அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்ய மகாத்மா போதித்த அகிம்சை தேவையில்லை; வெள்ளைப் பணமோ கறுப்புப் பணமோ அவர் படம் அச்சடிக்கப்பட்ட பணம் தேவையாயிருக்கிறது. வெறும் தாள் என்றாலும் அது இல்லாதவரே இங்கு வெறும் ஆள் என்பதே சமூகத்தின் புரிதல். பணம், பணம் என ஆலாய்ப் பறக்கும் மனிதர்கள் நிறைந்த சமூகத்தில் அதன் மதிப்பை எளிதாக எடை போட்டுவிட முடியாது. பணத்தால் எந்த நிம்மதியும் இல்லை; பணத்தை ஒதுக்கி உறவை இணைத்தாலே இன்பம் போன்ற ஆலோசனைகள் தரும் சொற்பொழிவாளரும் பணம் தராவிட்டால் வந்து ஆலோசனை தர மாட்டார் என்பதே யதார்த்தம்.
இந்தப் பணத்தால் படாதபாடு பட்டவராக அறியப்பட்டிருப்பவர் காலஞ்சென்ற கவிஞர் கண்ணதாசன். ஏழைகளுக்கும் செல்வந்தர்களுக்கும் இடையே ஒரு சுவர் போல் எழும்பி, இரு தரப்பினரையும் பிரித்து வைத்திருக்கும் இந்தப் பணத்தின் பாதிப்புகளையும் தாக்கத்தையும் உணர்ந்ததால், எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி அவர் தயாரித்த படம் ‘கறுப்புப் பணம்’ (1964).
கதாநாயகன் ஆன கண்ணதாசன்
தணிகாசலம் என்ற பெரியவர் வேடத்தில் கண்ணதாசனே நடித்திருப்பார். அத்துடன் அப்படத்தின் கதை, வசனம், பாடல்களையும் அவர் எழுதியிருப்பார். திரைக்கதையை வலம்புரி சோமனாதன் எழுத, படத்தின் ஒளிப்பதிவு, இயக்கம் இரண்டும் ஜி.ஆர்.நாதன். பொருளாதார வசதி ஒத்துழைக்காத காரணத்தால் உரிய கல்லூரிக் கல்வி தணிகாசலத்துக்கு மறுக்கப்படுகிறது. அதனால் பாதிக்கப்பட்ட அவர் வளர்ந்த பின்னர் கறுப்புப் பணத்தைப் பதுக்கிவைப்பவர்களிடமிருந்து- மில் அதிபர், பஸ் முதலாளி, நடிகை போன்றவர்கள்- பணத்தைக் கொள்ளையடித்துக் கல்லூரி கட்டுகிறார். இறுதியில் அவர்தான் கொள்ளைக்காரர் என்பது தெரியவருகிறது.
அவரைக் கைது செய்த காவல் துறை அதிகாரி, அவரது வழக்கை விசாரிக்கும் நீதிபதி போன்ற அனைவருமே அவரால் ஆதாயம் பெற்றவர்கள். நன்றியுணர்ச்சிக்கும் கடமைக்கும் நடுவிலே மாட்டிக்கொண்டு தத்தளிக்கிறார்கள். ஆனால். கடமையே முக்கியம், அதைச் செய்யத் தயங்க வேண்டாம் என தணிகாசலம் தெரிவிக்கிறார். நீதிமன்றத் தண்டனையை உளப்பூர்வமாக அனுபவிக்கிறார். நீதிமன்றத்தில் அவர் தரும் வாக்குமூலம் அவரது நிலையைத் தெளிவாக எடுத்துரைக்கும்.
ஓவியனின் கைவண்ணம்
கறுப்புப் பணம் போலவே சமூகத்தில் சிக்கலை ஏற்படுத்தும் மற்றொன்று கள்ளப் பணம். தமிழில் வெளியான, ‘ஆனஸ்ட் ராஜ்’ (1994) என்னும் படத்தில் கள்ள நோட்டால் நண்பர்களுக்கிடையேயான பாதிப்பு திரைக்கதையாகியிருக்கும். இதே போல் கள்ளப் பணப் பிரச்சினையைக் கையாண்ட ஆஸ்திரியப் படம் ‘த கௌண்டர்ஃபீட்டர்ஸ்’ (The Counterfeiters, 2007). இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலான கதை இது. பாஸ்போர்ட், பணம் போன்றவற்றை அச்சு அசலாக உருவாக்குவதே சாலமோன் சாரோவிட்ச் என்னும் ஓவியக் கலைஞனது திறமை. நாஜிக்களின் வதை முகாமில் மாட்டிக்கொண்ட இவனை உயிருடன் காப்பாற்றுவது இவனது கலையே.
நாஜிக்களுக்காக பவுண்ட், டாலர் போன்ற வெளிநாட்டுப் பணங்களை உருவாக்க ஜெர்மன் அதிகாரிகளால் இவன் கட்டாயப்படுத்தப்படுகிறான். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றால் கள்ளப் பணத்தை உருவாக்க வேண்டும். ஆனால் இவனுடன் இருக்கும் மற்றொரு கைதியான, கம்யூனிசச் சிந்தனை கொண்ட அடால்ஃப் பர்கர் நாஜிக்களுக்கு ஒத்துழைக்கக் கூடாது என்கிறான்.
இந்தப் படமே இவர் எழுதிய நினைவுக் குறிப்புகளின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. இருவருக்கும் இடையே கொள்கை மோதல் உருவாகிறது. அதை எப்படிச் சமாளிக்கிறார்கள் என்று செல்லும் படத்தின் திரைக்கதை. வதை முகாம் தொடர்பான காட்சிகளால் படம் முழுவதுமே ஒருவகையான சாம்பல் வண்ணத்தில் காட்சி தரும். இந்தப் படம் சிறந்த வெளிநாட்டுப் படம் என்னும் பிரிவில் ஆஸ்கர் விருது பெற்றது.
சத்திரியன் சாணக்கியன் ஆகும் கதை
கறுப்புப் பணம் கதையைப் படித்ததும் உங்கள் மனதில் கே.டி.குஞ்சுமோனின் ‘ஜென்டில் மேன்’ (1993) படம் நிழலாடியிருக்கும். ‘கறுப்புப் பணம்’ படம் முழுக்க முழுக்க வர்க்க பேதத்தைச் சாடி, பொதுவுடைமையை வலியுறுத்துவதாகவே அமைந்திருக்கும். கல்லூரிக் கல்வி ஓர் ஏழைக்கு மறுக்கப்படுகிறது அதன் காரணம் பணம்தான் என்று தணிகாசலத்தின் மனதில் படுகிறது. சமூக ஏற்றத்தாழ்வை அகற்ற வேண்டும் என்று அவன் படித்துணர்ந்த பாரதியார் கவிதைகள் போன்றவை அவனுக்கு உந்துதல் தந்ததால் கொள்ளையடித்தாவது ஏழைகளுக்குக் கல்வி தரத் துணிகிறான்.
எந்த நிலையிலும் பெரியவர் தணிகாசலம் தன் குற்றத்தை மறைக்கவில்லை; தன் நிலையைச் சரி என்று வாதாடவில்லை, சமூகத்தைக் குற்றம்சாட்டவில்லை. ஆனால் ‘ஜென்டில் மேன்’ படத்தில் கிச்சா பிறரைக் குற்றம்சாட்டுவான். முதல்வரைத் தண்டிக்கக் கோருவான். கிருஷ்ண மூர்த்தி (கிச்சா) தானாகவே கல்லூரி கட்ட வேண்டும் என்ற முடிவெடுத்திருக்க மாட்டான். அவன் ஒரு சத்திரியனாக அரிவாளைத் தூக்குவான் ஆனால் ரமேஷின் தந்தை அவனைச் சாணக்கியன் ஆக்குவார். திரைக்கதையில் இங்கு மிகத் தந்திரமாகச் சாதி புகுத்தப்பட்டுவிடுகிறது. ஷங்கர் தன் சகாக்களுடன் திரைக்கதையில் புரிந்த மாறுதல் இதுதான். இதன் வசனம் எழுத்தாளர் பாலகுமாரன் என்பது எல்லோருக்கும் நினைவிருக்கும்.
கருத்தியல் ரீதியான தவறு
பணம் படைத்தவருக்கு மட்டுமே கல்வி கிடைப்பதாக இறுதிக் காட்சியில் கிச்சா ஆவேசமாக முழங்குவான். திரையரங்கில் பலத்த கரகோஷமும் கிடைத்தது. ஆனால் இந்தப் படம் வெளிவந்த காலகட்டத்தில் இப்படி ஒரு நிலைமை இல்லை. ஏனெனில் நுழைவுத் தேர்வுமுறை அமலாகிவிட்டது. அதிக மதிப்பெண் பெற்ற எல்லோராலும் தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் மருத்துவக் கல்லூரிகளிலும் சேர முடிந்தது. ஆகவே மாவட்டத்திலேயே முதலிரண்டு இடங்களைப் பெற்ற ரமேஷுக்கும் கிச்சாவுக்கும் எளிதாக மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கும். அந்தச் சூழலில் பணம் ஒரு விஷயமே இல்லை.
இதற்கு மாறாக, பணம் படைத்தவர் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளிலும் பொறியியல் கல்லூரிகளிலும் சேர்ந்து படித்து சமூகத்துக்குத் தீங்கிழைப்பதாகப் படத்தில் கிச்சா வசனம் பேசுவான். அவனது ஆவேசப் பேச்சால் ஒரு மாணவன் கொலைகாரனாகவே மாறிவிடுவான். சமூகத்தின் காலரைப் பிடித்துக் கேள்வி கேட்ட ஷங்கரின் படத்தின் கருத்தியல் ரீதியான தவறைக் கேள்வி கேட்க வேண்டாமா?
மேலோட்டமான பொழுதுபோக்குச் சித்திரம்
திரைக்கதையின் மிகப் பெரிய இந்த ஓட்டையை ஷங்கர் பிரம்மாண்டத்தாலும், மயக்கும் பாடல்களாலும் கவுண்டமணி செந்தில் நகைச்சுவையாலும் சரிக்கட்டியிருப்பார். இதன் வெற்றி ஷங்கரை உச்சபட்ச இயக்குநராக்கியது. பிரம்மாண்டமும் சமூகக் கொடுமையைச் சாடுவதும் அவருடைய முத்திரைகளாயின. ஆனால் ஒரு இயக்குநர் என்பவர் சமூகப் பிரச்சினையின் வேரைக் கண்டறிய வேண்டும்; அதை ஆராய வேண்டும். உலக அளவில் போற்றப்படும் இயக்குநர்கள் அதைத்தான் செய்திருக்கிறார்கள்.
கடுமையான உழைப்பாளி என்றபோதும் ஷங்கரிடம் அதை நாம் எதிர்பார்க்க முடியாது, அவர் வெறும் திரைப்பட ஒருங்கிணைப்பாளர். சட்டெனச் சமூகத்தைக் கிளுகிளுக்கச் செய்யும் லஞ்சம் போன்ற சமூகப் பிரச்சினையைக் கையிலெடுத்து, அதை மேலெழுந்தவாரியாகப் புரிந்துகொண்டு கதை, திரைக்கதை எழுதி, அதில் மனங்கவரும் பாடல்கள், நகைச்சுவை ஆகியவற்றை இட்டுநிரப்பி எப்படி வெற்றியாக்கலாம் என்று மட்டுமே கருதிச் செயல்படுபவர், அதுதான் அவரது பலமும்கூட. அவரை ஒரு இயக்குநராகக் கருதுவது நம் போதாமை. இவற்றை ஷங்கரே உணர்ந்திருக்கக் கூடும். அதனால்தான் குறைந்த முதலீட்டில் படங்களைப் பிற இயக்குநர்களை வைத்துத் தயாரித்துவருகிறார்.
தொடர்புக்கு: chellappa.n@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago