யார் சொன்னது முதல் முறை கேட்டவுடன் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் பிடிக்காது என்று? இந்த ஆண்டு மாட்டுப் பொங்கலன்று இரவு சென்னை ஒய்.எம்.சி.ஏ. திடலில் திரண்டு நின்றது பெருந்திரள். ஆயிரக்கணக்கான இசை ரசிகர்களுக்கு முன்னால் மேடையில் எளிமையாக நின்றார் ஏ.ஆர்.ரஹ்மான். “நானும் கவுதம் மேனனும் ஒரு புதிய படத்துல சேர்ந்து வேலைபார்க்குறோம். அந்தப் படத்தின் சிங்கில்ஸை இப்போ உங்களுக்கு முன்னால ரிலீஸ் பண்ணுறேன்” என அவருக்கே உரிய புன்னகை கலந்த சன்னமான குரலில் பேசி ‘தள்ளிப்போகாதே’ பாடலை வெளியிட்டார். கேட்டமாத்திரத்தில் உதட்டில் ஒட்டிக்கொண்டது மனதில் ரீங்காரமிடத் தொடங்கியது.
நுட்பமாக மெருகேற்றிய குரல்
அன்று இரவே அத்தனை இளைஞர்களும் தள்ளிப் போகாதேவை வாரி அணைத்துக்கொண்டனர். அடுத்த நாளிலிருந்து யூ டியூபில் ஒரிஜினல் பாடல் மட்டுமல்லாமல் அதன் கவர் வெர்ஷன்களும் விதவிதமாக வரிசை கட்டின. இந்த ஆண்டில் அதிகப்படியாக மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட தமிழ் சினிமா பாடல் அதுவே! ‘தள்ளிப்போகாதே’வில் ஜாஸ் இசையில் ஊறிய சித் ஸ்ரீராமின் குரலும், தாமரையின் உயிர் பிதுக்கும் வரிகளும் ஏடிகேயின் ஸ்டைலிஷ் ராப்பும் செய்த மாயாஜாலத்தைப் பற்றி ஏகப்பட்ட முறை பேசியாகிவிட்டது.
ஆனால் ‘தள்ளிப்போகாதே’ பாடலுக்கு நுட்பமாக மெருகேற்றியவர் ‘ஒ…ஓ…’ என்று மட்டுமே பாடல் முழுவதும் பாடிய அபர்ணா நாராயணன். சித் ஸ்ரீராமுக்கு பிண்ணனியில் லேசாக மட்டுமே அவர் குரல் ஒலித்தாலும் பாடலின் முடிவில் ஒற்றை ஹம்மிங் மூலமாக அடுத்து எப்போது முழு பாடல் பாடுவார் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டார்.
ஒரே ஒரு சிங்கில்ஸ்தான் என்றாலும் சிக்ஸர் அடித்துவிட்டார் இசைப் புயல் என ரசிகர்கள் பூரித்தபோதே ‘24’ படப் பாடல்கள் வெளியாகின. ஆனால் இம்முறை ‘மெய் நிகரா’ என தள்ளிப் போகாதேவைப் பாடிய சித் ஸ்ரீராம் காட்டிய இசை ஜாலம் எடுபடவில்லை. ‘நான் உன் அழகினிலே’ என அர்ஜித் சிங்கும் சின்மயியும் உருகினாலும் ‘சஹானா சாரல் தூவுதோ’ பாடலைத்தான் ஞாபகப்படுத்தியது. சில நாட்கள் கழித்து ’அச்சம் என்பது மடமையடா’ படத்தின் ’ராசாளி’ உள்ளிட்ட பிற பாடல்களும் வெளியானாலும் ஏனோ இசை வானிலை மாறவே இல்லை!
ஆர்ப்பரிப்பும் ஆற்றுப்படுத்தலும்
ஆனால் தள்ளிப்போகாதே பாடல் ஏகப்பட்ட ராப் பாடல்களுக்குத் தொடக்கப்புள்ளியாய் அமைந்தது. கபாலியில் ‘நெருப்புடா’, ‘உலகம் ஒருவனுக்கா’, ‘வீரத் துறந்தரா’, கொடியில் ‘கொடி பறக்குதா’ என ராப் தோரணம் கட்டினார் சந்தோஷ் நாராயணன். “மேட்டுக்குடியின் கூப்பாடு இனி நாட்டுக்குள்ளே கேட்காது” என அறைகூவலிட்டு புரட்சிக்கு அழைப்புவிடுத்தன இந்த ராப் பாடல்கள்.
ஆர்ப்பரிக்கும் ராப் இசைக்குப் பக்கவாட்டில் ஆற்றுப்படுத்தும் ‘மாய நதி’யை ஓடவிட்டார் சந்தோஷ் நாராயணன். அந்தப் பாடலில் ‘வலி தீர்க்கும் வலியாய் வாஞ்சை தரவா’ என்கிற உமா தேவியின் வரிகளில் அனந்து குரல் இழையும்பொழுது நம் மனதில் மாய நதி பெருக்கெடுத்து ஓடியது.
‘இறுதி சுற்று’ படத்திலும் தன் மெலடி பலத்தை ‘உசுரு நரம்புல நீ’ மூலம் நிரூபித்தார் சந்தோஷ் நாராயணன். அவருடைய மகள் ‘தீ’ எனும் தீக்ஷிதா நெளிவு சுளிவுகளோ கடினமான சங்கதிகளோ இல்லாமல் கச்சாவாகத்தான் இந்தப் பாடலைப் பாடியிருப்பார். ஆனால் அந்தப் பாடலுக்கு உயிர் ஊட்டியதும் அந்தத் தன்மைதான். புழுதி பறக்கும் மீனவக் குப்பத்தைச் சேர்ந்த இளம் பெண்ணின் வேதனை தளும்பும் காதலை அச்சுஅசலாக காட்டிய பாடல் அது. பாடலுக்கு இடையில், ‘பாக்காம என் மூச்ச தேய்க்காத நீ’ எனப் பாடும்போது தீயின் குரல் தேயும்; ஒரு சின்னப் பிசுரு தட்டும். மதி நுட்பத்தோடு அதைப் பதிவுசெய்தது பாராட்டுக்குரியது.
பாடகர்களாக ஜொலித்த இசையமைப்பாளர்கள்
கருவாட்டு கூடையில் ஒய்யாரமாக உட்கார்ந்தபடி புளூஸ் கிட்டாரை மீட்டியதுபோல ‘ஏ சண்டக்காரா’என அதே ‘தீ’யை பாடவைத்ததற்குத் தனிக் கைதட்டல். ஜாஸ் பாணியில் குத்துபோட்ட ’வா மச்சானே’ பாடலும் தனி ரகம். இசையமைப்பாளர் ஷான் ரால்டன் அட்டகாசமான பாடகர் என்பதை நிரூபித்த பாடல்களில் ஒன்று இது. சொல்லப்போனால் ‘ஜோக்கர்’ படப் பாடல்கள் இசையமைப்பாளரான ஷானுக்கு பெயர் வாங்கித்தரவில்லை.
ஆனால் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் ’ஒரு நாள் கூத்து’ படத்துக்காக ‘அடியே அழகே’-வும், ‘வா மச்சானே’-வும் அவர் திறமையானப் பாடகர் எனக் காண்பித்தன.
‘இறைவி’, ‘கொடி’, ‘மனிதன்’, ‘காஷ்மோரா’, ’காதலும் கடந்து போகும்’ என அடுத்தடுத்து இசையமைத்தாலும் ’கபாலி’, ‘இறுதி சுற்று’க்குப் பிறகு சந்தோஷ் பெயர் சொன்ன பாடல் ‘கொடி’ பட ’ஏ சுழலி’ மட்டுமே.
நிவாஸ் பிரசன்னா இசையமைத்த ‘ஜீரோ’ படத்தில் ‘உயிரே’ பாடலை மென்மையாகப் பாடி ஆச்சரியப்படவைத்தார் அனிருத். இனிமையான குரலோன் அனிருத் எனத் தெரியப்படுத்திய நிவாஸ் பிரச்சனாவுக்கு டபுள் கைதட்டல். ’சேதுபதி’க்காக ‘கொஞ்சிப் பேசிட வேணா’ என முத்துக்குமாரிடமிருந்து கடைசியாகக் கொஞ்சும் வரிகளை வாங்கியதற்கும் சேர்த்தேதான் அந்தக் கைதட்டல். ’என் ஜீவன்’ (’தெறி’) உள்ளிட்ட சில பாடல் வரிகளோடு அவர் ஜீவன் பிரிந்தது தமிழ் சினிமாவுக்குப் பேரிழப்பு.
இ(ம்)சைக்கும் எரிச்சல்!
‘ரெமோ’, ‘ரம்’ என இரண்டு படங்களுக்கு விளையாட்டுத்தனமாக இசையமைத்தார் அனிருத். இசையில் எதுவுமே (புதுமையாக) செய்யவில்லை என்றாலும் ’செஞ்சிட்டாளே, ‘ஹோலா அமிகோ’ குழந்தைகளைக் குதூகலப்படுத்தின. ‘உன் மேல ஒரு கண்ணு’ (’ரஜினி முருகன்’) படலும் இதே ரகம்தான். இந்த வருடம் ‘தொடரி’, ‘றெக்க’, ‘மிருதன்’, ‘வாகா’, ‘மாவீரன் கிட்டு’, ‘போகன்’ எனப் பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துத் தள்ளிவிட்டார் இமான்.
ஆனால் பெரும்பாலான பாடல்கள் இளையராஜாவின் பழைய பாடல்களின் தழுவலாகவே எஞ்சி நிற்கின்றன. ‘கற்பூர பொம்மை ஒன்று’ பாடலின் சாயல் இருந்தாலும் ரெக்க படத்தில் அவர் இழையவிட்ட ‘கண்ணம்மா கண்ணாம்மா அழகுப் பூஞ்சிலை’ பாடலில் கண்ணம்மா என்ற பெருங்கவி பாரதி விட்டுச் சென்ற சொல்லின் நினைவுகள் உள்ளத்தை ஊடுருவிச் சென்றது.
ஜீ.வி. பிரகாஷூம் விஜய் ஆண்டனியும் முழு நேர நடிகர்களாகவும் பகுதி நேர இசையமைப்பாளர்களாகவும் மாறிவிட்டனர். ஒரே மாதிரியான திரைக்கதையில் நடித்தால்கூடப் பரவாயில்லை ஒரு மாதிரியான திரைக்கதைகளில் மட்டுமே ஜீ.வி.பிரகாஷ் நடிப்பதும் அதற்கு ஏற்ற மாதிரி இ(ம்)சைப்பதும் எரிச்சல். ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’, ‘கடவுள் இருக்கான் குமாரு’ எனத் தன்னுடைய படங்களுக்கு எல்லாம் தானே இசையமைத்தாலும் ‘தெறி’ படத்துக்காக அவர் தந்த ‘என் ஜீவன்’ பாடலில் மட்டுமே ஜீவன் இருந்தது. சென்ற ஆண்டே ‘விசாரணை’ படம் தயாரிக்கப்பட்டுவிட்டது. இருந்தாலும் இந்த ஆண்டுதான் திரைக்கு வந்தது என்ற வகையில் ஒரு அர்த்தமுள்ள படத்தில் வேலைபார்த்ததை எண்ணி ஜீ.வி. பெருமைப்படலாம்.
‘இருமுகன்’, ‘சிங்கம் 3’ என மாஸ் ஹீரோ படங்களுக்கு இசையமைத்தாலும் ஹாரிஸ் ஜெயராஜூக்கு இது சொல்லும்படியான வருடம் இல்லை. யுவன் சங்கர் ராஜா நீண்ட நாட்களுக்குப் பிறகு ‘மக்கக் கலங்குதப்பா’ (தர்மதுரை) பாடல் மூலமாகப் பட்டிதொட்டியெல்லாம் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறார். ’அப்பா’, ‘அம்மா கணக்கு’ ‘ஒரு மெல்லிய கோடு’ என இசை ஞானி இந்தாண்டு இசை மீட்ட அவருடைய 1000-மாவது படமான ‘தாரை தப்பட்டை’-க்கு சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது கிடைத்தது மட்டுமே சொல்லும்படியான கடைசி சேதி.
புதுப்புது இசை – BOX
2016-ல் 25-க்கும் மேற்பட்ட புதிய இசையமைப்பாளர்கள் அறிமுகமாகி உள்ளனர். கடந்த ஆண்டு ’காஞ்சனா-2’-வில் ஏற்கெனவே இசையமைத்திருந்தாலும் ’கோ-2’-வில் ‘கண்ணம்மா’ பாடல் மூலமாகக் கவனம் பெற்றிருக்கிறார் லியோன் ஜேம்ஸ். ’கிடாரி’ தர்புகா சிவாவுக்கு நல்ல தொடக்கம். ’உரியடி’யில் வலுவான திரைக்கதைக்கு அடர்த்தியான இசையமைத்துத் தடம் பதித்திருக்கிறார்கள் மசாலா காபியும் ஆண்டனி தாஸூம். இவர்கள் அனைவரும் தனி இசைக் கலைஞர்களாகவே ஏற்கெனவே ஏகப்பட்ட இளம் ரசிகர்களை வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
யூடியூப் ஹிட்
யூடியூபில் இசை ஆல்பங்கள் வெளியிட்டுத் திரைத் துறைக்குள் நுழைந்தவர் இசையமைப்பாளர் ‘ஹிப் ஹாப்’ தமிழன் ஆதி. கடந்த ஆண்டு ‘தனி ஒருவன்’ செம்ம ஹிட் அடித்தாலும் இந்த ஆண்டு அவர் பெயர் சொல்ல மீண்டும் யூடியூப்தான் கைகொடுத்தது. ஜல்லிக்கட்டு போட்டியின் தடையை எதிர்த்து அவர் இசையமைத்து இயக்கிய ‘டக்கரு டக்கரு’ இசை குறும்படம் சீறிப் பாய்ந்தது.
டாப் 10
1. தள்ளிப்போகாதே – அச்சம் என்பது மடமையடா
2. மாய நதி - கபாலி
3. உசுரு நரம்புல நீ – இறுதிச் சுற்று
4. ராசாளி – அச்சம் என்பது மடமையடா
5. உன் மேல ஒரு கண்ணு - ரஜினி முருகன்
6. என் ஜீவன் - தெறி
7. கொஞ்சிப் பேசிட வேணா - சேதுபதி
8. செஞ்சிட்டாளே – ரெமோ
9. அடியே அழகே – ஒரு நாள் கூத்து
10. மக்க கலங்குதப்பா - தர்மதுரை
புதுப்புது இசை
2016-ல் 25-க்கும் மேற்பட்ட புதிய இசையமைப்பாளர்கள் அறிமுகமாகி உள்ளனர். கடந்த ஆண்டு ‘காஞ்சனா-2’-வில் ஏற்கெனவே இசையமைத்திருந்தாலும் ‘கோ-2’-வில் ‘கண்ணம்மா’ பாடல் மூலமாகக் கவனம் பெற்றிருக்கிறார் லியோன் ஜேம்ஸ். ‘கிடாரி’ தர்புகா சிவாவுக்கு நல்ல தொடக்கம். ‘உரியடி’யில் வலுவான திரைக்கதைக்கு அடர்த்தியான இசையமைத்துத் தடம் பதித்திருக்கிறார்கள் மசாலா காபியும் ஆண்டனி தாஸும். இவர்கள் அனைவரும் தனி இசைக் கலைஞர்களாகவே ஏற்கெனவே ஏகப்பட்ட இளம் ரசிகர்களை வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago