ஒரு துக்கத்துக்கு மேல் இன்னொரு துக்கம் ‘துக்ளக்’ சோ அவர்கள் இறந்தது. அவர் ரஜினிகாந்துக்கும் பஞ்சு அருணாசலத்துக்கும் எனக்கும் நல்ல நண்பர். சிறந்த ஆலோசகர். நான் இயக்கிய பல படங்களில் நடித்திருக் கிறார். படப்பிடிப்பில் எப்போதுமே சத்த மாகத்தான் இருக்கும். அப்போதும்கூட முழு ஈடுபாட்டோடு ‘துக்ளக்’ இதழுக்கு தலையங்கம் எழுதிக்கொண்டிருப்பார் சோ. ‘‘இந்த சத்தத்தில் உங்களால் எப்படி எழுத முடிகிறது சார்?’’ என்று கேட்போம். ‘‘முழு கவனத்தையும் எழுதுவதில் செலுத்தும்போது எந்தச் சத்தமும் இடையூறாக இருக்காது’’ என்பார். அவரது வாழ்க்கையே ஒரு தவம். அவரை வணங்குவோம்!
‘ராஜா சின்ன ரோஜா’ படத்தில் இடம்பெற்ற ‘சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்’ பாடலை ஊட்டியில் படமாக்க முடிவு செய்தோம். எப்போதும் போல பசுமை சூழ்ந்த மலை, பூங்கா பின்னணியோடு ஏதாவது புதிதாக செய்யலாம் என்று என் மனதில் தோன்றியது. பின்னணியில் கலர்ஃபுல் பாம்களை வெடிக்கச் செய்யலாம் என்கிற யோசனை தோன்றியது.
பின்னணியில் கலர் பாம்கள் வெடிக்க ஆடிப் பாடும் ரஜினிகாந்த்
அந்த விஷயத்தில் யார் அப் போது எக்ஸ்பர்ட் என்று விசாரித்த போது, ஹேம்நாக் என்பவரை சொன்னார் கள். அவரை அழைத்து விஷயத்தை சொன்னதும், ‘‘ஓ… தாராளமா, அரு மையா செய்துடுவோம்!’ என்றார். ஊட்டிக்குப் போய் கலர் பாம்களை பாடலுடைய தாளத்துக்கு ஏற்ற மாதிரி வெடிக்க வைத்து அந்தக் காட்சியைப் படம் பிடித்தோம். ‘சூப்பர் ஸ்டாரு’பாடல் அவ்வளவு சூப்பராக அமைந்தது. ஹேம்நாக்குக்கு ஒரு சல்யூட்!
ரஜினி, கவுதமி இருவரும் காதலிக்கும் போது அதை இடையூறு செய்யும் கதாபாத்திரத்தில் சின்னி ஜெயந்த் நடித்தார். அவரை மக்கள் வெகுவாக ரசித்தார்கள். நிஜ வாழ்க்கையில் செய்ய முடியாததை எல்லாம் திரையில் பார்க்கும்போது மக்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்படுமல்லவா. அதே போல் தான் சின்னி ஜெயந்த் நடிப்பு மக்களி டம் போய்ச் சேர்ந்தது. சின்னி ஜெயந்த் நல்ல நகைச்சுவை நடிகர். ரஜினிக்குப் பிடித்த நடிகர்களில் ஒருவர். மைம், மிமிக்ரி என்று தனித்துவமான திறமை கொண்டவர். அவர் சினிமாவில் இன்னும் உயரத்தை அடைய வேண்டும்!
‘ராஜா சின்ன ரோஜா’படத்துக்காக ரோஜா மாதிரி ஐந்து குழந்தைகளைத் தேர்வுசெய்யும் வேலைகளில் இறங்கி னோம். பல கட்டத் தேர்வுக்குப் பிறகு கதைக்குப் பொருத்தமான ஐந்து குழந்தைகளைக் கண்டுபிடித்தோம். அதில், இருவர் குழந்தை வயதுக்குக் கொஞ்சம் பெரியவர்கள். அந்த இருவரில் ஒருவர் ராகவி. என் படங்களில் நடித் திருக்கிறார். ராகவியின் வளர்ச்சியில் அவர் அம்மாவுக்கும் பங்கு உண்டு. இன்னொருவர்தான் ஷாலினி.
இப்படத்திலும் தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருப்பார். ஷாலினி பிற்காலத்தில் அஜித் அவர்களைக் காதல் திருமணம் செய்துகொண்டு, இன் றைக்கு குழந்தைகளோடு குடும்ப வாழ்க்கையை சந்தோஷமாக நடத்திக் கொண்டிருக்கிறார். ‘தல’ என்று தன் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் அஜித் அவர்கள் நடிகர்களில் ஒரு தனி ரகம்! துணிச்சலோடு எதிலும் செயல்படு பவர். வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாமல் பல உதவிகளை செய்து வருகிறார். அப்படிப்பட்ட அஜித்தின் மனைவி ஷாலினி நாங்கள் வளர்த்த கமல், தேவி, மீனா வரிசையில் ஒருவராக வளர்ந்தவர் என்று சொல்லும்போது பெருமையாக இருக்கிறது. இந்தத் தம்பதிகளை எல்லோரது சார்பாகவும் வாழ்த்துவோம்!
இப்படத்தில் ரவிச்சந்திரன் பெரிய கோடீஸ்வரர். அந்த ஐந்து குழந்தைகளும் அவருடைய குழந்தைகள். தாயில்லாத அந்தக் குழந்தைகள் அப்பாவுக்கு எதிரில் நல்ல குழந்தைகளாக நடிப்பார்கள். அவர்களைப் பார்த்துக்கொள்ள வெளி யூரில் இருந்து ஓர் ஆளை வரவழைக்க ஏற்பாடு செய்வார் ரவிச்சந்திரன். அங்கே வேலை பார்க்கும் ரகுவரன், அந்த ஆள் வந்தால் தனக்கு இடையூறாக இருப்பார் என்று அவரை மறைத்துவிட்டு, தன் பேச்சை கேட்கும் ஒருவரை நடிக்க வைப்பார். அவர்தான் ரஜினிகாந்த். தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், இந்த வீட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததே என்று குழந்தைகளோடு நடிப்பார். அவருக்கு துணையாக கவுதமி.
ரஜினி நடிக்கும்போது குழந்தை களிடம் உண்மையாகவே பாசத்தைக் காட்டத் தொடங்கிவிடுவார். அந்தச் சூழலில் ரஜினி குழந்தைகளோடு சேர்ந்து சந்தோஷமாக ஆடிப் பாடுகிற மாதிரி ஒரு பாடலை வைக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அப்போது ஏவி.எம்.சரவணன் சார் அவர்கள், ‘‘வழக்கமான ஒரு பாடலாக இது இல்லா மல், குழந்தைகளுக்குப் பிடிக்கிற கார்ட்டூன் சேனலைப் போல கார்ட்டூனில் மிருகங்களை உருவாக்கி, குழந்தை களுடன் நடிக்க வைத்தால் நல்லா இருக்குமே!’’ என்று ஆலோசனை வழங்கினார். அந்த ஐடியா நல்லா இருந்தது. அந்த கார்ட்டூன் வரைகிற டெக்னீஷியன் எங்கே இருப்பார் என்று தேடினோம். மும்பையில் ராம் மோகன் என்கிற ஒருவர் அந்த விஷயத் தில் புகழ்பெற்றவர் என்று தெரிய வந்தது.
சரவணன் சார் என்னிடம், ‘‘நீங்க மும்பைக்கே சென்று ராம் மோகனை சந்தித்துப் பேசி, விஷயத்தை சொல்லி அவரை புக் பண்ணிடுங்க…’’ என்றார். மும்பைக்குச் சென்று நான் ராம் மோகனைச் சந்தித்து ‘‘நடிகர்களுடன் கார்ட்டூன்களை இணைத்து ஒரு பாடல் காட்சி எடுக்கலாம்னு முடிவு பண் ணியிருக்கோம். நீங்க அந்த கார்ட்டூன்க ளை உருவாக்கி நடிகர்களுடன் இணைக் கணும்!’’ என்று கேட்டுக்கொண்டேன். ஆனால் அவரோ, ‘‘நான் ரொம்ப பிஸியா இருக்கேன். இது ரொம்ப பெரிய வேலை. என்னால் முடியாது?’’ என்று சொல்லிவிட்டார்.
உடனே நான், ‘‘நான்கு மாதங்கள் டைம் எடுத்துக்கொள்ளுங்கள். ஏவி.எம் ஸ்டுடியோவில் எதையும் எப்போதும் திட்டமிட்டுத்தான் செயல்படுவோம். நான் உடனே போய் நடிகர்கள் பகுதியை ஷூட் செய்து உங்களுக்கு அனுப்புகிறேன். நான் உங்களை அவசரப்படுத்த மாட்டேன்!’’ என்று சொன்னதும்தான் அவர் ஒப்புக்கொண்டார். ‘‘எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்ததற்காக புகழ்பெற்ற ஏவி.எம் நிறுவனத்துக்கு நன்றி!’’ என்றார்.
சென்னைக்கு வந்து கவிப்பேரரசு வைரமுத்து அவர்களிடம் விவரத்தை சொல்லி, பாடல் எழுதச் சொன்னோம். ‘தீமை செய்தால் தீமை விளையும்’ என்ற கருத்தில் ‘ராஜா சின்ன ரோஜா வோடு காட்டுப் பக்கம் வந்தானாம்; கூட ஒரு ரோஜாக் கூட்டம் கூட்டிக்கிட்டு போனானாம்!’ என்ற பாட்டை எழுதி கொடுத்தார். இசையமைப்பாளர் சந்திர போஸ் அந்தக் கார்ட்டூன் காட்சிகளை மனதில் வைத்துக்கொண்டு இசை யமைத்தார். கலை இயக்குநர் சலம், கார்ட்டூன்கள் பங்குபெறுகிற காடு போன்ற செட் அமைத்துக் கொடுத்தார்.
அந்தக் காட்டில் ரஜினியும், கவுதமி யும், குழந்தைகளும் வருவார்கள். அவர்களை மிருகங்கள் வரவேற்கும். ஆனால், செட்டில் மிருகங்களே இருக்காது. குழந்தைகள் எல்லாம், ‘‘மிருகங்கள் எங்கே? மிருகங்கள் எங்கே?’’ என்று கேட்டார்கள்.
’ராஜா சின்ன ரோஜா’ அரங்கத்தை உருவாக்கிய ஆர்ட் டைரக்டர் சலம், நாகன் ஆச்சாரி ஆகியோருடன் இயக்குநர் எஸ்பி.முத்துராமன், ரஜினிகாந்த், பஞ்சு அருணாசலம் மற்றும் படப்பிடிப்புக் குழுவினர்.
- இன்னும் படம் பார்ப்போம்... | படங்கள் உதவி: ஞானம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
22 mins ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago