் பட’த்துக்கான ஆஸ்கர் போட்டிப் பிரிவுக்கு அதிகாரபூர்வமாக பரிந்துரை செய்யப்பட்டும் தேர்வாகியும் உள்ள 4 படங்கள் தமிழ்நாட்டின் உலக சினிமா ஆர்வலர்களின் கவனத்தைக் கண்டிப்பாக ஈர்க்கும். சுவிட்சர்லாந்தின் ‘எ பீஸ் ஆஃப் ஸ்கை’ ( A piece of sky), ஐஸ்லாந்தின் ‘பியூட்டிஃபுல் பீயிங்ஸ்’ (Beautiful beings), ஈரானின் ‘வேல்டு வார் 3’ (World War III) உள்ளிட்ட 11 திரைப்படங்கள் உங்களின் கவனம் ஈர்க்கும்.
கடந்த 2003ஆம் ஆண்டு தொடங்கி சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவை வளர்த்து எடுத்துள்ள இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (Indo Cine Appreciation Foundation) திரைப்பட சங்கம், தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன் 20வது பதிப்பை வெற்றிகரமாக ஒருங்கிணைப்பு செய்திருப்பது பற்றி, அதன் பொதுச் செயலாளரும் திரைப்பட விழா இயக்குநருமான இ.தங்கராஜிடம் கேட்டபோது, ‘‘இந்த ஆண்டு 20வது பட விழா என்பது எங்களுக்கு ஒரு ‘லேண்ட் மார்க்கிங் எடிஷன்'. இருபது ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்து வர தமிழ்நாடு அரசும் , தமிழ்த் திரையுலகினரும், பன்னாட்டு கலாச்சார தூதரகங்களும், உலக சினிமாவைக் கொண்டாடுவதில் இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்கும் தமிழ் ரசிகர்களும் தான் காரணம்.
இம்முறை, 20வது ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில் பெண் பார்வையாளர்கள் மட்டும் அமர்ந்து காணும் விதமாக ‘ஏஇஐஓயு' (AEIOU) என்கிற ஜெர்மானியப் படத்தை ‘பிரிமியர்’ திரையிடல் மூலம் சாத்தியமாக்குகிறோம். இந்தப் படம் பின்னர் பொதுவிலும் திரையிடப்படும். ‘கண்ட்ரி போகஸ்’ பிரிவில், சுவிட்சர்லாந்து தூதரகத்துடன் இணைந்து (Consulate General of Switzerland) அந்நாட்டின் 4 படங்கள், சென்னையில் உள்ள கதே இன்ஸ்டிடியூட்டுடன் இணைந்து (Goethe-Institut- Chennai) 2 ஜெர்மானியப் படங்கள், அலியான்ஸ் பிரான்சிஸ் மையத்துடன் இணைந்து (Alliance Francaise de Madras) 5 பிரெஞ்சுப் படங்கள் திரையிடப்படுகின்றன. குறிப்பாக ஈரானியப் படங்கள் இல்லாமல் சர்வதேசத் திரைப்பட விழாக்கள் இல்லை. அவ்வகையில் ரசிகர்களின் அபிமான இயக்குநர்களில் ஒருவரான ஜாபர் பனாகியின் ‘நோ பியர்ஸ்’ (No Bears) உட்பட மொத்தம் 6 ஈரானியப் படங்களைத் திரையிட இருக்கிறோம்.
அதேபோல் பிரெஞ்சு சினிமா மேதை கோடார்ட்டை (Jean-Luc Godard) நினைவு கூர்ந்து, அவரை கௌரவம் செய்யும் விதமாக, அவரது மிக முக்கியமான படங்களில் ஒன்றான ‘பேரட் லீ ஃபோ’ (Pierrot le fou) படத்தைத் திரையிடுகிறோம். ஹங்கேரியின் ஓபரா இசை நாடக ஆசிரியரும் திரை மேதையுமான இஸ்வன் சாபோவின் (Istvn Szab) உலகப் புகழ்பெற்ற கிளாசிக் படமான ‘லவ் பிலிம்’ என்கிற படத்தைத் திரையிடுகிறோம். இவை தவிர, சிலி நாட்டிலிருந்து வரவிருக்கும் ஒரு சிறார் திரைப்படம், இத்தாலியிலிருந்து ஒரு படம் ஆகியனவும் படவிழாவை சிறப்பு செய்ய இருக்கின்றன.
தமிழ்ப் படப் போட்டிப் பிரிவு: உலக சினிமாக்களை நாம் கொண்டாடும் அதே நேரம், நம் நாட்டில் தயாராகி உலக அரங்கை வியக்க வைத்துள்ள 17 இந்தியப் படங்களை இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடுகிறோம். இவற்றில் இம்முறை 4 தமிழ்ப் படங்கள் இடம்பெறுவது தமிழ் சினிமாவின் தரத்துக்குப் பெருமை. அதேபோல் நமது சிறந்த படைப்புகளை அங்கீகரிக்கும் தமிழ்ப் படப் போட்டிப் பிரிவுக்கு வந்து சேர்ந்த 30 படங்களி லிருந்து மொத்தம் 12 படங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. போட்டி கடுமையாக இருந்தாலும் ரொக்கப் பரிசுடன் கூடிய 9 விருதுகளை வெல்லப்போகும் படங்கள் எவை என்பதை அறிய நானுமே ஆவலாகக் காத்திருக்கிறேன்” என்றார். - ஆர்.சி.ஜெயந்தன், jesudoss.c@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago