திரை வெளிச்சம் | தமிழ் சினிமாவில் தண்ணீர்: உள்ளூர் சர்தாரும் உலக டேனியலும்

By ஆர்.சி.ஜெயந்தன்

தண்ணீர் ஒரு சந்தைப் பொருள் ஆக்கப்பட்டது பற்றியோ, தண்ணீர் விநியோகம் தனியாரின் கைக்குச் சென்று கொண்டிருப்பது பற்றியோ பெரும்பாலான ஊடகங்கள் பேச விரும்புவதில்லை. ஏனென்றால், அந்த இரண்டிலுமே அதிகார வர்க்கமும் கார்ப்பரேட் நிறுவனங்களும் தொழில் கூட்டாளிகளாக இருக்கின்றன. இப்பிரச்சினையில் நேரடியாகப் பாதிக்கப்படும் மக்களின் பக்கம் நின்று பேசவும் போராடவும் தன்னார்வலர்கள், சுற்றுச்சூழல் போராளிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் முன்னிற்கிறார்கள். அவர்களின் முயற்சிகள் வெகுமக்களைச் சரிவரச் சென்று சேராதபோது, அவர்களிடமிருந்து தாக்கம் பெறும் படைப்பாளிகள், திரைப்படங்கள் வழியே அதை எளிதாகச் சாதித்துவிடுகிறார்கள்.

கே.பாலசந்தர் இயக்கத்தில் 40 ஆண்டு களுக்கு முன் வெளிவந்த ‘தண்ணீர் தண்ணீர்’ ஒரு வறண்ட கிராமத்தின் தாகத்தை ‘வெக்கை’ குறையாமல் சொன்னது. அதில் பிரச்சினைதான் கதாநாயகனாக இருந்ததே தவிர, நட்சத்திர நடிகரை நாயகனாகக் கொண்டு இயக்குநர் பிரச்சினையைப் பேசவில்லை. அதன்பின்னர், 2003இல் வெளிவந்த ‘தூள்’, 2005இல் வெளிவந்த ‘கனாக் கண்டேன்’, 2014இல் வெளிவந்த ‘கத்தி’, 2015இல் வெளிவந்த ‘சண்டி வீரன்’ ஆகிய படங்கள், தண்ணீர் பிரச்சினையின் பல்வேறு நிலைகளைப் பேசினாலும் நட்சத்திரக் கதாநாயகர்களின் காதல், சாகசம், நகைச்சுவை எனும் வணிக சினிமா சட்டகத்துக்குள் முடங்கிப்போய், பிரச்சினையை இரண்டாவது, மூன்றாவது இடத்துக்குத் தள்ளிவிட்டன.

இதுபோன்ற படங்களுக்குப் பிறகு, 2017இல் வெளியானது ‘அறம்’. நட்சத்திர நடிகரைப் பயன்படுத்தியபோதிலும், கோடிகளில் செலவழித்து செயற்கைக்கோள் அனுப்பும் வசதி படைத்த நாட்டில், கிராமங்களின் அடிப்படையான குடிநீர் பிரச்சினைக்குச் செலவழிக்க மனமில்லாத அரசுகளின் அலட்சியத்தை ஓர் ஆட்சிப்பணி அதிகாரியின் அறச் சீற்றத்துடன் பேசியது அப்படம். 2018இல் வெளியான ‘கேணி ’, நீர் பங்கீடு எனும் பிரச்சினையை எடுத்துக்கொண்டு, தத்துவார்த்த சினிமாவாக பம்மியது. ‘கேணி’ எனும் உருவகம் தண்ணீருடன் நேரடித் தொடர்புகொண்டிருந்தபோதும், அதற்குள் பதுங்கிக்கொண்ட இயக்குநரின் பாதுகாப்பு உணர்வால், அதன் ஈரம் பார்வையாளரின் மனதைத் தொட முடியவில்லை.

‘சர்தார்’ எனும் அமரன்: தற்போது வெளியாகி வெற்றி பெற்றுள்ள ‘சர்தார்’ திரைப்படம், திரைக்கதை என்கிற அளவில் வணிக சினிமாவின் சட்டகத்தை விட்டு விலகவில்லை. அதேநேரம், அது எடுத்துத்தாண்டிருக்கும் தற்காலத் தண்ணீர் பிரச்சினையைப் பிரச்சாரமாகவும் பேசவில்லை. தண்ணீரை விலைகொடுத்து வாங்கும் நிலை தன் நாட்டு மக்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக, தேசத்துரோகி என்கிற பட்டத்தைச் சுமந்து, குடும்பத்தை இழந்து, தனிப்பட்ட இழப்புகளை ஏற்று, அதே நேரம் மிகப்பெரிய பொறுப்பைச் சுமந்துகொண்டு 32 ஆண்டுகள் சிறையில் காத்திருக்கும் ஓர் உளவாளியின் கதாபாத்திரம், முன்னணி நட்சத்திர நடிகரைக் கொண்டே எழுதப்பட்டிருக்கிறது. இருப்பினும் அது செய்யும் வணிக சினிமா சாகசங்களைக் கடந்து, பார்வையாளர்களின் மனதில் அழுத்தமான ஓர் இடத்தைப் பிடிப்பதற்கு அக்கதாபாத்திரத்தின் நோக்கமும் அது எதிர்கொள்ளும் பொது நலனுக்கான சவாலும் காரணமாக இருக்கின்றன. ஒரு பெரும் காத்திருப்பு முடியும்போது, தன் குடும்பத்தைப் போய் அடையவேண்டும் என்பது அதன் நோக்கம் அல்ல. “இது என் நாட்டோட எதிர்காலம் சார்.. எனக்கும் ஒரு குழந்த இருக்கு.. நாளைக்குக் காசு கொடுத்தாதான் நம்ம பிள்ளைகளுக்கு தண்ணிங்கிற நிலமை வந்துடக் கூடாது. அதுக்காக எதவேணாலும் இழக்க நான் தயாரா இருக்கேன்” எனும் சர்தாரை, ஜேம்ஸ் பாண்ட், ஈதன் ஹன்ட் போன்ற ‘டெம்பிளேட்’ உளவாளிகளுடன் சேர்க்கவே முடியாது.

தாமொரு தேசத்துரோகி கிடையாது என்பதற்கான ஆதாரம் கைவசம் இருந்தும், குடும்பத்தில் எஞ்சியிருக்கும் மகன், கண்முன்னே வந்து நின்று கெஞ்சும்போதும் “உண்மை இப்போ தெரிஞ்சுதுன்னா.. மக்களுக்கு அரசாங்கத்து மேல இருக்கிற நம்பிக்கை நிலை குலைந்து போயிடும். நாம யாருங்கிறது நாம செஞ்ச காரியத்துல கிடைக்கிற பலன்லதான் இருக்கு” என்று சொல்லி தன்னை விடுதலை செய்யும் ஆதாரத்தை கையாண்ட விதமும் சர்தாரின் தியாகமும் இன்னும் பல காலத்துக்கு அமரத்துவம் மிக்க கதாபாத்திரமாக அதை வைத்திருக்கும் என்று நம்பலாம். சர்தார் கதாபாத்திரத்துக்கு தனது உயர்ந்த நடிப்பால் உயிர்கொடுத்துள்ள கார்த்திக்கு, இது வாழ்நாள் கதாபாத்திரங்களில் ஒன்றாக இருக்கும்.

இயக்குநரின் சமூகப் பொறுப்பு: வணிக சினிமாவுக்கான சட்டகத்தையே தன்னுடைய திரைக்கதைத் தெரிவாகக் கொண்டிருந்தாலும் தண்ணீர் ஒரு சந்தைப் பொருளாக மாறுவது எவ்வளவு பெரிய பேராபத்தைக் கொண்டுவந்து சேர்க்கும் என்பதை, கதாபாத்திர எழுத்தின் வழி நீர்த்துப்போதலின்றி, அழுத்தமாகச் சொன்ன விதத்தில் இயக்குநர் பி.எஸ்.மித்ரனின் சமூகப் பொறுப்பு பாராட்டுதலுக்குரியது.

“நம்ம நாட்டுல ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு குறைஞ்சது 5 லீட்டர் தண்ணி தேவைப்படுது. அதுக்கு விலை வச்சா நம்ம நாட்டு ஜனத் தொகைக்கு அது ஒரு ரூபா.. ரெண்டு ரூபா வியாபாரம் கெடையாது. 10 லட்சம் கோடி வியாபாரம்! அதைச் செய்யத் துணிஞ்சவன் பதவியில இருக்கிற ஒவ்வொரு நிமிசமும் நம்ம நாட்டுக்கு ஆபத்து” என்று தண்ணீர் விநியோகத்தைத் தனியாரிடம் கொடுத்து வெள்ளோட்டம் பார்க்கும் அதிகார வர்க்கத்தை சர்தார் வழியாகத் துணிந்து கேட்டிருக்கிறார் இயக்குநர்.

பொலிவியா தேசத்தின் டேனியல்: இருபது ஆண்டுகளுக்கு முன் நடந்த ‘பொலிவியாவின் தண்ணீர் புரட்சி’ உலகம் முழுமைக்கும் பெரும் வரலாற்றுப் பாடம். அந்நாட்டின் கொச்ச பம்பா நகரத்தின் தண்ணீர் விநியோகம், பன்னாட்டுத் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அரசால் விற்கப்பட்டபோது, அந்நிறுவனம் தண்ணீருக்காக வைத்த விலை, அங்கே பெரும்பான்மையாக வாழ்ந்த எளிய மக்களின் மாத வருமானத்தில் பாதியை விழுங்கி ஏப்பம் விட்டது. இயற்கை அளிக்கும் தண்ணீர் விலைபோனதைப் பொறுக்கமுடியாமல் தன்னெழுச்சியாக பொங்கியெழுந்து வீதிக்கு வந்து போராடினார்கள் அந்நகரின் பூர்வ குடி மக்கள். அதற்குத் தலைமை வகித்தார் இவா மொராலெஸ் என்கிற அம்மண்ணின் இளம் பழங்குடித் தலைவர். அரசின் அடக்குமுறையில் பலர் துப்பாக்கி குண்டுகளுக்கு களபலியாகி, இறுதியில் அந்தப் பன்னாட்டு நிறுவனத்தை அங்கிருந்து விரட்டியடித்தார்கள். அடுத்து வந்த தேர்தலில் வென்று, அந்நாட்டின் முதல் பழங்குடி அதிபராக பதவிக்கு வந்து, மக்களுக்கான அரசை உருவாக்கினார் இவா மொராலெஸ். அவரைப் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு மேல் பதவியில் இருக்கவிடாமல் சர்வதேச ஏகாதிபத்தியம் 2019இல் மெக்ஸிகோவுக்கு அவரைத் துரத்தியடித்தது துயரம் மிகுந்த தனிக் கதை. இவாவின் தலைமையை ஒருமனதாக ஏற்ற அந்த எளிய மக்களின் உண்மையான, வீரம் செறிந்த தண்ணீர்ப் போராட்டக் கதையுடன், ஒரு வரலாற்றுத் திரைப்படம் எடுக்க அந்நகருக்கு வரும் திரைப்படக் குழுவின் கதையாகவும் புனைவைக் கலந்து உருவான சமகாலத்தின் ஸ்பானிய உலக சினிமா ‘ஈவன் த ரெயின்’ (மழை நீரையும்கூட).

ஈவன் த ரெயின்

2010 இல் வெளியான இப்படத்தின் கதாநாயகன் டேனியல், சர்தாரைப் போல சாகச நாயகன் அல்ல. ஆனால், தண்ணீருக்கான போராட்டக் களத்தில், அவன் கொண்டிருக்கும் தொடர்ச்சியான ஈடுபாடு, ‘இயற்கை எனக்களிக்கும் உரிமையே தண்ணீர்’ எனும் வேட்கை ஆகியவற்றுடன் வெகு இயல்பான மக்கள் எழுச்சியின் அடையாளமாக அவனை உள்ளது உள்ளபடிச் சித்தரித்தார் ஸ்பானிய இயக்குநரான இசியார் பொதைன். பொலிவியாவின் தண்ணீர் புரட்சிக்கு தலைமை தாங்கி நடத்திய இவா மொராலேஸின் எளிய பிரதியாக டேனியல் கதாபாத்திரம் திரைக்கதையில் உருவகப்படுத்தப்பட்டிருந்தது.

தங்கத்துக்கான நாடுபிடிக்கும் வல்லாதிக்க வேட்டையில், கொலம்பஸும் அவருடைய குழுவினரும் நடத்திய தொடக்ககால கொடுமைகளும் கொடூரக் கொலைகளும் வரலாற்றில் தீராத ரத்தக் கறைகளைக் கொண்டவை. அவரது கொடுமைகளுக்கும் உள்ளான தென் அமெரிக்கப் பழங்குடி மக்களின் வரலாற்றை திரைப்படமாக எடுக்க கொச்ச பம்பா நகருக்கு வரும் திரைப்படக் குழுவினர் டேனியலையே (ஜான் கார்லோஸ் அடுவரி) முதன்மைக் கதாபாத்திரத்துக்கான நடிகராக தேர்வு செய்கிறார்கள். ஒரு பக்கம் திரைப்படத்துக்கான படப்பிடிப்பு நடக்க, இடையிடையே தண்ணீருக்கான மக்களின் போராட்டமும் தீயாகப் பற்றி எரிகிறது. கடந்த கால வரலாற்றின் நிழல், நிகழ்காலத் தனியார் தண்ணீர் விநியோகத்தை எதிர்க்கும் மக்களின் போராட்டத்துடன் உரசிச் செல்வதை வரலாற்றுக்கு நெருக்கமாக ஒரு சாட்சியம்போல் திரைமொழி நமக்குக் காட்டுகிறது.

டேனியலின் போராட்டப் பங்கேற்பால் தடைப்படும் படப்பிடிப்புக்குப் பின், அங்கிருந்து புறப்படும் படக்குழுவுக்கு ஒரு சிறு கண்ணாடி சீசாவில் அவன் கொடுத்தனுப்புவது, விடுதலை செய்யப்பட்ட கொச்ச பம்பாவின் குடிநீர். சர்தாரும் டேனியலும் வெவ்வேறு நிலவெளிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். இருவருமே தீவிரமடைந்துவரும் இன்றைய தண்ணீர் பிரச்சினையில் நமது பங்கு என்ன என மௌனமாகக் கேட்கிறார்கள். - ஆர்.சி.ஜெயந்தன், jesudoss.c@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்